நானறிந்த நற்றவத்தார் நாடறிந்த நமசிவாயத்தார்

0

 

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

 

திருக்கேதீச்சரத் திருப்பணி

வடமராட்சியில் வதிரி ஒரு சிற்றூர். அவ்வூரவர் திரு. தியாகராசா என் மாமா. அவருக்கு அந்த ஊரெங்கும் நெருங்கிய உறவினர்கள், திரு. திக்கம் செல்லையா உள்ளிட்டோர்.

திரு. திக்கம் செல்லையாவின் அண்ணன் திரு. இராசுவின் மகன் திரு. நமசிவாயம். அச்சுவேலியைச் சேர்ந்தவர்.

வதிரித் திரு. தியாகராசா மாமா, மறவன்புலவில் மணியக்காரரின் மகளைத் திருமணம் செய்து பெற்ற ஒரே மகன் திரு. சண்முகராசா.

1960களில் கொழும்புக்கு நான் வந்த காலங்களில் திரு. சண்முகராசா அவர்கள் எனக்கு அறிமுகம் செய்துவைத்த பலருள் திரு. நமசிவாயம் அவர்களும் ஒருவர்.

பொலிகண்டியில் கந்தவனக் கடவையில் முருகனை வழிபட்டு வளர்ந்தவர் திரு. நமசிவாயம். தன் சிறுவயதிலேயே தந்தையார் திரு. இராசு இறந்துவிட, தன் சிற்றப்பா திரு. திக்கம் செல்லையாவுடன் வளர்ந்தவர். சைவ சமய நெறியில் இம்மியும் பிறழாது வாழ்ந்தவர் திரு. செல்லையா. சமய தீட்சைகளை முறையாகப் பெற்றவர். தவத்திரு. ஈசான சிவனார் என்ற தீட்சா நாமதாரி.

சைவ சமயச் சாத்திர நூல்களை முறையாகப் பாடங்கேட்டவர். திருவடிப்பேறு எய்தும் படிநிலையைக் கூறும் நூல் துகளறு போதம். சீர்காழிச் சிற்றம்பல நாடிகள் இயற்றிய அந்த நூலுக்குத் திரு. திக்கம் செல்லையா விரிவான விளக்க உரை எழுதியுள்ளார் எனின், அன்னாரின் நிழல் சார்ந்த திரு. நமசிவாயம் சிறு வயதிலேயே சைவ நெறிகளில் மூழ்கித் திளைத்து வளர்ந்திருப்பாரல்லவா?

கொழும்பு, பம்பலப்பிட்டி, சரசுவதி மண்டபத்தில், தென்கிழக்கு மூலையில் உள்ள அறையில் முதன்முதலாகத் திரு. நமசிவாயம் அவர்களைச் சந்தித்தேன். அங்கே திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையின் அலுவலகம் இருந்தது. திரு. சண்முகராசா அங்கு தொண்டுகள் செய்து வந்தார். திரு. நமசிவாயமும் தொண்டுகள் செய்து வந்தார்.

அக்காலத்தில் கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் பணியாற்றினேன். தொண்டர் அணியாக மகாசிவராத்திரி, உற்சவத் திருவிழா ஆகிய இரு நிகழ்ச்சிகளுக்கும் திருக்கேதீச்சரம் செல்வேன்.

கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தேனாதலால் என் ஆராய்ச்சிப் பணிகளுக்காக மன்னார் செல்வேன். எப்பொழுதும் திருக்கேதீச்சர ஆலய வளாகத்தில் தங்குவேன்.

திரு. சண்முகராசா மீது அளவற்ற அன்பும் மதிப்பும் திரு. நமசிவாயம் வைத்திருந்தார். எந்தத் தன்னல நோக்கம் இன்றி, எடுத்த செயலில் ஆர்வமும் ஈடுபாடும் கொள்பவர் திரு. சண்முகராசா. ஆள்களைப் பார்க்கார். பணியைக் கூர்மையாகக் கவனிப்பார். பரந்து அலசுவார். பணிபுரிபவருடன் இசைந்து குழைந்து உருகிப் பணிபுரியும் பாங்கினராதலால், திரு. சண்முகராசாவின் உதவிகள் திரு. நமசிவாயத்தின் பணிச்சுமையைக் குறைத்தன.

அந்த அலுவலகத்தில் நானும் சில நாள்களில் பணிபுரிந்திருக்கிறேன். உறுப்பினர் எண்ணிக்கையைப் பெருக்கி, நன்கொடைகளைப் பெருக்கும் நோக்கம் திரு. நமசிவாயத்துக்கு இருந்தது. அரசிடம் நன்கொடை கேட்கும் ஆர்வத்தில் இருந்தார்.

திரு. நமசிவாயம் அவர்களுடனான தொடர்புகள் வலிமைபெற, அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையில் இருவரும் உறுப்பினராக இருந்தமையும் காரணம்.

மற்றுமொரு தளம் அகில இலங்கை இந்து மாமன்றம். அங்கும் அவரது பணிகள் இருக்கும், நானும் தொடர்பாக இருந்தேன்.

அகில இலங்கை இந்து மாமன்றம்

1970களின் தொடக்கப் பாதியில் திரு. நமசிவாயத்துக்கும் எனக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்டது.

திருக்கோயில்களில் வழிபடுவோர் குழுக்களை அமைப்பது, திருக்கோயில் ஆட்சியில் அக்குழுக்கள் பங்களிப்பது எனக் கோயில்களை மக்கள் மயமாக்கும் கண்ணோட்டத்துடன் அரசு செயற்படத் தொடங்கிய காலம். அக்காலத்தில் ஆட்சியில் பிரதமராகச் சிறீமாவோ பண்டாரநாயக்கா.

இந்துத் திருக்கோயில் ஆட்சியமைப்புத் தொடர்பான மறுசீரமைப்புச் சட்ட முன்வடிவைத் தயாரிக்க அகில இலங்கை இந்து மாமன்றத்தை அணுகியது அரசு. நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற திரு. சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவர்.

இலங்கையில் உள்ள இந்துச் சங்கங்களின் கூட்டமைப்பே அகில இலங்கை இந்து மாமன்றம். கொழும்பில் உள்ள இந்து அமைப்புகளில் இலங்கையின் பல பாகங்களில் இருந்துவரும் உறுப்பினர்கள் இருப்பர். கொழும்பிலுள்ள அமைப்புகளே மாமன்றத்தில் முக்கிய பங்காற்றி வந்த காலம்.

திரு. சிவசுப்பிரமணியம், கேணல் திரு. சபாநாயகம், திரு. கே. சி. தங்கராசா போன்றோர் அரசுச் சார்புடையோர். அரசு அவர்களைப் பயன்படுத்தும். அவர்களும் அரசின் நல்லெண்ணத்தைப் பெற்றவர்களாக, அரசுப் பதவிகளில் இருப்பவராதலும் உண்டு.

மறுசீரமைப்புக்கான சட்ட முன்வரைவை அகில இலங்கை இந்து மாமன்றத்தில் விவாதிக்க ஒரு கூட்டம் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் நடைபெற்றது. திரு. நமசிவாயம், திரு. சண்முகராசா ஆகியோர் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை சார்பில் அங்கு உறுப்பினர். நாற்பதின்மர் வரை கூடியிருந்தனர். இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து வந்திருந்தனர்.

சட்ட முன் வரைவின் படிபெற்றுப் படித்திருந்தோம். திருக்கோயில் ஆட்சியமைப்புகளில் குறைகள் இருந்தன. ஆனால் சட்டமுன் வரைவில் கூறியன இந்துச் சமூகத்தின் முதுகெலும்பை உடைத்து, புத்த மேலாதிக்கத்தின் ஊடுருவலுக்கு வழிவகுக்குமோ என அஞ்சினோம்.

திரு. நமசிவாயம், திரு. சண்முகராசா, திரு. கந்தசாமி, திரு. ஐ. தி. சம்பந்தன் போன்ற பலருக்கு இதில் ஒத்த கருத்திருந்தது. எனக்கும் அதே கருத்து. ஆனால் அரசு சார்பாளரை மீறி இதைச் சொல்வதில், அதுவும் வலியுறுத்துவதில் கூட்டதிலிருந்த பலர் தயங்கினர்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நான் உறுப்பினனல்ல. எனினும் என் கருத்தைத் தெரிவிக்க விழைந்தேன். அக்காலத்தில் பொறியியல் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்மீது அளவற்ற வாஞ்சையுடையோராய் இருந்தனர். பலரை எனக்கு நேரில் பழக்கமில்லை. திரு. ஞானானந்தன், திரு. கருணாகரன் போன்ற பொறியியல் மாணவர், திரு. கந்தையா நீலகண்டன் போன்ற சட்ட மாணவர் என் கருத்தை ஏற்றனர். ஏறத்தாழ 20 மாணவர் பம்பலப்பிட்டி இந்துத் தொடக்கப் பாடசாலையில் கூடினோம். சட்ட முன் வடிவை எதிர்க்கும் முழக்கங்களை அட்டைகளாக்கி ஒருவருக்கு ஓர் அட்டை எனக் கையில் பிடித்தோம், அருகிலிருந்த சரசுவதி மண்டபத்துள் வரிசையாக நுழைந்தோம்.

அகில இலங்கை இந்து மாமன்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. வரிசையாக அட்டைகளுடன் கூட்டத்தினரைச் சுற்றி அமைதியாக வலம் வந்தோம். மூன்று முறை வலம் வந்தபின், தலைவருக்கு அருகில் சென்ற நான், சட்ட முன் வடிவின் படியைத் தீயிட்டேன்.

திரு. நமசிவாயம் எழுந்தார். இளைஞருக்கு மதிப்பளிப்போம், அவர்கள் எதிர்காலத்தவர், இந்தச் சட்டமுன் வடிவை ஏற்பது பொருத்தமல்ல என்றார். அவரைத் தொடர்ந்து ஏழாலைத் திரு. கந்தசாமி பேசினார். வேறும் சிலர் பேசினர். எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் கலைந்தது. திரு. நமசிவாயம் உறுதியுடன் எதிர்த்ததால் சட்டமுன் வடிவு கரைந்தது. அகில இலங்கை இந்து மாமன்றத் தலைமைப் பதவியை மறுநாள் நீதியரசர் சிவசுப்பிரமணியம் துறந்தார்.

ஒத்த கருத்துடைய இருவர், ஒருவருக்கொருவர் தொடர்பில்லாமலே, ஒரே நோக்கத்தை அடையலாம் என்பதற்கு இந்த நிகழ்ச்சி சான்று. அரசின் மேலாதிக்க முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறியலாம் என்பதற்கும் அரசு சார்பான தமிழர்களை அறவழியில் எதிர்கொள்ளலாம் என்பதற்கும் இந்த நிகழ்ச்சி சான்று. திரு. நமசிவாயத்தின் உறுதியால் மேலும் அவர்பால் ஈர்க்கப்பட்டேன்.

லோரன்சு தெருக் கிழக்கு முனையில் மற்றொரு தெருத் தொடக்கம். அங்கே திரு. நமசிவாயத்தின் இல்லம். அவர் என்னை அழைத்துச் சென்றார். புத்தகத் தட்டுகளின் நடுவே அவர் இருக்கை. சட்டப் புத்தகங்களா? பொது அறிவு நூல்களா? சைவ சமயத் தத்துவ நூல்களா? அவர் தீவிர வாசகர்.

அவர் துணைவியார் திருமதி விசயலட்சுமி அம்மையாரின் விருந்தோம்பலில் மகிழ்ந்தேன். இலங்கை அரசின் கணக்குத் தணிக்கையாளர் நாயகமாக மிக உச்சமான பதவியில் இருந்தவரான திரு. கனகரத்தினத்தின் மகளே திருமதி விசயலட்சுமி.

அடிக்கடி அவர் இல்லம் செல்லத் தொடங்கினேன். பொது வாழ்வில் இணைந்து பணிபுரியும் வாய்ப்புகள் பெருகின.

அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்

1973 தொடக்க மாதங்களில் பம்பலப்பிட்டியில் மிலாகிரி அவெனியு, சரசுவதி மண்டபம், இந்துத் தொடக்கப் பாடசாலை ஆகிய மூன்று இடங்களிலும் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டங்கள் மாறி மாறி நடைபெற்ற காலம். தமிழர் உணர்வுகளா? அரசின் மேலாதிக்க நிலையா? அரசுச் சார்பாளரான தமிழர் கருத்தா?

இந்தக் கூட்டங்களில் தமிழர் உணர்வோடு கலந்து செயற்பட்டவர் திரு. நமசிவாயம். எனக்கும் அவருக்கும் ஒத்த கருத்து நிலவியமை எவ்வாறு? நிகழ்வுகளில் சந்திப்போம் பேசுவோம், ஏதோ முன்கூட்டியே பேசி வந்தவர்கள் போல ஒத்துக் கருத்துரைப்போம்.

மன்ற இலங்கைக் கிளையின் தலைவர் நீதியரசர் தம்பையா விலகவேண்டும் என ஒரு கூட்டத்தில் வலிந்து குரல் கொடுத்தேன். வியப்பு என்னவென்றால் எனக்கு ஆதரவாக வந்த குரல்களுள் முதன்மையானது திரு. நமசிவாயத்தினதாம். பின்னர் திரு. ஈழவேந்தன் குரல் கொடுத்தார்.

அடுத்த சில நாள்களுள் நீதியரசர் தம்பையா பதவி விலகினார். அரசுச் சார்பாளர் பலர் விலகினர். தமிழ் உணர்வாளர் கை வலிவுபெற்றது. அரசின் மேலாதிக்கத்தை நேரே எதிர்கொள்ள, உட்பகை நீங்கிக் கையாளும் நிலை வந்தது.

யாழ்ப்பாணத்தில் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தால், குலைக்க அரசு உயிர்களைப் பலிகொள்ளும் எனச் சரசுவதி மண்டபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் திரு. நமசிவாயம் கூறினார். முன்கூட்டியே ஊகிக்கும் இயல்பு அவருடன் கூடப் பிறந்தது.

மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெற முன், மிகச் சிலர், அஞ்சா நெஞ்சினர் ஆதரவு தந்தனர். யாழ்ப்பாணத்தில் உள்ள மாநாட்டுச் செயலகம் வந்தனர். திரு. நமசிவாயம் யாழ்ப்பாணத்திற்கு முன்கூட்டியே வந்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளைக் கவனித்தார்.

அரசு அனுமதி மறுத்த காலங்களிலும், பின்னர் அனுமதி வழங்கிய காலங்களிலும் அவர் எம்முடன் கலந்திருந்தார். மாநாடு வெற்றிபெற உழைத்தார்.

மாநாட்டிறுதி நாள். கலைஞர்களுக்குப் பரிசளிப்பு விழா. வீரசிங்கம் மண்டபத்தின் முன் நிற்கிறேன். தொண்டர்களுக்கு உரிய கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தேன்.

சச்சி என்ற குரல். தொடர்ந்து, “ரெஸ்ற் ஹவுஸ் பக்கமாகப் போனேன். அங்கே அல்பிரட் துரையாப்பா நிற்கிறார், ஆளுக்கு முகம் சரியில்லை. என்ன நடக்குமோ? கவனமாயிருங்கோ.” இது திரு. நமசிவாயத்தின் எச்சரிக்கை.

அன்று இரவு 9 உயிர்கள் பலியான சோக நிகழ்வு. கூட்டமே பாதியில் கலைந்த கலக்க நிலை. அரசுக் காவலர் படை வந்ததால் விளைந்த நிகழ்வுகள். முன்கூட்டியே ஊகிக்கும் இயல்பு திரு. நமசிவாயத்துடன் கூடப் பிறந்தது

சில ஆண்டுகளின் பின்னர் ஐநா ஆலோசகராக வெளிநாடு போய்விட்டேன்.

மயிலாப்பூர் சந்திப்புகள்

1986 தை தொடக்கம் சென்னையில் வாழத் தொடங்கினேன். அக்காலத்தில் மயிலாப்பூரில், பாபநாசம் சிவன்தெருவில் திரு. நமசிவாயம் வாழ்ந்தார்.

எழும்பூருக்கு எங்களில்லம் வருவார். என் தந்தையார் சென்னையில் இருந்த காலம் அது. என் தந்தையாருக்கும் அவருக்கும் நெருங்கிய நட்பு. அவர் சொன்ன நிகழ்ச்சி ஒன்றை இங்கே பதிகிறேன்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார் திரு. நமசிவாயம். நகருள், கதிரேசன் கோயிலடியில், என் தந்தையாரின் சிறீ காந்தா அச்சகத்தில் சந்திக்கிறார். அங்கிருந்து சைவ பரிபாலன சபைக்குப் போகவேண்டும். என் தந்தையார் ஈருருளியை ஓட்டுகிறார். பின் இருக்கையில் திரு. நமசிவாயம்.

என் தந்தையாரின் எடை 55 கிலோ. திரு. நமசிவாயத்தின் எடையோ 85 கிலோவுக்குக் குறையாது. எவ்வாறோ இருவரும் சைவ பரிபாலன சபையை அடைகிறார்கள்.

அங்கே தங்கித் திருக்கேதீச்சர சபைப் பணியைப் பார்க்கிறார்கள்.

மீண்டும் என் தந்தையார் ஈருருளி ஓட்ட, திரு. நமசிவாயம் பின்னிருக்கையில் அமர, யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்துக்கு வருகிறார்கள். எவ்வாறு என் தந்தையார் எப்பக்கமும் சாயாமல், உடைந்த தார்ச்சாலை ஓரமாக, ஈருருளியை ஓட்டியிருப்பார் என்ற கவலை எனக்கு இப்பொழுது நினைத்தாலும் ஓயாது.

இருவரும் ஒருவரோடொருவர் அன்பு கொண்டாடிய, இணைந்து பணி புரிந்த இது போன்ற நிகழ்வுகள் பலவற்றைச் சென்னைச் சந்திப்புகளில் பேசுவார்கள்.

கணபதிச் சிற்பியார்

சீசெல்சு நாட்டில் பிள்ளையார் கோயிலுக்கு வரைபடம் வேண்டும். என் தந்தையாரையும் என் மைத்துணரையும் என்னையும் தன் வண்டியில் அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் சென்றார் திரு. நமசிவாயம்.

கணபதிச் சிற்பியார் முதல்வராக இருந்த மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லூரிக்குச் சென்றோம். கணபதிச் சிற்பியாருடன் பேசினோம். சில மாதங்களின் பின் கணபதிச் சிற்பியார் சீசெல்சுக்குச் சென்றார். அங்கே அழகான பிள்ளையார் கோயில் இன்று எழுந்து நிற்கிறது.

கணபதிச் சிற்பியாருக்கும் திரு. நமசிவாயத்துக்கும் பாசப் பிணைப்பு. ஏதோ கூடப் பிறந்தவர்கள் போலப் பேசிக் கொள்வார்கள். சிற்பக் கலையில் ஈடுபாடு, அக்கலையின் நுணுக்கங்களில் பட்டறிவு, கோயில் அமைப்பு விதிகளில் தெளிவு, சைவ சமயச் சாத்திரங்களில் ஊறிய இறுக்கம் யாவையும் திரு. நமசிவாயத்திடம் கண்டவர் கணபதிச் சிற்பியார்.

தமிழக அரசு நிதி வழங்கியும் பிற நிதிகளையும் கொண்டு தமிழகத்தில் கருங்கல் சிற்பப் பணிகள் திருக்கேதீச்சர ஆலயத்துக்காக நடைபெற்றுக் கொண்டிருந்தன. கணபதிச் சிற்பியார் மேற்பார்வையில் திரு. நமசிவாயம் தூண்டுதலில், காரைக்குடியிலும், பழனியிலும் மாமல்லபுரத்திலும் இப்பணிகள் நடந்ததாக அறிந்துகொண்டேன்.

சைவத்தின் மாண்பு

திருப்பனந்தாள் காசி மடம், தமிழ் நாட்டின் சைவப் பீடங்களுள் ஒன்று. வடக்கே காசி, கேதாரம் வரை அறநிலைச் சொத்துகள் பெருகிய மடம். திருப்பனந்தாள் காசி மட அதிபர் சென்னைக்கு வந்தால் தங்குவதற்குப் பல இடங்கள் உள. ஆனால் அவர் நேரே மயிலாப்பூர் செல்வார். திரு. நமசிவாயம் இல்லத்தில் தங்குவார்.

எவர் ஒருவர் சைவ சமயத் தத்துவங்களைத் திரு. நமசிவாயத்திடம் ஒருமுறை உரையாடுகிறாரோ, பின்னர் அவர் திரு. நமசிவாயத்தை விட்டகலார். சென்னையில் கிடைக்கும் அரிய காலத்தைத் திரு. நமசிவாயத்துடன் உரையாடிக் களிப்போம் எனக் கருதி, அவரில்லத்திற்கே வந்து தங்கும் துறவி, திருப்பனந்தாள் காசி மட அதிபர். மரபுகளை அறிந்த திரு. நமசிவாயம், துறவிகளுக்குரிய மாண்புடன் அதிபருக்கு விருந்தோம்புவார். அதே சமயம் சைவத் திருமடங்களின் குறைகளை வெளிப்படையாகக் கூற, அதுவும் அதிபரிடமே கூறத் தயங்கமாட்டார்.

அண்டத்தின் இயக்கம் பற்றிய இயற்பியல் கருத்துக்கும் நடராச தத்துவத்துக்கும் உள்ள தொடர்பை விளக்கிய ஆங்கில நூல் ஒன்றை, புகழ்பெற்ற மேலைநாட்டு இயற்பியலாளரின் நூல் ஒன்றை, அனைவரிடமும் காட்டி விளக்குபவர் திரு. நமசிவாயம். தகுதியானவருக்குப் படி ஒன்றை அன்பளிக்கவும் தயங்கார்.

சைவ சமயக் கருத்துகளை உள்ளடக்கிய நூல்களை எழுதினார். அத்தகைய அருமையான நூல் ஒன்றை அச்சிட்டுக் கொடுத்தேன். தான் படித்துப் பயன்பெற்ற முருகேசு பண்டிதரின் (கிறித்தவர், நீர்வேலியூரர்) சிவஞானசித்தியார் சுபட்ச வசனம் நூலை என்னிடம் தந்து மீள்பதிப்பித்தார்.

நேபாள மன்னருக்கும் இவருக்கும் இருந்த தொடர்பால், நேபாளத்தார் நடத்திய உலக இந்து மாநாட்டுக்கு இவரை அழைத்திருந்தனர். நாகபுரிக்குக் கிழக்கே இராய்ப்பூரில் மாநாடு. என்னையும் வருமாறு அழைத்தார். உடன் சென்றேன். உடல்நலமற்ற காலத்திலும் விடாது சென்றார். இலங்கையில் இந்துக்களுக்கான துன்பத்தை விளக்கினார். என்னையும் பேசச் சொன்னார். பின்னர் இதே அமைப்பினர் தென்னாபிரிக்காவிலும் மாநாடு நடத்தினர். அங்கும் சென்று வந்தார் எனப் பின்னர் அறிந்தேன்.

சிவனை வழிபடுவதே வாழ்வு. சைவமே நெறி. இவை திரு. நமசிவாயத்தின் கொள்கை. புறம் போகேன் என்ற திருவாசகக் கொள்கையர். அனைத்துத் தத்துவங்களையும் படிப்பார். படிக்கப் படிக்கத் தனக்குச் சைவத்தின் மேலுள்ள நம்பிக்கை பெருகும் என்பார்.

வேதாந்த தந்துவங்களின் சிறப்பை அறிந்தவர். ஆனாலும் சைவத்தின் மாண்பை வேதாந்தம் வழி தெளிவார். வேதாந்திகளின் ஆங்கில உரை வீச்சில் மயங்கி, தத்துவ மயக்கத்தில் உழல்வோரைச் சாடுவார்.

திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைக்குள் இவ்வாறு மயங்கி உழல்வோரின் வாடையும் வரக்கூடாதென்பதில் தெளிவாக இருந்தார்.  சைவத்தில் ஊறியவர்கள் என நம்பி, அழைத்து வந்தேனே! சபைக்குள் அறிமுகம் செய்தேனே! சபைப் பொறுப்பில் இருந்தவாறே வேதாந்திகளின் உரைவீச்சில் மயங்கி, அவர்களின் காலில் வீழ்ந்து வணங்குகிறார்களே! அக்கருத்துகளைச் சபைக்குள் புகுத்த முயல்கிறார்களே! இவர்களை அறிமுகம் செய்த பாவியானேனே! வருந்தி என்னிடம் முறையிடுவார். அவர்கள் யார் என எனக்கு அடையாளம் காட்டமாட்டார்.

சபையின் நிதி நிர்வாகத்தில் இவர்களால் ஏற்படும் குழப்பங்களையும் தன்னலம்சார் சேமிப்பு முதலீட்டுக் கொள்கைகளையும் பொறுக்கமுடியாது திரு. நமசிவாயம் மனம் புழுங்கிய காலங்களில் அவருடன் இருந்தேன். தன்னலமற்றவர்கள் என்று நம்பினேன், பிழை விட்டேன், என மனம்நொந்து கூறுவார். எவருக்கோ குடியுரிமை பெறுவதற்காகச் சபைக்கான மலேசிய நன்கொடைகளை இவர்கள் மடைமாற்றிய செய்திகளால் தான் துன்புறுவதாக என்னிடம் வருந்திக் கூறுவார்.

என்னிடம் அவர்களை அடையாளம் காட்டாமலே பேசுவதால், இவர் வருத்தத்துக்குக் காரணர் யார் என என்னால் இறுதிவரை அறிய முடியவில்லை. ஆள்களைப் பார்க்காதவர், ஆட்டத்தைப் பார்ப்பவர், எனவே ஆள்களை ஊகிக்கவும் முடியாதவாறு தப்பாட்டத்தை மட்டும் தெளிவாக்குவார்.

திரு. க. இராசாராம்

மரீனாக் கடற்கரையில் புலர்காலை நடை நண்பர்களாகப் பலரை அறிந்து வைத்திருந்தார் திரு. நமசிவாயம். அவர்களுட் பலர், காலப்போக்கில் விலகினாலும் திரு. இராசாராமுடனான நட்பு நெருக்கமாகத் தொடர்ந்தது.

பெரியாரின் தனிச் செயலராக, அண்ணாவின் தொண்டனாக, எம்சியாரின் நண்பராக இருந்து, மக்களவை உறுப்பினர், சட்டப் பேரவைத் தலைவர், அமைச்சர் எனப் பல பதவிகளை அலங்கரித்த திரு. க. இராசாராம், சேலத்தில் செல்வாக்கான குடும்பத்தவர்.

இருவரும் ஒருவரில்லத்துக்கு மற்றவர் வருவதும் இணைந்து நிகழ்ச்சிகளுக்குப் போவதுமாகத் தம் நட்பை வளர்த்தனர். அந்த நட்பு வட்டத்துள் என்னையும் இணைத்துக் கொண்டனர். திரு. க. இராசாராம் இல்லத்தில் காலை இட்லியை விரும்பி உண்பது போலவே, திரு. நமசிவாயம் இல்லத்தில் மதிய உணவை விரும்பி உண்பேன்.

திரு. இராசாராம், திரு. நமசிவாயம் இருவருக்கும் வாரந்தோறும் எண்ணெய்க் குளியலால் தசைச் சோர்வைப் போக்குபவரை என்னிடமும் அனுப்பினர். எனக்கு அவர் பயன்படவில்லை.

இருவருக்கும் நினைவாற்றல் அதிகம். அரசியலை அலசும் அதே நேரம், அரசியல்வாதிகளையும் அலசுவர். செல்வாக்கான குடும்பங்களின் வாழ்வுமுறை அவர்கள் அலசலில் தோயும்.

தமிழரின் பண்பாட்டுக் கூறுகளால் ஈர்க்கப்பட்ட இருவருக்கும் நூல் வாசிப்பும் தொடர்பான அலசலும் பொழுதுபோக்கு.

தமிழ்த் தேசிய உணர்வின் விலை

திரு. நமசிவாயத்தின் உற்ற நண்பர் மற்றும் உறவினர் திரு. வி. நவரத்தினம். முன்பு ஊர்காவற்றுறைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். கனடாவில் வாழ்ந்து வந்தார். சென்னைக்கு வந்த அவர் மகனார், நூல் ஒன்றை அச்சிட விரும்பினார். தமிழ் நாட்டினத்தின் தோல்வியும் எழுச்சியும் என்ற திரு. வி. நவரத்தினத்தின் அந்த ஆங்கில நூலை அச்சிடுமாறு திரு. நமசிவாயம் என்னைப் பணித்தார்.

அச்சிட்ட காலங்களில் தமிழ் நாட்டில் நடந்த நிகழ்வுகளால் அந்த நூலை முழுமையாக அச்சிடமுடியவில்லை. வரலாற்றுப் பெட்டகமான அந்த நூலில் கருத்துரைத்த திரு. வி. நவரத்தினம் கூறியன, கூரிய அம்புகளாய்க் குவிந்த குற்றச்சாட்டுகள். உண்மைகள் சுடும் என்பார்கள். திரு. நமசிவாயத்திடம் விளக்கினேன். அந்த நூலைக் கனடாவில் மறுபதிப்புச் செய்தபொழுது முழுமையாக அச்சிட்டனராம்.

திரு. நமசிவாயத்தின் மனைவி வழி மருகர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினர். இதனால் புதுவை இரத்தினதுரை போன்ற தோழமையாளர் பலர், அம்மருகரைப் பார்க்கத் திரு. நமசிவாயத்தின் மயிலாப்பூர் இல்லத்துக்கு வந்து போவர்.

சிலர் அங்கு சில நாள்கள் தங்கியும் சென்றனர் போலும். குற்றச் செயல்களை விசாரிப்போருக்குத் துரும்பைத் தூணாக்கத் தெரியும். தூணைத் துரும்பாக்கத் தெரியும். திரு. நமசிவாயத்தின் அரசியல் தொடர்புகள், மருகரின் தோழர்களின் நடமாட்டம் என ஒன்றுடன் ஒன்றை முடிச்சுப் போட்ட கற்பனையால், திரு. நமசிவாயம் அவர்களின் இல்லம் தீவிரவாதிகளின் புகலிடம் என்ற செய்தியை வார இதழ் ஒன்று படத்துடன் வெளியிட்டுத் தன் விற்பனையைப் பெருக்கியது. விசாரிப்போரின் தூண்டுதலின்றி இவை நடைபெறுமா?

விளைவு? ஒரு நாள் விடியற்காலை, திரு. நமசிவாயம் இல்லம் வந்த காவல்துறை, தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தது. பெட்டிக்குள் அவரது துணிமணிகளை அடுக்கியது. நேரே மீனம்பாக்கம் விமான நிலையத்துக்குக் காவல்கட்டுடன் அழைத்துச் சென்றது. கொழும்புக்கு விமானம் ஏற்றியது.

உவந்து உறைபவர்

இந்தியாவுக்குத் திரும்பி வரமுடியவில்லையே என்ற ஏக்கம் திரு. நமசிவாயத்தின் எஞ்சிய நெடுவாழ்வின் நிறைவடையா ஏக்கமாமாகத் தொடர்ந்தது.

பருத்தித்துறையில் வந்திறங்கும் தமிழகப் பொருள்களைச் சுமைகாவிகள் தோட்சுமையாக எடுத்துச் செல்லும் பாதையில் அவர்கள் ஓய்வாக இருக்கத் தெருமூடி மடமும் கிணறும் கொண்ட வதிரியிலும், திக்கத்திலும் சிறுவனாக வளர்ந்தவருக்கு இந்தியத் தொடர்புகளே சுவாச மூச்சு.

இந்தியத் தொடர்புகள் கனவல்ல, நாள்தொறும் காணும் நனவாக வளர்ந்தவருக்கு, இறுதிக் காலத்தில் இந்தியப் பயணம் கனவாயினமை காலத்தில் கோலம், தமிழ்த் தேசிய உணர்வாளராக இருப்பதற்கு அவர் கொடுத்த விலை.

1997இல் சென்னையில் ஒரு மாதம் நான் சிறையில். தொடர்ந்து 2000ஆம் ஆண்டில் இந்திய அரசு என்னையும் நாடுகடத்த முயன்றது. ஆணையைத் தந்தது. பின்னர் சென்னை நீதிமன்றத்திலேயே என் கடவுச் சீட்டு முடங்கியது. நீதிமன்றப் பாதுகாப்பில் இந்தியாவில் இதுவரை தங்கியுள்ளேன். எனவே திரு. நமசிவாயத்துடன் நேரடித் தொடர்பு இல்லை.

சென்னை நீதிமன்ற அனுமதியுடன் 2003இல் இலங்கை சென்றேன். திருக்கேதீச்சரம் சென்றேன். திரு. நமசிவாயம் அவர்களுடன் தங்கினேன். திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழாவைத் தன் வாழ்நாளிலேயே காண துதி செய்து விரும்பினார், கண்டு களிக்குமாறு திருக்கேதீச்சரநாதனார் துதிசெய்தவருக்கு அருள் செய்தார். அக்காலத்தில் அவருடன் அங்கு இருந்தேன்.

திரு. நமசிவாயம் அவர்களுடன் ஏறத்தாழ 40 ஆண்டுகாலத் தொடர்பு. எத்தனையோ நிகழ்வுகள். எத்தனையோ கருத்துப் பரிமாறல்கள். எத்தனையோ முரண்பாடுகள். எத்தனையோ இசைந்த இயல்புகள். சில வரிகளிலோ, சில பக்கங்களிலோ சொல்லி முடிக்கமுடியாத செய்திகள்.

இங்கு தந்தவை சில, தராதவை பல. சொல்ல முயன்றவை சில, சொல்லாமல் விட்டவை பல. தந்தை வழி உறவினராதலால் அவர் என் நெஞ்சில் நிலைக்கவில்லை. தேசிய உணர்வில் பங்காளியாதலால் என் நெஞ்சில் நீடிக்கவில்லை. சைவ நெறியில் உடன்பட்டவராதாலால் அவரை உளத்திருத்தவில்லை.

மட்டற்ற அன்பைப் பரிமாறினோம், அந்த அன்புப் பரிமாற்றத்தில் திளைத்தோம் என்பதால், நீங்காதென் நெஞ்சில் நினைவுகளோடு கலந்து, உணர்வுகளோடு பிணைந்து, உற்றவராய் உவந்து அவர் உறைந்திருக்கிறார்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.