நமது கலாசாரத்தின் பெருமையை நாம் அறியோம்?…

4

 

 பெருவை பார்த்தசாரதி

  

இப்போதெல்லாம், தமிழகமெங்கும், தேர்தல் ஆகட்டும், அரசியல் தலைவர்களின் இல்லத் திருமண விழாக்களாகட்டும், நகரத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் டிஜிட்டல் விளம்பர போர்டில் வரையப்பட்ட மகாபாரத அர்ஜுன ரதத்தை அடிக்கடி காணமுடிகிறது.

டிஜிட்டல் விளம்பர போர்டில் இடம்பெற்ற மற்ற வாசகங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில்?…………..

சமீபத்தில் சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு புராதனக் கோவிலின் முன் இம்மாதிரிப் படங்களை வைத்திருந்தார்கள். அப்போது, வெளிநாட்டவர் ஒருவர் அந்தப் படத்தை மிகவும் உற்று நோக்கிவிட்டு, பகவான் கிருஷ்ணனுடைய தோற்றமும், அருச்சுனனுடைய தோற்றமும் மாறியிருப்பதைப் பற்றி பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவரிடம் வினவ, பதில் சொன்னவர் ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்தவராக இருந்ததால், நல்ல வேளையாக அந்த ஆங்கிலேயருக்கு மிக எளிதாக புரியும் வகையில், இப்படத்திற்கும், பகவத் கீதைக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பதையும், மேலும் கீதையின் மகத்துவத்தையும் ஓரிரு வார்த்தைகளில் மிக அழகாக எடுத்துரைத்தார்.

 நகரின் மூலை முடுக்குகளிலெல்லாம், இம்மாதிரிப் படங்களெல்லாம் பார்க்கும்போது, சட்டென்று நாம் என்ன நினைப்போம்? ஆலயங்களிலோ, மற்ற இடங்களிலோ மகாபாரதக் கதை சொல்லப் போகிறார்கள் என்று நினைப்பது சகஜம்தானே! அதேபோல்தான் அந்த வெளிநாட்டவரும் கேள்வி எழுப்பி இருக்கக்கூடும். படத்தை உற்று நோக்கியபிறகுதான், அதில் பகவான் கிருஷ்ணனும், அருச்சுனனும் இருக்க மாட்டார்கள் என்று தெரியவரும்.  படத்துக்குக் கீழே பகவத் கீதையில் வரும் வாசகங்களை மாற்றி, “தங்கள் அபிமானத் தலைவர்கள்” எதிரிகளைக் அழிக்கத் தயங்க மாட்டார்கள் என்பதையும் எழுதி விளம்பரப் படுத்திக் கொண்டிருப்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே பார்த்திருக்க முடியும்.

விஷயத்துக்கு வருவோம், இச்சம்பவத்தைப் பற்றிய ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

 “அமிர்த சாஸ்திரம்” என்று பெருமையோடு பேசப்படுகிற பகவத் கீதையின் மகிமை அறியாது, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கீதையை ஒப்பிடுவது தகாது. கீதையைப் படித்துப் புரிந்து கொண்டாலே ஒருவன் ‘அறிவாளி’என்ற பட்டத்தைப் பெற்றுவிடலாம், அந்த அளவுக்கு அதில் மானுட அறிவுக்கு எட்டாத பொக்கிஷங்களெல்லாம் புதைந்து கிடக்கிறது. ‘பரமாத்மா’ என்பவன் ஸ்ரீகிருஷ்ணன், ‘ஜீவாத்மா’ என்பவன் அர்ஜுனன், காமக் குரோதங்களாக துரியோதனாதியர்களை விளக்குவதுதான் “பகவத்கீதை”.

பகவத் கீதையின் பெருமையை நாம் முழுவதுமாக அறியாவிட்டாலும், மேல் நாட்டினர் பலர் கீதைக்கு உரை எழுத முற்பட்டு, இதுவரை ஆங்கிலம் முதல் தொடங்கி, பிரஞ்சு, லத்தீன், ஜெர்மன் முதலிய வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு இருந்தாலும், யாருமே…..ஏன் எங்குமே பகவத்கீதையைப் பற்றிய அவதூறுகளை எழுதியதாக இதுவரை அறியப்படவில்லை. நம் பாரத நாட்டில் சமஸ்கிருதம் முதல் வங்காளம்,இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இன்னும் பல மொழிகளில் கீதை வடிவெடுத்திருக்கிறது.

ஒருமுறை மஹாத்மா அவர்கள் லண்டனில் உள்ள பெயர் சொல்லக்கூடிய ஒரு நூலகத்துச் சென்றபோது, அங்கே ஒரு வாசகம் இருந்ததாகவும், அதில் அடிக்கடி வாசகர்கள் அதிக அளவில் தேடும் புத்தகம் “பகவத் கீதை”என்று குறிப்பிட்டிருந்தச் சொல்லியிருந்ததை ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட மஹாத்மா அவர்கள் “அநாசக்தி யோகம்” , பால கங்காதர திலகர் “கர்மயோகம்”, சக்கரவர்த்தி  ராஜகோபாலச்சாரியார் எழுதிய “கைவிளக்கு” ஆகிய கீதையின் உரை நூல்கள் அதன் பெருமையை உலகுக்குத் தெளிவுபடுத்துகின்றன.

நமது கலாச்சாரத்தின் மகிமையை பறைசாற்றுகின்ற நன்னூல்களை நாம் கற்று அறிய முற்படாதபோது,வெளிநாட்டினர் நம்முடைய அறநூல்களைக் கற்றறிவதில் நாட்டம் கொண்டிருப்பது பெருமைக்குரியது. வெளிநாட்டவருக்கு நம்முடைய யோக சாஸ்திரங்கள் மற்றும் ஆன்மீகம் இவற்றில் உள்ள நம்பிக்கையும்,மோகமும் மேன்மேலும் அதிகமாகி வருவதை திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் ரமண மகரிஷி ஆஸ்ரமத்திலும், புதுச்சேரி அரவிந்தர் ஆஸ்ரமத்திலும் கண்கூடாகக் காணலாம். மன அமைதியையும், முக்திக்கு வழியையும், புனித பாரதத்தில் தேடினால் மட்டுமே “கண்டிப்பாகக் கிடைக்கும்” என்பது வெளிநாட்டவர்களின் வாதம்.

பாரத கண்டத்தில் தோன்றிய புராணத்தின் பெருமையைக் கூட வெளிநாட்டினர் சொல்லித்தான் நம் நாட்டினர் அறிந்து கொள்கின்ற அவல நிலை இன்று.  வேலூர் மாவட்டம் ஏரிக்குப்பத்தின் பெருமையையும், ராமர் பாலத்தின் பெருமையையும், இந்தியாவை வெளிநாட்டினருக்கு அடையாளம் காட்டிய கட்டிடக் கலையின் நுணுக்கங்களையும் கூட அமெரிக்காவில் உள்ள “நாசா” போன்ற விஞ்ஞான ஆராய்ச்சி மையம் விளக்கங்களோடும்,ஆதாரங்களோடும் எடுத்துச் சொன்னால்தான் நாம் ஏற்றுக் கொள்கின்ற இன்றைய நிலை.

இந்நிலையில் பகவத் கீதையில் புதைந்திருக்கும் ரகசியங்களை அறியாத மானிடர்களுக்கு கீதையின் பெருமை ஒருபோதும் அர்த்தமாகாது. பாரதத்தின் மஹா காவியங்களையும், புராண இதிகாசங்களையும் அவ்வப்போது குறை கூறுகின்ற அறிவாளிகள், தங்களுக்கு வேண்டும் என்கிறபோது மட்டும் வேதசாஸ்திரங்களில் இருந்து“உதாரணங்களை” எடுத்து “மேற்கோள்” காட்டத் தவறுவதில்லை என்பதும் சிந்தனைக்கு உரியது.

‘ஐந்தாவது வேதம்’ என்றும், ‘உபநிஷத்துக்களின் சாரம்’ என்றும் உலகம் முழுவதும் போற்றப்படுகிற,பாரதத்தில் தோன்றிய ஒரு புனித நூலை, தங்களின் வசதிக்கேற்ப மாற்றிக் கொண்டு, பொருத்தமற்ற இடங்களில் கொலை செய்வதற்குத் தூண்டுவதாக கீதையைச் சித்தரித்து, தங்களோடு ஒப்பிட்டுக் கொள்வது ஜீரணிக்க முடியாத ஒன்று.

ஒருவர் தேசப்பற்று உடையவர் என்றால், அவர் அந்த நாட்டின் மொழி, கலாச்சாரம், பண்பு இவற்றிலும் நாட்டம் உடையவராக இருக்க வேண்டும்.  விடுதலைக்காகப் பாடுபட்ட பாரதத் தலைவர்கள் அனைவருமே தேசத்தின் கலாச்சாரத்திலும் அதிக அக்கறை உள்ளவர்களாகத் திகழ்ந்தார்கள். இன்று நடப்பதுபோல், புகழோடு திகழ்ந்த காலத்தில் கூட தங்களை ஒருபோதும் இதிகாசங்களோடு அவர்களை ஒப்பிட்டுக் கொள்ளவில்லை. கூடவே தமது தேசப்பற்றையும், பாரம்பரிய கலாசாரத்தையும் அவ்வப்போது போற்றவும் தவறவில்லை. இந்திய விடுதலைக்காகப் போராடிய தலைவர் பால கங்காதர திலகர் இயற்றிய நூல்களில் “கீதா ரகஸ்யம்” என்ற உரைநூல் மிகவும் பிரசித்தி பெற்றது. மஹாகவி பாரதியார் அவர்கள், திலகரைப் புகழுகின்றபோதே, தேசத்தின் கலாசாரத்தையும் சேர்த்தே புகழுகின்ற வகையில் அவர் இயற்றிய பாடலொன்றையும் இங்கே காண்போம்.

நாலு திசையும் ஸ்வாதந்தர்ய நாதம் எழுகவே

நரக மொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே

ஏலுமனிதர் அறிவை யடக்கும் இருள் அழிகவே

எந்த நாளும் உலக மீதில் அச்சம் ஒழிகவே

கல்வி என்னும் வலிமை கொண்ட

கோட்டை கட்டினான்  நல்ல

கருத்தினால் அதனைச் சூழ்ந்தோர்

அகழி வெட்டினான்

சொல் விளக்கமென்ற தனிடைக்

கோயிலாக்கினான்.

விஞ்ஞான முன்னேற்றம் வளர்ச்சி அடையாத பண்டைக் காலத்தில் தஞ்சைப் பெரிய கோவிலின் ‘கோபுரக் கலசத்தை’ எப்படி அவ்வளவு உயரத்தில் ஏற்றினார்கள் என்று ஆங்கிலேயர்தான் இன்றும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்களே தவிர, நாம் இல்லை. கோட்டை, கோபுரம், கோவில், மதில், அகழி இவையெல்லாம் நம் கலாசாரத்தின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றுகின்ற அழியாச் சின்னங்கள்.

தஞ்சைப் பெரியகோவில், கும்பகோணம் அருள்மிகு ராமசாமி கோயில் மற்றும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலின் மகத்துவத்தையும், சிற்பக்கலையையும் அறியாதவர் இருக்க முடியாது.  அன்றாடம் நாம் ஆலயங்களுக்குச் செல்லும் போது, ஒன்றை கவனித்து இருப்போம். அதாவது வெளிநாட்டவர்கள் நம்முடைய கலாச்சாரத்தையும், கலையையும் நன்கு அறிந்து, அதைப் பற்றி ஆய்வு செய்ய இந்தியாவிற்கு வருகிறார்கள்,ஆனால் நாம், காலத்தால் அழியாச் சின்னங்களின் மேல் மரியாதை செலுத்துவதற்குப் பதிலாக, அழிக்கமுடியாத கருப்பு மையினால் கரிபூசுவதைத் தடுக்கக் கூட நம்மால் முடியவில்லை என்பதும் வருந்தத் தக்கது.

09-05-2012, அன்று வல்லமை மின் இதழில், மதிப்பிற்குரிய சக்தி சக்திதாசன் அவர்கள் எழுதிய “மஹாத்மா அவர்களின் புனித இரத்தம் காசாக்கப்படுவது” என்ற மடலில், நமது தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் பயன்படுத்திய போற்றத்தக்க உடைமைகளை இங்கிலாந்து பொருட்காட்சியில் ஏலம் விட்டதைப் பற்றி மிகவும் வேதனையுடன் வெளிப்படுத்தியிருந்தார்.  பாரத தேசத்தின் மீது அளவற்ற நாட்டுப் பற்று உள்ளவர்கள் நினைத்திருந்தால், இதை தடுத்திருக்க முடியாதா?…., அல்லது ஒரே ஒரு இந்தியர் நினைத்திருந்தால் கூட, அதை எவ்வளவு விலை கொடுத்தேனும் வாங்கி மறுபடி இந்தியாவுக்கே கொண்டு வந்திருக்கவும் முடியும் அல்லவா?…திரு சக்தி சக்திதாசன் அவர்கள், எழுதிய கடிதத்தைப் படிக்கும்போது,தேசப்பற்றுக்குரிய சிந்தனைகளை எழுப்பி இருந்தது நினைவு கூறத்தக்கது.

வீதியில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சில சர்ச்சைக்குரிய வாசகங்கள் நம் கண்ணில் படும்போதும்,

அது நமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் சீரழிக்கின்ற விதத்தில் சித்தரிக்கின்ற போதும்,

மனம் வேதனைக்குள்ளாகி, நம் சிந்தனையைத் தூண்டிவிடுகிறது.

சித்திரத்துக்கு நன்றி:

http://wallpapers4ever.com/wallpapers/krishna_and_arjun_in_mahabharat-800×600.jpg

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “நமது கலாசாரத்தின் பெருமையை நாம் அறியோம்?…

  1. இப்படி எல்லாமும் நடக்குதா?  கீதையை வைத்தும் பிரசாரங்கள் நடப்பதை இன்றே அறிந்தேன். மனம் வேதனைப்படுகிறது.  ஒரு பக்கம் முன்னேற்றம் என பன்னாட்டுக் கலாசாரங்களின் மோதல், அதன் தாக்குதலில் செய்வது என்ன எனத் தெரியாமல் செய்யும் மக்கள்! :(((( 

  2. கலாச்சாரத்தின் பெருமையை அறியாது அதனை குலைக்கும் வகைக்கு முக்கிய காரணம் அரசே.
    கீதை காட்டும் பாதையை உணர்ந்து நடக்க பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட வெளிநாட்டவர்கள் பாரத நாடு புண்ணிய பூமி என்று அறிந்து இங்கே குடி புகுந்து வாழ்கிறார்கள்.
    அவர்கள் மூலமாக நம் பெருமையை அறிய வேண்டிய இழிநிலையில் நாம் இருப்பதை பெருவை சாரதியின் சொற்களால் சுட்டுரைத்துள்ளார்.
    இளைய தலைமுறைகளுக்கு பண்டைய பாரம்பரிய கலாச்சாரங்களை பற்றிய அறிவினை சரிவர சொல்லி, பண்புடனே வளர்த்தால் தான் இந்தியா முன்னேறும். அதற்கு அரசும் முன்வர வேண்டும். இல்லை என்றால் காந்தியின் கொள்கைகளை முற்றும் அழித்து அவரது உடைமைகளையும் ஏலம் போகும்படி செய்யும் இக்காலம் வன்முறைக்கே வழி என்பதனை உணரும் தருணம் இதுவே என்பதனை இக்கட்டுரை உணர்த்துகிறது.
    வல்லமைக்கு பெருமை சேர்க்கும் இது போன்ற உணர்வுகள்.
    நன்றி!
    அன்பன்,
    நா.விஜயராகவன்

  3. “கலாச்சாரத்தின் பெருமையை அறியாது அதனை குலைக்கும் வகைக்கு முக்கிய காரணம் அரசே.
    கீதை காட்டும் பாதையை உணர்ந்து நடக்க பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட வெளிநாட்டவர்கள் பாரத நாடு புண்ணிய பூமி என்று அறிந்து இங்கே குடி புகுந்து வாழ்கிறார்கள்.
    அவர்கள் மூலமாக நம் பெருமையை அறிய வேண்டிய இழிநிலையில் நாம் இருப்பதை பெருவை சாரதியின் சொற்களால் சுட்டுரைத்துள்ளார்.
    இளைய தலைமுறைகளுக்கு பண்டைய பாரம்பரிய கலாச்சாரங்களை பற்றிய அறிவினை சரிவர சொல்லி, பண்புடனே வளர்த்தால் தான் இந்தியா முன்னேறும். அதற்கு அரசும் முன்வர வேண்டும். இல்லை என்றால் காந்தியின் கொள்கைகளை முற்றும் அழித்து அவரது உடைமைகளையும் ஏலம் போகும்படி செய்யும் இக்காலம் வன்முறைக்கே வழி என்பதனை உணரும் தருணம் இதுவே என்பதனை இக்கட்டுரை உணர்த்துகிறது.
    வல்லமைக்கு பெருமை சேர்க்கும் இது போன்ற உணர்வுகள்

  4. ஆரோக்கியமான கருத்துக்களைக் கூறிய மதிப்பிற்குறிய திரு விஜயராகவன் மற்றும் திருமதி கீதாசாம்பசிவம் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *