நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் கார்ப்பரேட்டுகள் செய்யும் வியாபார மோசடிகள் அநேகம். நான் பல தனியார் சங்கிலித் தொடர் டிபார்ட்மெண்ட் கடைகளில் வேலைபார்த்திருக்கிறேன். அவர்கள் வாடிக்கையாளர்களைப் பல விதமாக ஏமாற்றுவார்கள். ஒரு நாளைக்கு ஒரு விலை, ஒரு நேரத்திற்கு ஒரு விலை என்று வாடிக்கையாளர்களைக் குழப்பி அடிப்பார்கள். நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் கிறிஸ்துமஸிற்கும் இடையில் பல விதமான விலைக் குறைப்புகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கிறிஸ்துமச் பண்டிகைக்குப் பரிசுப் பொருள்கள் வாங்குவதைப் பற்றியே சிந்திக்க வைப்பார்கள்.

லாபம் கொஞ்சம் குறைந்தாலும் உடனேயே ஆட்குறைப்புச் செய்வார்கள். அமெரிக்காவில் அரசுநிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழகத்தில் நிலையான பதவி பெற்றவர்கள் ஆகியோரைத் தவிர யாருக்கும் எந்த நேரத்திலும் வேலை போய்விடலாம். அதனால் எல்லோருக்கும் எப்போதும் ஒரு பதற்றம் இருக்கிறது. இதனாலேயே பலரின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது என்கிறார்கள். இப்போது அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் எட்டரை சதவிகிதமாக இருக்கிறது. கிடைத்த வேலையைப் பெற்றோர்கள் எடுத்துக்கொள்வதால் இரவெல்லாம் கூட சில தாய்மார்கள் வேலைபார்க்கிறார்களாம். அதனால் குழந்தைகள் காப்பகங்கள் இரவில் கூட செயல்பட வேண்டியிருப்பதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளிவந்திருக்கிறது. இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

ஆனால் அமெரிக்க முதலாளித்துவப் பொருளாதாரத்தில் இவை பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை. பேச்சுரிமை போன்ற பல உரிமைகள் அமெரிக்காவில் இருப்பதாகக் கருதப்பட்டாலும் தீவிர இடதுசாரிக் கொள்கைகளை இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆயிரத்துத் தொளாயிரத்து இருபதுகளில் அமெரிக்காவில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒன்றை இருந்த இடம் தெரியாமல் அழித்துவிட்டார்கள். கம்யூனிஸம் என்றால் அமெரிக்கர்களுக்கு வேப்பங்காய். சிறு வயதிலேயே முதலாளித்துவ பொருளாதாரத்தின் பெருமையை குழந்தைகளின் மனதில் நன்றாக ஊறவைத்துவிடுகிறார்கள். அதனால் பல அமெரிக்கர்கள் அந்தப் போக்கிலேயே சிந்தனை செய்கிறார்கள். சுதந்திரம், சுதந்திரம் என்று ஆலாய்ப் பறக்கும் அமெரிக்கர்களுக்கு சிந்தனைச் சுதந்திரம் இருப்பதாகத் தெரியவில்லை.

முதலாளித்துவம் மனிதர்களிடம் இருக்கும் பல வெறித்தனமான குணங்களை வெளியே கொண்டுவரும் என்பார்கள். அதிலும் அமெரிக்க முதலாளித்துவத்திற்கு இந்தக் குணம் நிறையவே உண்டு. கார்ப்பரேட்டுகள் நிறைந்த அமெரிக்காவில் மக்களால், மக்களுக்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தும் ஜனநாயகம் என்ற பெயரில் இப்போது நடப்பது கார்ப்பரேட்டுகளுக்காக கார்ப்பரேட்டுகளால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நடத்தும் கார்ப்பரேட் ஆட்சியே .(Corporatocracy) என்று சொல்லலாம். இந்த கார்ப்பரேட்டுகள் தங்கள் பணப் பைகளை நிரப்புவதிலேயே குறியாக இருக்கின்றன.

எந்தச் சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்குச் சென்றாலும் – கடைகளானாலும் சரி, மற்ற வகை நிறுவனங்களானாலும்சரி – பணம் பண்ணுங்கள் என்ற மந்திரம்தான் பிரதானமாக ஒலிக்கும். சங்கிலித் தொடர் டிபார்ட்மெண்ட் கடைகளில் தினமும் கடை ஆரம்பிக்கும் முன் ஊழியர்களுக்கு கூட்டம் நடத்துவார்கள். அதில் எப்படி அந்த நாளன்று பணம் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்று யோசனை சொல்வார்கள். எப்போதுமே இம்மாதிரிக் கடைகளில் கடன் அட்டை விற்க வேண்டும் என்று வற்புறுத்துவார்கள். அப்படி விற்பவர்களுக்கு தனியாகச் சன்மானம் உண்டு. அவ்வப்போது விற்பனை அதிகமாக நடக்காது என்று எதிர்பார்க்கும் நாட்களில் வழக்கத்தை விட அதிகமாகச் சலுகை இருக்கும். மற்ற நாட்களில் விற்கும் ஒவ்வொரு கடன் அட்டைக்கும் இரண்டு டாலர் என்றால் இம்மாதிரியான நாட்களில் அதற்கு அதிகமாக இருக்கும். எப்போதுமே வாடிக்கையாளர்களை கடன் அட்டை வாங்கவைப்பதற்கு ஏமாற்ற வேண்டியிருக்கும். இம்மாதிரி சமயங்களில் இன்னும் அதிகமாக ஏமாற்ற வேண்டியிருக்கும். இப்படிச் செய்வது சரியா தவறா என்றெல்லாம் விற்பனையாளர்களை யோசிக்கவிட மாட்டார்கள். அதிகப் பணம் என்னும் ஆசையைக் காட்டி விற்கத் தூண்டுவார்கள்.

ஒவ்வொரு கடன் அட்டை விற்கும்போதும் அதை வைத்துச் சாமான்கள் வாங்கினால் எப்போது அவற்றிற்குரிய பணத்தைக் கட்ட வேண்டியிருக்கும், கட்டத் தவறினால் எவ்வளவு வட்டி வசூலிப்பார்கள் என்பது பற்றியெல்லாம் வாடிக்கையாளர்களுக்கு விளக்க வேண்டும். இதற்குச் சட்டமே இருக்கிறது. ஆனால் கடைகளும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை; விற்பனையாளர்களும் சிந்திப்பதில்லை. பல சமயங்களில் கடன் அட்டை மூலம் சாமான்கள் வாங்கினால் கொஞ்சம் விலை குறைவாக இருக்கும். இந்தச் சலுகையைக் காட்டியே வாடிக்கையாளர்களை சாமான்கள் வாங்க வைத்துவிடுவார்கள். கடையைப் பொறுத்தவரை எப்படியாவது சாமான்கள் விற்றால் சரி; விற்பனையாளர்களைப் பொறுத்தவரை சம்பளத்தோடு கூடக் கொஞ்சம் பணம் வந்தால் சரி.

கடன் அட்டை விற்பனை மூலம் வருமானத்தைக் கூட்டிக்கொள்வது ஒரு வகை. கடையில் அப்போது ஸ்டாக்கில் இல்லாத சாமான்களை இன்டெர்நெட் மூலம் ஆர்டர் செய்து சாமான்களை வாடிக்கையாளர்கள் வாங்கிக்கொள்ளலாம். அதற்குக் கடையிலேயே இருக்கும் கணினிகளை உபயோகிக்கலாம். எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கணினியை உபயோகிக்கத் தெரியாது. கடையில் இருக்கும் விற்பனையாளர்கள் கணினி மூலம் ஆர்டர் செய்ய வாடிக்கையாளர்களுக்கு உதவினால் அதற்கு அந்தப் பொருளின் விலையில் ஒரு சதவிகிதம் கமிஷன் விற்பனையாளர்களுக்கு உண்டு.

இப்படிப் பணம் பண்ணுவதற்கும் தங்கள் கடைகளின் வருமானத்தைக் கூட்டுவதற்கும் வழி சொல்லிக் கொடுக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைச் சரியாக நடத்துவதில்லை. எத்தனை மணி நேரம் வேலை பார்க்கிறோமோ அத்தனை மணி நேரம் கால்கடுக்க நிற்க வைப்பார்கள். கடை முழுக்க உட்காருவதற்கு ஒரு இடம் கூட இருக்காது. வாடிக்கையாளர்கள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். மெத்தைகள் விற்கும் பகுதியில் கூட – அத்தனை மெத்தைகள் இருக்கும் இடம் – விற்பனையாளர்கள் உட்காரக் கூடாது. சில கடைகளில் விற்பனையாளர்களே சாமான்களை ஸ்டாக் ரூமிலிருந்து கொண்டுவந்து அவற்றிற்குரிய இடங்களில் நேர்த்தியாக அடுக்கி வைப்பார்கள். சில கடைகளில் அந்த வேலைக்கென்று தனியாக ஆட்கள் இருப்பார்கள். அவர்களும் வேலையின் நடுவே உட்காரக் கூடாது. ஒரு அலுவலர் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் வேலைபார்த்தால் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு உணவு இடைவேளை இருக்கும். அது அரை மணி நேரமாகவோ அல்லது ஒரு மணி நேரமாகவோ இருக்கும். அந்த நேரத்திற்குச் சம்பளம் கிடையாது. உணவு இடைவேளைக்குச் செல்லுமுன் கணினியில் குறித்துவிட்டுச் செல்ல வேண்டும். இடைவேளை முடிந்து வந்த பின் மறுபடி கணினியில் குறிக்க வேண்டும். அதன் பிறகு இருக்கும் நான்கு மணி நேரத்தில் இரண்டு மணி நேரம் ஆனதும் கால் மணி நேர விடுப்பு உண்டு. இந்த விடுப்பிற்கு கணினியில் நேரம் குறிப்பிடத் தேவையில்லை. காலையில் வேலைக்கு வந்ததும் கணினியில் நேரத்தைக் குறிப்பிட வேண்டும். பின் வேலை முடிந்து போகும்போதும் கணினியில் குறிப்பிட வேண்டும். அடிக்கடித் தாமதமாக வந்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள். நாங்கள் வருடம் ஒரு முறை இந்தியாவிற்கு வந்துவிட்டு இரண்டு, மூன்று மாதங்களில் திரும்பினால் மறுபடி வேலையில் சேருவது கடினம்.

ஓய்வூதியத் தொகை பெறுவதற்கு வேண்டிய அளவு சம்பாதித்துவிட்டதால் இனி வருடத்தில் சில மாதங்களே வேலை பார்க்கக்கூடிய ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். இது வருமானவரி தயாரிக்கும் கம்பெனி. ஜனவரி முதல் ஏப்ரல் பாதி வரை இங்கு தற்காலிக ஊழியராக வேலைபார்க்கலாம். ஒவ்வொரு பிரஜையும் தங்கள் வருமானவரியைத் தயாரித்து மத்திய அரசின் வருமானவரித் துறைக்கு இந்தக் காலக் கட்டத்திற்குள் அனுப்பவேண்டும்.

பலருக்கு வருமானவரித் துறையைக் கண்டு பயம். எதற்கு வம்பு என்று இந்த மாதிரி வருமானவரியைத் தயாரித்துக் கொடுக்கும் கம்பெனிகளை நாடுவார்கள். இந்தக் கம்பெனிகள் ஏழை மக்களிடமிருந்து எக்கச் சக்கமாகக் கட்டணம் வசூலித்துக்கொள்வார்கள். இந்தக் கம்பெனிகள் வருமானவரி தயாரிக்கப் பயிற்சி கொடுப்பதாகவும், அந்தப் பயிற்சிக்கு 300 டாலர் கட்டணம் என்றும், பயிற்சியின் கடைசியில் வைக்கும் தேர்வில் எண்பது சதவிகிதம் மதிப்பெண்கள் வாங்குபவர்களுக்கு மூன்றரை மாதங்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாகவும் விளம்பரப்படுத்துவார்கள். பயிற்சியை ஆரம்பித்த பிறகு அந்தப் பயிற்சியைத் தொடர முடியாதவர்கள் விட்டுவிடலாம் என்றும் எத்தனை நாட்கள் பயிற்சியில் கலந்துகொண்டார்களோ அத்தனை நாட்களுக்கு கட்டணத்தில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு மீதிப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் விளம்பரத்தில் அறிவித்திருப்பார்கள்.

இந்தப் பயிற்சியில் நானும் சேர்ந்து தேவையான மதிப்பெண்கள் பெற்று வேலையும் கிடைத்தது. வேலையில் சேர்ந்த பிறகுதான் தெரிந்தது அவர்கள் கொடுத்த பயிற்சி போதுமானதல்ல என்பது. அது கூடப் பரவாயில்லை. வருமானவரி தயாரிக்க ஆட்களையும் நாமே கூட்டிவர வேண்டும் என்ற நிபந்தனையும் இருந்தது. மத்திய அரசோடு மாநில அரசும் தன் பங்கிற்கு மாநில வரியை வாங்கிக்கொள்ளும். ஒவ்வொரு மாநிலமும் தனிதனியாக வரிவிதிப்பு விதிகளை வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தக் கம்பெனி நாடு முழுவதும் கிளைகள் வைத்துக்கொண்டிருந்தாலும் மாநிலங்களின் வரிவிதிப்பு விதிகள் வேறு வேறாக இருக்குமாதலால் ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலத்திற்குச் சென்று வேலைபார்த்தால் அந்த மாநில விதிகளைப் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசும் ஒவ்வொரு வருடமும் வருமானவரியில் சில மாற்றங்களைக் கொண்டுவரும். இரண்டு வருடங்கள் நியு ஹேம்ஷையர் என்னும் மாநிலத்தில் வேலைபார்த்த நான் இல்லினாய் என்னும் மாநிலத்திற்கு நாங்கள் இடம்பெயர்ந்ததால் இல்லினாய் மாநில வரிவிதிப்பு விதிகளப் படிக்க வேண்டியதாயிற்று.

நான் வேலைபார்க்கும் அலுவலகம் வீட்டிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இருந்தது. இதே கம்பெனியின் இன்னொரு அலுவலகம் நாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு மிகவும் அருகில் இருந்ததால் அந்த அலுவலகத்தில் போய் புதிதாகச் சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்று அங்கு போய் அந்த அலுவலக மேனேஜரிடம் சம்மதம் கேட்டேன். ஒரே கம்பெனியின் கிளைகள்தான் இரண்டும் என்றாலும் இந்தக் கிளைகளுக்குள் பலத்த போட்டி இருக்கும். குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களுக்கு வருமானவரி தயாரிக்கவில்லை என்றால் இந்த மேனேஜர்களுக்கு வேலையே போய்விடும். அதனால் அவர்கள் எப்போதும் பரபரப்பாக இருப்பார்கள்.

நான் வெறும் பயிற்சிக்காகப் போயிருந்ததால் தடை ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு நான் வேலைபார்த்த இடத்திலிருந்து பயிற்சிக்காகக் கூட இன்னொரு இடத்திற்குப் போனது பிடிக்கவில்லை. ஆனால் வர வேண்டாம் என்று சொல்லவும் முடியவில்லை. “இங்கு இப்போது வேலைபார்ப்பவர்கள் எல்லோரும் பணம் சம்பாதிக்க வந்திருப்பவர்கள். நீங்கள் யாரிடமும் உதவி எதுவும் கேட்க முடியாது” என்றார். மேலும் வியாழக்கிழமை காலையில் மட்டும் வேண்டுமானால் வரலாம் என்றார்.

அதன் பிறகு ஒரு நாள் எங்கள் அலுவலகத்தில் எனக்காக வேலைக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தில் வேலைபார்க்கச் சென்றபோது எங்கள் மேனேஜரிடம் “நான் இந்த ஊருக்கு இப்போதுதான் வந்திருக்கிறேன். என்னால் நிறைய வாடிக்கையாளர்களைக் கூட்டி வர முடியாது. அதனால் தன்னார்வத் தொண்டு செய்யும் நிறுவனங்களுக்குப் (volunteering agencies) போய் வருமானவரி தயாரிக்கும் வேலையை இலவசமாகச் செய்யலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினேன். நான் இப்படிக் கூறியது எப்படியோ நான் பயிற்சிக்காகச் செல்லும் அலுவலக மேனேஜருக்குத் தெரிந்துவிட்டது போலும். நான் அடுத்த முறை அங்கு சென்றபோது “நீங்கள் தன்னார்வத் தொண்டில் ஈடுபடப் போவதால் பயிற்சிக்காக இங்கு வர வேண்டாம்” என்று கூறிவிட்டார்.

அமெரிக்காவில் தன்னார்வத் தொண்டு மிகவும் போற்றப்படுகிறது. நிறைய தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. பெரும் பணக்காரர்கள் பலர் இந்த நிறுவனங்களுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களுக்கு வாரிவழங்குகிறார்கள். உள்நாட்டில் பணக்காரர்கள் தானதருமங்கள் செய்தால் அதற்கு வரிவிலக்கு உண்டு. இந்த வருடம் வரிவிலக்குப் பெறாவிட்டால் அடுத்த வருடம் கூட வருமானவரி விலக்கில் சேர்த்துக்கொள்ளலாம். இந்தப் பெரும் பணக்காரர்கள் தாங்கள் கொடையாகப் பணத்தை வாரி வாரி வழங்கினாலும் தங்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்போர்களை நன்றாக நடத்துவதில்லை. ஆண்ட்ரூ கார்னிகி மிலன் என்னும் பெரிய பணக்காரர் தனது முப்பதாவது வயதிலேயே பெரும் பணம் சேர்த்துவிட்டார். தன் சொத்தில் பாதிக்கு மேல் தர்ம காரியங்களுக்குச் செலவிட்டார். ஆனால் இவருடைய இரும்பாலைகளில் வேலைபார்த்தவர்களைச் சரியாக நடத்தவில்லை; ஒரு முறை தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது நண்பர் ஒருவரிடம் வேலைநிறுத்தத்தை கையாளும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வெளிநாடு சென்றுவிட்டார். அவருடைய நண்பர் அந்த வேலைநிறுத்தத்தை அப்படியே அடக்கிவிட்டார். இத்தனைக்கும் கார்னிகி தன் சிறு வயதில் தொழிற்சாலையில் உழைத்து முன்னுக்கு வந்தவர்.

அமெரிக்காவில் எல்லா தொழில்நிறுவனச் சொந்தக்காரர்களும் இப்படித்தான். தங்கள் தொழிலாளர்களுக்காக ஊதியத்தை உயர்த்துவதில்லை; அரசு விதித்திருக்கும் குறைந்த பட்ச சம்பளத்தை மாத்திரம் கொடுப்பார்கள்; சலுகைகள் எதுவும் கொடுப்பதில்லை. தங்கள் லாபத்தில் பங்கு கொடுப்பதில்லை. அமெரிக்காவில் வேலையில் சேரும்போதே தொழிற்சங்கங்கள் அமைப்பதில்லை என்று வாக்குறுதி கொடுக்கவேண்டும். தங்கள் ஊழியர்கள் நன்றாக உழைத்துத் தங்களுக்கு நிறைய லாபம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும். அந்தப் பணத்தை வைத்துத் தான தர்மம் செய்வது அவர்களுடைய உரிமை.

இப்படிக் கம்பெனிகள் நடந்துகொள்வதால்தான் நான் தன்னார்வத் தொண்டு செய்வதாகக் கூறியதும் தங்கள் லாபத்தைக் குறைக்கும் எந்தக் காரியத்தையும் யாரும் செய்யக் கூடாது என்று நினைத்து கம்பெனியின் எந்தப் பயிற்சியின் பலனையும் நான் அடையக் கூடாது என்றார்கள். என்னைப் போல் பலர் தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்தால் இவர்களுடைய தொழிலில் தளர்ச்சி ஏற்பட்டு அதனால் லாபத்தின் அளவு குறையலாம். அதனால்தான் தன்னார்வத் தொண்டை தங்களுக்கு எதிரான செயலாகக் கருதுகிறார்கள்.

 

படங்களுக்கு நன்றி:

http://en.wikipedia.org/wiki/Chain_store

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தொண்டு செய்தால் வேலை இல்லை!

  1. இதன் மூலம் அமெரிக்காவில் தொண்டு செய்கிறேன் என்று முதலில் சொல்லாமல், வேண்டிய எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, பிறகு தேவைப்பட்டால் சொல்லலாம் என்ற பாடம் கிடைக்கிறது.

  2. இன்னொரு பார்வை. இடது கை கொடுப்பது வலது கைக்கும் தெரியக் கூடாது என்று தான தருமங்களுக்குச் சொல்வார்கள். அது, இங்கே தொண்டுக்கும் பொருந்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *