சிதம்பர இரகசியம்!
பவள சங்கரி
நறுக்.. துணுக்… (23)
இரகசியம் என்ற சொல்லிற்கு தொன்றுதொட்டு அடி நாதமாக இருப்பது சிதம்பர இரகசியம். அப்படி என்னதான் இரகசியம் அங்கு இருக்கிறது என்று சிறு வயதிலிருந்து ஒரு பெரிய ஆர்வம் வளர்ந்து கொண்டே வந்தது அந்த இரகசியத்தைக் காணும் வரை. ஆழ்ந்த தத்துவ ஞானம் கொண்ட இரகசியம் அது என்று நேரில் சென்று கண்டவுடன் தான் விளங்கியது, ஓரளவிற்கு!
திருவாரூரில் திருமண்ணாகவும், திருவண்ணாமலையில் அக்னியாகவும், திருவானைக்காவில் நீராகவும், திருக்காளத்தியில் வாயுவாகவும் வழிபடுகிறோம். சிதம்பரத்தில் தில்லையம்பலத்தானை, சிவபெருமானை, ஆகாய உருவில் வழிபடுவதுதான் அந்த இரகசியம்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் எம்பெருமான் சிதம்பரத்தில் ஆகாய வடிவில் காட்சியளிப்பது எங்கனம்?
ஆலயத்தின் சித்சபையில் ஸ்ரீநடராசப் பெருமானார் திருநடனக் கோலத்தில் காட்சியளிக்கிறார். இடப்பக்கம் அம்பாள், சிவகாமசுந்தரி அமர்ந்திருக்கிறார். வலப்பக்கம் திரை போடப்பட்ட நிலையில் சிறு வாயில் ஒன்று உள்ளது. குறிப்பிட்ட காலத்தில் பூசையின் போது அத்திரையை விலக்கி தீபாராதனை காட்டுகிறார்கள். அந்த தீப ஒளியில், அங்கு நாம் காணக்கூடியது… தங்கத்தினாலான வில்வதளமாலை தொங்க விடப்பட்டுள்ளதையன்றி வேறொன்றுமில்லை. இதன் கருத்து இறைவன் அங்கு ஆகாய உருவில், அருவ வடிவமாக இருக்கிறார் என்பதுதான். இதுவே சிதம்பர இரகசியம்!
படத்திற்கு நன்றி:
http://www.india-forums.com/forum_posts.asp?TID=2926200&TPN=4
அருமையான பகிர்வு பவளம்….சிதம்பரம் ரகசியம் பற்றிய தகவல் அருமை….
அருகே உக்கிரமாக சங்கிலியால் கட்டிப்போடப்பட்ட தில்லை காளியை தரிசித்தீர்களா?
யார் இந்த தில்லைகாளி?
சிவனோடு நர்த்தனமாட வந்தவள்…சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை ஏற்பட சட்டென்று காலை உயர்த்தி ஜெயித்துவிட உக்கிரமாகிவிட்ட காளியின் சிலை சிதம்பரம் நடராஜர் ஆலையத்திற்கருகே இருக்கின்றது.
நன்றி நித்தி. ஆம் தில்லை காளியை தரிசித்தோம். நல்ல தகவல் அளித்துள்ளீர்கள்.