காடு வா.. வா… என்றது! [மீண்டும் அழைத்தது மத்தியப் பிரதேசம் – பகுதி 8]
வெங்கட் நாகராஜ்
என்ன நண்பர்களே பாந்தவ்கர் விலங்குகள் பூங்கா செல்ல தயாராயிட்டீங்களா? நாங்களும் காலையிலே எழுந்து குளித்து, காலை உணவு உண்டு எங்களுக்கான பேருந்தில் அமர்ந்து விட்டோம். ஜபல்பூரிலிருந்து பாந்தவ்கர் செல்லும் தூரம் சற்றே அதிகம் தான். அதாவது 190 கிலோ மீட்டர். தில்லியிலிருந்து நேராக இங்கே செல்வதென்றால் ”கட்னி” என்ற ரயில் நிலையத்தில் இறங்கினால், அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவு தான்.
வழி நெடுக ஊர்களே இல்லாத வெறும் பொட்டல் காடுகள். மொத்தப் பயணத்தில் வந்த கிராமங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பேருந்தில் ஜன்னலோரத்தில் அமர்ந்து விதவிதமான மனிதர்களைப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் இருந்தால் அது நிறைவேறாது. பாதையும் அவ்வளவு நன்றாக இல்லை. காரணம், பல இடங்களில் பாதை வனங்களுக்கு நடுவே செல்வதால் அவைகளை நல்ல பாதையாக மாற்ற வன இலாகா அனுமதி தருவதில்லை.
வெளியே பார்க்க ஒன்றும் இல்லாத காரணத்தினால், பேருந்து உள்ளேயே ஒலிவாங்கி மூலம் நகைச்சுவை துணுக்குகள் சொல்லியும், பாடல்களை பாடியும் பொழுது போக்கிவிட்டு சுமார் ஐந்து மணி நேரம் பயணம் செய்து மதியம் ஒரு மணிக்கு பாந்தவ்கர் சென்றடைந்தோம்.நேராக நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ”White Tiger Forest Lodge” சென்று அறைகளில் பொருட்களை வைத்து விட்டு மதிய உணவு உண்டோம்.
பாந்தவ்கர் விலங்குகள் பூங்கா 450 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. நான்கு பகுதிகளாகப் பிரித்து திறந்த ஜீப்பில் சுற்றுலாப் பயணிகளை அங்கு அழைத்துச்செல்கிறார்கள். நாளொன்றுக்கு இரண்டு முறை பயணம் – காலை 06.30 – லிருந்து 10.30 வரை ஒரு முறையும், மதியம் 02.15 லிருந்து மாலை 05.15 வரை ஒரு முறையும் காட்டுக்குள் செல்ல அனுமதி தருகிறார்கள்.
நாங்கள் சென்ற அன்று, முதலில் மதிய நேர வனப் பயணம் சென்றோம். ஒரு வாகனத்திற்கு ஆறு சுற்றுலா பயணிகள், கூடவே ஒரு வன இலாகா அதிகாரி மற்றும் ஓட்டுனர் நம்முடன் வருகிறார்கள். நாங்கள் நிறைய பேர் இருந்ததால் ஆறு வாகனங்களில் பயணம் செய்தோம். மொத்தம் மூன்று மணி நேரம் வனப் பயணத்தில் சர்வ சாதாரணமாக பாதை ஓரத்தில் அமர்ந்திருந்த எண்ணிலடங்கா மான்களை கண்டு ரசிக்க முடிந்தது. நிறைய பறவைகளையும் அவைகள் எழுப்பிய ஓசைகளை கண்டும் கேட்டும் காடு முழுக்க நிரம்பியிருக்கும் பல வித மரங்களையும் ரசித்தபடியும் பயணித்தோம்.
வன அதிகாரி பயணிகள் அனைவரும் பேசாமல் இருந்தால் தான் விலங்குகளைப் பார்க்க முடியும் என்று அடிக்கடி பேசினார். ஆங்காங்கே நிறுத்தி மான் கூட்டங்களைக் காண்பித்தும் அவற்றின் பழக்க வழக்கங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டே வந்தார். மான்களின் உயிர் நண்பன் யார் தெரியுமா? குரங்குகளாம்! மான்களின் எதிரிகளான புலிகள் வரும்போது உயரமான மரத்தில் அமர்ந்திருக்கும் குரங்குகள் எழுப்பும் சத்தத்தில் மான்கள் தங்களுக்கு ஆபத்து நெருங்குவதைத் தெரிந்து கொண்டு ஓட ஆரம்பிக்கும் எனவும், காட்டிக்கொடுத்து விடுவதால் புலிகளுக்கு குரங்குகள் தான் எதிரி என்றார்.
பாதையை மிகவும் கவனமாகப் பார்த்தபடியே வந்து கொண்டிருந்தவர் ஒரிடத்தில் திடீரென வண்டியை நிறுத்தச் சொன்னார். மண் பாதை ஓரத்தில் நிறைய காலடித் தடங்கள்… யாருடைய தடங்கள் என கூர்ந்து கவனித்து, பிறகு சொன்னார், “இவை புலிகளுடைய காலடித் தடங்கள். இப்போதுதான் புலிகள் இவ்வழியாகச் சென்றிருக்க வேண்டும்”! அடடா… புலிகளுக்கு எங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே!
இந்த பாந்தவ்கர் காடுகள் உள்ளே ஒரு பெரிய கோட்டையும் இருக்கிறது. ரேவா நகரத்தின் மன்னர்கள் ஆண்ட கோட்டை இது. வ்யாக்ரா தேவ் என்ற வகேலா [குஜராத்] அரசனின் புதல்வன் ராஜா கரன் தேவ் அவர்களுக்கு கல்யாண சீதனமாக வந்த கோட்டை இது. ரத்தன்பூர் ராஜாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டபோது ராஜா கரன் தேவ் அவர்களுக்கு இந்தக் கோட்டையை சீதனமாகக் கொடுத்தார்களாம். பிறகு கோட்டை முகலாயர்கள் வசம் வந்தது.
காட்டுக்குள்ளே இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஒரே பதிவில் அவைகளை சொல்ல நினைத்தால் நன்றாக இருக்காது. அதனால் சில பகுதிகளாக பிரித்து படிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.