சொர்க்கத்தில் ஒரு முள் (அத்தியாயம்-12)

ஸ்ரீஜா வெங்கடேஷ்

மதிய நேரம் நேரம் சுமார் மூன்று மணி இருக்கும், ஒரு வீட்டில் சமைப்பதற்காகப் போயிருந்த மாமி வீடு திரும்பி மங்கைக்கு உணவிட்டு, மருந்து கொடுத்து விட்டு, தானும் சாப்பிட்டு விட்டு அப்போது தான் தலையைச் சாய்த்திருந்தார்கள். அப்போது தான் ப்ரியா திரும்பி வந்து உடல் படபடக்க நின்றாள். அவள் தலையெல்லாம் கலைந்து கிடந்தது.அவள் கண்களிலிருந்து கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. உதடுகள் துடித்து இவர்களிடம் எதையோ சொல்ல முயன்றன. முகம் கோணியது.

மாமிக்கு பயமாகப் போய் விட்டது. என்ன விஷயம்? ஏன் இந்தப் பெண் இப்படி அலங்கோலமாக ஆபீசிலிருந்து பாதியில் ஓடி வந்திருக்கிறாள்? ஏன் இந்தப் படபடப்பு? மாமியின் மனதில் ஆயிரம் கேள்விகள். எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு முதலில் வந்தவளை ஃபேனடியில் உட்கார வைத்து குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப் படுத்தினாள். ப்ரியாவும் மனதை ஒரு முகப்படுத்திக் கொள்வது போல ஒரு நிமிடம் பேசாமல் இருந்தாள். மூச்சைச் சீராக இழுத்து விட்டாள்.

கொஞ்சம் படபடப்பு அடங்கியதும், நேரே மங்கையின் அருகில் சென்றவள் மண்டியிட்டு உட்கார்ந்து அவள் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள். “அண்ணி நீங்க தெய்வம் அண்ணி. நீங்க சொன்னது அத்தனையும் உண்மை! அண்ணன் சாகலே அண்ணி. பொழச்சுக்கிட்டாரு. இப்போ திபெத்துல இருக்காரு. அண்ணி, நமக்கு இனிமே நல்ல காலம் தான் அண்ணி!” என்றவள் குலுங்கக் குலுங்க அழுதாள்.

கேட்டுக் கொண்டிருந்த மாமிக்கு மயக்கமே வந்து விட்டது. மங்கையின் நிலையும் அதுவே. என்னதான் மங்கை சிவநேசன் உயிரோடு இருப்பதாகச்சொல்லி வந்தாலும், ஆதாரம் இல்லாமல் இருந்தாள். இப்போது இந்தச் செய்தி. சந்தோஷத்தால் வெடித்து விடும் போலிருந்த இதயத்தை இரு கைகளாலும் அமுக்கிப் பிடித்தவள், மெல்ல மெல்லத் தன்னை ஆற்றிக் கொண்டாள். மாமிதான் திறந்த வாய் மூடவில்லை. எப்படியோ நனவுலகத்திற்கு வந்தவள் “அடீயே ப்ரியா? என்னடி சொல்றே? உங்கண்ணா உயிரோட இருக்காரா? எப்படித் தப்பிச்சார்? இப்போ இருக்கற எடத்துக்கு எப்படிப் போனார்? எல்லாத்தையும் விட இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும்?” என்று எல்லாக் கேள்விகளையும் ஒரே மூச்சில் கேட்டாள் மாமி. பதில் சொல்லத் தொடங்கினாள் ப்ரியா.

எப்போதும் போல மதியம் வேலைகளை முடித்து விட்டு, அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தாள் ப்ரியா. இன்று என்னவோ எஜமானியம்மாள் தூங்கப் போகாமல் டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். மதியம் 3 மணி வரை யாரும் வர மாட்டார்கள் என்பதால் ப்ரியாவையும் உட்கார்ந்து டிவி பார்க்கச் சொன்னாள். அந்த அம்மாள் எப்போதும் வட இந்தியச் சேனல்களே பார்ப்பார்கள். அதில் ஒரு சேனலில் ஒரு நியூஸ் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்த டிவி நிறுவனக் குழுவினர் திபெத் சென்று அங்குள்ள லாமாக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்து அவர்களைப் பேட்டி கண்டு கொண்டிருந்தார்கள். அப்போது அங்குள்ள லாமா ஒருவர், ஒரு நோயாளியைக் காட்டி, இவர் பலத்த காயங்களுடன் காட்டின் ஒரு பகுதியில் கிடந்ததாகவும், பின்னர் அவர் காட்டு வாசிகளால் கண்டு பிடிக்கப்பட்டு இங்கே கொண்டு வரப் பட்டதாகவும், கிட்டத்தட்ட ஆறு மாதமாக அவர் மெதுவாகக் குணமடைந்து வருவதாகவும், இப்போது தான் அவருக்கு முழுவதுமாக ப்ரஞ்ஞை வந்திருப்பதாகவும் கூறினார்.

அந்த நோயாளி பற்றிய எந்த விவரமும் தங்களுக்குத் தெரியவில்லையென்றும், அவருடைய பேச்சிலிருந்து அவர் இந்தியாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்கள். மேலும் அவர் முழுவதுமாகக் குணமடைந்த பின்னரே அவரிடம் கேட்டு விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறினார். அந்த நோயாளி மனிதரைக் க்ளோசப்பில் காட்டினார்கள்.

“அது வேற யாரும் இல்ல மாமி, எங்கண்ணன்தான். எளச்சித் துரும்பாப் போயிருக்கு. உடம்பெல்லாம் காயம் ஆறிக்கிட்டு வர்ற தழும்பு, இருந்தாலும் நான் கண்டு பிடிச்சிட்டேன். அது அண்ணனே தான். எனக்கு இருந்த பதட்டத்துல எஜமானி கிட்ட எதையோ சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சு நேர இங்கே வந்துட்டேன்” என்றாள். மகிழ்ச்சியில் அவள் முகம் பூவாய் மலர்ந்திருந்தது.

மங்கை மௌனமாக பூஜையறைக்குச் சென்று கண்ணீர் விட்டாள். மாமி அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். “உன் நம்பிக்கை பொய்க்கல்லேடி மங்கை! அன்னிக்கு அந்த சாவித்திரி எமனோட போராடி புருஷனை மீட்டா மாதிரி நீ உன் நம்பிக்கையால உன் புருஷனை மீட்டுட்டே! உன் புருஷன் உனக்குத் தாலியை நூல்ல கட்டல்லை, இரும்புல கட்டியிருக்கான்” என்று கூறிச் சந்தோஷப்பட்டாள்.

அதன் பிறகு காரியங்கள் வேகமாக நடந்தன. ப்ரியா அந்தத் தோலைக்காட்சி சேனலின் நம்பரைக் கண்டுபிடித்து அவர்களோடு ஃபோனில் பேசினாள். அவர்களுடைய சேனலினால் ஒரு குடும்பம் இணைவது பற்றி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. சிவநேசனைப் பாதுகாக்கும் லாமாக்களின் ஃபோன் நம்பர் கொடுத்தார்கள். மறுபடியும் ப்ரியா அவர்களோடு பேசி சிவநேசன் இன்னார் என்று அவர்களுக்குத் தெரியப்படுத்தினாள். இதற்குள்ளாகச் சிவநேசனுக்கு நினைவு முழுவதுமாக வர அவனும் தன்னைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறான். அவன் கூறிய தகவல்களும், ப்ரியாவின் கூற்றும் ஒத்துப் போகவே லாமாக்கள் சிவநேசனை அடையாளம் தெரிந்து கொண்டு விட்டனர். அவன் வீட்டிற்குச் செல்லலாம் என்றும் கூறினர். சிவநேசன் குடும்பம் என்றென்றுக்குமாக லாமாக்களுக்குக் கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்தனர். ப்ரியா, மங்கை மற்றும் நிகில் சேர்ந்து அந்த லாமாக்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினர். அதில் அவர்களைத் தெய்வமாக துதிப்பதாகத் தெரிவித்தனர்.

இதனிடையில் அந்தத் தொலைக்காட்சி சேனல் மூலமாகச் சைனாவில் விமான விபத்தில் தப்பித்த ஒருவர், தன் குடும்பத்தாரோடு இணையப் போகிறார் என்று எல்லாருக்கும் தெரிந்து போயிற்று. தமிழ்ச் சேனல்கள், ஹிந்தி சேனல்கள் எனப் போட்டி போட்டுக் கொண்டு இவர்களைப் பேட்டி கண்டார்கள். ஆபீசிலும் விஷயம் தெரிந்து போய் முதலாளி நேரிலேயே வந்து விட்டார்.

அவர் சிவநேசன் அங்கிருந்து இங்கு வருவதற்கான செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதோடு தானே நேரில் சென்று அழைத்து வருவதாகக் கூறினார். நன்றிப் பெருக்கால் யாராலும் பேச முடியவில்லை. அவன் வந்து சேரும் நாளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

அந்த நாளும் வந்தது. தாடி மீசையோடு, ஒல்லியான ஒரு உருவம் காரிலிருந்து இறங்கியது. முதலில் ஓடிச் சென்றது நிகில் தான். பின்னர் ப்ரியா, அப்புறம் நித்திலா. அவனைச் சூழ்ந்து கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இவை அனைத்தையும் காமிராக்கள் படமெடுத்த வண்ணம் இருந்தன. அவர்களைச் சமாளித்து மங்கையின் அருகில் வந்தான் சிவநேசன். நிற்க முடியாமல் மயங்கிச் சரிந்த அவளை அணைத்துத் தூக்கியபடி உள்ளே நுழைந்தான். மாமி எல்லாவற்றையும் கண்களில் நீர் மல்கப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். தொலைக்காட்சிகளுக்குப் பேட்டியளித்து, பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்து எனக் காலம் பறந்தது. அவன் குடும்பம் மகிழ்ச்சியில் மிதந்தது. மீண்டும் மீண்டும் லாமாக்களுக்கும், கடவுளுக்கும் நன்றி தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

சிவநேசன் திரும்ப வந்து முழுசாக 4 நாட்கள் ஓடி விட்டன. எத்தனை பேசினாலும், போதாது போல இருந்தது. மாமி தான் சொன்னாள். “அப்பா! இப்போதான் குழந்தைகள் மொகத்துல பழைய களை வருது. இத்தனை நாள் வயசுக்கு மீறின முதிர்ச்சி, கவலையிலயே இருந்துதுகள் பாவம். “

செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பட்டன. மங்கையின் ஆபரேஷன் பற்றியும், மாமி உதவியது பற்றியும் ப்ரியா சொன்ன போது, மாமியின் கைகளை ஒரு சேரப் ப்டித்துக் கொண்டனர் சிவநேசனும், மங்கையும். ஆம்! மங்கைக்கும் இது செய்தி தானே. ஒவ்வொன்றாகச் சொல்லினர். ப்ரியா நகையை விற்றதையும், ப்ரியாவும், நிகிலும் வேலை பார்த்ததையும் சொன்ன போது கண்ணீரோடும் பெருமையோடும், தங்கையையும், மகனையும் கட்டிக் கொண்டான் சிவநேசன். மங்கை பிரமை பிடித்து உட்கார்ந்திருந்தாள். “ப்ரியா நீ என் வயத்துல பொறக்காட்டாலும் என் மகள்னு நிரூபிச்சுட்டே? உன்னை வேறு என்ன சொல்ல? மாமி உங்களைப் பத்திச் சொல்ல எனக்கு வாயே வர்லே. என்னைப் பெத்த தாயே நீங்கதான்” என்று கண்ணீருடன் விழுந்து வணங்கினாள்.

ஒருவாறு பிரமிப்பு நீங்கி இயல்பு வாழ்க்கை திரும்ப ஆரம்பித்தது. ப்ரியாவும், நிகிலும் மீண்டும் கல்லூரிக்கும் பள்ளிக்கும் போகத் துவங்கினார்கள். சிவநேசன் தான் தப்பித்ததைச் சொன்னான்.

சிவநேசன் பயணம் செய்த அந்த ஃப்ளைட் சிறியதுதான் மொத்தமே 65 பேர்தான் இருந்தார்கள். விமானம் கிளம்பியதுமே சிறிது நேரத்தில் மக்கர் செய்ய ஆரம்பித்தது. ஒருவாறு சமாளித்து ஓட்டினார் பைலட். சிறிது நேரம் கழித்து விமானம் தன் கட்டுப்பாட்டை முழுவதுமாக இழந்து தாறுமாறாகப் பறக்கத் தொடங்கியது. இஞ்சினில் சிறு சிறு தீப்பொறிகளும் தோன்ற ஆரம்பித்தன. இவை யாவுமே பைலட் சொல்லிப் பயணிகள் தெரிந்து கொண்டனர். தப்பித்துக் கொள்ள வேண்டுமானால் கீழே தான் குதிக்க வேண்டும். எல்லோருக்கும் போதுமான பாராசூட் இல்லை. அதுவும் தவிர கீழே தண்ணீர் இருந்து அதில் விழுந்தால் தப்பிக்கலாம், ஆனால் கீழே இருப்பதோ அத்துவானக் காடு. என்ன செய்ய என்று எல்லோரும் பதற சிவநேசனுக்கு குடும்பத்திலுள்ளோர் முகம் வந்து போனது.

அவர்களுக்காவது நான் உயிரோடு இருந்தாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. நேரம் ஆக ஆக விமானம் தீப்பற்றிக் கொள்ளும் அபாயம் நெருங்கியது. தரைக்கும், விமானத்துக்குமான தொடர்பு விட்டுப் போயிற்று. பாரசூட்டுக்களையோ அவர்கள் கண்ட மேனிக்கு வினியோகித்துக் கொண்டிருந்தனர். இவன் முறை வரும் வரை பாரசூட் இருப்பு இருக்காது என்று தெரிந்து போயிற்று. நல்ல வேளை பைலட் ரொம்ப சாமர்த்தியமாக விமானத்தைத் தாழ்வாகப் பறக்கச் செய்திருந்தார். துணிந்து ஒரு முடிவெடுத்தான் சிவநேசன். விமானத்தில் இருந்து எரிந்து சாவதை விட கீழே குதித்தால் தப்பிக்க ஏதேனும் வாய்ப்புக் கிடைக்கலாம் என்று நினைத்தான்.

சட்டைப் பையில் எப்போதும் இருக்கும் கந்த சஷ்டி கவசம் புத்தகத்தைக் கையால் இறுகப் பிடித்தபடி, கண்ணை மூடிக் கொண்டு கீழே குதித்து விட்டான். சிறிது நேரத்தில் அவன் உடல் எதன் மீதோ மோதிய ஞாபகம். மரக்கிளையில் தொங்கி நினைவிழந்து விட்டான். எத்தனை நாள் அப்படி இருந்தான் என்று தெரியவில்லை. மீண்டும் நினைவு வந்த போது உடலெல்லாம் ஒரே வலி. அதே மரக்கிளையில் தான் இருந்தான். உடலின் சக்தியெல்லாம் திரட்டி, கீழே விழுந்தான். இடையிடையே விழிப்பு வரும்போதெல்லாம் ஏதேதோ காட்சிகள் தோன்றின. எதுவும் நினைவில் இல்லை. அவனுக்கு நினைவு வந்து மீண்டும் கண் திறந்து பார்த்தபோது லாமாக்களின் பராமரிப்பில் இருந்தான்.

அவன் சொல்லி முடிக்க மெய் சிலிர்த்தது அனைவருக்கும். எது எப்படியோ முருகன்தான், சிவநேசனைக்காப்பாற்றி, சரியாக அந்தப் புத்த பிட்சுக்களிடம் ஒப்படைத்தான் என்று முடிவு செய்தாள் மங்கை. அந்த வினாடியே அறுபடை வீட்டுக்கும் சென்று தன் மனதைக் குளிர வைத்த அவனுக்கு பாலபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டாள் மங்கை. புத்த பிட்சுக்கள் வழிபடும் புத்தர் கோயிலுக்கும் காணிக்கை கொடுக்க வேண்டும் என்று மஞ்சள் துணியில் முடிந்தாள்.

குறிப்பு: குங்குமச்சிமிழ் இதழில் தொடராக வெளி வந்தது

படத்திற்கு நன்றி:http://www.combatreform.org/escape.htm

பதிவாசிரியரைப் பற்றி