வார ராசி பலன் 28.05.2012 முதல் 04-06-2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்மேஷம்: இந்த வாரம் உறவுகள் சந்தோஷத்தோடு, சிறு செலவுகளையும் சேர்த்தழைத்து வருவார்கள். பாராட்டைப் பெறக்கூடிய அளவிற்குக் கலை நிகழ்ச்சிகள் நடந்தேறுவதால், கலைஞர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். மாணவர்கள் கூட்டாகச் செயல்படும்போது அடுத்தவரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுத்துச் செயல்பட்டால், கருத்து வேறுபாடு தோன்றாது. பணியில் உள்ளவர்கள் உடனிருப்பவர்கள் நடுவே வீண் போட்டி மனப் பான்மை, கருத்து பேதம் ஆகியவை வளர இடம் கொடாதீர்கள். கட்டுக்கோப்பாய் வேலைகளை முடிக்கலாம். பெண்கள் வரவு, செலவு இரண்டிலும் கவனமாக இருந்தால், பொருளாதாரம் சறுக்காமல் இருக்கும்.
ரிஷபம்: பெண்கள் பொது இடங்களில் குடும்ப விஷயங்களை வெளிப்படையாகப் பேசாமலிருந்தால், பிரச்னைகள் மேலும் பெரிதாகாமலிருக்கும். மாணவர்கள் எந்தச் சூழலிலும், கட்டுப்பாடாய் நடந்து கொள்வதைக் கடைப்பிடித்தால், எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய்த் திகழலாம். பொருளாதாரத்தில் அபிவிருத்தி இருந்தாலும், சுய தொழில் புரிபவர்கள் சிறிது காலத்திற்குச் சிக்கனமாய் இருப்பது அவசியம். பணியில் இருப்பவர்களுக்கு ஓய்வுக்கு இடமின்றி உழைப்போடு ஒன்றி விடும் நிலை இருக்கும். தொழில் வகையில் காலத்திற்கேற்ப மாறுதல்களை மேற்கொண்டால், வியாபாரிகளுக்குப் போட்டிகளை முறியடிப்பது சிரமாய் இராது.
மிதுனம்: வியாபாரிகள் வேண்டிய நன்மைகளையும், சலுகைகளையும் பெற நேர் வழியில் முயற்சி செய்வது நல்லது. இல்லற இனிமை குலையாமல் இருக்க, பெண்கள் குடும்ப உறுப்பினரிடம் அனுசரித்து நடக்கவும். பொது வாழ்வில் இருப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால், உடல்நலம் நன்றாகத் திகழும். மாணவர்கள் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளில், விதிமுறைகளின்படி நடத்தல் அவசியம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை ஒப்புக்கொள்ளும் முன், அதில் உள்ள நிறைகுறைகளை உணர்ந்து கொண்டால், நஷ்டப்படுவதைத் தவிர்த்து விடலாம். புதிதாக வேலைக்குச் சேர்ந்துள்ளவர்கள் பங்குச் சந்தையில் அதிகப் பணம் முடக்க வேண்டாம்.
கடகம்: உயர் பதவியில் இருப்பவர்கள் தேவையான இடங்களில் அதிகாரம், அன்பு இரண்டையும் சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், பிறரின் தலையீடின்றி பணிகளைச் செம்மையாகச் செய்ய இயலும். பகைவரின் பலம் ஒடுங்கியிருந்தாலும் கலைஞர்கள் சிக்கலான விஷயங்களில் நிதானமாகச் செயல்பட்டால், பாதகங்கள் அதிகமிராது. மாணவர்கள் மனக் குழப்பத்திற்கு இடம் தராமலிருந்தால் சிந்தனை வளம் வற்றாமலிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெயரைப் பெறுவது எளிதாகும். கலைஞர்கள் தேடி வரும் சந்தர்ப்பங்களை முறையாகப் பயன்படுத்திக் கொண்டால், உங்கள் அந்தஸ்து உயர்ந்து விடும்.
சிம்மம்: இந்த வாரம் வெளிவட்டாரத் தொடர்புகள் தங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் அவ்வளவு லாபகரமாய் இராதென்பதால், கலைஞர்கள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது.. சுய தொழில் புரிபவர்கள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருந்தால் வருகின்ற லாபம் குறையாமலிருக்கும். மாணவர்கள் வீண் வம்புக்காரர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விடவும். குழந்தைகளின் முன்னேற்றம் மெச்சத் தகுந்த விதமாக இருப்பதால், பெற்றோர்கள் மகிழ்வுடன் இருப்பார்கள். சுய தொழில் புரிபவர்கள் எந்த சூழலிலும், உறுதியான மனத்துடன் செயல்பட்டு வந்தால், எல்லாம் நலமாகவே முடியும்.
கன்னி: வியாபாரிகள் வேண்டிய காரியங்களுக்குத் தேவையான பணத்தை ஒதுக்கி விட்டால், கடைசி நேர அலைச்சலைத் தவிர்த்து விடலாம். பெண்கள் சின்ன விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படுவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. சலிப்பும், வெறுப்பும் சில சமயம் உங்கள் உற்சாகத்தைக் குறைத்தாலும், மாணவர்கள் தங்கள் பாடங்களைப் பயில்வதில் கவனமாய் இருந்தால், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறலாம். நெருங்கிய நணபர்களின் நடுவில் உரசலும், மோதலும் உண்டாகும் வாய்ப்பிருப்பதால், கலைஞர்கள் எந்தச் சூழலிலும் வரம்பு மீறாமல் பக்குவமாக நடந்து கொள்வது அவசியம். பொறுப்பில் உள்ளவர்கள் தாமதப்பட்ட காரியங்களை முடிப்பதற்குத் தகுந்த திட்டமிடுதல் நல்லது .
துலாம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு பழைய நட்புகளை மீண்டும் சந்தித்து மகிழும் வாய்ப்பு உருவாகும். பெற்றோர்கள் அவ்வப்பொழுது பிள்ளைகளின் போக்கைக் கவனித்து வருவது நல்லது. மாணவர்கள் புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். வேலை பார்க்கும் இடத்தில் மற்றவருடன் வாக்கு வாதங்களில் ஈடுபடாமலிருந்தால், கருத்து வேற்றுமைகள் தானே மறைந்து விடும். பெண்கள் ஆடம்பரச் செலவுகளைச் சுருக்கிக் கொண்டால், பணப்பற்றாக் குறையைச் சமாளித்து விட முடியும். பங்குதாரரிடையே சிறு சலசலப்பு தோன்றி மறையும். பெண்கள் சிலருக்கு வாக்கு கொடுத்துவிட்டு, சங்கடப்படுவதைத் தவிர்க்க எதிலும் நிதானமாகச் செயல்படுவது அவசியம்.
விருச்சிகம்: பெண்கள் தேவையான ஓய்வை எடுத்துக் கொண்டால், புதிய உற்சாகத்துடன் பணியில் ஈடுபட முடியும். முதியவர்கள் அவ்வப்போது கண்களைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் கோபதாபங்களால் உங்களை நாடி வரும் நல்ல நட்பைப் புறக்கணிக்காதீர்கள். வியாபாரிகளுக்கு முன்பிருந்த பொருளாதாரச் சுணக்கம் விலகி, சரளமாகப் பணம் புழங்கும். பணியில் உள்ளவர்கள் கடன் தவணை செலுத்துவதில் சிக்கல் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். வீடு, மனை வாங்க விரும்புபவர்கள் வில்லங்கம் இல்லாதவற்றைத் தேர்வு செய்வது நல்லது. பொதுச் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கௌரவமான பதவி தேடி வரும்.
தனுசு: கலைஞர்கள் திறமையுடன் செயல்பட்டு வந்தால், திறமைக்குரிய பாராட்டு கிடைக்கும். பெண்கள் அண்டை அயலாரிடம், அளவாகப் பழகி வந்தால், தொந்தரவுகள் அருகே வாராது. மாணவர்கள் உங்கள் அமைதி, கடும் வார்த்தைகளாலும், அவசர செயல்களாலும் பாதிப்படையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய காரியங்களைப் பட்டியலாக்கி வைத்துக் கொண்டால், மறதியால் வரும் சிக்கல்கள் அகலும். வியாபாரிகள் வருமானத்தை அதிகப்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உறவும், நட்பும் கை கொடுப்பதால், மகிழ்ச்சிக்குக் குறைவிராது. புதிய இடங்களுக்குச் செல்பவர்கள் உடைமைகளைப் பாதுகாப்பாக வைத்தால், பயணங்கள் இனிமையாக அமையும்.
மகரம்: பெண்கள் வீண் விரயத்திற்கு வழி கோலும் செலவுகளைச் சுருக்கிக் கொள்ளுங்கள். பணத் தட்டுப்பாடு என்பது இராது. கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் உடல்நலத்தைக் கவனிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டிய வாரமிது. சுய தொழில் புரிபவர்கள் எதிலும் அகலக் கால் வைக்காதிருப்பது நல்லது. அரசு வகையில் உள்ள அனுகூலமான போக்கால், வியாபாரிகளுக்கு இது வரை ஏற்பட்ட பொருள் விரயம், மனக் கஷ்டம் ஆகியவை தானே மறையும். வியாபார உயர்வுக்கு சக ஊழியர்கள் உறு துணையாக இருப்பர். தொல்லை கொடுத்த எதிரிகள் அடங்கிக் கிடப்பார்கள். இந்த வாரம் கரைந்த சேமிப்பை ஈடுகட்ட எடுக்கும் முயற்சியில் கலைஞர்கள் ஓரளவு வெற்றி காண்பார்கள்.
கும்பம்: வேலையில் இருந்து கொண்டே புதிய உத்தியோகத்திற்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்க்கும் அனுகூலத் தகவல் வந்து சேர்வதால் புதுத் தெம்புடன் திகழ்வார்கள். பொதுச்சேவையில் உள்ளவர்கள் மக்களிடையே பெயரும், புகழும் பெறுவார்கள். இந்த ராசிக் காரர்கள் புதிய வீடு மாற்றமோ அல்லது கட்டுவதற்கோ, சற்று யோசனைக்குப் பின் செயல்படுதல் அவசியம். மாணவர்களுக்குக் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் மிகவும் கருத்துடன் படிப்பில் ஈடுபடுவது அவசியம். வியாபாரிகள் வெளியூர்களுக்குச் சரக்குகளை அனுப்பும் போது கவனத்துடன் செயல்பட்டால் இழப்புகளைத் தவிர்க்கலாம்.
மீனம்: கலை சம்பந்தமான தொழில்களில் இருப்பவர்களுக்குச் சற்றுத் தேக்க நிலை இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், சூழ்நிலையை ஆராய்ந்தபின் செயலில் இறங்கினால், முன் வைத்த காலைப் பின் வைக்க வேண்டியிராது. முதியவர்கள் உடல் நலனை நல்ல விதமாகப் பராமரித்து வந்தால், மருந்துகளுக்குச் செலவு செய்வது குறையும். பணியில் இருப்பவர்கள் வீண் வம்பு விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருந்தால், வழக்கமான பணிகள் தொய்வில்லாமல் நடந்தேறும். நல்ல விதமாகத் தொழில் தொடங்க வேண்டும், அதில் முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்குத் தகுந்த நேரத்தில் உதவியும், வழிகாட்டுதலும் வந்து சேரும்.