இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.

0

 

                                                                         சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada

 

“2001 ஆம் ஆண்டில் ஹைதிராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TIFR –Tata Institute of Fundamental Research) நாங்கள் 24 மைல் உயரத்தில் ஏவிய பலூனில் வாழும் உயிரின மூலவிகள் காணப் பட்டன ! அவை எப்படி அந்த உயரத்தில் தெரிந்தன என்பதை விளக்குவது கடினம். எரிமலைச் சாம்பல் தூசிகூட 15 மைல் உயரத்தைத் தாண்டிச் செல்லாது ! அவை சில வாரங்கள்தான் அங்கு நிலைத்து உலவக் கூடும். நாங்கள் சோதனை செய்த இடங்களில் எந்த எரிமலைச் சீற்றமும் இருந்ததாகத் தெரியவில்லை !

டாக்டர் ஜெயந்த் நர்லிகர் (2001)

“பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும்! வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய ஒருவரின் ஆயுட் காலம் போதாது! ஆகவே அடுத்தடுத்துத் தொடரும் யுகங்களில்தான் அப்பெரும் மர்மங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும்! இயற்கை ஒருபோதும் தன் இரகசியங்களை ஒரே சமயத்தில் விடுவிக்க விடுவதில்லை!”

ஸெனேகா (முதல் நூற்றாண்டு ரோமானிய வேதாந்தி)

 

அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்! உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ? அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது? ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ? அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ? அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ? பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ? அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

 

ஜெயந்த் நர்லிகர் செய்த பொது விஞ்ஞானச் சாதனைகள்

நர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை” [Conformal Theory of Gravity], “ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் (போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்), உயர்சக்தி வானியல் பௌதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னகர்ச்சி [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.

1983 இல் ஃபிரெட் ஹாயிலுடன் ஈழத்து விஞ்ஞான மேதை சந்திரா விக்கிரமசிங் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டனர். 2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் ஹைதிராபாத் TIFR ஏவுதள விண்வெளியில் பலூன்களை 25 மைல் உயரத்துக்கு ஏவி உயிர்க்கிருமிகள் நடமாடி வருவதைப் பிடித்து, அக்கோட்பாடை மெய்ப்பித்துக் காட்டினர்.

 

ஜெயந்த் நர்லிகர் 1972 இல் மொம்பை டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [Tata Institute of Fundamental Research] பேராசிரியராகப் பணியாற்றியவர். அடிக்கடி காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தின் கெல்லாக் கதிரியல் ஆய்வகத்திற்கும், விஞ்ஞானத் தொழில் ஆய்வுக் குழுவிற்கும் (Kellogg Radiation Lab, Council of Scientific & Industrial Research, CIT), மாரிலாந்து பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகத் துறையகத்திற்கும் [Dept of Physics & Astronomy, University of Maryland] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானப் பேருரையாளர். காலிஃபோர்னியா, டெக்ஸஸ் பல்கலைக் கழகங்கள், கார்நெல் பல்கலைக் கழகம், கார்டிஃப் பல்கலைக் கழகக் கல்லூரி, பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி ஆகிய விஞ்ஞான நிறுவகங்களின் ஆலோசகராகப் பணிபுரிபவர். மேலும் பொதுநபர் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞான விந்தைகளை எளிய இனிய முறையில் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யிருக்கிறார்.

விஞ்ஞான மேதை நர்லிகரின் உன்னத வாழ்க்கை வரலாறு

1938 ஜூலை 19 ஆம் தேதி ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் நகரில் பிறந்தார். அவரது தந்தை வாசுதேவ நர்லிகர், வாரனாசி பெனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த கணிதப் பேராசிரியர். தந்தையார் புகழ் பெற்ற கணித நிபுணராக இருந்ததோடு, பொது ஒப்புமைத் தத்துவத்திலும் [General Relativity] ஞானியாகத் திகழ்ந்தவர்.

 

தாயார் சுமதி நர்லிகர் ஓர் சமஸ்கிருத வித்துவான். ஆதலால் சிறு வயது முதலே ஜெயந்த் நர்லிகர் கணிதம், சமஸ்கிருதம் புரளும் ஒரு கல்விமயக் குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர். பெனாரஸ் பல்கலைக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பயின்று இறுதி வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார். பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் 1957 இல் B.Sc பட்டம் பெற்று முதல்தர விஞ்ஞானியாகப் பேரெடுத்தார்.

ஜே. என். டாடாவின் சிறப்புப்பரிசு மாணவனாக அடுத்து மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கே B.A.(1960), M.A.(1964), Ph.D.(1963) பட்டங்களை விரைவில் பெற்றார். 1960 இல் டைஸன் வானவியல் பதக்கத்தைப் [Tyson Medal for Astronomy] பெற்று, கீர்த்தி வாய்ந்த பேராசிரியர் ஃபிரெட் ஹாயிலின் கீழ் [Fred Hoyle] ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கவர்ச்சி மிக்க ஸ்மித் பரிசு [Smith Prize (1962)], ஆடம்ஸ் பரிசு [Adams Prize (1967)] ஆகிய இரண்டும் அவருக்குக் கிடைத்தன. எல்லாவற்றுக்கும் மேலாக தனது 38 ஆவது வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மிக உன்னத D.Sc. [Doctor of Science (1976)] பட்டத்தையும் பின்னால் பெற்றார்.

 

டாக்டர் ஆஃப் ஸயன்ஸ் [D.Sc.] பட்டம் பெறுவதற்கு முன்பாக 1972 இல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். அவருக்கு டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தில் [Tata Institute of Fundamental Research (TIFR)] வானவியல் பௌதிகத்தின் பேராசிரியர் பதவி கிடைத்தது. 1966 இல் ஜெயந்த் நர்லிகர் மங்களா ராஜ்வடே [Mangala Rajwade] என்னும் மாதை மணந்து கொண்டார். மங்களா மொம்பப் பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் டாக்டர் [Ph.D.] பட்டம் பெற்றவர். அவர்களுக்கு கீதா, கிரிஜா, லீலாவதி என்று பெயருள்ள மூன்று புதல்விகள் உள்ளார்கள்.

பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார்! அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்! ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது ! பெரு வெடிப்பு நியதியே பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

 

ஆயினும் தன் கொள்கையை விடாமல் பிடித்துக் கொண்டு ஃபிரெட் ஹாயில், ஜியோஃபிரி பர்பிட்ஜ், ஜெயந்த் நர்லிகர் ஆகியோருடன் இணைந்து “பிரபஞ்சத் தோற்றத்திற்கு வேறுபட்ட விளக்கம்” [A Different Approach to Cosmology] என்னும் நூலை 2000 இல் வெளியிட்டார். அண்டவெளி மீன்களின் அமைப்பு நியதியையும், அவற்றில் இரசாயன மூலகங்களின் தோற்ற மூலத்தையும் [Theory of the Structure and Origin of the Chemical Elements in Stars] பற்றிப் புதிய கருத்துக்களை வழங்கியவர், ஹாயில். ஈழத்து விஞ்ஞான மேதை டாக்டர் சந்திரா விக்கிரமசிங்குடன் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டவர் ஹாயில்.

உயிரினமும், கூறப் போனால் எயிட்ஸ் (AIDS) போன்ற நூதன நோய்களும் கூட அண்ட வெளியிலிருந்து உற்பத்தியாகி, பூமண்டலத்துக்கு இறங்கி வந்துள்ளன என்பது ஹாயிலின் அசைக்க முடியாத கருத்து! விந்தையான அவரது கருத்துக்களை அவர் எழுதிய இரண்டு நூல்களில் “அண்ட வெளியிலிருந்து வரும் நோய்கள்” [Diseases from Space (1979)], “விண்வெளிப் பயணிகள்: உயிரினங்களின் உதயம்” [Space Travellers: The Origin of Life (1980)] பற்றிய விளக்கங்களைக் காணலாம்!

 

ஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த “பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை” [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு! ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய “நிரந்தரநிலை நியதி” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய “பொது ஒப்புமை நியதியின்” [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப், பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது.

ஃபிரெட் ஹாயில், நர்லிகர் இருவரும் “தூர நிகழ்ச்சிக் கொள்கையைப்” [Concept of Action at a Distance] பயன்படுத்தி, நுட்ப உலகான குவாண்டம் உருவிலும், பிரம்மாண்ட பிரபஞ்சப் பூத வடிவிலும், மின்னகர்ச்சி இயக்கத்தை [Electrodynamics at Quantum and Classical Levels] விளக்கினார்கள். அவரது அரிய மின்னகர்ச்சி இயக்கக் கருத்தே, “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதி” [Conformal Theory of Gravity] என்னும் ஒரு புதிய ஈர்ப்பியல் நியதியைப் படைக்க உதவியது.

விண்வெளிச் சூழ்நிலையில் உயிரினங்களின் மூலத் தோற்றம் ! “பான்ஸ்பெர்மியா நியதி” என்றால் என்ன?

2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் அண்ட வெளியில் உயிரினத் தோற்றத்தைக் [Extra-terrestial Life] கண்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்! நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தவர்கள். அந்நுண் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர்! ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது! அந்தக் கண்டுபிடிப்பு “பான்ஸ்பெர்மியா கோட்பாடின்” போக்கில் [Panspermia Theory] பல புதிய சவால்களை எதிர்காலத்தில் தொடுக்க வல்லது!

 

“பான்ஸ்பெர்மியா” என்றால் என்ன? பிரபஞ்ச மெங்கும், தகுந்த சூழ்நிலையில் விருத்தி யடையும் உயிரின நுண்கிருமிகள் அல்லது ஏகச்செல் ஜீவிகள் உருவில் [Germs or Spores] பரந்து பரவி யுள்ளன! மேலும் பூமியில் தோன்றிய மனித இனம், விண்வெளியிலிருந்து பூமிக்குப் புகுந்தது என்றும் பான்ஸ்பெர்மியா என்பதற்கு அர்த்தம் கொள்ளலாம். ஒரு காலத்தில் [1965-1985] அமெரிக்க உயிரியல் விஞ்ஞான மேதை, கார்ல் சேகன் செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்த தடமிருக்கலாம் என்று அண்டவெளிப் பயணங்களில் ஆழ்ந்து முற்பட்டுத் தோல்வி யடைந்தார். “அண்டக் கோள்களில் உயிரின இருப்பை அழுத்தமாகப் பறைசாற்றும் விஞ்ஞானிகள், அதற்கு அழுத்தமான சான்றுகளைக் காட்ட வேண்டும்” என்று கார்ல் சேகன் அப்போது அடித்துப் பேசினார்!

அவ்விதம் அழுத்தமான சான்றுகளைக் கேட்ட சமயத்தில், ஜெயந்த் நர்லிகர் பின்வருமாறு கூறினார்: “2001 ஜனவரியில் ஹைதிராபாத்தில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [TIFR] பலூன் ஏவுதளத்திலிருந்து பலூன் “பணிப்பளு” [Payload] ஒன்று விண்ணோக்கி ஏவப்பட்டது. அப்போது 41 கிலோ மீட்டர் [24 மைல்] உயரத்தில்தான் நுண்ணுயிர் ஜீவிகள் இருப்பது அறியப்பட்டது! அவ்வுயிர்க் கிருமிகள் பூமியிலிருந்து ஒரு வேளை வந்ததாக யூகித்தாலும், எவ்விதம் அந்த உயரத்தில் ஏறியன என்று கணிப்பது மிகவும் கடினமானது! எரிமலைச் சாம்பல் கூட [Volcanic Ash] 25 கிலோ மீட்டருக்கு [15 மைல்] மேல் ஏறுவதில்லை! அவ்விதம் ஏறினாலும் ஒரு சில வாரங்களுக்கு மேல், அங்கே தங்க முடிவதில்லை! நாங்கள் சோதனைக்குத் தேர்ந்தெடுத்த இடமோ, எந்த வித எரிமலைச் சீறல்கள் பல மாதங்கள் பொழிவுகள் செய்யாத ஒரு தூயச் சூழ்வெளி மண்டலம்” என்று கூறுகிறார்.

 

“பூமியைச் சுற்றிவரும் இயக்கமற்ற செயற்கைத் துணைக்கோள் [Dead Satellites] அல்லது விண்வெளி ராக்கெட்டுகள் வெளியேற்றும் அண்டவெளிப் பயணக் குப்பைகளைக் கணித்ததில், எங்கள் சேமிப்பு அளவுக்கு மாதிரியை இணையாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது! மாதிரியைச் சேமிப்பதில் நாங்கள் எடுத்துக் கொண்ட கவனம், எச்சரிக்கைகள் மிகையானவை. எங்களுக்குக் கிட்டிய கிருமி மாதிரி, ஆய்வுக் கூடத்தின் தீண்டலுக்கு அப்பாற் பட்டது! சாதாரணப் பொது ஊடகங்கள் மூலமாகப் பொரித்து விளைவிக்க முடியாத [Not Cultured with common media] நூதனமான அரிய ஒருவகைக் கிருமிகள் அவை! சான்றுக் கலன்கள் யாவும் “கிரையோ ஸாம்பிளர்” [Cryosampler] பக்குவத்தில், பூமித் தீட்டுப் படாத [Earth Contamination] முறையில் தூய்மைப் படுத்தப்பட்டவை”.

விண்வெளியில் எந்த விதமான உயிரின வகைகள் நர்லிகர் குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டன? இரண்டு விதமான நுண்ணுயிர் ஜீவிகளுக்குச் சான்றுகள் கிடைத்தன. முதலாவது: மாதிரியுடன் நேர்த்துருவச் சாயங்களைக் [Cationic Dyes] கலந்த போது, வளரும் உயிருள்ள செல்கள் [Living Viable Cells] காணப் பட்டன. இரண்டாவது: நுண்ணுயிர்க் கிருமிகள் குச்சிகள் போல் தோன்றும் பெஸிலஸ், •பங்கஸ் [Staphylococcus Pasteuri (Rod-like Bacillus and Fungus)]. முதல் மாதிரியை நிரூபித்தது, பிரிட்டனில் உள்ள கார்டி•ப் கல்லூரியின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடம் [Molecular Biology Labs of David Lloyd]. இரண்டாவது மாதிரியைச் சோதித்தது, பிரிட்டனில் உள்ள ஷெஃப்பீல்டு ஆய்வுக்கூடம் [Labs in Sheffield by Milton Wainwright].

 

“அந்த அரிய நூதனக் கிருமிகள் எரிக்கற்கள் [Meteorites], அண்டப் பாறைகள் [Celestial Rocks], அண்டங்கள் [Other Bodies], வால்மீன்கள் [Comets] அல்லது சூரிய மண்டல எல்லையைக் கடந்து அமைந்துள்ள ஓர்ட் முகில்கள் [Oort Clouds] போன்ற எவற்றிலிருந்தும் வீழ்ந்ததாக நிச்சயம் இப்போது கூற முடியாது” என்று நர்லிகர் அழுத்தமாகக் கூறினார். “அவை இரண்டும் பூமியிலிருந்து போனவை யல்ல, விண்வெளியிலிருந்து வீழ்ந்தவை என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்” என்றார். “இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், எங்கிருந்து விழுந்தன என்பதை முதலில் அறிய முடிந்தால்தான் அவற்றின் தற்போதைய பௌதிக நிலையை விளக்க இயலும்” என்றும் நர்லிகர் கூறினார். விண்வெளிச் சோதனையில் நர்லிகர் குழுவினர் ஆராய்ந்து வெளியிட்ட “பான்ஸ்பெர்மியா கோட்பாடு” [Panspermia Theory], உலக அரங்கில் உயிரியல் விஞ்ஞானிகளால் முழுவதும் ஒப்புக் கொள்ளப் படாமல், இப்போது கேள்விக்குட்பட்டே இருந்து வருகிறது!

ஜெயந்த் நர்லிகரின் சிறப்பான விஞ்ஞானப் பணிகள்

இந்தியாவுக்குத் திரும்பிய நர்லிகர் அகிலவியல் பற்றியும், வானிவியல் பௌதிகத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றினார். “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியைப்” பயன்படுத்தி, அவர் டாக்டர் பி.கே. தாஸ¤டன் [Dr.P.K. Das of Indian Institute of Astrophysics] உழைத்து “குவசார்ஸின் ஒழுங்கற்ற சிவப்புப் பிறழ்ச்சி” பற்றி [Anomalous Redshifts of Quasars] விளக்கம் தந்தார். பேராசிரியர் அப்பாராவ் [K.M.V. Apparao of TIFR], டாக்டர் என். தாதியிச் [Dr.N. Dadhich of Pune University] ஆகியோருடன் பணி செய்து, பிரபஞ்சத்தின் பிரளயப் போக்கிற்குச் [Violent Phenomena in the Universe] சிறிது காரணியான வெடிப்புச் சக்தியின் களஞ்சியங்களை [Explosive Sources of Energy] “வெண் துளைகள்” [White Holes] என்னும் கோட்பாட்டில் விளக்கம் செய்தார்.

 

1978 இல் பேராசிரியர் சித்ரேயுடன் [S.M. Chitre of TIFR] வேலை செய்து காலாக்ஸிகள் இடையூறாக உள்ள போது, அவற்றின் ஈர்ப்பியல் ஆற்றல், ரேடியோ அலைகளை வளைப்பதை எடுத்துக் கூறினார். பிரபஞ்சத் தோற்ற சமயத்தில் கால-வெளி ஒற்றைப்பாடுகளின் அருகே [In the Vicinity of Space-Time Singularities], குவாண்டம் கொந்தளிப்புகள் [Quantum Fluctuations] நிகழ்வதைப் பற்றி 1977-1985 ஆண்டுகளில் ஆராய முற்பட்டார்.

புனே நகரில் “வானோக்கியல், வானவியல் பௌதிக அகிலப் பல்கலைக் கழக மையம்” [Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA) at Pune] ஒன்றை 1988 இல் பல்கலைக் கழகக் கொடைக் குழு [University Grant Commission (UGC)] நிறுவகம் செய்தது. UGC அதிபதி பேராசிரியர் யஷ் பால் [Professor Yash Pal] ஜெயந்த் நர்லிகரை அழைத்து அதன் ஆணையாளராக [Director] ஆக்கினார்.

ஜெயந்த் நர்லிகர் தான் எழுதிய நூல் ஒன்றில் காலக்ஸிகளும், காலக்ஸி மந்தைகளும் [Galaxies and Clusters of Galaxies] பிரபஞ்சத்தில் எப்படி உண்டாகின்றன என்று விளக்குகிறார். நர்லிகரும் அவரது விஞ்ஞான சகாக்களும் இணைந்து பிரபஞ்சத்தின் விரிவைக் காண, மின்கணனியில் முப்புற “போலியுரு மாடல்” [Computer Simulator 3D Model] ஒன்றை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அந்தப் போலி வடிவில் ஏதாவது சில இடங்களில் புள்ளிகளைக் குறித்து, அவையே தனிதனிச் “சிறு படைப்பு மையமாக” [Mini-Creation Centre] எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

 

அதுவே பிறகு அண்டையில் ஓர் அகிலவியல் நிகழ்ச்சியால் [Cosmic Event] ஒரு புதிய காலக்ஸியை உண்டாக்குகிறது! அம்முறையில் அந்தப் போலியுரு மாடலை அண்ட வெளியில் விரித்துக் கொண்டே போகலாம். ஏனெனில் பிரபஞ்சம் நிலையானதன்று. அது பலூன் போல உப்பிக் கொண்டே விரியும் ஓர் ஒழுங்கற்ற பொரி உருண்டை.

“பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பில் மட்டுமே உருவானதாக [No Single Big Bang] எங்களது போலியுரு மின் கணனி மாடலில் அமைக்கப்பட வில்லை” என்று கூறுகிறார் நர்லிகர். எல்லோரும் உடன்படும் “பொதுவான பெரு வெடிப்பு நியதியை” [Standard Theory] ஏற்காது, மாறுபட்ட “நிரந்தநிலை நியதியைப்” [Steady State Theory] பின்பற்றி வருபவர் நர்லிகர். “அண்டங்களும், பிண்டங்களும் [Planets and Matter], சிறுபடைப்பு நிகழ்ச்சிகளில் [Mini-Creation Events] சிறு சிறு வெடிப்புகளில் [Mini Bangs] உண்டானவை” என்று கூறுகிறார்.

“கனமான ஒரு பேரண்டம் சுழலும் போது, அது சுழலும் ஒரு கருந்துளை போல் [Black Hole] இயங்கி வருகிறது. அவ்விதம் சுழலும் ஓர் அண்டத்துக்கு அருகில், பிண்டம் [Matter] உருவாக்கப் படலாம் என்றும், அது சுழலும் அச்சின் திசையில் வீசி எறியப்படலாம் என்றும் மின்கணினி போலியுரு மாடலில் காட்டுகிறோம். ஆகவே நாமொரு நேர்கோட்டு அமைப்பை [Linear Structure] அங்கே காண்கிறோம். ரேடியோ-காலக்ஸிகளில் காணப்படும் பல ஜெட் வீச்சுகள் இந்த நேர்கோட்டு அமைப்புகளையே வலியுறுத்தும்” என்றும் நர்லிகர் கூறுகிறார்.

 

நர்லிகர் காட்டும் பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்கள்!

ஜெயந்த் நர்லிகர் பிரபஞ்சத்தின் மகத்தான ஆய்வுப் பயணத்தில் கண்ட ஏழு அற்புதங்களைத் தான் எழுதிய ஒரு நூலில் [Seven Wonders of the Cosmos] கூறுகிறார். அது பூமண்டலத்தில் துவங்கி, சூரிய மண்டலக் கோள்களைச் சுற்றி வந்து, அண்டையில் உள்ள காலக்ஸியைக் கண்டு, முடிவில் பிரபஞ்சத்தின் தொடுவான எல்லையைத் தொடுகிறது! ஒவ்வோர் அற்புதப் படைப்பிலும் பிரபஞ்சத்தின் நூதனக் காட்சி ஒன்று அல்லது புதிரான நிகழ்ச்சி ஒன்று சிறப்புத் தோரணமாக எழுந்து நிற்கிறது! அந்நூல் அகிலத் தோற்றத்தின் எழிலைக் காட்டி, அதன் விந்தைத் தொழிலை விளக்கி, படிப்போர் நெஞ்சில் துடிப்பை உண்டாக்குகிறது!

முதல் அற்புதம்: பூமியை விட்டுச் செல்லும் போது, முதல் அற்புத வினா எழுகிறது! “மேற்கிலிருந்து பரிதி மேலே எழுவது நிகழக் கூடிய சம்பவமா? ஒளிவீசும் சூரியன் உள்ள போதே, வானம் இருண்டு போய்விடுமா?” இவற்றுக்கு நர்லிகர் பதில் தருகிறார்!

இரண்டாம் அற்புதம்: விண்வெளியில் காணும் குள்ளி விண்மீன்களையும், பூத விண்மீன்களையும் [Giants & Dwarves of the Star World] பற்றியது. விண்மீன் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றைப் பற்றியது.

 

மூன்றாவது அற்புதம்: ஓர் திரட்சியான விண்மீன் [Solid Star] வெடித்துப் பிரளயப் புரட்சி உண்டாவது.

நான்காவது அற்புதம்: துடிக்கும் விண்மீன்கள் [Pulsars] என்னும் நியூட்ரான் விண்மீன்களைப் [Neutron Stars] பற்றியது. அவை சுழலும் போது, கதிர்த் துடிப்புகளை [Emitting Pulses of Radiation] உமிழ்பவை.

ஐந்தாவது அற்புதம்: ஈர்ப்பியல் ஆற்றலால், பிரபஞ்சத்தில் நேரும் நூதன நிகழ்ச்சிகளைப் பற்றியது.

ஆறாவது அற்புதம்: ஈர்ப்பியல் அழுத்தம் புரியும் சூழ்வெளியில் நடக்கும் மாயையான தோற்றங்கள்.

ஏழாவது அற்புதம்: இறுதியான அற்புதம் பிரபஞ்சத்தின் முழுமையான, மகத்தான, முடிவற்ற பெருவிரிவு! நர்லிகர் இவ்விதம் விந்தையான பிரபஞ்சத்தின் மர்மங்களையும், புதிர்களையும் இனிதாக எடுத்துக் காட்டுவதில் பெரும் வெற்றி பெறுகிறார். இத்தனை பக்கங்களையும் படித்து விட்டு, இன்னும் பிரபஞ்சம் புரியாத புதிராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் மர்மமான பிரபஞ்சமே! அந்நூலை எழுதிய ஆசிரியர், நர்லிகர் அன்று!

 

நர்லிகர் எழுதிய நூல்கள், பெற்ற வெகுமதிகள்

ஜெயந்த் நர்லிகர் நியதிப் பௌதிகம் [Theoretical Physics], வானவியல் பௌதிகம் [Astrophysics], அகிலவியல் [Cosmology] ஆகிய துறைகளுக்குத் தனது உன்னத படைப்புகளை அளித்துள்ளார். சிறப்பு மிக்க நுணுக்கமான விஞ்ஞானப் படைப்புகளை ஆக்கிய நர்லிகர், விஞ்ஞானத்தைப் பரப்பும் மேடைப் பேச்சாளராகவும், எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். நர்லிகர் 55 நூல்களும், 200 மேற்பட்ட முழு நுணுக்கக் கட்டுரைகளும், 300 அரை நுணுக்கக் கட்டுரைகளும், விஞ்ஞானப் புனை நாவல்களும் இதுவரை எழுதியுள்ளார்.

அவருக்குக் கிடைத்த மதிப்புப் பதக்கங்களும், பட்டங்களும், பரிசுகளும் அநேகம்: பட்நாகர் பரிசு [Bhatnagar Award for Physical Sciences (1978)], ராஷ்டிர பூஷண் மதிப்பு [FIE Foundation’s Rashtrabhusan Award (1981)], பிர்லா பரிசு [B.M. Birla Award (1993)], இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ஃபெல்லோ [Fellow of the Indian Academy of Sciences], கேம்பிரிட்ஜ் வேதாந்தக் குழுவின் ஃபெல்லோ [Fellow of the Cambridge Philosophical Society], இந்திய ஜனாதிபதியின் பத்ம பூஷண் மதிப்பு [Padmabhusan by the President of India (1965)]. இந்திரா காந்தி இந்திய விஞ்ஞானக் கழகத்தின் பரிசு [Indira Gandhi Award of the Indian National Science Academy (1990)], ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானப் பண்பாட்டுப் பரிசு [UNESCO Kalinga Award (1996)].

 

2003 ஜூன் 20-22 இல் பாபா அணுசக்தி ஆய்வுக் கூடம் [BARC] புனே IUCAA நிறுவகத்திலிருந்து ஜெயந்த் நர்லிகர் ஓய்வெடுக்கும் சமயம், “மனிதனும், பிரபஞ்சமும்” [Man and the Universe] என்னும் ஓர் விஞ்ஞானச் சொற்பொழிவுப் பேரரங்கை மொம்பையில் அமைத்து அவருக்கு ஓய்வு மதிப்புவிழா நிகழ்த்தியது. அந்த விழாவில் முன்னாள் பல்கலைக் கழகக் கொடைக் குழுவின் [UGC] அதிபதி பேராசிரியர் யஷ் பால், IUCAA இன் விஞ்ஞானி டாக்டர் அஜித் கெம்பாவி போன்றோர் நர்லிகரைப் பற்றி உரையாற்றினர்கள். அறுபத்தியைந்து வயதாகும் [2003] ஜெயந்த் நர்லிகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, பாரதத்தில் மாந்தரிடையே விஞ்ஞானச் சிந்தனா விதைகளைப் பரப்பி, மகத்தான விஞ்ஞானப் பணிகளைச் செய்து வருவார் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

*******************

Dr. Jayanth Narlikar’s Books:

1. An Introduction to Cosmology
2. From Black Clouds to Black Holes
3. Seven Wonders of the Cosmos
4. The Lighter Side of Gravity
5. The Primeval Universe
6. The Structure of the Universe
7. Violent Phenomena in the Universe

********************

தகவல்:

1. The Seven Miracles of the Universe By: Dr. Jayanth Narlikar [German By Helmut Mennichan (June 2001)]
2. If the Big Bang were one Fable [After the passing of Fred Hoyle] Italian Web (August 21, 2001)
3. Biography of Dr. Jayanth Narlikar, Comcom Magazine [www.vigyanprasar.com/comcom/jvn-bio.htm]
4. The Rediff Interview /Jayanth Narlikar [www.rediff.com/news/2002/nov/16inter1.htm] (Nov 2002)
5. Recommendation for the Award of Doctor of Science: Prof Jayanth Narlikar
6. Goa Web News: Astronomer Dr. Fred Hoyle By: Nandakumar Kamat [Aug 2001]
7. Dr. Fred Hoyle, Cadiff University [www.cf.ac.uk/maths/Wickramasinghe/hoyle.html]
8. Micro-organisms in Space -The Vindication of Panspermia Paper I & II, SEM Imaging of Stratospheric Particles of Non-terrestrial Origin By: Walls, Al-Mufti, Wickramasinghe, Rajaratnam and Narlikar [www.astrobiology.cf.ac.uk/cultured.html] [September 10, 2002]
9. The Lighter Side of Gravity By : Jayant Narlikar (1996)
10. Spectrum : Icons from the World of Science By : S. Ananthanarayanan (July 18, 2004)
11. In Search of Extra-terrestrials (www.rediff.com) Rediff Interview of Jayant Narlikar (Nov 16, 2002

******************

Dr. Jayant Narlikar Works :

Besides scientific papers and books and popular science literature, Narlikar has written science fiction, novels, and short stories in English, Hindi, and Marathi. He is also the consultant for the Science and Mathematics textbooks of NCERT (National Council for Educational Research and Training, India).

1. Current Issues in Cosmology, 2006
2. A Different Approach to Cosmology : From a Static Universe through the Big Bang towards Reality, 2005
3. Fred Hoyle’s Universe, 2003
4. Scientific Edge: The Indian Scientist from Vedic to Modern Times, 2003
5. An Introduction to Cosmology, 2002
6. Quasars and Active Galactic Nuclei : An Introduction, 1999
7. From Black Clouds to Black Holes, 1996
8. Seven Wonders of the Cosmos, 1995
9. Philosophy of Science: Perspectives from Natural and Social Sciences, 1992
10. Highlights in Gravitation and Cosmology, 1989
11. Violent Phenomena in the Universe, 1982
12. The Lighter Side of Gravity, 1982
13. Physics-Astronomy Frontier (co-author Sir Fred Hoyle), 1981
14. The Structure of the Universe, 1977
15. Creation of Matter and Anomalous Redshifts, 2002
16. Absorber Theory of Radiation in Expanding Universes, 2002

++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 12, 2009 (Revised R-1)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.