பிச்சினிக்காடு இளங்கோ      

எழும்பூர் சந்திப்பு-12
 
நான்
வருகிற
.. . . . .
.. .. .. …
.. .. ..
காலையில் புறப்படும்
பல்லவன் ரயிலில்
பயணம் ஆகிறேன்

அவசியம் நீங்கள்
வரவேண்டும்

அதிகம் நாம்
பேசவேண்டும்

கட்டாயம் வரவேண்டும்
நான்
உங்களைக் காணவேண்டும்

(நானும்தான்
காணவேண்டும்)

எப்படியும் உங்களைத்
திருச்சி சந்திப்பில்
சந்திக்கிறேன்

மறந்துவிடாதீர்கள்

முன்கூட்டியே
வந்துவிடுங்கள்

புறப்படும்முன்
சிலவற்றைப்
புரிந்துகொள்வோம்

கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்வோம்

கட்டாயம் எதிர்பார்க்கிறேன்
கட்டாயம்
கட்டாயம்
கட்டாயம்
உங்களை. . .
. . . . . . . ..
.
.
.
இப்போதுநான்
எப்போதும் இல்லாத
குழப்பத்தில் மூழ்கினேன்

பார்க்காத முகத்தைப்
பார்க்கும் ஆசை
வேர்விட்டு வளர்ந்து
விருட்சமாகிவிட்டது

பூக்காத காதலைப்
பூப்பெய்திப் பார்க்கும் ஆசை
பூகம்பம் ஆகிவிட்டது

பிரளயம்
நிலநடுக்கம்
புயல்
எல்லாம்
மனநடுக்கமாய்ப்
பெயர்மாறிவிட்டது

நடுக்கடலில் இருப்பதுபோல்
நான். . .

ஒருமுறையாவது
திருமுகம் பார்த்தால்
தீருமென் ஆவல்

திருமுகத்தின் வழி
திசைதிருப்பிய
திருமுகத்தைக்காண
ஆவல்
அலையாய் ஆர்ப்பரித்தது

ஒருமுறை பார்த்தால்
என்னாகுமோ!
ஒருவேளை என்மனம்
புண்ணாகுமோ!
கவலையும் என்னைக்
கால்வாரிவிட்டது

என்னதான் முடிவு
எடுப்பது என்ற துடிப்பில்
துடுப்பிழந்த படகானேன்
உடுப்பிழந்த வீரனானேன்
துயரருவி மலையானேன்
உயிர் உருகும் மெழுகானேன்

ஒருவேளை
என்னைப் பார்த்தால்
புகைப்படத்துக்கும்
என்
நிஜத்துக்கும்
இடைவெளிகண்டு
மனம் மாறலாம் அல்லவா?

நல்லவேளை
தப்பித்தேன் என
நல்ல தீர்மானம்
எடுக்கலாம் அல்லவா?
திருமுகத் தாகத்தோடு
திருதிருவென முழிக்கும் என்னை
வேடிக்கைப் பார்க்கலாம் அல்லவா?

பார்த்தும்
பார்க்காமல்
போகலாம் அல்லவா?

பார்த்தும் பார்க்காமல்
போனால் தப்பில்லை

பார்த்துப் பார்த்து
பனிக்கட்டியாய் உருகினால்
மீண்டும்
திடமாகும்(கட்டியாகும்)
திடம் என்னிடமில்லை
திறனும் என்னிடமில்லை

எதற்கு இந்த
வேடிக்கை விளையாட்டு?

நிலையம்வரை வந்து
நின்றுவிட்டேன்
ஒரு நொடியில்
நான்
அங்கே
உறைந்துவிட்டேன்

சபலத்தில் தொடங்கி
வாழ்க்கை
சஞ்சலத்தில் முடியவேண்டுமா?

சுயநலத்திற்காக
சுயலாபத்திற்காக
யாருடைய வாழ்க்கையை
நட்டமாக்குவது?

எந்தக்கோணத்தில்
பார்த்தாலும்
இருவருக்கும் நட்டம்தான்.

படத்துக்கு நன்றி.
http://gallery.mobile9.com/f/2144320/?ref=2958

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.