விசாலம்

 

ஒவ்வொரு தடவையும் நான் தில்லி செல்லும் போது தவறாமல் போய் வரும் இடம் ஒன்று உண்டென்றால் அது ‘மலாய் மந்திர்’ தான். மலை மந்திர் என்பதை வட இந்தியர்கள் மலாய் மந்திர் என்று ஆக்கிவிட்டார்கள். “மக்கன் மலாயி” போல் அந்த முருகன் சுவைக்கிறான் போலும். இந்தக் கோயில் தான் “உத்தர ஸ்வாமி மலை”, உத்தர் என்றால் ஹிந்தியில் வடக்கு திசை.

என் வாழ்க்கையில் இந்தக் கோயிலுடன் சுமார் நாற்பது வருட சம்பந்தம் என்றால் சும்மாவா? என் வாழ்வுடன் பின்னிப் பிணைத்துக்கொண்ட அந்த சுவாமிநாதனை மறக்கத்தான் முடியுமா?

முதன் முதலாக அந்தக் கோயிலுக்குப் போன ஞாபகம் இப்போதும் மிகப் பசுமையாக இருக்கிறது .

1970 ஆண்டு. நானும் என் கணவரும் இந்த முருகன் கோயிலின் சிறப்பை ஒரு நண்பர் மூலம் கேள்விப்பட்டு என் மகனுடன் அந்த முருகனைத் தரிசிக்க்க் கிளம்பினோம் அங்கு விளக்கு ஏற்ற ஒரு அகல்,எண்ணெய், திரி மட்டும் எடுத்துக்கொண்டேன் .ராமகிருஷ்ணபுரம் வந்து அங்கிருந்த சிறு குன்றையும் கண்டோம். அருகில் எல்லாம் ஒரே திடல். பல காலி இடங்கள். ஏதோ ஓரளவு மேலே ஏற சுமாரான படிகள். பக்கத்தில் சரிவும் பள்ளமும் இருந்தன. எப்படியோ சமாளித்து ஏறிவிட்டோம்

இளம் வயது, உற்சாகம் எல்லாம் சேர ஏறிய களைப்பே தெரியவில்லை. காலை மணி 11. எப்படியாவது முருகனுக்கு ஒரு அர்ச்சனை செய்து விட வேண்டும் என நினைத்து மேலே போன எங்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஒரு சிறிய அறையில் இருந்த முருகனின் வாசல் அடைக்கப் பட்டிருந்தது. இரும்பு கேட் தான். அதன் நடுவே ஒரு கை உள்ளே போகும் அளவு இடமும் இருக்க, உள்ளே இருந்த முருகன் எங்களுக்கு நன்கு தெரிந்தான்.

நான் முருகனைப் பார்த்தேன் . அவனோ என்னைப் பார்த்து புன்னகைத்தான்.

“என்ன ஸ்வாமிநாதா ஆசை ஆசையாக உனக்கு அர்ச்சனை செய்ய கரோல்பாக்கிலிருந்து வந்தோமே . இப்படி பூட்டிய கதவைப் பார்க்க வச்சுட்டாயே சரி, விளக்காவது ஏற்றுகிறேன் ” என்று கூறியபடியே அகல்விளக்கை வெளியில் எடுத்து எண்ணெயையும் விட்டு, திரியை சரி செய்தேன். பின் என் மகனை அழைத்து தீப்பெட்டியைக் கேட்டேன்.

அவனும் தன் அரை டிராயரைத் துழவிப் பார்த்தபடியே உதட்டைப் பிதுக்கினான். “காணுமம்மா. எங்கே வச்சேன்னு தெரியலை. மறந்து போய்ட்டேன்”

போதுமா சோதனை! இப்ப என்ன செய்வது? ஓ முருகா, நீ என்ன செய்வாயோ, ஏது செய்வாயோ, எனக்கு தெரியாது. எப்படியும் விளக்கேற்றிவிட்டுதான் வீடு செல்வேன்” என்று முருகனிடம் அன்புக் கட்டளையிட்டேன்.

என் கணவரோ “வா போகலாம், ஏதோ முருகன் தரிசனம் கிடைச்சாச்சோன்னோ, அந்த அளவுக்கு சந்தோஷப்படு ” என்று நடுநடுவே என் வயிற்றைக் கலக்க வைத்தார்.

அப்போது என் மகன் பொழுது போகாமல் மண்ணைக் கிளற, ஒரு சிறு அட்டைத்துண்டு கிடைத்தது. அது தீப்பெட்டியின் ஒரு சிறிய பகுதி.

“ஹையா, அம்மா பார் மேச் பாக்ஸின் துக்கடா. இதை யூஸ் செஞ்சிக்கலாம்” என்றான். அதே நேரம் என் கணவர் காலில் எதோ ஒன்று குத்தியது. அதைக்குனிந்து எடுத்தார் அவர். என்ன ஆச்சரியம்! அது ஒரு தீக்குச்சி….. மண் ஒட்டியபடி பழைய தீக்குச்சியாக இருந்தது

“இதை வச்சு எதாவது செய்யலாமான்னு பாரு” என்றபடி என்னிடம் அதைக்கொடுத்தார்.

“அப்பா! முருகா! ஞானப்பண்டிதா! என் அன்புக் கட்டளையை ஏற்று இந்த நிகழ்ச்சியை செய்தாயோ? எப்படியாவது விளக்கு எரியட்டும்” என்று மனதார பிரார்த்தித்து அந்தக்கிழிசல் அட்டையில் ஒரு உரசல் உரசினேன். அவ்வளவுதான். குச்சி பற்றிக்கொண்டது.

பின் என்ன! விளக்கு எரிந்தது. என் கண்கள் குளமாயின. அப்பா என்ன சக்தி ! கேட்டவுடனேயே கிடைத்ததில்  என் தேகம் புல்லரித்தது.

ஆம், அன்று இறுக்கிப் பிடித்துக்கொண்ட முருகனை இன்று வரை விடவில்லை

இந்த தடவை தில்லி போனபோது ஒரு ஷஷ்டியன்று என் வேலனுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்திருந்தேன்.

அபிஷேக தினமும் வந்தது. குன்றின் மேல் ஏறுவதில் நிறைய வித்தியாசம் தெரிந்தது. பின்னே தெரியாதா? நாற்பது வருடம் ஆன பின்னும் உடம்பு யௌவனமாகவா இருக்கும். வானபிரஸ்தா நிலை வந்தாச்சே! 

குன்றின் மீது ஏறி முருகன் சன்னதியில் முதல் இடம் பிடித்துக்கொண்டேன். பின்ன என்ன! என் முருகனின் அழகை அருகிருந்து ரசிக்க வேண்டாமா !!

அவன் மேல், பால் அப்படியே வெண்மை நிறத்துடன் ஓடி எல்லா இடங்களிலும் பரவ அந்த அழகை எப்படிச்சொல்வது? விபூதியில் அவன் அழகைச்சொல்லவா? சந்தனாபிஷேகத்தில் அவன் அழகைச்சொல்லவா? முருகன் என்ற பெயருக்கே அழகு என்றுதானே பொருள்…..

வைத்த கண் வாங்காமல் எல்லாம் பார்த்தபடி நான் நிற்கையில் ஒரு சர்தார்ஜி கூட்டத்தில் புகுந்து என் அருகே வந்து நின்று கொண்டார். நின்றவுடனேயே “முருகனுக்கு அரோஹரா’ என்றும் சொன்னார். நான் வியப்பாக அவரைப்பார்த்தேன். இதற்குள் அவர் அபிஷேகத் தேங்காய்கள் எல்லாம் உடைத்து சேவை செய்தார்.

பின் அழகாக அதற்குரிய பையில் போட்டு விபூதி பொட்டலமும் வைத்தார். சுமார் 100 தேங்காய்கள் உடைத்திருப்பார். அப்போது சுவாமிக்கு திரை போடப்பட்டது. என் கவனம் முழுவதும் இப்போது அந்த சர்தார்ஜியிடம் சென்றது.

அப்பா என்ன சுறுசுறுப்பு! அங்கிருக்கும் தரையெல்லாம் சுத்தம் செய்தார். தேங்காய் நார் குப்பையெல்லாம் சேகரித்து ஒழுங்காக ஆக்கினார். அவர் வாயும் “கந்தனுக்கு அரோஹரா”, “வேலனுக்கு அரோஹரா” என்று சொல்லியபடி இருந்தது. இந்த அற்புதமான மனிதரைப் பேட்டி காண வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

அதுவும் நிஜமானது …….

 

முருகனின் அபிஷேகம் முடிந்து கூட்டமும் கலையத் தொடங்கியது. என் கணவர் பிரசாதம் பெற அங்கு நிற்க நான் மெள்ள கீழே இறங்கி வந்தேன் .நான் முன்பு பார்த்ததை விட இப்போது பல மாற்றங்கள் ……….அழகான மயில்கள் இரண்டு தோகை விரித்து முருகனின் படிகளில் ஆடுகின்றன .நவக்கிரகங்கள் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு சனீஸ்வரனுக்கு விளக்கு ஏற்ற தனி இடமே கொடுக்கப்பட்டுள்ளது .

படிகளின் ஆரம்பத்திலிருந்தே கால் சுடாமல் இருக்க சணலால் ஆன விரிப்பு…….. நடக்க மிகவும் சௌகரியமாக இருந்தது முன்பெல்லாம் வெய்யில் காலத்தில் காலை பத்து மணிக்கே நடந்து வரமுடியாமல் பலர் தவித்து ஓடி வரும் காட்சி என் கண்முன் வந்தது அங்கிருந்த முன்னேற்றத்தை நினைத்து மனம் நிறைவு பெற கீழே வந்து அந்த சர்தார்ஜி அகப்படுவாரா என்று கண்களை துளாவ விட்டேன். என்ன ஆச்சரியம் ! அவரே என்னை நோக்கி நடந்து வந்தார் .

நான் அவரை நோக்கி “சத் ஸ்ரீ அகால்” என்றேன் அவர் தன் கைகளைக் கூப்பியபடி “நமஸ்காரம்” என்றார்,

அதற்குள் அவரது மொபைலில் ஒரு முருகனின் பாடல் ஒலிக்க “ஒரு நிமிஷம் “என்று என்னைப்பார்த்து சொன்னபடி கொஞ்சம் நகர்ந்து நின்று பேச ஆரம்பித்தார் .

நான் அந்த மனிதரைப்பற்றி வியந்தபடியே இருக்க தன் பேச்சை முடித்து திரும்பவும் என்னிடம் வந்தார் .

நான் அவரிடம் ” உங்களைப்பற்றி எனக்கு மேலும் தெரிந்து கொள்ள ஆசை
.உங்களிடம் பேசலாமா ?”என்றேன்

“பஹுத் குஷி ஸே” என்றபடி அங்கிருந்த ஒரு நாற்காலியில் என்னை அமர வைத்தார் .நான் என கணவர் கீழே வரும் வரை பேட்டி காணலாம் என்று நினைத்து கேள்விகளை ஆரம்பித்தேன் .

“சர்தார்ஜி உங்கள் பெயர் என்ன?’

சர்தார்ஜி —” என் பெயர் ஈஸ்விந்தர்ஜித் சிங்

நான் “நீங்கள் எப்போதும் இந்தக்கோயிலுக்கு வருவீர்களா?

சர்தார்ஜி: “நான் முக்கால் வாசி இந்தக் கோயிலில் தான் இருப்பேன் .’

நான்: “நீங்கள் எப்படி இந்த முருகன் கோயிலில் ……….”

சர்தார்ஜி: ” நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. எங்கள் மதத்தினர் மதப்பற்று மிக்கவர்கள்.மதத்தின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதும் அவசியம் ஆனாலும் நான் இந்தக் கோயிலின் முருகனைக் கண்டபின் என் கொள்கையிலிருந்து கொஞ்சம் விலகியுள்ளேன் “

நான்: “அப்போ நீங்கள் குருத்துவாராவுக்குப் போகமாட்டீர்களா?'”

சர்தார்ஜி: “எனக்கு இந்தக்கோயில் தான் குருத்துவாரா .இந்த முருகனே என் குரு”

நான்: “கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது . அதுசரி இந்த கோயிலுக்கு வந்து என்ன செய்வீர்கள்?’

சர்தார்ஜி: “எல்லாமே…. பூக்கள் எடுத்துக் கொடுப்பது .தேங்காய் உடைப்பது, தரையைத் துடைப்பது கூட்டத்தை ஒழுங்காக தரிசனம் செய்ய உதவுவது, போன்றவைகள்”

நான்: ”நீங்கள் மட்டும் தானா உங்கள் குடும்பத்தில் முருக பக்தர் அல்லது
……………’

சர்தார்ஜி: “‘என் குடும்பமே இந்த முருகனின் அடிமை . என் மனைவி ..இரு
குழந்தைகள் எல்லோருமே தான் ,முருகனே எங்கா

நான்: “நீங்கள் மேலே முருகனுக்கு அபிஷேகம் நடக்கும் போது ஸ்லோகம் சொன்னீர்களே.”

சர்தார்ஜி: “ஸ்லோகமென்ன …கந்தரனுபூதி ,வேல் விருத்தம் என்று முருகனைப் பற்றி பல சொல்லிவருகிறேன் இவைகளைச் சொல்ல என் மனதில் அப்படி ஒரு ஆனந்தம் கிடைக்கிறது .அதை வெளியே சொல்ல முடியாது’

நான்: “உங்களைப் பார்க்கவே எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது ,ஆமாம் எப்படி இவ்வளவும் படித்தீர்கள் .தமிழ் தெரியுமா?

சர்தார்ஜி: “எனக்கு தமிழ் எழுத, படிக்கத் தெரியாது .’

நான்: பின் எப்படி இதெல்லாம் நடக்கிறது ?”

சர்தார்ஜி: “எல்லாம் முருகன் அருள் தான் .நான் என் கேள்வி ஞானத்தினாலும் ,ஒலிநாடாவைப் போட்டு பல தடவைகள் உன்னிப்பாகக் கேட்டு பயிற்சி எடுத்துக் கொண்டதனாலும் சில முருகபக்தர்கள் உதவியதாலும் என்னால் இதெல்லாம் முடிகிறது “

நான்: “அப்படியா ரொம்ப சந்தோஷம் .நீங்கள் குருத்துவாரவுக்குப் போவீர்களா?

சர்தார்ஜி: எனக்கு இங்கேயே நேரம் சரியாகிப் போய்விடுகிறது .முருகனே என் குருவாக ஆகிவிட்டார் .’

நான்: ” இந்தக்கோயிலில் வந்து சேவை செய்யும் எண்ணம் எப்படி உண்டாயிற்று .?

சர்தார்ஜி: “சீக்கியர்கள் எல்லோருமே குருத்துவாராவுக்குச் சென்றால் சேவை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். காரில் வரும் பணக்காரர்களும் சரி மிடில் கிளாஸ் ஆனாலும் சரி .குருத்துவாரா வந்தவுடன் தரையைத் துடைப்பது .பளிங்குக்கல்லை பளபளவென்றாக்குவது. பிரசாதம் செய்ய உதவுவது . காலணிகளைப் பாதுகாப்பது என்று பல சேவைகள் அங்கு இருக்கும் . சிறுவயதிலிருந்து நானும் இதில் பழக்கப்பட்டவன் .ஆகையால் கோயிலில் வந்து என்னால் சும்மா இருக்க முடியவில்லை .’

நான்: வெளியூர் போய் முருகபக்தியைக் காட்ட வாய்ப்பு கிடைத்ததா?’

சர்தார்ஜி: “ஆம் நான் சிங்கப்பூர் மலேசியா போயிருந்தேன் அப்போது
மலேசியாவில் இருக்கும் மிகப்பெரிய புகழ்பெற்ற முருகன் குகைக்கோயில் சென்றிருந்தேன் அங்கு கந்தரனுபூதி சொல்ல வாய்ப்பும் கிடைத்ததை நான் பெரிய பாக்கியமாக கருதுகிறேன் .தவிர கௌமாரம் என்ற வெப் பேஜில் என்னைப்பற்றி வந்துள்ளது. நான் அதில் அடிக்கடி பங்கு பெறுகிறேன் “

நான்: முதன் முதலில் இந்தக்கோயிலில் எப்படி நுழைந்தீர்கள்”

சர்தார்ஜி: நான் ஒரு இஞ்சினியர் .இந்தக்கோயில் கட்டும் பணியில் நானும் ஈடுபட்டிருக்கிறேன் .ஏதோ ராமாயணத்தில் பாலம் கட்ட உதவிய அணில் போல் “{ ஹாஹா என்று சிரிக்கிறார்} எதோ என்னால்
முடிந்த உதவியை இன்றும் செய்து வருகிறேன் “

நான்: இந்த தடவை முன்பு இருந்ததைவிட நிறைய பஞ்சாபியர்களை இங்கு பார்க்கிறேன். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்’

சர்தார்ஜி: இந்த முருகன் கேட்டதைக் கொடுப்பான் .தவிர இது ஒரு பரிகார ஸ்தலம் .நோய் அகல . செவ்வாய் தோஷம் .நாகதோஷம் போக் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். ஜோசியத்தில் நம்பிக்கை இருக்கும் வட இந்தியர்களும் அவரவர் ஜோசியர் சொல்வதைக்கேட்டு இங்கு வருகின்றனர் .எனக்கும் பல வேண்டுதல்கள் பூர்த்தியாகி இருக்கிறது “

நான்: உங்களுடன் பேசியதில் மிக மிக மகிழ்ச்சி . இதை நான் எதாவது
பத்திரிக்கையில் போடவிரும்புகிறேன் உங்கள் அனுமதி வேண்டும்

சர்தார்ஜி: “இட் இஸ் மை ப்ளெஷர் ..போய்வரட்டுமா? “

நான்: மிக்க நன்றி.

என் கணவரும் வந்துவிட “இருங்கள் ஒரு நிமிஷம் என்று எனக்கு அவர் ஒரு பிரசாத டப்பாவைக் கொண்டுவந்து கொடுத்தார் .அதில் சுடச்சுட வெண்பொங்கல்! பல மொழிகளைக் கற்றுக்கொள்வதில் வரும் ஆனந்தமே தனிதான். நான் பலதடவைகள் குருத்துவாரா போயிருக்கிறேன் .அவர்கள் பாடும் “சபத்” கற்றுக்கொள்ளவும் ஆசைதான் ..இந்த சர்தார்ஜி என்னால் மறக்க முடியாத ஒரு சர்தார்ஜி ……..

பின் குறிப்பு : எதிர்பாராத சம்பவம் இது அதனால் என் கேமராவை நான்
எடுத்துப்போகாத காரணத்தினால் அவரை போட்டோ எடுக்க முடியவில்லை கௌமாரம் .காமில் அவரது போட்டோ உள்ளது ..

 

புகைப்படங்களுக்கு நன்றி:

http://www.indianetzone.com/photos_gallery/22/Uttara%20Swami%20Malai%20Temple%20_8742.jpg

http://murugan.org/pix/dsc00882.jpg

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “எல்லாமே அந்த முருகன்தான்

  1. முருகக் குழந்தையின் பெருமைகளைப் படிக்கப் படிக்கப் பரவசம்! மிக்க நன்றி அம்மா!

  2. நேரில் முருக தரிசனம் கிடைக்கப்பெற்றதைப் போல இருந்தது வர்ணணை. நன்றி அம்மா.

  3. பன்மொழி வித்தகி நீங்கள் விசாலம் மேடம்…இந்த சர்தார்ஜியைப்பற்றிய உங்கள்பார்வையும் அதை அழகிய கட்டுரையாய் வடித்துள்ள விதமும் அருமை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *