சிதைக்கப்பட்ட நகரம் (பாகம்-3)

4

ஷைலஜா

கிருஷ்ண தேவராயர் ஆமுக்த மால்யதா(சூடிக்கொடுத்த மாலை) என்று ஆண்டாளின் வாழ்க்கையைக் காவியமாக எழுதினார். அவரது அரசவையில் நவரத்தினக் கவிஞர்கள் இருந்தனர்.

ஹம்பியை அவர் தலைநகரமாகக் கொண்டதற்குக் காரணம் அதன் பாதுகாப்பு மலைகள் சூழ்ந்த பிரதேசம், நதிகள், அதற்கு உதவிய அரண்கள்.

மக்களைக்கவரும் மன்னர்கள் தர்மத்தினை மீறாதவர்களாய் இருந்த காலத்தில் நாடு செழித்தது. சாஹித்யம், நடனம், சித்திரக்கலைகள் வளர்ந்தன. நூற்றுக்கணக்கானக் கோயில்கள் உருவாயின. அடிப்படையில் வைணவராய் இருந்தாலும் கிருஷ்ண தேவராயர், விருபாஷர்(சிவன்) கோயிலைக்கட்டியது போல சிறந்த சிவபக்தராய் இருந்த ஹிம்மாடி தேவராயர் விஜய் விட்டலர் கோயிலைக்கட்டினார்.

விஜய நகர சாம்ராஜ்ஜியத்தின் செழித்த நிலையைப் பார்வையிட்ட பல அயல்நாட்டு யாத்திரீகர்கள் உலகிலேயே அழகிய நகரம் ரோம் நகரம் போன்று அகன்ற நகரம் என்றும், உலகிலேயே இதைப்போன்ற அழகிய செல்வச்செழிப்பான நகரைக்கண்டதில்லை என்றும் குறிப்புகள் எழுதி வைத்துள்ளனர்.

எவராலும் வெல்ல முடியாத விஜய நகரப்பேரரசைத் தட்சிணச் சுல்தான்கள் ஒன்று சேர்ந்து ஹம்பியின் அருகில் உள்ள ஜலாரிகோட்டா என்னும் இடத்தில் வெற்றி கொண்டனர்.

வெற்றியோடு நிற்காமல் கலைப்பொக்கிஷங்களையும் உடைத்து நிர்மூலமாக்கிச்சென்றனர். பேரழிவு இங்குதான் ஆரம்பமானது.

கிருஷ்ண தேவராயருக்குப் பின் வந்த அரசர்களின் பலவீனத்தைத் தெரிந்து கொண்ட தட்சிண முகலாய அரசர்கள் அதிலும் குறிப்பாகக் குல்பர்கா பஹமான் ஷாக்கள் பீஜப்பூரின் ஷாக்கள் கிபி 1565ல் ஒன்றாக இணைந்ததால் ரக்க ச-சங்கடியில் நடந்த யுத்தத்தில் விஜய நகர சாம்ராஜ்யம் வீழ்ந்தது. செல்வச் செழிப்பான அழகிய நகரமான ஹம்பி பாழடைந்து போனது. சில கற்கட்டிடங்களைத் தவிர விஜய நகரமே சிதைந்து போனது.

ராபர்ட்ஸ்வெல் என்னும் யாத்திரீகர் குதிரை வியாபாரி, அவருடைய A Forgotten Empire Vijayanagar: என்ற நூலில் அப்போது நடந்த நிகழ்ச்சிகளில் தன் இதயம் உடைந்து போனது என்கிறார். நேரடியாக நிகழ்வுகளைப் பார்த்த அவர் இப்படி எழுதுகிறார்.

‘கடப்பாரை கோடாரிகளை அவர்கள் எடுத்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் அழிவு வேலையைச் செய்தார்கள். உலக சரித்திரத்திலேயே இப்படி ஒரு நாசச்செயல் எங்கும் நடந்திருக்கமுடியாது. வளமான கலைக்கூடமான நகரைச் சின்னாபின்னமாக்கினார்கள் பகைவர்கள் (வெற்றி பெற்ற முகமதியர்கள்) அழித்து நாசம் செய்யவே ஹம்பிக்குள் புகுந்தனர். கோயில்களை, கட்டிடங்களை இடித்துத் தரைமட்டமாக்கினர். மக்களை விரட்டினர், கொன்று குவித்தனர். ஹம்பியின் அழிவு ரத்தக்கறை படிந்த வரலாறு. ஹம்பியில் விருபாஷரின் ஆலயமும் சிதைவுகளிலிருந்து தப்பவில்லை. விருபாஷர் ஹம்பியின் ஆதி தெய்வமானதால் பிறகு மக்களும் பக்தர்களும் சேர்ந்து புனருத்தாரணம் செய்துள்ளனர்.

இஸ்லாமியப்படையினர் சைவர், வைணவர், ஜைனர் என்ற பேதமின்றி எல்லாத்திருக்கோயில்களையும் அதன் மூலவர்களையும் உடைத்துத்தூளாக்கினர். பாரதத்தை ஆக்கிரமித்த இஸ்லாமியர்களின் வருகை உலகச்சரித்திரத்தில் ரத்தக்கறை படிந்த நிகழ்ச்சி என்று வில்டுயூரண்ட் எழுதுகிறார்.

இன்றைய ஹம்பி எப்படி இருக்கிறது?

ஹம்பியின் சிதைவுகள் பார்ப்பவர் பார்வைக்கு அப்படியே இருக்கிறது. இயற்கை அழகு, மதிப்பு மிக்க சரித்திரப்புகழ், செல்வ வளம் இவற்றில் ஹம்பிக்கு ஈடாக வேறு நகரமே இல்லை எனலாம் அதனால்தான் யுனெஸ்கோ இதைச் சரித்திரப்புகழ் வாய்ந்த இடங்களின் பட்டியலில் சேர்த்திருக்கிறது.

ஹம்பிக்கு உவமை ஹம்பிதான். திறந்த வெளி அருங்காட்சி அமைத்த மன்னர்கள் சிற்பக்கலைக்குப் பணியாற்றியது மட்டுமில்லாமல் லட்சக்கணக்கான சிற்பிகளுக்கு, வேலையாட்களுக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள், ஊதியம் கொடுத்திருக்கிறார்கள். மனத்தின் அடித்தளத்திலிருந்து அவர்கள் கலை உணர்வைக் கொண்டு வந்து உழைத்துச்செதுக்கி வடித்திருக்கிறார்கள். இவைகள் யாவும் இடிபடும்போது அந்த சிற்பிகள் மட்டும் உயிரோடு இருந்து காண நேர்ந்தால் அவர்கள் மனம் என்ன பாடுபடும்?

இவைகள் வெறும் கற்கட்டிடங்கள் அல்லவே. எண்ணற்ற கரங்களின் இணையற்ற கற்பனைத்திறத்தில் உருவான உயிர் சிற்பங்கள் அல்லவா? எஞ்சியுள்ளவற்றையாவது பேணிக்காப்பது நம் கடமை.

(முடிந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சிதைக்கப்பட்ட நகரம் (பாகம்-3)

  1. மேடம்

    தங்களுடைய இந்தக்கட்டுரை என்னை வியக்க வைத்து விட்டது. இதை எழுத நீங்கள் எத்தனை புத்தகங்கள் எத்தனை ஆவணங்களைத் தேடியிருப்பீர்கள் என்பது படிக்கும் போதே தெரிகின்றது. வலியை ஏற்றுக் கொள்ளும் போதுதான் வாகை சூட முடியும்.
    வாழ்த்துக்கள்.
    முகில் தினகரன்.

  2. ஆக்குவது கடினம், நிறைய உழைப்பும், கலை உணர்வும், மற்றோர் ஆதரவும் வேண்டும் அதற்கு. அழிப்பது சுலபம். வெறியும், மிருக பலமும் மட்டுமே போதும். மனித குலம் உள்ள மட்டும், மனிதர்களை அழிப்பதும், கலைப் படைப்புகளை அழிப்பதும் தொடருமா? அப்படியில்லாத ஒரு மனித சமூகம் உருவாக வாய்ப்பிருக்கிறதா? தெரியவில்லை. அது மட்டுமில்லாமல், இவ்வளவு நாகரீகம் வளர்ந்த பின்னரும் கூட “ஒரு கண்ணுக்கு மறு கண்” என்ற நோக்கில் செயல்படும் சித்தாந்தம் அழியவில்லையெனும் போது வருத்தமாக இருக்கிறது.

  3. //முகில் தினகரன் wrote on 25 June, 2012, 16:05
    மேடம்

    தங்களுடைய இந்தக்கட்டுரை என்னை வியக்க வைத்து விட்டது. இதை எழுத நீங்கள் எத்தனை புத்தகங்கள் எத்தனை ஆவணங்களைத் தேடியிருப்பீர்கள் என்பது படிக்கும் போதே தெரிகின்றது. வலியை ஏற்றுக் கொள்ளும் போதுதான் வாகை சூட முடியும்.
    வாழ்த்துக்கள்.
    முகில் தினகரன்////

    நன்றி தினகரன்…..ஆமாம் நிறைய வாசித்து அறிந்துகொண்டேன் தகவலில் பிழை இருக்கக்கூடாதே என்று. வரலாற்றினை சிலராவது அறிந்து கொண்டு நாம் இழந்ததை நினைத்து உணர்ந்தால் ஒரு நிறைவுதான்

  4. இளங்கோ wrote on 29 June, 2012, 16:40
    ஆக்குவது கடினம், நிறைய உழைப்பும், கலை உணர்வும், மற்றோர் ஆதரவும் வேண்டும் அதற்கு. அழிப்பது சுலபம். வெறியும், மிருக பலமும் மட்டுமே போதும். மனித குலம் உள்ள மட்டும், மனிதர்களை அழிப்பதும், கலைப் படைப்புகளை அழிப்பதும் தொடருமா? அப்படியில்லாத ஒரு மனித சமூகம் உருவாக வாய்ப்பிருக்கிறதா? தெரியவில்லை. அது மட்டுமில்லாமல், இவ்வளவு நாகரீகம் வளர்ந்த பின்னரும் கூட “ஒரு கண்ணுக்கு மறு கண்” என்ற நோக்கில் செயல்படும் சித்தாந்தம் அழியவில்லை…

    //////

    இனி அம்மாதிரி அழிவுகள் நேராது ஏனென்றால் அப்படிப்பட்ட பொக்கிஷங்கள் நம்மிடம் இல்லையே! ஆனாலும் இன்னமும் கோயில்களில் சிற்பங்களை சேதப்படுத்துகிறார்களே சிலர் என்ன சொல்வது அவர்களை? பெருமூச்சுதான் பதில் திரு இளங்கோ நன்றி கருத்துக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *