விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்!

3

 

அன்பு நண்பர்களே,

மெய்ஞ்ஞானம் சிறந்து விளங்கிய நம் பழம்பெரும் பாரத நாடு, ‘எழுமின், விழிமின்’! என்று விவேகானந்தர் போன்ற ஞானிகள் இளைஞர்களை எழுச்சியுறச் செய்ததன் விளைவு நம் நாடு இன்று விஞ்ஞானத்திலும், தலைசிறந்து உலக அரங்கில் உயர்ந்ததொரு நிலையில் பாரத மாதாவின் மணிமகுடமாக மின்னிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் அணுசக்தித் துறையின் ஆக்கப்பணிகளில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பங்கெடுத்துக்கொண்டவர் இன்று இலக்கியப் பணிகளும் தம் தடம் பதித்துக் கொண்டிருக்கிறார். அறிவியல் தமிழை வளமாக்குவதன் மூலம் உலக அரங்கில் நம் தமிழ் மொழியின் வளர்ச்சி உத்த்ரவாதமாகும். அதையும் தம் தலையாய பணியாகக் கொண்டவர் திரு சி.ஜெயபாரதன் அவர்கள். அவர்தம் பணிகள் குறித்து அவர்தாமே சொல்வதைக் காண்போம்:

அணுவினைப் பிளந்த நான்
அன்பையும் பிளந்து
நுணுகி நுணுகி
நோக்கினேன்! அங்கும்
அன்னை சக்தி
என்னை மயக்கி
முறுவல் செய்தாள்!
சிறுவன்
பணிந்தேன் அதன் திருப்
பாதங்களில்!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப்பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப்பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கிய படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960ம் ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணினித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மும்பையிலும், சென்னை கல்பாக்கத்திலும் அரங்கேறியுள்ளன. இதுவரை மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடி, பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலை பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்,

கிங்கார்டின்,

அண்டாரியோ, கனடா.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும்!

  1. வணக்கம்
    உற்சாகம் பெருகுகின்றது
    வல்லமைக்கு வல்லமை சேர்க்க இன்னொரு வலுவான கரம்
    வாசகர்களுக்கு அறிவியல்-ஆன்மீகம் என இரட்டை இலாபம்
    தங்களை உளமகிழ்வோடு வரவேற்கிறேன்

  2. வருக வல்லமைக்கு. பகிர்க தங்கள் அனுபவத்தை, எதிர்காலத் தமிழர் நலன் கருதி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.