வெள்ளை உடையில் தூய அன்னங்கள் [முதல் பாகம்]

0

விசாலம்

அழகிய அபுமலை, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.அங்குதான் அமைந்துள்ளது பிரம்மகுமாரி இயக்கத்தின் அகில உலகத் தலைமையகம். சுற்றிலும் ஆரவல்லி மலைத்தொடர், அமைதியான சூழ்நிலை. அந்தச் சூழ்நிலையை மேலும் ரம்யமாக்கும் “நாக்கி” என்ற அழகிய ஏரி. அதன் நடுவே இருப்பது தான் “மதுபன்

பன் [bun] என்றால் வனம். “வன்’ என்றும் சொல்லலாம். தேன் நிறைந்த இடம் என்று பொருள் கொள்ளலாம். அந்த வனத்தில் ஆன்மீகம் என்ற தேன் நிறைந்திருக்கிறது என்றும் பொருள் கொள்ளலாம்

நான் மவுன்ட் அபுவுக்குப் போன போது இந்த இடத்தையும் பார்க்கச்சென்றேன். ஆஹா என்ன அழகு.! தூய வெள்ளை உடையில் பலர் நடந்து வந்ததைப் பார்க்க வரிசையாக அன்னங்கள் நடந்து வருவது போல் இருந்தது. அன்னம், பாலிருந்து நீரையும் பிரித்தெடுக்குமாம். அதே போல் நற்செயலை மட்டும் பிரித்தெடுத்து வாழ்க்கையில் உபயோகித்து வாழ்க்கைத்தரத்தை உயர்த்துகிறார்கள் பிரும்ம குமாரிகள்.

புன்னகையே அவர்களது நகை. அவர்கள் பேசும்போது தூய அன்பு வெளிப்படுகிறது. எங்கும் சாந்தம் நிறைந்த முகம். அவர்கள் பேசும்போது நிதானமாக, பொறுமையாக, அன்பொழுகப் பேசுகிறார்கள். அப்படியே பூவின் இதழால் இதயத்தை வருடிக்கொடுப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.

அவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஒரே குடும்பத்தினராகக் கூடுகின்றனர். பல்லாயிரம் பேர்களை அங்கு பார்க்க முடிகிறது. காலைச் சூரியன் உதிக்கும் முன்பே பிரும்ம முகூர்த்த வேளையில் 3-30-லிருந்து 4வரை அவர்களது தனிப் பிரார்த்தனைப்பாடலுக்காக எல்லோரும் எழுந்து கை கூப்பியபடி நிற்கின்றனர். ஒலிபெருக்கியில் அருமையான ஒரு பாடல் எழுகிறது.

பின் நாலு மணியிலிருந்து ஐந்து வரை அமர்ந்து மனம் புத்தி எல்லாம் ஒன்று சேர இறைவனைப்பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனையும் தனக்கென்று ஒன்றும் கேட்காமல் உலக அமைதிக்கும் நிம்மதிக்கும் பிரார்த்திக்கின்றனர்.

பின் 6-30லிருந்து 8 வரை ஆன்மீக வகுப்பு நடக்கிறது. இதில் ஞானத்தைப் பெற வழிகள் கற்பிக்கப்படுகிறது. அவர்கள் தியானம் செய்யும் போது அந்தத்தியானத்திலேயே மூழ்கி வாழ்க்கைப் பிரச்சனையிலிருந்து விடுபட்டு மனம் அங்கும் இங்கும் அலை பாயாமல் இருக்க, மனதைச் சரியான பாதையில் எடுத்துச்சென்று உள்ளிருக்கும் ஒளியை உணரக் கற்றுக் கொள்கின்றனர். இந்த இயக்கத்தில் சேர்ந்த சிலர் 90 வயதிலும் சுறுசுறுப்பாய் ஓடி வேலை செய்கின்றனர். அவர்கள் முகத்தில் ஒரு தேஜஸைக் காண முடிகிறது.

பகலில் மிக எளிமையான சாப்பாடு. மாலையிலும் திரும்பத் தியான வகுப்பு, சந்தேகங்களின் தீர்வு, அலை பாயும் மனதைக் கட்டுப்படுத்தும் கலை என்று பல கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதற்கென்று இதில் பல வருடங்கள் அனுபவப்பட்ட மூத்த சகோதரிகள் இருக்கின்றனர். இங்கு இருப்பவர்கள் யாவரும் பிரும்மகுமாரிகள் என்று அழைக்கப்படுகின்றனர்.

இங்கு பல விதமான வேலைகளை இந்தப் பிரம்மகுமாரிகளே செய்கின்றனர். ஒவ்வொரு குழுவுக்கு ஒவ்வொரு வேலையாகப் பிரித்தெடுத்துக் கொள்கின்றனர். உதாரணமாகத் தண்ணீர், கலைப்பிரிவு, புத்தகம் அச்சிடுதல் உணவு சேமிப்பு, தோட்டம், கட்டடம் கட்டுதல், போக்குவரத்து, பொறியியல், செய்தி என்று சுமார் எண்பது பிரிவுகளாவது இருக்கலாம்.

“கர்மண்யேன அதிகாரஸ்து ந பலேஷு கதாசனா” என்ற கீதைச்சொல்லுக்கேற்பப் பலனைப்பார்க்காமல் கடமைகள் மட்டும் செய்து வருகின்றனர்.

இவர்களுடன் சில தொண்டர்களும் உதவி புரிகின்றனர்.

 

படத்திற்கு நன்றி: http://www.khabarexpress.com/Thousand-of-women-devoted-to-change-society-article_564.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *