தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (11)
தி.சுபாஷிணி
ருக்மணி லட்சுமிபதி (1899-1951)
‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு’ என்கின்ற கருத்தைக் கட்டுடைத்து, மருத்துவரானவர் டாக்டர் ருக்மணி லட்சுமிபதி அவர்கள். டாக்டர் ஆச்சத்த லட்சுமிபதி அவர்களைக் காதலித்து, இவர் கடிமணம் புரிந்துகொண்டது அடுத்த வளர்நிலை. 1919ஆம் ஆண்டு ‘பாரதி ஸ்திரி மண்டல்’ சங்க இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பெண்களுக்காகப் போராடத் தொடங்கினார். மதுவிலக்குப் போராட்டத்திற்கு ‘இளைஞர் அமைப்பை’ ஏற்படுத்தினார். சமூகப் பணிகளுக்காக 1924இல் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். கதர்த்துணி விற்பனை நிலையம் ஒன்றைத் திருவல்லிக்கேணியில் துவங்கினார். அக்கட்சியின் பெண்கள் பிரிவின் செயலரானார். 1929இல் லாகூரில் நடந்த மாநாட்டில் பெண்களுக்குச் சம உரிமை கேட்டு, மக்களிடையே சலசலப்பை உண்டாக்கினார்.
1930இல் வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். பின், பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு அடிக்கடி சென்று வந்தார். 1936இல் மாநகராட்சி உறுப்பினராகி, சென்னையைத் தூய்மையாக்கும் திட்டங்கள் பல கொணர்ந்தார். 1933இல் மகாத்மா காந்தியின் ‘அரிசன சேவா நிதிக்கு’ தன் நகைகள் அனைத்தையும் அளித்தார்.
தம் வீட்டுப் பணிகளுக்குத் தாழ்த்தப்பட்டவர்களை நியமனம் செய்தார். 1946இல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால், அமைச்சரவையில் பொது
சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். இவர், பதவிக் காலத்தில், ‘மலேரியா ஒழிப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.
இவர் மருத்துவத் துறையிலுள்ள அனைத்து உயர் பதவிகளிலும் இந்தியரை அமர்த்தி அலங்கரித்தார்.
இந்தப் போராட்ட வீராங்கனை, முதல் சட்டமன்ற உறுப்பினர்; முதல் சபாநாயகர்; முதல் பெண் அமைச்சர்; முதல் அரசியல் பெண் சிறைக்கைதி எனும் பல முதல் வரிசைகளில் நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு நன்றி
http://images.mitrasites.com/photo/rukmini-laxmipathi.html