சுபர் என்றழைக்கப்படும்  குரு பகவான் ஆண்டுக்கு ஒரு முறை இடம் மாறும் கிரகமாவார். இவர் வருட கிரகங்கள் என்றழைக்கப்படும் பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்தவராக விளங்குபவர். மனிதனுக்கு திருமணம் என்னும் பாக்கியத்தை வழங்குவதால், குரு பகவானின் பெயர்ச்சிப் பலன்கள், ஜோதிட உலகில்  முக்கியமான ஒரு இடத்தைப் பெறுகிறது. மனிதனுக்கு ஆத்மபலத்தினை அளிக்கக் கூடியவர் குரு. ஆத்ம பலத்தின் அடிப்படையில்தான் மனித வாழ்வின் ஏற்றம் அமைகிறது. இந்த ஆண்டு குரு பகவான் 17.5.2012  அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 12 ராசிகளுக்கு உரிய பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைவருக்கும் குரு பகவான் வளம் பல நல்கட்டும்!

மேஷம்: இது நாள் வரை உங்கள் ராசியில் அமர்ந்திருந்த குரு இந்த பெயர்ச்சி மூலம் 2-ம் இடம் செல்கிறார்.சுப நிகழ்ச்சிகளை நடத்திவைத்து உங்கள் வாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சியை மலர வைப்பார்.   பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு,  ஏட்டிக்குப் போட்டி என்று செயல்பட்ட எதிராளிகள் அடங்கிக் கிடக்கும் நிலை தானே உருவாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய உயர்வு கிடைப்பதால், வீடு மனை வாங்க வாய்ப்பு அமையும்.  பணியில் இருப்பவர்களின் நீண்ட நாள் லட்சியங்கள் எதுவாக இருந்தாலும் நிறைவேறுவதில் எந்தத் தடையும் இராது.  மாணவர்களின் மறைந்திருந்த ஆற்றல், புது வேகத்தோடு வெளிப்படும்  கலைஞர்களின் காத்திருப்பும், கனவும் கைகூட ஏற்ற தருணங்கள் அமையும். சுய தொழில் புரிபவர்களுக்கு, விரிவாக்கத்தில் முன்னேற்றமும், வியாபாரிகளுக்கு, ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வெற்றியும் வந்து சேரும்.   

ரிஷபம்: இந்தப் பெயர்ச்சி மூலம் குரு பகவான் உங்கள் ராசியில் அமர்கிறார். பொறுப்பில் இருக்கும் பெண்கள் எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து செயலில் இறங்கினால், எடுத்த காரியம் எல்லாம் வெற்றிகரகமாக முடியும். மூட்டு வலி, முழங்கால் வலி ஆகியவை முதியோர்களின் பணிக்கு சற்று முட்டுக் கட்டை போடும் விதமாக இருக்கும் வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தவும். .கலைஞர்கள் பணப் பரிமாற்றம், ஒப்பந்தங்கள் ஆகிவற்றில் எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். வியாபாரிகள் பணியாளர்களிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பில் ஓரளவே கிட்டும் நிலை நிலவுவதால், புதிய முயற்சிகளில் நிதானமாக  செயல்படவும். பணியில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை குறித்த காலத்தில் முடிப்பதற்கு கூடுதல் , உழைப்பு  தேவைப்படும். மாணவர்கள், தங்கள் திறமை மேல் வைத்து நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டிய காலகட்டம் இது.

மிதுனம்: இது நாள் வரை 11-ல் இருந்த குரு பகவான் இந்த பெயர்ச்சி மூலம் 12-ம் இடத்தில் அமர்கிறார். பெண்கள் பதற்றத்திற்கு இடமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டிய காலமிது. கலைஞர்கள் உங்களை தேடி வரும் நன்மைகளை விரட்டாமலிருக்க, உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விட்டுவிடாமலிருப்பது அவசியம். பணியில் உள்ளவர்கள் உங்கள் உயர்வுக்கும் நன்மைக்கும் தேவையான பொறுமை உங்களை விட்டு நழுவாதவாறு செயல்படுவது முக்கியம். வயதானவர்கள் அதிக நேரம் கண் விழித்தலைக் குறைத்துக் கொண்டால், ஆரோக்கியம் தானே சீரான நிலைக்கு வந்து விடும். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொண்டால் வரவு செலவில் சிக்கல் ஏதும் இராது. பொது வாழ்வில் இருப்பவர்கள் எதிரியின் பலத்தை எடை போட்ட பின் களத்தில் இறங்குவது வெற்றிக்கு வழி வகுக்கும்.

கடகம்: இந்தப்  பெயர்ச்சியில் 10-லிருந்து 11-ம் இடம் சென்று அமர்கிறார் குரு பகவான்.  பங்குதாரர்கள்,  பிணக்கை மறந்து இணக்கமாக நடந்து கொள்வதால் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிட்டும். பிள்ளைகள் பெறும் நிறைவான வாழ்க்கை பெற்றோர்களுக்கு நிம்மதியைத் தரும். எதிர்ப்புகள் யாவும் விலகி, வியாபாரிகள் விரும்பிய வண்ணம் பொருள் சேர்க்கை ஏற்படும். அலுவலத்திலும், வெளி வட்டார பழக்கத்திலும் உங்கள் சொல்லுக்கு விசேஷ மதிப்பிருக்கும்.. மாணவர்களின் ஒவ்வொரு செயலும் சிறப்பாய் அமைவதால், பிறரின் மதிப்பீட்டில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் யோசனைகளுக்கு குடும்பத்தினர் உரிய அங்கீகாரம் அளிப்பர். கலைஞர்களின் புதிய முயற்சிகள் நல்ல விதமாக பரிமளிப்பதற்கு அவர்களின் அறிவு துணையாய் நிற்கும்.  பொது வாழ்வில் உள்ளவர்களின் அயல் நாட்டுப் பயணங்கள் திட்டமிட்டபடி நடக்கும்.

சிம்மம்: இந்தப் பெயர்ச்சியில் குரு வளம் பல நல்கிக் கொண்டிருந்த 9-ம் இடத்தை விட்டு 10-ம் இடத்தில் அமர்கிறார். எடுத்த காரியம் வெற்றிகரமாய் முடிய, பொது வாழ்வில் இருப்பவர்கள்,  எதிலும் நிதானமான செயல் பாடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.  பெண்கள் படபடப்பு, முன் கோபம் ஆகியவற்றை நுழைய விடாமலிருந்தால், இல்லத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிலவும். பணியில் இருப்பவர்கள் உங்கள் வாக்கு சாதுர்யம், திறமை ஆகியவற்றைக் கொண்டு செயலாற்றினால் எந்தத் தொல்லையும் அருகில் வராது. சிறிய பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்காமல் இருக்க, வியாபாரிகள் கணக்கு வழக்கு, நிர்வாகம் ஆகியவற்றில் பதற்றமான முடிவுகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தினால்தான் உங்களுக்கென்று ஓர் தனியிடத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். கலைஞர்களின் கனவு நனவாக அதிக உழைப்பு தேவை.

கன்னி: அஷ்டம குருவாய் உங்களை அலைக்கழித்த குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம், வளம் பல தரும் 9-ம் இடத்திற்குச் செல்கிறார். நீங்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராயினும் சரி, அதில் பெயரும் புகழும் பெறுவீர்கள். சரளமான பண வரவால், இல்லத்தில் புதிய பொருட்கள் வந்து சேரும். ஏனோதானோவென்று இருந்த நிலை மாறி, மாணவர்கள் ஊக்கத்துடன் செயல்படுவர். கலைஞர்களின் கடன் தொல்லைகள் பஞ்சாய்ப் பறந்து விடும். வியாபாரிகள் புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்தி அதிக லாபம் ஈட்டுவார்கள். கிடைக்கும் வாய்ப்புகள் மூலம் கலைஞர்களுக்கு எதிர்பார்த்த லாபமும், நற்பெயரும் கிட்டும். பொது சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் உயர்ந்த நிலையை அடைவார்கள்.பெண்கள் மனதில் இருந்த தயக்கம், பயம் ஆகியவற்றைத் தூர எறிந்துவிட்டு துணிவுடன் செயல்படுவர்

துலாம்: இது நாள் வரை 7-ல் இடத்தில் இருந்து ஏற்றமான வாழ்விற்கு பொறுப்பேற்ற குரு பகவான், இந்த பெயர்ச்சி மூலம் அஷ்டம குருவாய் அமரப் போகிறார். பெண்கள் குடும்ப நலத்திலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருந்தால், சச்சரவுகளும், மருத்துவச் செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். மாணவர்கள் தீய நட்பை விலக்குவதில் உறுதியாய் இருங்கள். வாழ்க்கை நல்ல பாதையை நோக்கி திரும்பும். பணியில் உள்ளவர்கள் தங்கள் வரவு செலவுகளை வரைமுறைக்குள் வைப்பதன் மூலம், பிறரிடம் கைமாற்றாய் பணம் பெற வேண்டிய நிலையைத் தவிர்த்து விடலாம். வியாபாரிகளும், சுய தொழில் புரிபவர்களும், சூழ்நிலைக்கேற்றவாறு, தேவைப்படும் மாறுதல்களை ஏற்றுக் கொண்டால்,வரவில் எந்தத் தொய்வும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்கள் தொழில் சார்ந்த பழக்க வழக்கங்களை ஓர் எல்லைக்குள் வைப்பது அவசியம்

விருச்சிகம்:  இந்த பெயர்ச்சி மூலம் குரு 6-ம் இடத்திலிருந்து 7-ம் இடத்திற்கு மாறுவதால், பொருளாதார விஷயங்களில் திருப்திகரமான போக்கு நிலவும். கலைஞர்கள் உச்ச நிலையை எட்டிப்பிடிக்க எடுக்கும் முயற்சியில், நண்பர்களின் பங்கு அதிகமாக இருக்கும். இளம் பெண்கள் மண மாலை சூடும் பாக்கியத்தைப் பெறுவார்கள். மங்கள நிகழ்ச்சிகளும், உறவினரின் ஒத்துழைப்பும் பெண்கள் முகத்தில் சந்தோஷத்தை பிரதிபலிக்கும். மாணவர்கள் எல்லா செயல்களையும் நேர்த்தியுடன் செய்து ஆசிரியர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். பணியில் இருப்போர்கள் சுறுசுறுப்புடன் இயங்குவதால், முடிக்காமலிருந்த வேலை யாவும் முடிக்கப் பட்டுவிடும்.வியாபாரிகள் கொடுத்த வாக்கை, குறித்த காலத்தில் நிறைவேற்றி விடுவதற்கு பணியாளர்கள் முழு ஒத்துழைப்பை நல்குவர். 

தனுசு: இதுநாள் வரை உங்கள் ராசியிலிருந்து 5-ம் இடத்தில் அமர்ந்திருந்த குரு பகவான் இந்தப் பெயர்ச்சியில் 6-வது இடத்திற்கு மாறுகிறார். பெண்கள் நகைகளை இரவலாய் வாங்குவதற்கும், இரவலாய் கொடுப்பதற்கும் ஓர் முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. நண்பர்களை அனுசரித்து நடந்து கொண்டால் நீங்கள் பெறும் ஆதாயங்கள் அதிகமாக இருக்கும். கலைஞர்கள் அறிமுகமில்லாத இடங்களில் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பழகி வரவும். பொறுப்புகளில் உள்ளவர்கள் திறம்பட நடந்துகொள்வதன் மூலம் தங்கள் நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். கலைஞர்கள்  சிறிது பொறுமை காத்தால், புதிய ஒப்பந்தங்களால் வரும் முழுமையான லாபம் கிடைக்கும். கூட்டாய்த் தொழில் செய்பவர்களுக்கு நடுவே சிறு பிணக்குகளும், மனத்தாங்கலும் ஏற்பட்டு மறையும். 

மகரம்: நாலில் இருந்த குரு இந்த பெயர்ச்சி மூலம் 5-ம் இடத்தில் அமர்வதால், இனி யோகமான வாழ்வுதான்! குடும்ப மகிழ்ச்சியிலும், முன்னேற்றத்திலும் பெண்களின் பங்கு கணிசமாக இருக்கும். மாணவர்கள் மனதில் ஏற்பட்டு வந்த கவலைகள், சஞ்சலங்கள் யாவும் குறைவதால், உற்சாகத்துடன் செயல்படுவர். அதிகாரிகளால் ஏற்பட்ட கெடுபிடிகள் விலகுவதால், வேலை செய்யும் இடத்தில் திருப்தியான சூழல் நிலவும். எதிலும் முனைப்புடன் ஈடுபடும் மனப்பாங்கால், பொது வாழ்வில் இருந்தவர்கள் ஏற்றமான நிலைக்கு உயர்வார்கள்.  சீர்குலைந்த வியாபாரத் தொடர்புகளை மீண்டும் சீர்படுத்தக் கிடைக்கும் வாய்ப்புக்களை வியாபாரிகள் நன்கு பயன்படுத்திக் கொள்வர்.  கலையார்வம் மிக்கவர்களின் பாராட்டும், நண்பர்கள் கொடுக்கும் ஊக்கமும் கலைஞர்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளை அரங்கேற்ற வைக்கும் நெம்புகோலாய்த் திகழும். 

கும்பம்: இந்தப் பெயர்ச்சி மூலம் குரு நான்காம் இடத்திற்கு நகர்ந்து விடுகிறார். மாணவர்கள் அவசியமற்ற பிரச்னைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுதல் அவசியம். பணியிலிருக்கும் பெண்கள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி நற்பெயர் எடுக்க்க் கூடுதல் முயற்சி தேவைப்படும். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் இடைத் தரகர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்த்தால், நஷ்டப்பட வேண்டியிருக்காது. கலைஞர்கள் தங்கள் சந்தேகக் கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டால், உண்மையான நட்பை எளிதில் இனம் கண்டு கொள்ள முடியும். வாகனங்களை முறையாகப் பராமரித்தால், பயணங்கள் நிம்மதியானதாய் மாறும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் உறுதியாய் இருந்தால், தடைகளை படிக்கற்களாய் மாற்றிக் கொள்வதோடு நல்ல பெயரையும் தக்க வைத்துக் கொள்ளலாம்.  

மீனம்: இது வரை 2-ல் இருந்து நன்மைகளைத் தந்து கொண்டிருந்த குரு, இந்தப் பெயர்ச்சி மூலம் 3-ம் இடத்திற்கு மாறுகிறார். பெண்கள் செலவுகளில் சற்று கவனமாக இருந்தால், சேமிப்பதற்கான வழி வகைகள் கிடைக்கும். மாணவர்கள் தேவையற்ற விஷயங்களுக்காக கவலைப்படும் சூழல் உருவாகும். வியாபாரிகள் வீண் பேச்சுகளைத் தவிர்த்து செயலில் இறங்கினால் எடுத்த காரியங்களில் வெற்றி காணலாம். செலவுகளும், அலைக்கழிப்புகளும் அதிகரித்தாலும், எந்த விவகாரத்தையும் சமாளிக்கும் தைரியத்தால், கலைஞர்கள் தங்களுக்கு உரிய வாய்ப்பு, வருமானம் இரண்டையும் தக்க வைத்துக் கொள்வர். பணியில் இருப்பவர்கள் முரண்பட்ட கருத்துள்ளவர்களுடன் மோதலைத் தவிர்க்கவும். அதிக ஆர்வத்துடன் ஈடுபடும் காரியங்களில் தக்க உதவி கிடைப்பதில் சற்று தாமதம் உருவாகும். 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *