ஹீரோ ஆகலாமா நாமும் ?
பவள சங்கரி
தலையங்கம்
ஜீன் 14, 2012 இன்று உலக இரத்த தான தினம். 1901ல், கார்ல் லெண்டினர் என்ற ஆஸ்திரிய மருத்துவர், A B O என்ற முதல் மூன்று வகைப் பிரிவுகளைக் கண்டுபிடித்தார். அவருடைய பிறந்த தினமான ஜீன் 14 “உலக இரத்த தான தினமாக” கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1ம் தேதி இந்தியாவில், ‘தேசிய இரத்ததான தினம்’ கொண்டாடப்படுகிறது.
உலகளவில் இத்தினத்தைக் கொண்டாட வேண்டியதன் முக்கிய நோக்கம் இரத்ததானம் வழங்குபவர்களுக்கு நன்றி செலுத்துவதோடு மேலும் பலரை ஊக்குவிக்கும் பொருட்டே ஆகும். உலகில் நவீன தொழில்நுட்பங்கள் பல வகையில் முன்னேறியுள்ள போதிலும் இரத்தத்துக்கு ஈடாக வேறு எந்த ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. இரத்தம் தேவைப்படுவோருக்கு இரத்தம மட்டுமே வழங்க வேண்டும். இல்லையென்றால் நோயாளி உயிரிழக்க நேரிடும்.
ஒவ்வொரு ஆண்டும், உலகின் அனைத்து பாகங்களிலும் இந்த இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இலவச கால்பந்தாட்டப் போட்டி நிகழ்ச்சி முதல் கைபேசியில் இரத்த தானம் செய்வதால் நீங்கள் காதாநாயகர் ஆகிறீர்கள் என்ற செய்தியை பரவச் செய்வது, இரத்ததான முகாம்கள் மற்றும் அலங்கார நினைவுச்சின்ன வளைவுகள் வைப்பது போன்ற செயல்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
இனம், மதம், மொழி போன்ற எந்த பாகுபாடுமின்றி உலகம் முழுவதும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளும் ஒரே தானம் இரத்ததானம்தான். இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில் மருத்துவத்துறை அடைந்துள்ள முன்னேற்றத்தின் காரணமாக உடல் உறுப்பு தானம் , குருதி திரவ இழைய தானம், போன்றவைகளும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. . இந்த வெற்றிக்குரிய முக்கியமான காரணம் மக்களிடம் உள்ள மனித நேயமும், விழிப்புணர்வும்தான்.
சாதாரண எடையுள்ள ஒரு ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது இதில் 300 முதல் 350 மி.லி அளவு இரத்தம் மட்டுமே பெறப்படுகிறது. அவ்வாறு கொடுத்த இரத்தம் இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவின் மூலமாகவே மீண்டும் உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்தவித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். 17 முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான எவர் வேண்டுமானாலும் இரத்ததானம் செய்ய முடியும்.
உலக சுகாதார மையம் இந்த ஆண்டு, தன்னார்வத் தொண்டுள்ளத்துடன், உடனடித் தேவைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும், நிபந்தனையும் எதிர்ப்பார்ப்பும் இன்றி, இரத்ததானம் செய்பவர்கள் கதாநாயகர்கள் என்ற கருத்துடன் இந்த இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை முன்னிறுத்தியிருக்கிறது. பல ஆண்டுகளாக பல முறைகள் இது போன்று எந்த ஆதாயமும் இல்லாமல் ஒரு உயிரைக் காக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் மட்டுமே கொண்டு கதாநாயகர்காளாக வாழ்பவர்கள் பலர் என்கிறது உலக சுகாதார மையம்.
ஒவ்வொரு நாடும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட, அவசியமான உடனடித் தேவைகளுக்குப் போதுமான அளவில் பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான இரத்த சேவை, தன்னார்வத் தொண்டர்களின் மூலம் பெறும்படி ஏற்பாடு செய்துள்ளது. 2008ல், 62 நாடுகளில் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இரத்த சேமிப்பு மற்றும் விநியோகங்கள் கணினிமயமாக்கப்பட்டதால் பல முன்னேற்ற இலக்குகளையும் எட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நான்கு கோடி யூனிட் இரத்தம் நம் நாட்டிற்கு மட்டுமே தேவைப்படுகிறது. அதில் மிகக் குறைந்த அளவான 40 இலட்சம் யூனிட் மட்டுமே கிடைக்கிறது. இரத்த தானம் என்பது உயிர் தானம். மனித இரத்தத்திற்கு மாற்றாக உலகில் வேறு ஏதுமில்லை. இரண்டு நொடிக்கொரு முறை யாரோ ஒருவர் இரத்த தேவையில் இருக்கிறார். 38000 க்கும் அதிகமான இரத்த தானங்கள் தினமும் தேவைப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் இரத்த அணுக்கள் மாற்றியமைக்கப்படுகிறது மருத்துவமனைகளில் அதிகமாக தேவைப்படும் இரத்த வகைகள் O குரூப். ஒவ்வொரு ஆண்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புதிதாக புற்று நோயினால் தாக்கப்படுவது கண்டுபிடிக்கப்படுகிறது. அதில் பலருக்கு கீமோதெரபி சிகிச்சையின் போது தினசரி இரத்தம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது..ஒரு கார் விபத்தில் பாதிக்கப்பட்டவருக்குக்கூட சாதாரணமாக 100 யூனிட் இரத்தம் தேவைப்படுகிறது.
இரத்தம் தயாரிக்க முடியாது. தானம் மட்டுமே பெற முடியும். O-negative என்ற வகை இரத்தம் (சிவப்பணுக்கள்) மட்டுமே அனைத்துப்பிரிவு இரத்தம் உள்ளவர்களுக்கும் மாற்றவல்லது. ஆனால் இது மிகவும் கிடைத்தற்கரியதாகவே உள்ளது. பல நேரங்களில் மிகக் குறைந்த அளவே கிடைக்கிறது…AB-positive வகை பிளாஸ்மா பொதுவாகவே குறைந்த அளவிலேயே கிடைக்கிறது.
இரத்ததானம் என்பது பாதுகாப்பான ஒரு செயல் திட்டம். நன்கு காய்ச்சப்பட்ட ஊசி மட்டுமே ஒருவருக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இரத்த தானம் செய்பவரின் பாதுகாப்பு கருதி.. முதலில் சிறு மருத்துவப் பரிசோதனை, இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை சோதிக்கப்படுகிறது.
இந்த முழு செயலுக்கும், 1 ம்ணிநேரமும் 15 நிமிடங்களும் மட்டுமே ஆகும். இரத்தம் கொடுக்க 10 முதல் 12 நிமிடங்கள் மட்டுமே ஆகும்..
ஒரு சாதாரணமான மனிதரின் உடலில் 10 யூனிட் இரத்தம் இருக்கிறது. ஒரு முறை தானம் செய்வதற்கு ஏறக்குறைய ஒரு யூனிட் இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் சிவப்பு அணுக்களை ஒவ்வொரு 56 நாட்களுக்கொரு முறை கொடுக்கலாம். ஆரோக்கியமான ஒருவர் பிளேட்லெட்ஸ் 7 நாட்களுக்கொரு முறை, ஆனால் வருடத்திற்கு அதிகபடசமாக 24 முறைகள் மட்டுமே கொடுக்கலாம். தானமளிக்கப்பட்ட அனைத்து வகை இரத்தங்களும் எச்.ஐ,வி, ஹிபேடிடிஸ், பி மற்றும் சி காச நோய் போன்ற மற்ற தொற்று நோய்களுக்கான பரிசோதனைகளும் செய்யப்பட்ட பின்பே நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது.
ஒருவர் ஒரு முறை தானம் செய்வது மூலம் மூவரின் உயிரைக் காக்க முடியும். 18 வயதில் ஒருவர் இரத்ததானம் கொடுக்க ஆரம்பித்தால் ஒவ்வொரு 90 நாட்களுக்கொரு முறை கொடுக்கும் பட்சத்தில் 60 வயதிற்குள் அவர் 30 கேலன் இரத்தம் கொடுத்து, 500 பேரின் வாழ்க்கையைக் காப்பாற்றியவர் ஆவார்.
இந்தியாவில் 7 சதவிகிதம் மக்கள் மட்டுமே O-negative வகை இரத்தம் உள்ளவர்கள். இந்த வகை இரத்தம்தான் அவசர சிகிச்சையின் போது, நோயாளிகளின் இரத்தம் வகை கண்டறியக்கூட நேரமில்லாத அபாயக்கட்ட சிகிச்சையின் போதும், பிறந்த குழந்தைக்கு இரத்தம் செலுத்த வேண்டி வரும்போதும், தேவைப்படுகிறது.
மனிதருக்கு A, B, AB மற்றும் O.என்ற நான்கு வகை இரத்தங்கள் உண்டு.
O+ 3ல் ஒருவருக்கும் O-15ல் ஒருவருக்கும்
A+ மூன்றில் ஒருவருக்கும் A- 16ல் ஒருவருக்கும்.
B+ 12ல் ஒருவருக்கும் B- 67ல் ஒருவருக்கும்
AB+ 29ல் ஒருவருக்கும் AB- 167ல் ஒருவருக்கும் இருக்கின்றது.
போக்குவரத்து விபத்தினால் பாதிக்கப்பட்டவருக்கு 50 யூனிட் இரத்தமும், இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்பவருக்கு 6 யூனிட் இரத்தமும், உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைக்கு 40 யூனிட் இரத்தமும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சைக்கு 20 யூனிட் இரத்தமும், 6ம் நிலை வெந்த புண் நோயாளிகளுக்கு 20 யூனிட் இரத்தமும் தேவைப்படுகிறது.
இரத்ததானம் என்பது மனித் நேயத்தின் முழுமையான வெளிப்பாடு. இது ஒரு ஈடு இணையற்ற, மதிப்பிட இயலாத பெருந்தானமாகும். தேவையுள்ள ஒரு மனிதருக்கு செய்யக்கூடிய பேருபகாரமாகும்.