அவ்வை மகள்

ஈயகப் பண்டம் நோக்கி ஈக்கள் போல் ஓடும் குழந்தைகள் 

உடலின் ஈரப்பதம் காக்கப்பட வேண்டுமேன்றால், குழந்தைகளுக்கு உறுதியான உணவு வகைகள் தரப்பட வேண்டும் எனப் பார்த்தோம். உமிழ் நீர் சொரிய, வாயில் அரைத்து மசிக்கப்பட்டு, உணவுப் பையை அடைந்த பின்பு குடிக்கப்படுகிற நீரில், நீராற்ப் பகுத்தல் (hydrolysis) அடைந்து, சிதைக்கப்பட்டு, செரிமானம் அடைந்து குடலில் உட்கிரகிக்கப்படும், திடமான உணவுகளே சிறந்த உணவுகள். ஏனெனில் அவை செரித்த நிலையில் மட்டுமே சர்க்கரைச் சத்தை வெளியிட்டு அதன் மூலம் ஆற்றலை வெளியிடுகின்றன.

அரிசி இவ்வகையிலே மிகச் சிறப்பான உணவு மூலம். ஒன்பதாயிரம் ஆண்டுகளாக அரிசி புழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது என்றால் அதன் தொன்மையை என்னென்பது? உலகின் பல இடங்களில் “சாப்பிடுவது” என்றால் அது அரிசியாலான உணவை உண்ணுவது என்று மட்டுமே பொருள். ஆசியக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் ஒரு நபர் ஒரு ஆண்டுக்கு 80 கிலோ அரிசியை உண்ணுகிறார்.

Cereal எனப்படும் தானிய வகைகளில் தலை சிறந்தது அரிசி. பிற தானியங்களான மக்காச் சோளம், கோதுமை, சோயா போன்றவை அரிசியை ஒத்தப் பயன்பாட்டுக்கு உகந்த்தவையாகச் சொல்லப் பட்டாலும், இவ்வுலகில் அநேகம் பேருக்கு அவை ஒவ்வாமையை உண்டாக்கும் தன்மையனவாய் இருப்பதாககக் கூறப்படுகிறது. மேலும், இவை பலருக்குச் செரியாமை உபத்திரவத்தையும் தருகின்றன. பிற தானியங்களுக்கு இல்லாத பல மருத்துவ குணங்களும் அரிசிக்கு இருப்பதாக அறிகிறோம்: மார்பக மற்றும் குடல் புற்று நோய் உண்டாகாதவாறு காக்கவல்ல பீனாலிக்ஸ் (phenolics) மூலக் கூறுகள் அரிசியில் மிகுந்திருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. அது போன்றே, அரிசியை உணவாக உட்கொள்ளுபவர்களுக்கு இரத்த நாளங்களில் படிந்து தொந்திரவு செய்யும் கொலஸ்ட்ரால் உபத்திரவம் எழுவதில்லை எனவும், இதயக் கோளாறுகள் உண்டாவதில்லை எனவும், அரிசி உணவை உட்கொள்பவர்கள் உடல் பருமன் அடைவதில்லை எனவும் உலகின் தலை சிறந்த ஆய்வு ஏடுகள் பறை சாற்றுகின்றன.

உணவு, மருத்துவம், பாரம்பரியப் பழக்கம், ஆகிய மூன்று வகைகளிலும் நாம் அறிகின்ற வகையில், ஆஸ்த்மா எனும் மூச்சு இளைப்பு வியாதி மிகப் பெரும்பாலும் உணவு ஒவ்வாமையால் எழுகிறது என்பதையும், கோதுமை, மைதா, கடலை மாவு, ஆள் வள்ளிக் கிழங்கு மாவு ஆகியவற்றால் செய்த உணவுப் பண்டங்களை அதிகமாக உட்கொள்ளுபவர்கள், உணவு மண்டலக் கோளாறுகளுக்கு இலக்காவதோடு மட்டுமல்லாது மூச்சு மண்டல வியாதிகளுக்கும் இலக்காகிறார்கள் என்பதே .

அரிசியின் பெருமையைப் பற்றிப் பேசிக்கொண்டே போகலாம். பதினெட்டாயிரம் நோயாளிகளை அரிசி உணவு கொண்டு குணப்படுத்திய உலக அதிசயத்தை நிகழ்த்தியவர் வால்ட்டர் கெம்ப்னர் எனும் அமெரிக்க மருத்துவர் (பிறப்பால் ஜெர்மானியர்), டூக் பல்கலைக் கழக மருத்துவப் பேராசிரியரான கெம்ப்னர் அரிசியை உணவாக உட்கொள்ளுபவர்களுக்கு உடல் நலப் பிரச்சனைகள் உண்டாவதில்லை என ஆணித்தரமாக நிரூபித்ததோடு மட்டுமல்லாது. இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரை வியாதி பீடித்த நோயாளிகளை Rice Diet (http://www.cap-press.com/pdf/2176.pdf) எனப்படும் அரிசி, காய்கறி, வாழைப் பழம் மட்டுமே கொண்ட உணவு மூலமாக எவ்வித மருந்தும் இன்றி குணப்படுத்த முடியும் என்று பதிவு செய்திருக்கிறார். கடுமையாய் உழைப்பவர்களுக்கு அரிசி உணவு மட்டுமே தளராத ஆற்றல் தந்து பலமாய் வைப்பது என்பதையும், அரிசி உணவை உட்கொள்ளுபர்களுக்கு வயது மூப்பு ஏற்பட்டாலும் முதுமைப் பிரச்சனைகள் அடைவதில்லை என்பதும் கெம்ப்னர் கண்டுபிடுத்து பதிவு செய்துள்ள விஷயங்களில் முக்கியமானவை. இன்று “Rice Diet” உலகப் பிரசித்தி.

குடல்-மலக்குடல் புற்று நோயால் அவதியுறும் நபர்களில் உலகின் அதிக எண்ணிக்கையைக் கொண்ட அமெரிக்க நாட்டில், இக்கொடிய நோய் வாராமல் தடுக்க வேண்டுமானால், அதற்கு அரிசி உணவு மட்டுமே வழி எனும் விழிப்புணர்வு ஏற்பட்டு, மக்கள் அரிசியை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்திற்கு/யோசனைக்கு மாறி வருகிறார்கள். அது போன்றே, ஆஸ்த்மாவால் அவதியுறும் குழந்தைகளுக்கு, அரிசி உணவு மட்டுமே புகட்டும் பழக்கமும் இங்கு அதிகரித்து வருகிறது.

நிலைமை இவ்வாறிருக்க, நாமோ அரிசி உணவிலிருந்து வெகு தூரம் விலகி வந்து விட்டோம். உலகுக்கே முதன்மையான பாரம்பரிய ஞானத்தைக் கொண்ட ஒரு நாட்டில், சில பலமான மருத்துவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அரிசி உணவை துவேஷம் செய்ததாலும், துரித உலகம் உதயமாகி, வாணிகப் போக்கில், மக்களைக் கவர்ச்சி காட்டி, மதிமூடம் செய்யும், ஜிகினாக் காட்சிகள் நிலை பெற்றதாலும், நாம் அரிசியின் மாட்சிமையை, மறக்கலானோம்.

புன்செய் நிலங்கள் புனர்வாசனை மாறி, குடியிருப்புக்கள் ஆக, பச்சைப் பசேலென்ற கிராமங்கள் அழிந்து, நகர நரகங்கள் விரிந்து, எட்டடிக்கூடுகளில், மக்கள், ஒண்டுக் குடித்தனம், செய்ய ஆரம்பித்த வாகில், சொந்தமாய்ப் பட்சணங்கள் செய்து உண்ணும் போக்கு, காலப் போக்கில், காணாமலே போனது!! தின்பண்டமென்றால் அவற்றைக் கடைகளில் மட்டுமே வாங்கி உண்பது என்பதாக ஒரு சமுதாயமே மாற்றுப் பாதையில் போகலானது. இந்தக் கவர்ச்சி உலகம் தொய்யாது, நில்லாது, திரும்பிப் பாராது தொடர்ந்து போனது மாற்றுப் பாதையில்!, காரணம், மக்கள் தொகை அமைப்பில் ஏற்பட்ட மாறுதல், நிறையக் குழந்தைகள்!!

நவபாரதம் யுவ பாரதமாக, உருவெடுத்த ஏற்பாடு விளைத்தது, பள்ளிகளின் காளான் முளைப்புகள், என்றால், பள்ளியைச் சுற்றி வீட்டைச் சுற்றிப், புதுப் புதுப் பலகாரக் கடைகள் முளைத்த தொடர் நிகழ்வு, பெருவாரியான எளிய பெற்றோர்களின் புத்துணர்வுப் பிரயத்தனங்கள் அதன் தொடர் விளைவு!! உயிருக்கும் மேலான தம் குழந்தைகள் இன்ன பிறரது குழந்தைகளைப் போல மார்டனாக உடுத்தி, மார்டனாக நடை நடந்து, மார்டனாக வளர வேண்டுமென்ற உந்துதல் இந்த எளிய பெற்றோர்கள் தம் குழந்தைகள் இன்ன பிறரது குழந்தைகளைப் போல, மார்டனாக, உண்ண வேண்டும் என்பதிலும் நிலைத்தது.

இதற்குத் தோதாக அமைந்தது, தாய்மார்களும் வேலைக்குப் போக ஆரம்பித்த பாங்கு. வேலைக்குப் போகாகாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது டிவியில் சீரியல் பார்த்தாக வேண்டிய நிர்ப்பந்த நெருக்கடி, காலையிலும் மாலையிலும் பள்ளிக்குச் சென்று, குழந்தைகளைக் கொண்டு விட்டுக் கூட்டி வர வேண்டியதால் (இன்னபிற தாய்மார்களைப் போல) செய்து கொள்ள வேண்டிய உடுப்பு மற்றும் அலங்கார ஏற்பாடு!!

இந்த நிர்ப்பந்தங்களில் அவர்கள் வசப்பட்டது ஊடக விளம்பர சாகசங்களில், பள்ளிக் குழந்தைகளை வைத்தே, கல்வியை வைத்தே, பல விளம்பரங்கள் வெளி வந்தன, உணவு வகைகளில், பலப்பல மோஸ்தர்கள் உண்டாகின. வார, இரு வார, மாதப் பத்திரிகைகளும் கூட, புதுப் புது, உணவு வகைகளைப் போதிக்கலாயின, பெரும்பாலான அம்மாக்கள், பாட்டிகள், மாடர்ன் ஆயினர். ஊற வைத்து, உலர்த்தி, இடித்து, அரைத்து, அதன் பின், பிசைந்து, உருட்டி, தட்டி, என்பதான, உணவுத் தயாரிப்பு முறைகள் நாகரீகம் அல்லாத செயல்பாடுகள் ஆகின.

தெருவோரப் பெட்டிக் கடைகளில் அடைக்கலம் ஆனது பெற்றோருடன் குழந்தைகளும்தான்.

குழந்தைகள் கல்விப் பொருட்களுக்காவும், தின்பண்டங்களுக்காகவும், கடைகளில் அதிக அளவு காணப் படலாயினர். சொல்லப் போனால் குழந்தைகள் இந்தச் சமுதாயம் முன்னெப்போதும் காணாத வகையில் கடைகளில் ஆஜரானார்கள். இவர்களது வரவை நல்வரவாக மூலதனம் செய்து கொண்டது வியாபர உலகம்.

பல்லை முழுமையாக உபயோகப் படுத்தினால் ஒழிய உடைய மாட்டாத சீடை வாயில் இட்ட உடனே கரைந்தது. அழுத்தி உடைத்தால் மட்டுமே உடையும் என்ற முறுக்கு விரல்களுக்கு இடையே அனாயாசமாக நொறுங்கியது, ஓட்டைக் கடித்த கதையாய்க் கடித்து உடைக்க வேண்டிய ஒட்டடை, கையில் எடுத்து வேகமாக வீசினால் உதிர்ந்தது. இவ்வாறே, இவ்வாறே எல்லாமும் எல்லாமும்!

ஏதேதோ தின்பண்டங்கள், பானங்கள் கடைகளில் உதித்தன புதுப் புதுப் பெயர்களில், பலப் பல வண்ணங்களில், பலப்பல, சுவைகளில், புதுவித வாசனைகளில்!!

இவற்றில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அரிசியைத் தவிர, பிற மாவுகளால் செய்யப்பட்ட ஒவ்வாமை நிறைந்த, வேதிப் பொருட்கள், தாராளமாய்க் கலந்த தின்பண்டங்களே இங்கு கிடைத்தன என்பதே!

சமீப காலத்தில் கடைகள் குட்டிப் போட்டதைப் போல வேறு எந்த மிருகமும் குட்டிப் போட்டிருக்காது. இவ்வாறான பெரும்பாலான கடைகள் பள்ளிகளை ஒட்டியே எழுந்தன என்பது குறிப்பிடத் தக்கது. மொத்தத்தில் குழந்தைகள் கல்வி எனும் சரக்கால் சர்க்கஸ் மிருகங்களாயினர். அவர்களை வசியப்படுத்தி விட்டால் எல்லாம் நடந்து விடும் என்கிற சூத்திரம் அறிந்த வணியத் தெருக்களாய், பள்ளித் தெருக்கள் அமையப் பெற்றன.

பள்ளி வாசலின் இரு மருங்கும், ஈ மொய்க்கும் தின் பண்டங்கள் பளிங்கரமாக விற்கப்பட்டன. இதனைப் பள்ளிகள் தடுக்கவில்லை. இப்பொருட்களைத் தம் பள்ளிக் குழந்தைகள் வாங்கி உண்பதைக் கண்டும் வாளாவிருந்து வேடிக்கைப் பார்க்கும் ஆசிரியப் பெருந்தகைகள், பள்ளிப் பெருந்தலைகள், அரசியல் துண்டுகள், கரை வேட்டிகள், வட்டங்கள், மாவட்டங்கள், கல்வித்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள், ஆட்சியாளர்கள்!! இவர்கள், இராமாயணம் வாசித்துக் கொண்டே பெருமாள் கோயிலை இடிக்கிற முறை, கல்வியில் மாபெரும் அவமானம்.

பள்ளியை ஒட்டி உடல் நலக் கேட்டை உண்டு பண்ணும் தின்பண்டங்கள் மட்டுமா விற்கப்படுகின்றன? கஞ்சா, அபினி உள்ளிட்ட போதைப் பொருட்களும், லாகிரி வஸ்துக்களும், புகையிலைப் பொருட்களும் கூட இங்கு சுலபமாகக் கிடைகின்றன என்பதை அறியும் போது நெஞ்சு பதைக்கின்றது.

உணவுப் பொருட்களுக்காகவும், தண்ணீர்ப் பாக்கெட்டுகளுக்காகவும், கல்விப் பொருட்களுக்காகவும் கடைகளை நாடும் குழந்தைகள் பிற மூத்த குழந்தைகளாலும், கடை வியாபாரிகளாலும், கடைகளுக்கு வரும் இன்னபிற நபர்களாலும் வெகு ஏளனமாகக் கையாளப்படும் காட்சியும் இங்கு சர்வ சாதாரணம்.

கல்வி நிறுவனங்கள் பொறுப்பாய் நடந்து கொள்பவைகளாக இருந்தால் இந்த அவலங்கள் சமுதாயத்தில் எழ வாய்ப்பில்லை.

பள்ளிகள் என்றால் அங்கே வயிற்றுக்கும் ஈயப்படும் என்று உலகுக்கே முன்னோடியான வகையில் பள்ளியில் உணவுத் திட்டத்தை ஏற்படுத்திய காமராசரை உலகம் முழுதும் உள்ள பள்ளிகள் ஏத்தித் தொழுகின்றன. ஆனால், அவர் செய்த ஏற்பாடாம் நமது பள்ளிகள் எனும் ஆலயங்கள்!! இவை அனைத்திலும் மடைப் பள்ளிகள் இல்லை.

ஈயகப் பண்டம் நோக்கி ஈக்கள் போல் குழந்தைகள் ஓடும் மடைமைகள் வளர்க்கும் தலங்களா பள்ளிகள்?

மேலும் பேசுவோம்..

 

படத்திற்கு நன்றி: http://www.robinage.com/articles.do?action=show&id=118

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *