சக்தி சக்திதாசன் 

முந்தைய மடலைப் படிக்க

அன்பினியவர்களே !

 

இதோ ஆறாவது மடலுடன் இதயத்தில் எழும் விடையற்ற வினாக்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். என்ன இது? வினாக்கள் என்கிறான், விடைகள் என்கிறான், புரியவில்லையே!  என்று எண்ணுவது தெரிகிறது.

நாம் பல செய்திகளைப் பத்திரிகையில் பார்க்கிறோம், தொலைக்காட்சியில் ரசிக்கிறோம், ஊடகங்களின் மூலம் உள்வாங்கிக் கொள்கிறோம். ஆனால் அவற்றின் பிண்ணனியில் அடங்கியிருக்கும் செய்திகள் எம்மைத் தாக்கும் வகையைப் புரிந்து கொள்கிறோமா?

 மிகவும் ஆழமான கேள்வி இல்லையா ?

 உலகம் இன்று பொருளாதாரச் சுழல்களுக்குள் சிக்கி அல்லாடிக் கொண்டிருக்கிறது. பொருளாதாரச் சந்தை பெரும் வீழ்ச்சிகளைக் கண்டு தள்ளாடி எழுந்து எழுந்து, மீண்டும் விழுகிறது.

எமது வாழ்வின் அனைத்து வசதிகள் என்று நாம் எண்ணிக் கொண்டிருப்பவை இப்பொருளாதாரச் சந்தையின் அன்றாட எழுச்சியிலும், வீழ்ச்சியிலும் பின்னிப் பிணைந்து இருக்கிறது.

இங்கிலாந்தில் மேமாதம் 3ம் திகதி லண்டன் மேயருக்கான தேர்தலும், இங்கிலாந்தின் பல பாகங்களில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களும் நடந்து முடிந்து விட்டன.

முடிவுகள் மிகவும் விசித்திரமானவையே !

நாடளாவிய ரீதியில்  மத்தியில் ஆட்சியமைத்திருக்கும் கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரண்டும் படு தோல்வியைத் தழுவியுள்ளன. எதிர்க்கட்சியாகிய லேபர் கட்சியோ எதிர்பாரா வகையில் அமோக வெற்றியைத் தழுவியுள்ளது.

ஆனால் லண்டனைப் பொறுத்தளவில் அதன் மேயராக கூட்டரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியாகிய கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளராகிய பொரிஸ் ஜான்சன் (Alexander Boris de Pfeffel Johnson) மிகவும் குறுகிய பெரும்பான்மையுடன் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசியரீதியில் செல்வாக்கிழந்த கட்சி, நகர அளவில் மேயர் தேர்தலில் மட்டும் வெற்றியீட்டியதின் காரணம்?  பொரிஸ் ஜான்சன் எனும் தனி மனிதனின் வெற்றியே இது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.

நாட்டின் வரவு செலவு பட்ஜெட்டைச் சரி செய்வதற்கு மிகவும் கடுமையான வகையில் பொதுநல சேவைகளுக்கான செலவீனங்களைக் கட்டுப்படுத்துகிறோம் என்னும் வகையில் அரசாங்க உத்தியோகத்தர்கள் பலரின் வேலைகளுக்கு வேட்டு  வைத்தது கூட்டரசாங்கம்.

அது மட்டுமன்றி வாழ்கையின் செலவு விகிதம் அதிகரித்துக் கொண்டே போயினும் மக்களின் சம்பள உயர்வுகள் நிறுத்தப்பட்டதால் பலர் தமது வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க வழியின்றி திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவையனைத்தும் மக்கள் மத்தியில் இக்கூட்டரசாங்கத்தின் செல்வாக்கை இழக்கப் பண்ணும் நிலை ஏற்படக் காரணங்களாகியுள்ளன.

ஆனால் இப்பிரச்சனை இங்கிலாந்து நாட்டுக்கு மட்டும் தானா?

இல்லை, ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுமே ஆட்டம் கண்டிருக்கின்றன.

இங்கிலாந்தில் நடைபெற்றதோ உள்ளூராட்சித் தேர்தல். ஆனால் கிரேக்க நாட்டிலும், பிரான்சு நாட்டிலும் நடைபெற்றது அந்நாட்டிற்கான அதிபர்களையும், அரசாங்கத்தையும் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் .

அவற்றின் முடிவுகள் கூட ஜரோப்பிய அரசியல் உலகில் அதிர்வுகளைத்தான் ஏற்படுத்தி இருக்கின்றன. ஆமாம் கிரேக்க நாடு, தான் உலகநாடுகளிடம் வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை வந்த போது ஜரோப்பிய ஒன்றியம், அதற்கு உதவுவதற்கு  நிபந்தனையாக அவர்கள் தமது நாட்டின் செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனும் கட்டுப்பாட்டை விதித்தார்கள். விளைவாக கிரேக்க நாட்டில் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளம் உயர்த்தப்படுவதை நிறுத்துவது மட்டுமில்லாமல் அவர்களுக்கு சம்பளக் குறைப்பும் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஓய்வூதியம் கொடுக்கும் வயதுகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

அங்கே பல மக்கள் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன.

பலனாக கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் பதவியிலிருந்தவர்கள் தோல்வியுற, எதிர்க்கட்சிகள் அரசாங்கம் அமைக்க முடியா நிலையில் மீண்டும் தேர்தல் வரலாம் எனும் நிலை ……

பிரான்சு நாட்டிலோ பொருளாதாரக் கட்டுப்பாடுகளை விதித்த அதிபர் சார்க்கோஸி (Nicolas Sarkozy) பதவியிழக்க சோஷலிஸ்ட் ஹோலாண்டி (Francois Hollande) வெற்றியீட்டியுள்ளார்.

இதிலிருந்து மக்கள் இப்பொருளாதாரச் சிக்கல் மிகுந்த கட்டுப்பாடுகளை விரும்பவில்லை என்று தெரிகிறது.

ஆனால் நாம் இன்று எதிர்நோக்கும் சில சிக்கல்களைத் தவிர்த்து நாம் மட்டும் வாழ்ந்து விட்டு எமது எதிர்காலச் சந்ததியினரைத் தத்தளிக்க விட்டுச் செல்வது சரியான ஒரு முடிவா? என்னும் வினா விடையற்று மனதில் தவிக்கிறது.

தலையங்கங்களை மட்டும் படித்து விட்டு எமது அரசியல் புரிதல்களை ஏற்படுத்திக் கொள்கிறோமா? என்று எண்ணத் தோன்றுகிறது. பொருளாதாராச் சிக்கல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய அத்தியாவசியத்தை இக் கடுமையான் நடவடிக்கைகளை எடுத்த அரசியல் தலைவர்கள் நாட்டு மக்களுக்கு சரியான வகையில் புரிய வைத்தார்களா? என்பது சந்தேகமே !

அது தவிர எதிர்க்கட்சிகள் இத்தகைய ஒரு சிக்கலான காலகட்டத்தில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கின்றனவா என்பதும் கேள்விக்குறியே !

மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியின் அடிப்படியில் உண்மை நிலைகளை மக்களுக்கு விளக்காமல் தாம் பதவிக்கு வருவதற்காக இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்துகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யார் பதவிக்கு வந்தாலும் ஒரு நாடு பட்டிருக்கும் கடன் கடனேதான். அது தீர்க்கப்படவேண்டியதும் கட்டாயமே! அதற்கு தாம் எத்தகைய திட்டத்தை வைத்திருக்கிறோம் என்பதைத் தெளிவாகக் கூறும் அரசியல்வாதிகள் யாரும் ஜெயித்ததாகத் தெரியவில்லை.

அனைத்திற்கும் மேலாக, பொதுமக்களாகிய நாம் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறோமா? அல்லாவிடில் வரவிற்கு மீறிய செலவு செய்யும் மனப்பான்மை மிகுந்ததினால் எம்மை வழிநடத்தும் அரசாங்கமும் அத்தகைய வழியில் நடந்து செல்வதை இலகுவாக ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையில் வாழ்கிறோமா?

எது எப்படி இருப்பினும் இது உலகப் பொருளாதாரம் எதிர் நோக்கும் ஒரு சிக்கலான கால கட்டமே ! இக்காலத்தில் நாம் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்துவிடல் நல்லதொரு செய்கையன்று. ஒவ்வொரு செய்தியின் பின்னால் இருக்கும் செய்திகளை தகுந்த முறையில் உள்வாங்கிக் கொண்டு காலகட்டத்திற்கு ஏற்ற வகையில்  நமது செலவுகளைக் கட்டுப்படுத்தி வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

வியாதி குணமடைய மருத்துவர் தரும் கசப்பு மருந்தைச் சாப்பிடுவது போல நாட்டின் சுபிட்சத்திற்காக சில கசப்பான விடயங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு மடலுடன் சந்திக்கும் வரை

அன்புடன்

சக்தி சக்திதாசன்

படத்திற்கு நன்றி:

http://us.123rf.com/400wm/400/400/audiohead/audiohead1110/audiohead111000136/10988581-financial-crisis-in-europe–newsletters-headlines-about-financial-crisis-with-flag-of-european-union.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *