கண்ணுக்கும் நெஞ்சுக்கும் பிடித்து:

வல்லமையாளர் – இந்த வாரம் – (28-05-2012 – 03-06-2012)

திவாகர்

வல்லமையாளர் தேர்வுக்கு வித்தியாசமான முறையான அணுகல் அத்தியாவசியமானது என்று ஒரு எண்ணம் தோன்றியது. தோன்றியவுடன் இங்குள்ள சில நண்பர்களைத் தொடர்பு கொண்டு பகிர்ந்து கொள்ள அவர்களும் சரியானதுதான் எனத் தீர்ப்பு வழங்க இந்த வார வல்லமையாளர் தயாராகிவிட்டார்.

புகைப்படக் கலையில் (அல்லது நிழற்ப்படக்கலையில்) மிக மிகத் தேவையானது ரசிகத் தன்மையும் பொறுமையும்தான். பிறகுதான் அந்தக் கருவியைக் கையாளும் திறமை, திட்டமிட்டு கோணம் பார்த்து பிடிப்பது, ஃபோகஸ் பார்ப்பது, இத்தியாதி இத்தியாதியெல்லாம்.

என்னமோ ப்ரொஃபஷனல், அமெச்சூர் என்றெல்லாம் புகைப்படக் கலைஞர்களை இனம் பிரிக்கிறார்கள். எனக்கு இதெல்லாம் சரிப்படுவதில்லை.. இன்று புகைப்பட உலகம் வெகு வேகமாக முன்னேறிவிட்டது. உன்னிப்பாக, மிகத் தெளிவாக, துல்லியமாக வெளிக்காட்டும் புகைப்படங்கள் இன்று எடுக்கப்படுகின்றன இப்போது வரும் மொபைலில் கூட நல்ல புகைப்படம் எடுக்கக்கூடிய அளவுக்கு டெக்னாலஜி இன்று இடம் கொடுத்து விட்டதால் எல்லோருமே புகைப்பட கலைஞர்தாம். நல்ல புகைப்படக் கலைஞர்கள் இன்று வெகுவாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். யார் எடுக்கும் புகைப்படம் கண்ணுக்கும் நெஞ்சுக்கும் இதமாக இருக்கிறதோ அந்த புகைப்படக் கலைஞர்தான் சிறந்த கலைஞர். அப்படி என்று ஒருவரைச் சொல்லிவிட்டால் அடுத்த கணத்திலும் இன்னொரு புகைப்படம் பார்த்து ‘ஆஹா.. அருமை’ இவர்தாம் சிறந்த கலைஞர் என நினைக்கத் தோன்றும் அளவுக்கு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

நல்ல புகைப்படக் கலைஞர்களை இணைய உலகில் பார்த்து வரும்போது அவர்களின் ரசிகத்தன்மையை முதலில் ரசிப்பேன். எப்படியெல்லாம் ரசித்து எடுக்கிறார்கள் என்ற எண்ணம் சட்டென மனதில் ஓடும். ஒன்றே ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்து விட்டது. நாம் ரசிக்கும் மனநிலையை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட மனநிலையில் சட்டென ஒரு புகைப்படம் இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஸ்பானிஷ் கட்டடக் கலையின் அழகான வடிவமைப்பை மிக அழகாக படம் பிடித்த திரு நித்தி ஆனந்த், இந்தப் படத்தில் ஒளியை நல்ல முறையில் கையாண்டிருக்கிறார்.. மிகத் துல்லியமான விவரங்கள், எடுக்கப்பட்ட கோணம் என்று எல்லா அம்சங்களுமே அருமையாக இருக்கின்றன. படத்திலிருக்கும் கதவை நோக்கி வழி நடத்திச் செல்லும் கோடுகளாய் தூண்களையும் ஃப்ரேமில் கொண்டு வந்த விதம் இன்னும் சிறப்பு.

http://www.flickr.com/photos/nithiclicks/7231853090/in/set-72157629767597046

நித்தி புதுவைத் தமிழர். வல்லமை புகைப்படக்குழுவில் அங்கத்தினர். தற்சமயம் பாரிசில் உள்ளார் (புதுச்சேரிக்காரர்களுக்கு பாரிஸ் பக்கத்து வீடாமே!) கணினி வல்லுநர். டிஜிடல் உலகில் இன்னும் நிறைய சாதிக்கவேண்டும் என்கிற துடிப்பான இளைஞர். திரு நித்தி ஆனந்த் அவர்களை இந்த வார வல்லமையாளராக மிக மகிழ்வுடன் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு வல்லமை சார்பாக என் வாழ்த்துகள். நிழற்படக்கலை சம்பந்தப்பட்ட அவர் கனவுகள் நினைவாகட்டும்!

இறைவன் கொடுத்த கண்களுக்கு நல்விருந்தாக அமைகின்ற இந்தப் புகைப்படங்களைக் கொடுத்த கலைஞர்களையெல்லாம் நான் பெரிதும் மதிக்கிறேன். நானும் அவர்களைப் போல ஏதாவது ஒரு புகைப்படத்தையாவது எப்போதாவது எடுக்க வேண்டும்….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “வல்லமையாளர்!

  1. சிறந்த ஒளிப்படக் கலைஞரான நித்தி ஆனந்தை வல்லமையாளராகக் கெளரவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!

    வாழ்த்துகள் நித்தி ஆனந்த்:)!

Leave a Reply

Your email address will not be published.