யதார்த்தா கி.பென்னேஸ்வரன்

 

(இந்தக் கதையின் முதல் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்.)

19 நவம்பர் 2011

அன்புள்ள திரு.கிருபாசங்கர் அவர்களுக்கு

வணக்கம்.

என்னுடைய பெயர் தி.பொன்னுசாமி. கிருஷ்ணகிரியில் அச்சகம் ஒன்றை நடத்தி வருகிறேன். நீங்கள் படித்த அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் படித்தவன். நீங்கள் பயின்ற அதே குமார் & குமார் தட்டச்சுப் பள்ளியில் தட்டச்சு பயின்றவன். உங்களைப் போலவே நானும் நாராயணன் சாரின் மாணவன். பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை நாம் சாரின் இல்லத்தில் சந்தித்துப் பேசியிருக்கிறோம். என்னுடைய முகம் உங்களுக்கு நினைவில் இருக்காது. நேரில் பார்த்தால் ஒருவேளை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

நான் உங்களுக்கு எழுதும் இந்த முதல் கடிதமே மிகவும் சோகமானதொரு செய்தியை சுமந்து வருவது குறித்து மெத்த வருந்துகிறேன். நம்முடைய அனைவரின் பிரியத்துக்குப் பாத்திரரான நாராயணன் சார் கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி நம்மை எல்லாம் விட்டுப் பிரிந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தார் என்ற துயரமான செய்தியை பெரும் துயரத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அக்டோபர் 29ம் தேதியன்று நள்ளிரவில் சாருக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்திருக்கிறது. தலை சுற்றலும் அதிகமாகி இருக்கிறது. தட்டுத் தடுமாறி மாடிப் படியிறங்கி கீழ் வீட்டின் கதவைத் தட்டி விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவர்களும் பாவம், அந்த நடு இரவில் ஆம்புலன்சு வரவழைத்து டாக்டர் அண்ணாஜி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். வழியில் சார் எதுவும் பேசவில்லையாம். ஆனால் மிகவும் பீதியுடனும் பதட்டத்துடனும் இருந்ததாக வீட்டுக்காரரின் மகள் பிறகு என்னிடம் சொன்னாள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டிருக்கும்போதே அவருடைய உயிர் பிரிந்திருக்கிறது என்று சொன்னார்கள். விடியற்காலை சுமார் ஐந்து மணிக்கு என்னை தொடர்பு கொண்டார்கள் அவருடைய வீட்டு சொந்தக்காரர்கள். சாருக்கு இறுதிக்காலத்தில் பணிவிடைகள் செய்து கொண்டிருந்த உங்கள் நண்பர் மகேந்திரன் சிங்கப்பூர் சென்றிருந்ததால் அவருக்கு உடனடியாக தகவல் அனுப்ப முடியவில்லை.

அவருடைய வீட்டின் சொந்தக்காரர்கள் தங்கள் வீட்டுக்கு சவத்தை எடுத்துச் செல்ல விரும்பவில்லை. கல்யாண வயதில் தங்களுக்குப் பிள்ளைகள் இருப்பதால் தங்கள் வீட்டில் பிணத்தைப் போட்டு வைத்துக் கொள்ள முடியாது என்றும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து மருத்துவமனையில் இருந்து நேராக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் சொல்லிவிட்டார்கள். சாருடைய உறவினர் என்று சொல்லி ஒருவர் அன்று காலை பத்து மணிக்கு மருத்துவமனைக்கு வந்து உடலைப் பெறுவதற்கான படிமங்களை நிரப்பிக் கொண்டிருந்தார். அவரிடம் என்ன செய்யப்போகிறார் என்று கேட்டேன். தன்னுடைய வீட்டுக்கும் எடுத்துச் செல்ல முடியாது என்றும் நேராக இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றும் சொன்னார். அவரை நெருங்கி நிற்க முடியாத வகையில் அவரிடமிருந்து கிளம்பிய மதுவாடை வயிற்றைக் குமட்டியது. இரவு அவர் எக்கச்சக்கமாகக் குடித்திருக்க வேண்டும். அல்லது பொழுது விடிந்ததும், குடித்து விட்டு நேராக மருத்துவமனைக்கு அவர் வந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

இடையில் அந்த மனிதருடன் நான் நின்று கொண்டிருந்த சுமார் பதினைந்து நிமிடங்களில் ஏறத்தாழ இருபது முறைக்கும் மேல் அவருக்கு தொலைபேசிகள் வந்த வண்ணம் இருந்தன. இந்த முனையில் அவர் பேசியதை வைத்துப் பார்த்தபோது, அவருடைய மனைவியோ பிள்ளையோ தங்கள் வீட்டுக்குப் பிணத்தை எடுத்து வரக்கூடாது என்று கண்டிப்பாக சொன்னதையும் இவர் மிகவும் பவ்யமாக அங்கெல்லாம் கொண்டுவரப்போவதில்லை என்றும் மருத்துவ மனையில் இருந்து நேராக இடுகாட்டுக்கு கொண்டு செல்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

மரியாதைகள் ஏதும் செய்யாது சாரை அப்படி நேராக இடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரியூட்டுவதில் எனக்குத் துளியும் விருப்பம் இல்லை. ஒரு தகப்பனைப் பிரிந்த சோகம் அன்று எனக்கு இருந்தது. என்னைப் போன்றவர்களுக்கு சார் செய்த உபகாரங்கள் இந்த ஜென்மத்தில் மறக்கக் கூடியது அல்ல. இன்று நான் இருக்கும் என்னுடைய வாழ்க்கை சார் எங்களுக்கு அளித்த பிச்சை. படிமங்களை நிரப்ப முடியாமல் தள்ளாடிக் கொண்டு நின்றிருந்த அந்த உறவினரிடம் மீண்டும் சென்று அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால் சாரின் உடலை எங்கள் அச்சகத்துக்கு எடுத்துச் செல்லலாம் என்றும் அங்கு வைத்து இறுதி மரியாதைகள் செய்து பிறகு அவரை எரியூட்டலாம் என்றும் சொன்னேன். நீண்ட நேரம் எதுவும் பேசாமல் இருந்த அந்த மனிதர் என்னைத் தனியாக அழைத்து, இறுதிச் சடங்குக்கான செலவுகளை நான் ஏற்றுக் கொண்டால் பிணத்தை எங்கள் அச்சகத்துக்கு எடுத்துச் செல்வதில் தனக்கு ஆட்சேபணை ஏதும் இல்லை என்று சொன்னார். எந்த செலவையும் நான் ஏற்றுக் கொள்வதாக சொன்னேன். அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு சாரின் பழைய மாணவர்களும் ஒவ்வொருவராக மருத்துவமனைக்கு வரத் துவங்கினார்கள். சாருடைய முன்னாள் மாணவர்கள் பலரையும் எனக்குத் தெரியாது. உங்களைப் போன்ற, எங்களுக்கு முன்பு ஓரிரு ஆண்டுகள் படித்தவர்கள் அல்லது எங்களுக்குப் பிறகு ஓரிரு ஆண்டுகள் படித்தவர்களைத் தவிர அதிகம் பேர்களை எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அன்று பலரும் வந்திருந்தனர். அந்த வேதனையிலும் எங்கள் சாரை நினைத்துப் பெருமிதம் அடைந்தேன். மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. என்னைப் போல எத்தனை பேருடைய வாழ்க்கையில் எங்கள் நாராயணன் சார் ஒளி விளக்கேற்றியிருக்க வேண்டும்?

அவருடைய முன்னாள் மாணவர்களில் ஒருவர் பக்கத்து மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தார். இன்னொருவர் சேலத்தில் இருந்து வந்திருந்தார். அவர் அங்கு ஒரு கல்லூரியில் பேராசிரியர். தன்னுடன் சில மாணவர்களையும் அழைத்து வந்திருந்தார். கிருஷ்ணகிரியின் தலைமைப் போலீஸ் அதிகாரி இந்தப் பேராசிரியரின் மாணவராம். எனவே தன்னுடைய ஆசிரியரைப் பார்க்க அந்தப் போலீஸ் அதிகாரியும் வந்திருந்தார். காலையில் எங்களை அலட்சியம் செய்துவந்த மருத்துவமனை நிர்வாகம் இவர்களைப் போன்ற மூத்த அதிகாரிகள் வந்ததும் தங்களுடைய போக்கினை முற்றிலுமாக மாற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அலட்சியம் காணாமல் போனது. ராத்திரி எல்லாம் கேட்பாரற்றுக் கிடந்த சாரின் சடலத்தைக் கட்டிப் பிடித்து அழாத குறையாக கவனித்துக் கொள்வது போல பாவனைகள் புரிந்தார்கள்.

ஒருவழியாக என்னுடைய அச்சகத்துக்கு சாரை எடுத்துச் சென்றோம். நானும், என் பிள்ளைகளும், எனக்குச் சோறிடும் என் அச்சகமும், அந்த நாளை எங்கள் வாழ்நாளில் எங்களின் பிறவிப் பயன் அடைந்த நாளாக நெகிழ்ந்து நின்றிருந்தோம்.  சாருடைய உறவினர் மீண்டும் தள்ளாடிக் கொண்டே என்னிடம் வந்தார். அவர்களுடைய ஜாதி சம்பிரதாயப்படி சடங்குகள் நடைபெற வேண்டும் என்றும் அதற்கேற்ற பொருள்களை வாங்கி வரவேண்டும் என்றும் என்னிடம் செலவுக்குப் பணம் வாங்கிச் சென்றார். என்னிடம் பணம் வாங்கிச் சென்ற அந்த மனிதர் நெடுநேரம் திரும்பி வரவில்லை. அவரைத் தேடிச் சென்றவர்கள், அந்த மனிதர் பழையபேட்டையில் எங்கோ சாக்கடையோரம் மயங்கி விழுந்திருந்ததாகச் சொன்னார்கள். சாரின் சாதியைச் சேர்ந்த இன்னொருவர் அழுதுகொண்டே வந்தார். அவர் சாரின் முன்னாள் மாணவராம். அவரே கிளம்பிச் சென்று வேண்டிய சாமான்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி வந்தார்.

அன்று யார் யாரோ சாரின் கால்களைப் பிடித்துக் கதறி அழுது சென்றார்கள். என்னைப் போல எத்தனை பேர் அவரிடம் எந்தெந்த ஜென்மங்களில் கடன்பட்டிருப்பார்களோ. தங்களின் கடன்களை எல்லாம் கரைத்து விடுவது போலப் பலரும் கதறி அழுதார்கள். திருவண்ணாமலை ரோட்டில் உள்ள சுடுகாட்டில் அவருடைய திருவுடலுக்கு எரியூட்டினோம். என்னுடைய மூத்த மகன் திருவேங்கடம் சாருக்குக் கொள்ளி போட்டான். மாபெரும் வரலாறு ஒன்று அன்று சோதியுடன் கரைந்து போனது. நாராயணன் சார் கடவுளாக இருந்து என்னையும் என் குடும்பத்தையும் பிள்ளைகளையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறார்,

ஐயா, நீங்கள் கொடுத்து வைத்தவர். மிகவும் தூரத்தில் இருக்கிறீர்கள். சாருடைய வாழ்வில் நிகழ்ந்த கொடூரமான நிகழ்வினை நேரில் பார்த்த எங்களைப் போன்றவர்கள் எத்தனை பாவம் செய்தவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். பேராசை பிடித்த அவருடைய பக்கத்து வீட்டுக்காரன் மூட்டைகளாகப் பதுக்கி வைத்திருந்த வெடிமருந்துப் பொருட்கள் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது. சாருடைய வீட்டின் பின்பக்கத்தில் இருந்த சமையல்கட்டில் இருந்த மாமியும் சாரின் இரு பிள்ளைகளும் அடையாளம் தெரியாமல் வெடித்துத் தெறித்துச் சிதைந்தார்கள். முன்னறையில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த சார் குண்டுவெடிப்பின் அதிர்ச்சியில் தூக்கி எறியப்பட்டு கேட்கும் திறனை முற்றாக இழந்து போனார். பேச்சும் முற்றாக நின்று போனது. ஏதோ ஒருவகையான அமைதியில் உறைந்து போனார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து மூன்று மாதங்கள் கழித்து நீங்கள் அப்போது ஊருக்கு வந்திருந்தீர்கள். ஒரு சிறிய வீட்டின் மாடியறையை வாடகைக்கு எடுத்து அங்கே தங்கினார். அப்போதுதான் நீங்கள் ஊருக்கு வந்திருந்தீர்கள். அந்தச் சிறிய அறையிலேயே சாரின் வாழ்க்கை முடிந்திருக்கிறது. வெடிகுண்டு மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்ததற்காக யாரையோ கைது செய்து வழக்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் போன உயிர்களும் வாழ்க்கையும் திரும்ப வருமா? சாருடைய வீடு இன்னும் பாழடைந்தது போலக் கிடக்கிறது. வழக்கு நடந்து கொண்டிருப்பதால் அந்த இடத்தின் பாழடைந்த தன்மை அப்படியே நிரந்தரமாகித் தங்கி விட்டது. சார் உயிருடன் இருந்தவரை அந்தப் பக்கம் போனது கிடையாது. தன்னுடைய அறையிலேயே உறைந்து போனது போலத் தங்கியிருந்தார். நாங்கள் போய் அவரைப் பார்த்து விட்டு வருவோம். அந்த வீட்டுக்காரர்கள் ரொம்பவும் நல்லவர்கள். அவர்கள்தான் வேளாவேளைக்கு பார்த்து சாருக்கு உணவளித்துக் கொண்டிருந்தார்கள்.

வீட்டுக்குப் போகும்போதெல்லாம் சார் எங்களை அஞ்சல் உறைகளை வாங்கி வரச் சொல்வார். உறையின் மீது சில முகவரிகளை எழுதச் சொல்வார். எல்லாம் ஜாடையில்தான். சில பழைய கடித உறைகளின் மேலுள்ள முகவரிகளைக் காண்பித்து அவற்றை எழுதித் தரச்சொல்லி ஜாடை காட்டுவார். உங்கள் முகவரியை நான் பலமுறை அவருக்கு எழுதிக் கொடுத்திருக்கிறேன். நாளெல்லாம் உட்கார்ந்து இவர் எதையாவது எழுதிக் கொண்டிருக்கிற மனிதர் முகவரியை மட்டும் ஏன் அடுத்தவர்களிடம் எழுதச் சொல்லிக் கேட்க வேண்டும் என்ற புதிர் நீண்ட நாட்களாக எனக்குள் இருந்தது. சாருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தைப் படித்த பிறகு தான் அந்தப் புதிருக்குத் தெளிவான விடை  எனக்குக் கிடைத்தது.

எப்பொழுதும் எதையாவது எழுதிக் கொண்டே இருப்பார். இரவு நேரங்களில் கூட நெடுநேரம் கண்விழித்து எழுதிக் கொண்டிருப்பார். இவர் எழுதியவற்றை எல்லாம் ஏதாவது நூலாகத் தொகுத்து வெளியிடலாம் என்று நானும் நண்பர்களும் திட்டமிட்டிருந்தோம். அவர் இறந்த மறுநாள் அவருடைய வீட்டுச் சொந்தக்காரரின் அனுமதியுடன் சாரின் அறையை திறந்து பார்த்தோம். மேஜையின் மீது உங்கள் கடிதம்  பிரிக்கப்படாமல் கிடந்தது. அதேபோல, அவருடைய அறையில் பள்ளி நோட்டுப் புத்தகங்கள் நிறைய அங்கங்கு இறைந்து கிடந்தன. அத்தனை நோட்டுப் புத்தகங்களிலும் – உங்களுக்கு எழுதிய கடிதம் போல, மொழி ஏதும் புரியாத வண்ணம் வெறுமனே கிறுக்கி இருந்தார். ஆனால் அந்தக் கிறுக்கல்களும் மிகவும் சிரத்தை எடுத்து நிறுத்தி நிதானமாகக் கிறுக்கி வைத்தது போலத்தான் தோன்றியது. அப்படி சுமார் அறுபது நோட்டுப் புத்தகங்களுக்கு மேல் அந்த அறையில் எங்களுக்குக் கிடைத்தன.

ஒரு மனிதன் தன்னுடைய பேச்சு வழியாக, கேட்பது வழியாக மொழியை மறுதலிக்கலாம். எந்த மொழியும் புரியாவிட்டாலும், பேசமுடியாவிட்டாலும் அமைதி என்னும் மொழியைக் கையாளலாம். அந்த வெடிகுண்டு விபத்துக்குப் பிறகு கேட்பது, பேசுவது போன்ற இரண்டையும் சார் அறவே நிறுத்தியிருந்தார். வாசிப்பின் வழியாகவும் எழுத்தின் வழியாகவும் மொழியை மறுதலிக்கலாம் என்கிற விஷயத்தை சார் எதற்காகக் கையாண்டார் என்பது இன்றுவரை எங்கள் யாருக்கும் புரியவில்லை, எதற்காக அவர் இத்தனை சிரமப்பட்டு இந்த அளவு எழுதினார் என்பதும் எவருக்கும் புரியாத வண்ணம் எதனை எழுத முயற்சித்தார் என்பதும் எங்கள் அனைவருக்கும் மிகவும் புதிராகத் தொடரும் ஒரு விஷயம்.

சாருடைய மனத்தை ஏதோ ஒரு விஷயம் மிகவும் அலைக்கழித்து இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மாமியும் அவருடைய மகனும் அந்த குண்டு வெடிப்பில் சிக்கி சிதறுவதற்கு முந்திய தினம் அவர் மிகவும் பதட்டமாக இருந்தார் என்று சில நண்பர்கள் சொன்னார்கள். அவருடைய மகனுடன் பெருத்த விவாதத்தில் ஈடுபட்டார் என்றும் சொன்னார்கள்.  அவருடைய மகனும் அவருடன் பெரிதாக சண்டை போட்டதாக சொன்னார்கள். இரவெல்லாம் பதட்டத்துடன் வாசலில் உட்கார்ந்து இருந்தார் என்றும் விடியற்காலை எங்கோ நீண்டதூரம் நடந்துவிட்டு வந்தார் என்றும் சொன்னார்கள். எதற்காக அவர் அப்படி இருந்தார் என்பது தெரியவில்லை. அதே போல, ஒரு பிரதானமான குடியிருப்புப் பகுதியில் அத்தனை ஜனநெரிசல் மிகுந்த ஒரு தெருவில் ஒரு வீட்டில் எப்படி சிலரால் வெடிமருந்து அடங்கிய மூட்டைகளைப் பதுக்கி வைக்க முடியும் என்பதும் பெரிய புதிர். என்னதான் கிணற்றுக்கு வைக்கப்படும் வெடிமருந்தாக இருந்தாலும்  இத்தனை பெரிய அளவில் அந்த வெடிமருந்துகளை ஏன் ஒரு வீட்டில் அவர்கள் பதுக்கி வைத்திருந்தார்கள் என்பதும் பெரிய புதிராகத்தான் இருக்கிறது. இந்த சம்பவம் குறித்த வழக்கு இன்னும் அதன் முதல் படியைக் கூடக் கடக்கவில்லை என்பதும் வேதனையான விஷயமாக இருக்கிறது.

சாருடைய பேச்சு வழி மௌனத்துக்கும் எழுத்து வழி மௌனத்துக்கும் ஏதோ வலுவான காரணம் இருக்கத்தான் வேண்டும் என்று எங்கள் அனைவருக்கும் ஐயமாக இருக்கிறது. அதற்கான விடையை சார்தான் சொல்லி இருக்கவேண்டும். இன்று அவர் நம்மிடையில் இல்லை. இருந்போதும் எதையும் சொல்ல முயற்சிக்க வில்லை. அவருடைய கிறுக்கல்கள் மட்டுமே எதையோ மர்மமாக முணுமுணுத்துக் கொண்டு அந்த அறையெங்கும் இறைந்து கிடக்கின்றது.

சாருக்கு நீங்கள் எழுதிய கடிதத்தைப் பிரித்துப் படித்ததும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. உங்களுடைய வருத்தங்கள், ஆதங்கங்கள் அனைத்தையும் சாரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் அந்தரங்கத்தில் பிரவேசித்ததாக தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். உங்களுக்காகவும் இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இறையருளால் உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் காணவேண்டும். உங்கள் பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு மூதாதையர் வசித்த ஊருக்கு, நீங்கள் உயிராக நேசிக்கும் உங்கள் சொந்த ஊருக்கு உங்களை என்றாவது அழைத்து வரும் புத்தியை அவர்களுக்கு நல்க வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். என்னுடைய பிரார்த்தனை நம் இருவரின் வாழ்நாளில் என்றேனும் பலித்தால் உங்களை நம்முடைய ஊரில் சந்திக்கிறேன்.

உங்கள் பிள்ளைகளுக்கு எங்கள் நல்லாசியை தெரிவியுங்கள்.

நீங்கள் சாருக்கு எழுதிய கடிதத்தில் உங்கள் பிள்ளை மற்றும் பெண்ணின் முகவரிகள் இரண்டையும் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். இரண்டு முகவரிகளுக்கும் என் கடிதத்தை அனுப்பி இருக்கிறேன். நீங்கள் எந்த வீட்டில் தங்கி இருந்தாலும் என்னுடைய கடிதத்தைத் தவற விடமாட்டீர்கள்.

நாராயணன் சாருடைய ஆன்மா சாந்தியடைய மற்ற மாணவர்களுடன் சேர்ந்து நாம் இருவரும் பிரார்த்தனை செய்வோம்.

வணக்கங்களுடன்

தி.பொன்னுசாமி

 

புகைப்படங்களுக்கு நன்றி:

http://www.thehindu.com/multimedia/dynamic/00003/IN11-AMBULANCE-TN_3975f.jpg

http://image.yaymicro.com/rz_512x512/0/229/doctor-walking-at-the-hospital-corridor-229924.jpg

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.