நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-10

4

பெருவை பார்த்தசாரதி

நூல்கள்- சென்ற இதழ் தொடர்ச்சி

பல வகையான நூல்களைப் படிக்கும் போது, சில நூல்கள் சிறிது நேரத்திலேயே நம்மை ஈர்த்து விடுகிறது. சில வகைப் புத்தகங்கள் படிக்கும் போதே அதற்கு அடிமையாகி விடுகிறோம். உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகள் சாக்ரடீஸ் மற்றும் அரிஸ்டாட்டிலின் தத்துவங்களைப் போலவே பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புகழ் பெற்ற ஆங்கில அறிஞர் பிரான்ஸிஸ் பேக்கன் என்பவர் எழுதிய தத்துவங்களும் புகழ் அடைந்தன. இவர் புத்தகம் படிப்பதைப் பற்றிப் பின் வருமாறு குறிப்பிடுகிறார். இவரைப் போல் எண்ணற்ற அறிஞர்கள் கூறும் தத்துவ மொழிகளையெல்லாம் நாம் வேறெங்கும் தேட வேண்டிய நிலை தற்போது இல்லை. இப்போதெல்லாம், நமது அலைபேசிகளுக்கு அறிஞர் பெருமக்களின் அறிவுரை எல்லாம் இப்போது குறுந்தகவல் (SMS) என்ற முறையில் அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. இது போன்ற அருந்தகவல்களை எழுத்தாளர்கள் சேமித்து வைத்துக் கொண்டால் தக்க சமயத்தில் மேற்கோள் காட்டுவதற்கு உகந்ததாக இருக்கும்.

“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested: that is, some books are to be read only in parts, others to be read, but not curiously, and some few to be read wholly, and with diligence and attention.”
Francis Bacon

ஒரு சிலர் சாப்பிடும் போது, பேசிக்கொண்டே சாப்பிடுவார்கள், சிலர் புத்தகம் படித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இதனால் தானோ என்னவோ, அறிஞர் பேக்கன் சொல்லுகிறார். சில நூல்களைச் சுவைத்துப் பார்க்க வேண்டும், சிலவற்றை அப்படியே முழுங்கி விடவேண்டும், ஒரு சில நூல்களைக் கடித்து மென்று மெதுவாக ஜீரணித்துக் கொள்ள வேண்டும். சிலவற்றைக் கவனமாக முழுவதும் படித்து விட வேண்டுமாம்.

அறிஞர் பேக்கன் போலவே இன்னும் பல அறிஞர் பெருமக்கள் தங்களுடைய வாழ்க்கையில் நூல்கள் எவ்வாறு உறவாடியது என்பதைப் பல சமயங்களில் விளக்கியிருக்கின்றனர். “புத்தகம் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது” என்று சொன்னவர் யார் தெரியுமா?… ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியாக இருந்த தாமஸ் ஜெபர்ஸன்.

“I cannot live without books.” —THOMAS JEFFERSON

சரி, நமக்கு விருப்பமான, ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விட்டோம், அதை எவ்வாறு நாம் படிக்க வேண்டும். படித்து முடித்த பிறகு, புத்தகங்களில் இடம் பெற்ற சம்பவங்கள் மீண்டும் நினைவுக்கு வருகிறதா?…..

சாப்பிடும் போது உணவுப் பொருட்களின் மேல் இருந்த ஆர்வம், சாப்பிட்ட பிறகு எங்கோ மறைந்து விடுவதைப் போல, புத்தகத்தைப் படித்த பிறகு, வேறு புத்தகத்தின் மேல் கவனம் திரும்பி விடுவது இயற்கையே.

அறிவை வளர்த்திடல் வேண்டும்
அத்துனைப் பேர்க்கும் ஒன்றாய்
சிறியரை மேம்படச் செய்தல் பின்பு
தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்

என்கிறார் மஹாகவி பாரதியார். அறிவை வளர்க்க வேண்டுமானால், நமது வாழ்க்கைக்குப் பயன் படுகிற நூல்களை தேடிப் படிக்க வேண்டும், பொழுது போக்கிற்காக நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதைத் தவிர்க்கவும் வேண்டும். அதோடு மட்டுமல்ல……… ஒரு புத்தகத்தைப் படிக்கும் போது அதில் எந்த அளவு ஈடுபாடு இருக்கின்றதோ அதே அளவு அறிவுதான் கிட்டும் என்பதை “நூலலளவே ஆகுமாம் நுண்அறிவு” என்கிறார் ஒளவைப் பிராட்டியார். அறிவைப் பெறுவதற்கு, இடையறாது எண்ணற்ற நூல்களை நாம் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். இதே போலத் தமிழில் “கண்டதும் படிக்கப் பண்டிதனாவான்” என்கிறது தமிழ் முதுமொழி ஒன்று. எந்த நூல்கள் ஆனாலும் படிப்பதற்குப் பழக்கிக் கொண்டால், பின்னாளில் பண்டிதராவதற்கு வழிவகுக்கும் போல.

புகழ்பெற்ற புத்தகங்களை மாசறக் கற்று, பகுத்தறிவிலும், அனுபவத்திலும் தேர்ந்து, “அறிவாளி”, “மேதை”, “சிந்தனைச் சிற்பி” என்றெல்லாம் உலகப்புகழ் அடைந்த

ஷேக்ஸ்பியரையும், ஷெல்லியையும்,
சாக்ரடீஸையும், பெர்நாட்ஷாவையும்
அரிஸ்டாட்டிலையும், பிளாட்டோவையும்

போன்ற மேலைநாட்டு அறிஞர்களையே மேற்கோள் காண்பித்து இன்றுவரை பெருமைப் பட்டுக் கொண்டிருப்பதை விட, நாம் அறிந்த தமிழ் அறிஞர்கள் பலரது கருத்துக்களையும், “புத்தகங்கள் எவ்வாறு வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன” என்பதைப் பற்றியும் சுருக்கமாக இங்கே காண்போம்.

“காலமென்னும் மாபெரும் ஆழியின் நடுவே அமைக்கப் பெற்ற கலங்கரை விளக்கம்தான் புத்தகங்கள்”. ‘காவியம் வெறியூட்டும், புத்தகம் அமைதியூட்டும்’. எவ்வளவு அழகாகச் சொல்லுகிறார் கவியரசர் கண்ணதாசன்.

சுவாமி விவேகானந்தரின் அனைத்து நூல்களையும் முழுவதுமாகப் படித்த பெருமை அண்ணல் காந்தியடிகளுக்கு உண்டு. “எனக்குத் தாய்மொழி மற்றும் தாய்நாட்டின் மீதுள்ள பற்று மேலோங்கியதற்கு முழுமுதற் காரணமாக விளங்கியது, சுவாமிஜியின் புத்தகங்களை நான் ஆர்வத்துடனும், ஆராய்ச்சியுடனும் படித்ததால்தான்”என்று அண்ணல் காந்தியடிகள் சொல்லியிருக்கிறார்.

புத்தகங்களில் இடம்பெறும் அறிவு சார்ந்த பயனுள்ள விஷயங்கள் பலரை அறிவாளியிருக்கிறது, மன்னர்களுக்குத் திறமையாக அரசாள வழிகாட்டியிருக்கிறது. அறிவூட்டும் நிகழ்ச்சிகள் பலவற்றைக் குறிப்பிட்டுக் குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலே அறிவாளி, மேதை, சிந்தனைச் சிற்பி என்று பலரைச் சொன்னோம் அல்லவா?… இவர்கள் எல்லாம் தாங்கள் படித்த நன்னூல்களில் இருந்து எடுத்த அறிவுசார்ந்த கருத்துக்களைத் தங்களுடைய படிக்கும் அறைகளில் (Reading Room) கண்களில் படும் படி எழுதி ஒட்டி வைத்திருந்தார்கள் என்று படித்திருக்கிறேன். நாம் பணி செய்யும் அலுவலகங்களில், நன்றாகப் பணி புரிவோர், நல்ல சிந்தனை உள்ளவர்கள், திறமையான பணியாளர், மற்றவரை விட எவ்விதத்திலும் மேலோங்கி இருப்பவர் இவர்களின் அறைக்குள் நுழையும் போது சட்டென்று நம் மனதைக் கவர்ந்து விடுகிற வாசகங்களைக் கண்ணைப் பறிக்கும் (Eye catching) விதத்தில் சுவர்களில் ஒட்டி வைத்திருப்பதைக் காணலாம். அறிவாளிகள் சொன்ன வாசகங்கள் பலரது வெற்றிக்கு வழிகாட்டியிருக்கின்றன என்று கூடச் சொல்லலாம்.

“அறிவு ஒரு தொடர்கதை” என்று சொன்னவர் ‘அறிஞர் அண்ணா’. கன்னிமாரா நூலகத்தில் இருக்கும் அனைத்து நூல்களையும் கற்றுத் தெளிந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் என்பதை அனைவரும் அறிவர். “மூடியிருக்கும் அறிவுப்பாதையைத் திறந்து நம்மை வழிநடத்தி அழைத்துச் செல்வது புத்தகங்கள்தான்” என்றும், நல்ல நூல்களைப் பிறரிடமிருந்து வாங்கிப் படிக்காமல், அதை விலைக்கு வாங்கி வீட்டில் சேமிக்க வேண்டும் என்பது அவருடைய கருத்து. விலைக்கு வாங்கினால் தான் படிக்க வேண்டும் என்ற ஆர்வமும் எழும் என்பதில் சந்தேகமென்ன!…

நம் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் நாம் உஷாராக இருக்க வேண்டும். பாடுபட்டுப் பொக்கிஷமாக வைத்திருக்கும் நன்னூல்களை இரவல் கொடுத்தால் திரும்ப வராது. வீடு, தோட்டம், கார் இவையெல்லாம் நமது சொத்து என்று நினைப்பதுபோல், புத்தகப் புழுவாக இருப்பவர்களுக்கு “புத்தகங்கள்” மட்டுமே பொக்கிஷமாகும். சென்ற இதழில் வெளியான தொடர்-9 ல் வெளியான கருத்துக்களுக்கு, ஒரு அன்பர் திரு நா. விஜயராகவன் என்பவர் கருத்துப் பதிவு செய்யும்போது, தன்னிடம் உள்ள புத்தகங்களை இரவல் கொடுப்பதாகவும், புத்தகங்களின் மூலம் பெற்ற அறிவை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதாகவும், மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டு, புத்தகங்களை இரவல் கொடுத்தால் மட்டும் திரும்ப வருவதில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

நாம் எண்ணற்ற நூல்களைத் தேர்ந்தெடுத்து தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். எல்லா நூல்களுமே சிறந்தவை என்று சொல்லிவிட முடியுமா?…. ஒரு முறை படித்த பிறகு மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை எந்த நூல் தூண்டுகிறதோ, அந்த நூலே மிகச் சிறந்த நூலாகக் கொள்ள வேண்டும். இதுவே உயர்வுக்கு வழிகாட்டும் நூலாக அமையும்.

ஓரிரவிலேயே கண்விழித்துப் படித்து, பொழுது புலர்வதற்குள் எல்லா நூல்களையும் கற்று அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியுமா?….. கற்பது என்பது இளவயது முதலே பழகிக் கொண்டால்தானே, முதுமை வரை நீடிக்கும் ஒரு நல்ல பழக்கங்களில் ஒன்றாகும். வழிகாட்டும் நூல்களைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், இளமையில் கல்வி கற்பது அவசியம் என்பதைப் பழம்பெரும் நீதிவெண்பா என்ற நூலில் வரும் ஒரு “தமிழ்ப்பாடல்” ஒன்றைக் கூறுவது இங்கே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

“வருத்தவளை வேயரசர் மாமுடியின் மேலாம்
வருத்த வளயாத மூங்கில் . தரித்திரமாய்
வேழம்பர் கைப்புகுந்து மேதினியெல் லாந்திரிந்து
தாழுமவர் தம்மடிக்கீழ்த் தான்”

இந்தப் பாடலின் மேலோட்டமான கருத்து, முற்றாத இளமூங்கில் வளைத்தவுடன் வளையும் தன்மையுடையதால், வேந்தனின் முடியில் சிவிகைக் கொம்பாக அலங்கரிக்கிறது. ஆனால் முற்றி விட்ட மூங்கில் முயன்று வளைத்தாலும் வளையாது, கழைக்கூத்தாடியின் கையில் சிக்கி ஊர் சுற்றித் திரிந்து அலைந்து அவர்களின் காலடியில் கிடக்குமாம்.

இந்தப் பாட்டு மறைமுகமாக விளக்கும் அறநெறி யாதெனின், இளமையில் எந்தக் கலையும் கைகூடும் என்பது இயற்கை, வயது முதிர்ந்து விட்டால், முனைந்தாலும் உச்சியை எட்ட முடியாது. இதையேதான் இளவயதில் முயற்சி செய்து கல்லாத ஒருவன் முதுமையில் வருந்தித் துன்புறுவான் என்பதே இந்தப் பாடலின் உட்கருத்து. புத்தகங்களைப் படிக்கும் பழக்கும் இளவயது முதலே தொடர்ந்து விட்டால் முதுமையில் நல்ல பொழுதைத் தூங்காமல் கழிப்பதற்கும், உடல் உபாதையிலிருந்து தற்காலிக விடுதலைக்கும் புத்தகங்கள் நல்ல காரணியாகச் செயல்படும்.

மற்ற பிறவிகளோடு, மனித வாழ்க்கையை ஒப்பிடும்போது, ஒன்றை நாம் கவனிக்கத் தவறி இருக்க மாட்டோம். மனித வாழ்க்கையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வித மாறுதல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது, கூடவே முன்னேற்றமும் தொடர்ந்து கொண்டே வருகிறது. இன்றைக்கு, விஞ்ஞானத்தின் அபரிமிதமாக வளர்ச்சியினால், மனிதன் எட்ட முடியாத உச்சியை எட்டி விட்டான் என்று சொல்லுகிறோம், இதற்கு உறுதுணையாக அமைவது நூல்களின் பங்கு. இந்த உலகில் எப்படி வாழ வேண்டும்?……. என்றும், இப்படித்தான் வாழ வேண்டும்!… என்றும் மனிதனுக்கு எண்ணற்ற அறநெறிகளைப் போதிக்கிறது நன்னூல்கள். ஒரு வரலாற்றைப் படைத்தவன், மற்றொருவனுக்குப் புதிய வரலாற்றைப் படைக்க வழிகோலுவதும் நூல்களே.

இனி வரும் இதழ்களில் நம்மிடையே இருக்கும் நல்ல பழக்க வழக்கங்களில் படிக்கும் பழக்கம் என்பது நம் வாழ்க்கைக்கு எவ்வாறு பயன்படுகிறது, அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும், இவை எல்லாவற்றிற்கும் உதவும் வகையில் நூலகங்களும் நம் வாழ்க்கையின் ஒர் அங்கம் போன்றவற்றை அறிவோம்.

தொடரும்..

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நல்வாழ்க்கை வாழ ‘வழிகாட்டிகள்’: தொடர்-10

  1. Good books are assets always. READING MORE PERSON PUNDIT .
    READ SOMETHING EVERYBODY

  2. Day by Day, Your thought and writing is improving. Very good social thoughts for everyone. Keep your good work always. Soon I am expecting your experience with 108 Divya Desham tour.

  3. நண்பா படிப்பதின் அவசியத்தை மிக அழகாய் அறிவுறுத்துகிறாய். அருமை. இனி ஞாயிறுகளில் உந்தன் நூல் மூலம் கற்றுதலை தொடர்கிறேன். ஷெல்லியையும் ஷேக்ஸ்பியரையும், ஷாவையும் விவேகாநந்தரையும் உன்னிலே படிக்கிறேன்.

    தொடர்க வாழ்த்துக்கள் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *