மலர் சபா

புகார்க்காண்டம்: 4, அந்தி மாலைச் சிறப்புச்செய் காதை

நிலா முற்றத்தில் கோவலனும் மாதவியும் களித்திருத்தல்

வயதில் இளையவர்கள்தான் என்றாலும்
பகையரசரைத் தோற்றோடச் செய்யும்
மாண்பும் செருக்கும் மிக்கவர்கள்
தென்னவர் குலப் பாண்டிய மன்னர்கள்.

அம்மரபில் முதலானவன்
‘சந்திரன்’ ஆவான்.

அவன் தானும்
செந்நிற வானில்
வெண்ணிறப் பிறையெனத் தோன்றி
அல்லல்கள் தரும் அந்திமாலையெனும்
பகைவனைத் துரத்தி ஓட்டி விட்டு
தன் முறைதனில் பிறழ்ந்திடாது
பால்கதிர்களைப் பரப்பி வைத்து
மீன்கள் குவிந்திருந்த
வானத்து மருங்கில்தான்
ஆட்சி செய்திட்டே
தன் ஒளி துலங்கச் செய்தான்.

மனையிடத்து
பூத்திட்ட முல்லையும்
அவிழ்ந்த மல்லிகையும்
இன்னும் பல பூக்களும்
பரந்து தூவிக் கிடந்த
படுக்கையதனில்
பொலிவுடன் தான் வீற்றிருந்தனர்
கோவலனும் மாதவியும்.

பரந்து உயர்ந்த
அல்குலின் மேலிருக்கும்
அழகிய சேலையின் மீதுள்ள
பவள வடமும் மேகலையும்
நிலை குலைந்திருக்க

நிலவின் பயனைத்
துய்ப்பதற்கென்றே
அமைந்திருந்த
உயர் நிலா முற்றத்திலே
தன் காதலன் கோவலனுக்கு
ஒரு நேரம் ஊடல் இன்பமும்
ஒரு நேரம் கூடல் இன்பமும்
மாறி மாறி அளித்திருந்தனள் மாதவி.

ஆர்வம் கிளர்ந்தெழும்
நெஞ்சத்துடன் கோவலனை எதிர்கொண்டு
அவனைத் தழுவி முயங்கினள்.

அம்முயக்கத்தால்
முன் கலைந்திட்ட ஒப்பனையதனை
கூடலின் பின் அவ்வப்பொழுது சரிசெய்து
அவள் மகிழ்ந்திருந்தனள்.

மாதவியவள் மட்டுமன்றிக்
காதலருடன் கூடியிருந்த
மகளிர் அனைவரும்
களித்தே மகிழ்ந்திருந்தனர்.

அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 21 -34
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html

படத்துக்கு நன்றி:
http://www.panoramio.com/photo/33346993

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.