சு. கோதண்டராமன்

எறும்புடன் கரப்பானும் ஈயொடு கொசு யாவும்

இருந்தாலே தொல்லையென எய்துகிறோம் நாசினியை,

ஆரோக்ய வாழ்வுக்கு அடிகோலும் அதுவென்று.

 

பயிரழிக்கும் ஆடுகளைப் பசுக்களுடன் மான்களையும்

உயிரழித்து உண்கின்றோம் ஒரு சிறிதும் தயங்காமல்,

பாரோர் பசி தீர்க்கப் பாங்கான வழி என்று.

 

நாட்டுக்குள் வந்து நாசம் விளைக்காமல்

காட்டு விலங்குகளைக் கண்டவுடன் சுட்டிடுவோம்,

அச்சமின்றி வாழ அது ஒன்றே வழி என்று.

 

நம் நாட்டுக் கொடி உயர நமதன்னை புகழ் பெறவே

பன்னாட்டுப் பகைவரையும் படையெடுத்து மாய்க்கின்றோம்.

நாட்டுப் பற்றில்லையெனில் நாயினும் கீழன்றோ?

 

தன் மொழியார் தன்னினத்தார் தன் சாதி உயிர் வாழ

தருகின்றோம் உடல் பொருளும் ஆவியும் துணிவுடனே

இன உணர்வு இல்லையெனில் இழிவு நமக்கென்று.

 

அண்டையில் இருப்பவர் அழிந்திட்டால் பட்டினியால்

மண்டையில் எழுதியதால் மாய்கின்றார் அவர் என்போம்.

தனக்கு மிஞ்சியே தானமும் தருமமும்.

* ***************************************************** *

அன்பு வட்டம் வரவரவே சிறிதாய் ஆகி

நானென்னும் புள்ளியாய்ச் சுருங்கல் நன்றோ?

 

சூழ்ந்ததெல்லாம் கடவுளெனச் சுருதி சொல்லும்

நிச்சயமாம் ஞானத்தை நெஞ்சில் ஏற்போம்

 

முல்லைக்குத் தேரீந்த முன்னோன் கொடையும்

பறவைக்குத் தனையீந்த சிபியின் மனமும்

வாடுகின்ற பயிர் கண்டு வாட்டம் கொண்ட

வள்ளல் பிரான் வாழ்வும் நாம் தினமும் ஓர்வோம்.

படத்திற்கு நன்றி:

http://suddhasanmargham.blogspot.in/2012_02_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நான்

  1. சுயநலமாகி விட்டனர் மனிதர்.  உலகத்தின் எல்லா உயிர்களுக்காகவும் பயிர்களுக்காகவும் பாடியிருக்கும் பாடல் அருமை.

  2. பாராட்டுகளுக்கு நன்றி
    கோதண்டராமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *