உஷ்…
உறக்க வானில் மிதக்கும் அவனை
உசுப்பி விடாதீர்
உறங்கட்டும்!
உறக்கமே உண்மை விருந்து…
உதாரண மருந்து!
அமைதி யுகம்….
ஆத்மார்த்த சுகம்!
கனவில் அவன்
கணிப்பொறிகளை மறந்து
கற்கால மனிதனாகலாம்!
இறந்த தாயின்
இறகுக் கைகளில்
அமிர்த உணவினை
அருந்தி மகிழலாம்!
பிரிந்த தந்தையின்
பிடரி வருடலில்
பிறவி சாபல்யம்
பெற்றுக் களிக்கலாம்!
ஒரு வேளை உணவிற்கு
உறியடி காண்பவன்
சொப்பனத்திலோர;
சோற்று மலைமேல்
சொக்கட்டான் ஆடலாம்!
உத்தியோகத் தேடலில்
உதிரம் வெளுத்தவன்
கனவு லோகத்தில்
கப்பல் முதலாளியாகலாம்!
காதல் மணத்தைக்
கதைகளில் மட்டுமே
நுகர்ந்து நுகர்ந்து
நொந்து போனவன்
கனவு தேசத்தில்
யுக்தாமுகியுடன்
சொர்க்கத் தீவிற்குச்
சுற்றுலா போகலாம்!
நைந்த சட்டையில்
நட்சத்திர ஓட்டைகளுடன்
பழுப்பு வேட்டியில்
பல்வேறு கிழிசல்களுடன்
பரிதாபம் காட்டும் ஏழ்மைப் பங்காளி
சொப்பனத்தில் சுல்தானாகி
பட்டாடையில் பவனி வரலாம்!
வறுமையின் நினைவுத் தூண்களாய்
விலா எலும்புகளை விடைத்து நிற்பவன்
கனவில் ஒருவேளை ஆணழகனாய்
அறிவிக்கப்படலாம்!
உஷ்…
உறக்க வானில் மிதக்கும் அவனை
உசுப்பி விடாதீர்
உறங்கட்டும்!
உறக்கமே உண்மை விருந்து…
உதாரண மருந்து!
அமைதி யுகம்….
ஆத்மார்த்த சுகம்!
படத்திற்கு நன்றி
http://www.qigongchinesehealth.com/sleeping_qigong