இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………….. (9)
சக்தி சக்திதாசன்
முந்தைய மடலைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
ஒளவை மூதாட்டி அருளிய பொன்மொழி “கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்”. இங்கிலாந்தைப் பொறுத்தவரை இங்கு காலூன்றிய தமிழர்கள் தமது வாழ்வாதாரத்தை மட்டும் கவனித்து விட்டு வாளாவிருக்கவில்லை. தமது கலாச்சார விஷயங்களையும் தம்மோடும், தமது சந்ததியோடும் தக்க வைத்துக் கொள்ளத் தேவையான வழிமுறைகளைத் தேடிவைத்துள்ளார்கள்.
1974/75 களில் நான் முதன் முதலில் லண்டனில் கால் வைத்த பொழுதை எண்ணிப் பார்க்கிறேன். இன்றைக்கு வாழும் தொகையில் எமது புலம்பெயர் தமிழர்கள் அந்நாட்களில் வாழ்ந்திருக்கவில்லை.
வாழ்ந்து கொண்டிருந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் மாணவர்களாக லண்டனில் காலடி வைத்தவர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தமது கால்களை ஸ்திரப்படுத்திக் கொண்டிருந்தவர்களே பெரும்பான்மையாக இருந்தார்கள். மாணவர்களாக இருந்து, பின்னர் இங்கிலாந்திலேயே தமது வாழ்க்கையைத் தொடர்ந்தவர்கள் கூட பொருளாதார நிலையில் கொஞ்சம் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களே.
அத்தகைய சூழலில் நான் முதன் முதலில் பார்த்த வழிபாட்டுத்தலம் ஒரு சிறிய மண்டபமே! விம்பிள்டன் என்னும் இடத்தில் உள்ள ஸ்பென்ஸர் ஹால் எனும் ஒரு சிறிய மண்டபத்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் வாடகைக்கு எடுத்துக் கொள்வார்கள். அப்போது இலண்டன் தமிழ்ச்சமூகத்தின் தலைவர்களில் ஒருவராகவிருந்த ஈழத்தமிழரும், “லண்டன்முரசு” எனும் முதல் தமிழ்ப்பத்திரிகையின் ஸ்தாபகருமான வழக்கறிஞர் திரு.இரத்தினசபாபதி என்பவர் ஒரு முருகன் விக்ரகத்தை இந்தியாவில் இருந்து தருவித்து அதற்கு பூஜை பண்ணுவார்.அண்மையிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் கலந்து கொள்வார்கள்.
அப்போது ஆரம்பிக்கப்பட்டதே “பிரித்தானிய இந்துக்கள் சங்கம்”.
ஆனால் இன்றோ நிலைமை வேறு! இங்கிலாந்தில் புலம்பெயர் தமிழர்கள் செறிந்துவாழும் ஒவ்வொரு ஊரிலும் இந்துக்கோவில்கள் காணப்படுகின்றன. விநாயகர்,முருகன்,சிவன்,மஹாலஷ்மி என அனைத்து கடவுள் ஆலயங்களும் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி ஒவ்வொரு ஆலயத்திலும் வருடாந்திர உற்சவங்கள் நடைபெறுகின்றன. இவ்வருடாந்திர உற்சவத்தின் பகுதியாக தேரில் சுவாமி பவனி வரும் ரதோற்சவப் பண்டிகையும் இடம்பெறுகின்றது.
அவ்வரிசையில் நான் வசிக்கும் கென்லி பகுதிககு அண்மையில் உள்ள குறைடன் சிவஸ்கந்தகிரி முருகன் ஆலய தேர் உற்சவம் கடந்த ஞாயிறு 27.05.2012 அன்று காலை நடைபெற்றது.
எமது இடத்திற்கு அண்மையிலுள்ள விநாயகர் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்திருந்தாலும் முருகன் கோவில் தேர்த்திருவிழாவில் நான் கலந்து கொண்டது இதுவே முதற்தடவையாகும்.
கந்தனின் தேர் உற்சவ ஆரம்பம் காலை 09.30க்கு என்று அறிவிக்கப் பட்டிருந்தது. இருப்பினும் சில காரணங்களினால் நானும் எனது மனைவியும் காலை 10.15க்கே ஆலயத்திற்குச் செல்ல முடிந்தது. தேர் தனது பவனியை ஆரம்பித்து விட்டிருந்தது. ஆலயத்தின் அருகே நின்றிருந்த சிலரிடம் விபரங்களைக் கேட்டறிந்து நண்பர் ஒருவரைப் பின்தொடர்ந்து அத்தேர் செல்லும் பாதையில் அத்தேர்பவனியில் இணைந்து கொள்வதற்காக குறுக்கு வழி ஒன்றில் சென்று அத்தேரை அது வலம் வந்து கொண்டிருந்த தெரு ஒன்றில் சந்தித்து இணைந்து கொண்டோம்.
நம் ஊரில் உள்ள வழக்கத்திற்கு மாறாக, அத்தேரை இழுத்து வந்தவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாகவே இருந்தார்கள்.
அர்ச்சகர்கள் இருவர் தேரில் உட்கார்ந்திருக்க, முருகன் கம்பீரமாக தேரில் பவனி வந்து கொண்டிருந்தார். அத்தேரிற்கு முன்பாக ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட கார் ஒன்று முருகனின் பெருமைகளை ஒலிக்கும் இனிமையான பக்திப் பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது. அத்தேர் பவனியை நெறிப்படுத்தும் வகையில் நாதஸ்வரமும், மேளமும் இசைத்துக் கொண்டு நாதஸ்வரக் குழுவினர் முன்னே நடந்து கொண்டிருந்தார்கள்.
லண்டன் தெருக்களிலே இருக்கும் வாகன நெருக்கத்தைப் பர்றி வாசகர்கள் அறிந்திருப்பீர்கள் அத்தகையதொரு தெருவினிலே ஒரு இந்துக் கோவிலின் தேர் பவனியை நடத்துவதற்கு, குறைடன் நகரக் கவுன்சில் தனது பூரண ஒத்துழைப்பை நல்கியது, இங்கிலாந்தின் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் பாங்கிற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது.
போலீசார் தமது பூரண ஒத்துழைப்பை நல்கி, அத்தேர் செல்லும் தெருக்களில் அத்தேர் அவ்விடத்தை விட்டு அகலும் வரை வாகனங்களை நிறுத்தி மக்களுக்கு பாதுகாப்பை நல்கிக் கொண்டிருந்தது மனதை நிறைக்கும் காட்சியாக அமைந்தது.
அத்தேர் பவனி வரும் வழியில் வசித்திருக்கும் புலம்பெயர் தமிழர்களில் பலர், தமது வீட்டு வாயிலில் காத்திருந்து, அத்தேர் வழிபாட்டிற்குரிய பொருட்களை வைத்து வழிபட்டனர். அது மட்டுமின்றி அத்தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குளிர்பானங்கள், மற்றும் சுண்டல், அவல் போன்ற உணவுப் பொட்டலங்களையும் வழங்கினர்.
பல தொண்டர்கள், வரும் பக்தர் கூட்டத்தை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்து வழிநடத்திக் கொண்டிருந்தனர். இத்தேர் உற்சவத்தில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டிருந்தார்கள்.
ஆங்காங்கே வெள்ளையர்களும், மேற்று இனத்தவரும் மிகவும் ஆச்சரியமாக இவ்வூர்வலத்தைப் பார்த்து தமது கையடக்கத் தொலைபேசியிலும், புகைப்படக் கருவிகளிலும் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
கந்தன் கருணையால் வானம் வெளுத்து ஆதவன் தனது கதிர்களை அள்ளி வீசி அதை ஒரு அழகிய நாளாக்கி விட்டிருந்தான்.
சுமார் மூன்று மைல் ரதோற்சவத்தை முடித்து முருகன் தனது ஆலயவாசலை அடையும் பொழுது மணி பகல் 12:30.
நாம் எமது பிறந்தநாடுகளை விட்டு எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கப்பால் புலம் பெயர்ந்திருந்தும், மன அமைதியை நல்கும் ஆலய தரிசனத்தின் அடிப்படையைக் கைவிடாதிருப்பது எமது எதிர்காலச் சந்ததியின் கலாச்சாரத் தொடர்புகளை வலுப்படுத்தும் ஒரு செய்கையென்பதை எண்ணும்போது உள்ளத்தில் ஒருவகைத் தெம்பு ஏற்படத்தான் செய்கிறது.
மீண்டும் அடுத்த மடலுடன்…
சக்தி சக்திதாசன்
லண்டன்
வல்லமையில் வெளி வரும் தங்களுடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து ரசிப்பவன் நான். அன்னிய தேசமொன்றில் வாழ்ந்து வரும் தாங்கள், அந்த அனுபவங்களை சரியான முறையில் பதிவு செய்கிறீர்கள்.
பிற நாடுகளை தன் வசம் கொண்டுவந்து அம்மக்களை அடிமைப் படுத்தி லோலோச்சிய ஒரு தேசம்(இங்கிலாந்து), தற்போது எல்லா நாட்டு மக்களையும் தன்னகத்தே அரவணைத்து எல்லா உரிமைகளையும் தருவது எங்ஙனம் \நிகழ்கிறது?இங்கிலாந்து நாட்டில் வெகு காலமாக தங்கியிருக்கும் தாங்கள், அன்னாட்டுப் பிரஜைகளுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பினையும் பெற்றிருப்பீர்கள். அன்னாட்டு மக்களின் மனோ நிலை எப்படி இருந்தது, நீங்கள் அங்கு சென்ற ஆரம்ப நாட்களில், இப்போது எவ்வளவு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?
இவற்றைப் பற்றி, ஒரு கட்டுரை அல்லது தொடர் தருவீர்களா? அறிய மிக்க ஆவலாய் உள்ளேன்.
அன்பினிய தம்பி இளங்கோ,
உங்கள் ஆர்வத்திற்கும், ஆதரவிற்கும் எனது அன்பான நன்றிகள். இன்றைக்குச் சுமார் 37 வருடங்களாக நான் லண்டனில் வாழ்ந்து வருகிறேன் நீங்கள் குறிப்பிடது போல் காலமாற்றத்தை அவதானித்து அதன் பதிவுகளெதிர்காலத்திற்கு ஒரு கண்ணாடியாக இருக்கக் கூடும் எனும் அவாவே எனது இந்தத் தொடர். உங்களின் வேண்டுகோளின்படி நிச்சயம் உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்ய என்னால் முடிந்தவரை முயல்கிறேன். எனக்கும் ஒரு தளம் அமைத்துக் கொடுத்த வல்லமையினருக்கும் எனது அன்பான நன்றிகள்.
அன்புடன்
சக்தி