இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ………….. (7)

4

சக்தி சக்திதாசன் 

முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்

அன்பினியவர்களே !

உள்ளத்தில் உந்தும் பல வினாக்களுடன் விடைகளில்லா நிலையில் உங்கள் முன்னே இந்த ஏழாவது மடலை வரைகிறேன்.

மாணவனாக  இற்றைக்கு ஏறக்குறைய 37 வருடங்களுக்கு முன்னால்  இங்கிலாந்தினுள் நான் காலடி வைத்தேன்.

அப்போதைய எனது இலட்சியம் ஜந்து வருட மேற்படிப்பினை முடித்துக் கொண்டு என் தாயகமான ஈழம் திரும்புவதே !

இடையிடையே எத்தனையோ திருப்பங்கள் வாழ்க்கையிலே. ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு புதிய திருப்பம் , வாழ்க்கை வகுத்த சாலையின் வழியே ஓடிய என்னை தன் நாட்டின் வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டது இங்கிலாந்து.

நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலே எத்தனையோ குறைகள் இருக்கலாம். எத்தனையோ விடயங்களில் எனது எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்து இருக்கலாம் ஆனால் ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் தன்மையைக் கொண்டதல்ல இந்நாடும், அதன் பெரும்பான்மையான மக்களும்.

ஆனால் இங்கே எம் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட என் போன்ற பல புலம்பெயர் மக்கள் தமக்கு வாழ்வளித்த இந்நாட்டை அதற்குரிய கெளரவத்தைக் கொடுத்துப் பார்க்கிறோமா? எனும் கேள்வி ஆழமாய் என்னுள்ளே தகிக்கிறது.

நாம் இந்த நாட்டிற்கு வாழ்வாதாரம் தேடி வந்தவர்களாக இருக்கலாம், எமது தாய்நாடுகள் என நாம் உரிமை கொண்டாடும் நாடுகளில் நாம் வாழும் போது இருந்த ஒரு பிணைப்பு இந்நாட்டிற்கும் எமக்கும் இல்லை எனும் எண்ணம் எம் மனதில் ஆழமாய் ஊறிப்போயிருக்கலாம். அதற்காக நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நாட்டை, தாய்நாடுகளில் வாழும் உறவுகளுக்கு எம்மாலான உதவிகளை நாம் புரிவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த இந்நாட்டையும் அதன் மக்களையும் அவமதித்து நடக்கக் கூடிய வகையில் நாம் நடக்கலாமா ?

அது எமது கலாச்சாரப் பண்பில்லையே ! ஈழமா? இந்தியாவா? பாகிஸ்தானா ?  அன்றி ஹிந்தியா? தமிழா ? வங்காள மொழியா ? என்று எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகவோ அன்றி எந்த மொழி பேசுபவர்களாகவோ இருந்தாலும் இந்நாட்டுப் பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொண்டும, இந்நாட்டை ஒரு வாடகை வீட்டில் குடியிருப்பதைப் போல பார்க்கும் மனப்பான்மை எம்முள் புரையோடிவிட்டதோ எனும் கருத்து வேதனையோடு என்னுள்ளத்தில் உரசுகிறது.

என்ன எதற்காக‌ இந்தப் பிதற்றல் எனும் கேள்வியின் அர்த்தம் எனக்குப் புரிகிறது. காரணமில்லாமலில்லை.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னால் இங்கிலாந்து கோர்ட்டு ஒன்றிலே ஒன்பது ஆசியர்களுக்கு எதிராகவழங்கப்பட்ட வழக்கு ஒன்றின் தீர்ப்பின் தாக்கங்களை அலசும் போதே மேற்கண்ட உணர்வுகள் என்னை உராய்ந்தன.

இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் (Manchester)  நகரில் உள்ள ஓல்ட்காம் (Oldham) எனும் இடத்திலுள்ள ரொச்டேல் (Rochdale) எனும் நகரில் தான் இந்த அகோர சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்நகரிலுள்ள உடைந்த குடும்பங்களைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட ஆங்கிலச் சிறுமிகள் பலரைப் பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திய ஒன்பது ஆசிய ஆண்களுக்கு சராசரி தலா 19 வருட கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இங்கிலாந்திலே பல பெரும்பான்மை மக்களின் மணவாழ்க்கை உடைந்து, குழந்தைகள் சிறுவர்கள் இல்லத்தில் சமூக சேவகர்களால் பராமரிக்கப்படுவது வழக்கம். அத்தகைய சிறுவர்கள் இல்லங்கள் சிலவற்றில் தகுந்த பாதுகாப்பு கிடையாது.

தமது பெற்றோர்கள் தம்மை உதாசீனப்படுத்தியதால் விரக்தியடைந்த சிறுமிகள் சிலர் மிகவும் இளவயதிலேயே பல தீயபழக்கங்களுக்குத் தம்மை அடிமையாக்கிக் கொள்வதுமுண்டு. அப்படியான சில சிறுமியர் இக்கயவர்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளார்கள்.

இவர்கள் அச்சிறுமியருக்கு குடிபோதைப் பானங்கள், இலவச உணவு ஆகியவற்றைக் கொடுத்து அவர்களைக் கற்பழித்ததோடு அவர்களை தம்மிடையே பரிமாறிக் கொண்டுமுள்ளார்கள்.

இத்தகைய கொடுமையான செயல்களில் ஈடுபட்டவர்கள் ஆசியர்கள் என்பது மட்டுமல்ல அவர்களின் வயது 24 முதல் 59 வரையில் விரிந்துள்ளது.

இவர்களில்  ஓரிருவர் அந்நகரில் ஆசிய உணவு விடுதிகளின் உரிமையாளர்களாகவும், வேறு சிலர் வாடகை வண்டி ஓட்டுனர்களாகவும், ஒருவர் ஒரு இஸ்லாமிய மதபோதகராகவும் இருந்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் வந்து குடியுரிமை வாங்கியவர்களைப் பார்த்து ஏற்கனவே தமது நாட்டின் பிரச்சனைகளுக்கு அவர்கள் தான் காரணம் எனக் கூறிவரும் சில இங்கிலாந்து இனவாதக் கட்சிகளுக்கு இது மிகவும் யோகமான நிகழ்வாக ஆகிவிட்டது.

இனவாதத்தைக் கக்குவதற்கு இதை ஓர் தகுந்த காரணம் ஆக்குவதற்கு இவர்கள் அனைவரும் ஆசியர்கள் என்பதும், அத்துடன் இவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பதும் ஏதுவாக அமைந்து விட்டது.ஆசியர்களின் மனப்பான்மையே இதுதான்,

ஆசியர்கள் பெண்களை அவமானப்படுத்துவதை கலாச்சார ரீதியாக அனுமதிக்கிறார்கள்,

இஸ்லாமியர்கள் பெண்களைக் கேவலப்படுத்துவதற்கு இது ஒரு சான்று,

என சம்பந்தமேயில்லாத வாதங்களை தமக்குத் துணையாக்கி பல ஊடகங்களில் விஷமப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு புலம்பெயர் ஆசியர்களான நாம் காரணமாக இருந்திருக்கிறோமா?

இவ்வழக்கு நடைபெறும் போது குற்றம் சாட்டப்பட்ட ஒன்பது பேரில் ஒருவர்,  தான் இப்படி நடந்து கொண்டதற்கு காரணம் “வெள்ளை இனப் பெண்களைப் பாலியல் உறவுகளில் ஈடுபடுத்துவது மிகவும் சுலபம், அதனால் தான் இது நடந்தது” என்று கூறியது மிகுந்த சர்ச்சையான வாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

இவ்வழக்கில் இவர்களுக்கு கடுமையான தண்டனைகளை விதித்த நீதிபதி ”நீங்கள் இக்குழந்தைகள் உங்கள் இனத்தையோ அன்றி உங்கள் சமூகத்தையோ சேராதவர்கள் எனும் காரணத்தினால் இத்தகைய கீழ்த்தரமான செயல்களுக்கு உள்ளாக்கி இருக்கிறீர்கள் ” என்றும் “மிருகத்தனமான, மிலேச்சத்தனமான உங்கள் செயல்கள் ஆசையிலும், காமத்திலும் உருவானது அதற்கு இனத்துவேஷம் எனும் பெயரைக் கொடுத்து நியாயப்படுத்தாதீர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் எட்டு பேர் பாகிஸ்தானையும், ஒருவர் ஆப்கானிஸ்தானையும் தாயகமாகக் கொண்டுள்ளார்கள்.

அன்பினியவர்களே ! இச்செயல்களுக்கு யார் எக்காரணத்தைக் கூறினாலும் அடிப்படையில் இது ஒரு மிருகத்தனமான செய்கையே !

குழந்தைகள் புனிதமானவர்கள்! தெய்வத்தன்மை கொண்டவர்கள் அவர்கள் தவறான வழிகளில் நடப்பதைக் கண்டால் அறிவுறுத்தி சரியான பாதைக்குத் திருப்ப முயற்சிப்பதே முறையானது. அதை விடுத்து அவர்களைக் காம இச்சைகளுக்கு உட்படுத்துவது மனித தர்மத்திற்கே முரணானது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாயகமாக் கொண்ட, ஆசியக் கலாச்சாரத்தின் பின்னணியில் வளர்க்கப்பட்டோர் எந்த நாட்டில் இருந்து வந்தாலும், எந்த மொழியைப் பேசினாலும் மனித தர்மத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பது மகத்தான உண்மை.

இஸ்லாமிய மதம் புனிதமானது. பவித்திரமானது சில மனித விரோத சக்திகளின் மிலேச்சத்தனமான செய்கைகளுக்காக அம்மதத்தைக் களங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

இக்குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்த மதம்? என்ன நிறம்? எந்த நாடு? என்னும் கேள்விகளை தூக்கி எறிந்து விட்டு அவர்களின் குற்றச்செயல்கள் அவர்களின் மனதின் இழிநிலையிலாயே நிகழ்த்தப்பட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் வாழும் இந்நாடு எம்மை வாழவைக்கிறது. நாம் பிறந்த நாடுகள் சிலவற்றில் எமக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை விட அதிகமான சுதந்திரத்தை அளிக்கிறது. அதற்குப் பிரதியுபகாரமாக நாம் என்ன செய்கிறோம்?

மிகவும் ஆழமாக சிந்திக்க வேண்டிய இக்கேள்வியோடு மீண்டும் அடுத்தவாரம் சந்திக்கும்வரை விடைபெறுகிறேன்.

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

(படங்களுக்கு நன்றி : பி.பி.ஸி , விக்கிபீடியா )

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ………….. (7)

 1. நல்ல வினா.
  வெளிநாடு வருபவர்கள் – அங்கு வந்து பணி புரிபவர்கள், அங்கு வாழ்பவர்கள் – இவர்கள் -அவர்களது தாய்நாட்டின் கலாச்சாரப் பிரதிநிதிகளாகிறார்கள் – அந்நிய மண்ணில் அவர்களது நடத்தை தாயகத்தை கவுரவிப்பதாக இருக்க வேண்டும். தனிமனிதர்களின் இழிவான செயல் பிறந்த நாட்டிற்கே களங்கத்தை ஏற்படுத்தும்!
  வந்தாரை வாழவைக்கும் நாடுகள் நம் கடமை – கண்ணியம் – கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இலக்கணமானவை.

 2. மொழி, மதம், நாடு தாண்டி மனித நேயத்தை மையமாகக் கொண்ட தங்கள் பார்வை இன்றைய சமுதாயத்துக்கு மிகவும் தேவையான ஒன்று. அடுத்த வாரம் எதைப் பற்றி எழுதவிருக்கிறீர்கள் என்று ஆர்வத்தை தூண்டுகிறது த்ங்கள் கட்டுரை. தொடரட்டும் இந்தப் பணி !

 3. அன்பினிய அவ்வைமகள்,
  உங்கள் கருத்தை நான் முற்றாக வரவேற்கிறேன். எமது தாய்கத்தின் பெருமையை மிளிரச் செய்வது எம் ஒவ்வொருவருமுடைய கடமை.
  அன்புடன்
  சக்தி

 4. அந்நிய நாட்டில் நடக்கும் குற்றங்கள் போல், அனுதினமும் இங்கேயும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை நம்மூர் தினசரி பத்திரிகைச் செய்திகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். ஒரே ஒரு வித்தியாசம், அங்கே தண்டனை கடுமையாகவும், தண்டனையை உடனே உறுதி செய்வதும் உடனே நிகழ்ந்து விடுகிறது. இங்கே அதுபோல் இல்லை. இங்கே ஒரு மாபெரும் குற்றத்தைச் செய்பவர்கள் குற்றத்தை மறைத்து அதிலிருந்து தப்பிக்க நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ளும் நீண்ட கால விசாரணையும் கூட ஒரு வகையில் குற்றவாளிகளைத் தப்பிக்க உதவி விடுகிறது.

  மதிப்பிற்குறிய சக்தி சக்திதாசன் அவர்கள் தனது கட்டுரையில், நாம் வாழும் இந்நாடு எம்மை வாழவைக்கிறது. நாம் பிறந்த நாடுகள் சிலவற்றில் எமக்குக் கிடைக்கும் சுதந்திரத்தை விட அதிகமான சுதந்திரத்தை அளிக்கிறது. அதற்குப் பிரதியுபகாரமாக நாம் என்ன செய்கிறோம்? என்றும் கேள்வி?…வாசகர்களிடம் எழுப்பியிருக்கிறார்….பதில் பின்வருமாறு…

  நமது நாட்டில் கிடைக்காத அனைத்து வசதிகளையும் அள்ளித் தருகிறது அந்நிய நாடுகள் என்பதாலாயே இங்கு படித்தவர்கள் அனைவரும் அந்நிய நாட்டுக்குப் படையெடுப்பதை இன்றும் பார்க்கிறோம். இங்கு படித்து அறிவைப் பெருக்கிக் கொண்ட இவர்கள், பெற்ற அறிவை அந்நிய நாட்டிற்காகச் செலவு செய்வதே, அவர்கள் அந்நிய நாட்டிற்காகச் செய்யும் பிரதியுபகாரமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

  திருமதி அவ்வை மகள்………..வெளிநாடு வருபவர்கள், அங்கு வந்து பணி புரிபவர்கள், அங்கு வாழ்பவர்கள், அவர்களது தாய்நாட்டின் கலாச்சாரப் பிரதிநிதிகளாகிறார்கள். அந்நிய மண்ணில் அவர்களது நடத்தை தாயகத்தை கவுரவிப்பதாக இருக்க வேண்டும் என்று கருத்துச் சொல்லியிருக்கிறார்.

  நமது நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அறியாத மக்கள், நமது தாயகத்திலேயே வாழும்போது, அந்நிய மண்ணில் எங்கே நமது நாட்டின் பெருமையை எடுத்துச் சொல்லமுடியும்?….இதைத்தான் வல்லமை முகப்புப் பக்கத்தில், “நமது கலாச்சாரத்தை நாம் அறியோம்” என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். மேலும் சக்திதாசனின் 09-05-12 மடலுக்கும், அதே பத்தியில் இதை ஒத்த கருத்துக்களைத்தான் தெரிவித்து இருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *