திரை கடல் ஓடியும் அனுபவம் தேடு (பகுதி-9)
விஜயகுமார்
எரிமலையை நேரில் பார்க்க ஆசையா என்று நண்பர் கேட்டவுடன் – இதுவரை நாம் பார்த்த எரிமலை பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டை போடும்போது வெடிக்கும் நம்ப கேப்டன் விஜயகாந்த் மட்டுமே. நிஜ எரிமலை எப்படி இருக்கும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் – சரி என்றேன்.
ஜகார்த்தாவில் இருந்து காரில் போய் விடலாம் – போகும் வழியில் தாமன் சஃபாரி பார்த்து விட்டுப் போவதாகப் பிளான். மேப்பில் வழியைச் சரி பார்த்துக் கொண்டோம் – ஜாகார்த்தா, தாமன் சஃபாரி, பாண்டுங், சியாதெர். காலையிலேயே கிளம்பி விட்டோம், முதல் நாற்பது நிமிடம் – ஆஹா, பெரிய ரோடு, அதிகம் டிராபிக் இல்லை – கார் பறந்தது. ஹைவே என்றால் நம்ம ஊரு மாதிரி இல்லை, தார் ரோட்டில் எங்கும் பள்ளம் இல்லை, ஜல்லி வெளியிலும் வரவில்லை, நடுவில் எருமை மாடு வராமல் இருக்க இரண்டு பக்கமும் வேலி, எங்கும் அறிவிப்புப் பலகைகள் என்று மிகவும் அருமையாக இருந்தது.
இன்னும் இருபது கிலோமீட்டர் என்ற அறிவிப்புப் பலகை வந்தது தான் தெரியும், எதிரே மாசத்-அதாங்க டிராபிக் ஜாம். ரோட் ஓரம், டீக்கடை, பஜ்ஜிக்கடை (ஆமா, அங்கே எதை வேணும் என்றாலும் பஜ்ஜி போட்டு விடுகிறார்கள்!) என்ற செட்டப்புகளைப் பார்க்கும் போது – இது நிரந்தர ஜாம் போல. வேக வைத்த நிலக்கடலை வாங்கி உடைத்துக்கொண்டே ஒரு இரண்டு மணி நேரம் ஊர்ந்தோம். முடிவில் தாமன் சஃபாரி வந்தடைந்தோம். வெளியில் ஊட்டியில் விற்பது போல கொத்துக் கொத்தாய் காரட் விற்றுக்கொண்டிருந்தார்கள். நாமும் இரண்டு கொத்துக்கள் வாங்கிக்கொண்டு சென்றோம்.
பொதுவாக நம் மிருகக்காட்சிச் சாலைகளில் மிருகங்களைக் கூண்டில் போட்டு நாம் வெளியில் இருந்து பார்ப்போம். ஆனால் சஃபாரி என்பதால் மிருகங்கள் வெளியிலும் நாம் வண்டிக்குள்ளும் இருக்கிறோம். இன்னும் இங்கே என்ன புதுமை என்றால் – பொதுவாக சஃபாரி என்னும்போது அதற்கெனப் பிரத்யேக வண்டிகளில் தான் உள்ளே செல்ல முடியும், ஆனால் இங்கே நாம் நமது காரையே ஓட்டிச் செல்லலாம். இதில் என்ன என்ன ரிஸ்க் இருக்கும் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் உள்ளே சென்றவுடன் நமக்கு மிக அருகில் அரிய வகை மான்கள் – கண்ணாடியை இறக்கச் சொல்லி வழி மறித்தன. வாங்கிய காரட் அனைத்தும் காலியான பிறகே மேலே செல்ல முடிந்தது. நம்ம ஊரா இருந்தா நம்ம பசங்க ரெண்டு மானை அப்படியே டிக்கியில் போட்டு அபேஸ் பண்ணிடுவாங்க!! அடுத்து கௌவ் காட்சேர் – அதுதாங்க நம்ம சென்ட்ரல் கவர்மென்ட் ஆபீஸ் கேட்டுக்கு வெளியில் ரோட்டின் நடுவே இரும்பு பைப்பு போட்டு இருக்குமே அதுதான். அதைத் தாண்டியதும் அடுத்து… புலிகள் பகுதி. நாம் ஊரில் கிழட்டுப் புலிகள் அதுவும் அழுக்குக் கூண்டிலேயே பார்த்து விட்டு இங்கே பளபளக்கும் தோல்கள் கொண்ட மிருகங்கள் – கண்ணாடியைக் கொஞ்சம் இறக்கி, படம் எடுக்க முயற்சி செய்யும்.போது – நெஞ்சு தானே படக் படக் என்று அடித்தது.
ஒரு வழியாக முடித்து விட்டு வெளியில் வந்தோம். அங்கே மதிய உணவு முடித்து விட்டுக் கிளம்ப ப்ளான். அப்போது அருகில் இருந்த கடையில் யானை டிசைன் செய்த டி ஷர்ட் விற்றுக்கொண்டிருந்தார்கள்! அது என்ன யானை டிசைன்? என்று கேட்டதற்கு யானை வரைகிறது என்றும் அருகில்தான் என்றும் வழி காட்டினார்கள். அங்கே சென்றால் ஒரு பெரிய யானை பல வண்ணங்கள் கொண்டு தன் தும்பிக்கையில் ஒரு தூரிகையைப் பிடித்து எதிரில் இருந்த டி ஷர்ட்டில் வரைந்து கொண்டிருந்தது!! சும்மா சொல்லக் கூடாது நன்றாகவே வரைந்தது. நம் நாட்டில் அவற்றைப் பிச்சை வாங்க வைப்பதை விட இப்படி எதாவது செய்து அதை விற்று காசு பார்க்கலாம்!!
அங்கே இருந்து பயணம் சற்றுக் கடினமானது. இந்த நாட்டில் பெட்ரோலை சோலார் என்று சொல்கிறார்கள் – அது இலவசமாக கிடைக்குமோ என்னவோ. எங்கும் கார்கள். மேப்பில் அருகில் தெரிந்த பாண்டுங் செல்ல இரவு ஏழு மணி ஆகி விட்டது. மேலும் மலை மேலே செல்ல வேண்டும் சிலேத்தார் செல்ல. நண்பரை அழைத்தபோது, “கவலை இல்லை, மெதுவாக வாருங்கள்” என்றார். சுமார் பத்து மணி ஆகி விட்டது, நாங்கள் ஹோட்டலை சென்றடைய. நல்ல குளிர். நண்பர் ‘சரி, வாங்க குளிக்கப் போகலாம்’ என்றார். இது என்னடா, இரவு பத்து மணிக்கு நடு நடுங்கும் குளிரில் எங்கேயோ குளிக்கக் கூப்பிடுகிறாரே!! “என்ன சார், ஜோக் அடிக்கறீங்க. அருவி குளியல் எல்லாம் நாளை காலை பாத்துக்கலாம்” என்றதும், “அய்யோ! இங்கே வந்ததே இந்த மிட் நைட் குளியலுக்குத்தான்” என்றார். என்னடா இது மிட் நைட் மசாலா மாதிரி மிட் நைட் குளியல் என்று சற்றுத் தயங்கியபோது, கவலை வேண்டாம், இது நேச்சுரல் ஹாட் ஸ்ப்ரிங் – இயற்கையாகவே நிலத்தடி நீர் பூமியின் வெப்பத்தால் சூடாகி வெளியில் வரும் இடம்.’ என்றார்.
ஓரளவு தெளிவுடன் அவருடன் சென்றால் – அழகான நீச்சல் குளம் போல அமைக்கப்பட்ட அந்த ஸ்ப்ரிங் – மூன்று பாகங்களாக இருந்தது. முதல் – இதமான சூடு, அடுத்து நல்ல சூடு, கடைசி கொதிக்கும் நீர் – சல்ஃபர் அதிகம் உள்ள நீர் என்பதால் இதற்கு நிறைய நல்ல மருத்துவக் குணங்கள் உண்டு என்பதாலும் ஒரே கூட்டம் – இரவு பதினோரு மணிக்கு!! அதுவும் குத்தாலத்தில் இருப்பது போல சிலர் அருகில் எண்ணெய் தேய்த்து மசாஜ் வேறு!! அந்தச் சில்லெனும் சூழ்நிலையில் சூடான தண்ணீர் உடலில் இருந்த அத்தனைக் களைப்பையும் நீக்கியது. வெளியில் வர மனமே இல்லை.
காலை எழுந்து வந்த காரியத்தை முடிக்கச் சென்றோம். எரிமலை பார்க்க. டோர்மன்ட் மலைதான் இருந்தாலும் அந்த கிரேட்டர் நடுவில் இன்னும் புகை கிளம்பிக்கொண்டு இருந்தது. அருகில் ஒரு பெண்மணி பச்சை முட்டை விற்றுக்கொண்டு இருந்தாள். எதற்கு என்று கேட்டதற்கு அங்கே சென்று நடுவில் இருக்கும் அந்தப் புகை கிளம்பும் இடத்தில உள்ள நீரில் போடுங்கள் – முட்டை வெந்து விடும் என்றால் !!
ஆர்வக் கோளாறில் விடு விடு என இறங்கத் துவங்கினோம். ஒரு மணி நேரம் இறங்கியதும் கிரேட்டர் நடுவை அடைந்தோம். அந்தப் பெண்மணி சொன்ன மாதிரியே புகை கிளம்பும் இடத்தில் கொதித்துக் கொப்பளித்துக் கொண்டு இருந்தது புவி நீர். இப்போது மீண்டும் வெடித்தால் என்ற கேள்வி மனதில் வர – ‘சரி, வா கிளம்பலாம்’ என்று திரும்பிப் பார்க்கும்போதுதான் வந்த பாதை ஏறும்போது எவ்வளவு கடினம் என்று புரிந்தது!! உதவிக்கு இப்படி அப்படி பார்க்கும் போது ‘அந்தப் பக்கம் குறுக்கு வழி இருக்கிறது, போன் போட்டு உங்கள் வண்டியைக் கீழே வந்து விடச் சொல்லுங்கள்’ என்றான் அங்கே இருந்த காவலாளி ஒருவன். அப்பாடா! என்று அவன் காட்டிய வழியில் நடந்தோம். ஒரு மணி நடந்த பின்னும் ரோட்டை அடைந்தபாடில்லை.
அப்போது அங்கே ஒரு குடிசையில் பெரிய அரிவாள் கொண்டு ஒருவன் ஒரு மரக்கிளையை வெட்டிக்கொண்டு இருந்தான் – ஃபிளவர் வாஸ் செய்கிறான். ஆனால் அவன் வெட்ட வெட்ட அந்த மரத்தில் வந்த டிசைன் அற்புதமாக இருந்தது. இந்தோனேசியா முழுவதும் படிக் பிரபலம். படிக் டிசைன் உடைகள் தான் அங்கே எல்லா பெரிய பெரிய தலைவர்கள் கூடும் அரசு விழாக்களுக்கு அணிவார்கள். அப்படி இருக்க அந்த படிக் டிசைன் இந்த மரத்தில் தானாகவே வந்தது… இரண்டை வாங்கிக்கொண்டோம். பிறகு..
தொடரும்..