திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-8)
விஜயகுமார்
ஜகார்தா -இந்தோனேசியா
தமிழனின் அசாத்திய நினைவாற்றலுக்கு இந்த நாடு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பேரழிவை ஏற்படுத்திய சுனாமியாலும் ஒபாமாவின் பூர்வீகத்தாலும் மட்டுமே இன்று நம்மில் பலருக்கும் இப்படி ஒரு நாடு உலக வரைபடத்தில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. எனினும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நாட்டுடன் நமது வணிகர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. அப்படியே பொன்னியின் செல்வன் படித்தவர்களுக்கு (குடந்தை ஜோதிடர் உபயம்) வானதியின் திருவயிறு உதிக்கும் மகன் ராஜேந்திர சோழன், பல பின்னாளில் தனது கடற்படை கொண்டு பல தீவுகளை வென்றான். அதில் கடாரம், ஸ்ரீவிஜயம் என்றெல்லாம் வரும் என்பது தெரிந்திருக்கக்கூடும். இது நடந்தது 11 ஆம் நூற்றாண்டு.
என்னடா இன்று வரலாற்றுப்பாடமா என்று யோசிக்க வேண்டாம். பயணக் கட்டுரை தான். சிங்கையில் இருந்து விமானம் எடுக்கும் போதே ஒரு பெருமிதம் – அந்தப் பெருமாளின் வாகனத்தில் அன்று பயணம். ஆம் இந்தோனேசியாவின் அரசு விமான நிறுவனம் – கருடா இந்தோனேசியா. சிறிய விமானம்தான், விமானத்தில் சாப்பிட சைவ உணவு என்றால் பன் மட்டுமே – இதைத் தவிர எல்லாமே நாசி இல்லை மீ (அதாவது அரிசி இல்லை நூடுல்ஸ்), அதனுடன் வறுத்த இகான் ஃபிஷ் (நம்ம ஊரு நெத்திலிக் கருவாடு!!). சூடான பன் நன்றாகவே இருந்தது. ஜாகார்த்தா இறங்கியவுடன் வினோத விமான நிலையம் வரவேற்றது. கேரளா ஸ்டைலில் டைல்ஸ் போட்ட சாய்வான கூரை கொண்ட விமான நிலையம்.
விசா ஆன் அரைவல் பெற நேரம் எடுக்கவில்லை – பத்து அமெரிக்க டாலர், பத்து நாள் விசா. கடவுச்சீட்டை எடுத்துக்கொண்டு ஒரு சிறு பயத்துடன்- புதிய இடம் என்றாலே ஒரு பயம் தான் – அதுவும் நமக்கு இமிக்ரேஷன் என்றாலே உதறல் – போனால் பெரிய லைன். எங்கும் ஒரே கிராம்பு வாசனை, சுற்றிப் பார்த்தால் அருகில் ஒருவர் தம் அடித்துக்கொண்டு இருந்தார், ஆனால் நம்ம ஊரு GFK மாதிரி வாசனை இல்லை, கண்டிப்பாகக் கிராம்பு வாசனைதான். மேலே ஒரு பெரிய விளம்பரப் பலகை – அதில் சம்பூர்ணா சிகரெட் விளம்பரம் – ஆம் கிராம்பு ப்லேவர் சிகரெட்தான் அந்த நாட்டின் சின்னம் போல. எங்கும் ஒரே புகை, கிராம்பு கலந்த சிகரெட் புகை. கம்ப்ளைன்ட் பண்ணலாம் என்று பார்த்தால், அங்கே மிலிடெரி ஆடையில் அமர்ந்திருந்த கடவுச்சீட்டைப் பரிசோதிக்கும் அதிகாரி கையிலும் சம்பூர்ணா !!
பொறுமையாக லைனில் நிற்கும்போது, ஒரு ஆள் அருகில் வந்து ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்து ‘VIP சர்வீஸ்பா’ என்றான். ஒன்னும் புரியவில்லை. இவன் எதுக்கு நம்மை அப்பா என்று அழைக்கிறான் என்று தலையை வேண்டாம் என்று ஆட்டினேன். அடுத்து ஒரு வெள்ளைக்காரனைப் பார்த்து மீண்டும் ஒரு சிரிப்புச் சிரித்தான். உடனே அவரும் சிரித்தார். அவரது கடவுச் சீட்டை வாங்கிக்கொண்டு சர் என்று லைனைக் குதித்து நேரே கூட்டிச் சென்றான்!! ஓஹோ, இது நம்ம ஏடு கொண்டல வாடா ஸ்பெஷல் தர்ஷன்! நாமெல்லாம் தர்ம தர்ஷன்!
ஒரு வழியாக வெளியே வந்தவுடன் ரூபாய் மாற்றினேன். ஆஹா, சம்பளம் என்றால் இங்கே தான் வாங்க வேண்டும். ஒரு அமெரிக்க டாலர் சுமார் பத்தாயிரம் ரூபாய். எல்லோருமே லட்சாதிபதி ஆக நல்ல முயற்சி. ஆபீஸுக்குப் போன் போட்டு ‘வெளியில் வந்து விட்டேன்’ என்றதும், ‘கார் அனுப்பி உள்ளோம், அதற்கு முன்னர் டாய்லெட் போய்விட்டு இருங்கள்’ என்றார்கள். இது என்னடா வினோதமான கோரிக்கையாக உள்ளதே என்று கேட்க, ஜகார்தாவில் பக்கத்து தெருவிற்குக் கூட காரில் போனால் மூச்சா போய் விட்டுத் தான் செல்ல வேண்டும் – ஒரே மாசத் என்றான். அது என்ன மாசத்? விடையாக ஒரு சிரிப்பு மட்டுமே வந்தது.
வெளியில் வந்தால் ஒரே அடை மழை. அறிவுரைக்காக டாய்லெட் சென்று விட்டு ஏறினேன். விமான நிலையம் விட்டு வெளியில் வந்து ஒரு பத்து நிமிடம் சுகமான பயணம். அகலமான ரோடு, எங்கும் டொயோட்டா கார்கள் – கார் என்றால் எல்லாம் செடான் இல்லை, எல்லாமே இன்னோவா மாடல். ஒரு காலத்தில் நம் நாட்டில் எங்கும் அம்பாசடார் மாதிரி ஒட்டு மொத்த ஜகார்தா இன்னோவா தான் – இங்கே அதற்க்கு கிஜாங் என்று பெயர் (இளம் மான்!!).
பத்து நிமிடப் பயணத்துக்கு பின்னர் மாசத்!! அது தாங்க டிராபிக் ஜாம். நல்ல மழை, எங்கோ ஒரு கால்வாய் உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விட்டதாம். பெரிதாக ஒன்றும் இல்லை ஒரு நான்கு மணி நேரத்துக்குப் பின்னர் ஒரு வழியாக ஆபீஸ் வந்து சேர்ந்தேன். நேராக டாய்லெட் எங்கே என்று கேட்டுக் கொண்டே ஓடினேன்!!! நல்ல அட்வைஸ் தான் போங்க!
ஆனால் இந்த நீர் புகுதல் இந்த நகரத்துக்கு ஒன்னும் புதிதல்ல. நீங்கள் பார்ப்பது பல்லவக் க்ரந்தம் – கல்வெட்டு.
ஆமா சார், சுமார் ஆயிரத்தி நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் கால்வாய் ஒன்றை அதி விரைவாக வெட்டியதற்குப் பரிசு பெற்ற குறிப்பு. சந்திரபாக ஆறு, பூர்ணவர்மன் என்ற அரசனின் இருபத்தி இரண்டாம் ஆட்சியாண்டில் – மழைக் காலத்தில் தண்ணீர் ஊருக்குள் வந்து சேதம் விளைவிக்காமல் தடுக்க இருபத்தியோரே நாட்களில் செய்த அருமையான பணியைப் போற்றும் வரிகள், தற்போது ஜகார்தாவின் நேஷனல் அருங்காட்சியத்தில் உள்ளது.
தொடரும்..
ஜகார்த்தா, கல்வெட்டுப் படங்களுக்கு நன்றி:http://en.wikipedia.org/wiki/Jakarta
கருடா இந்தோனேஷியா படத்திற்கு நன்றி: http://www.relax.com.sg/relax/news/1124908/Garuda_launch_Jakarta_Taipei_flights.html
.Very interesting. Smooth style.