திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-10)

2

விஜயகுமார்

இன்னும் இந்தோனேசியாவில் தான் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். அந்த நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் சுரபாய! பெயரே விநோதமாக உள்ளது அல்லவா? ஜாவா தீவின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று. இதன் பெயர்க் காரணத்திற்குப் பின் ஒரு கதை சொல்கிறார்கள். வெள்ளை நிறச் சுறா மீன் ஒன்றும் வெள்ளை நிறத்து முதலை ஒன்றும், தங்களில் யார் அடுத்த பிரபு தேவா – அய்யோ, விஜய் டிவி அதிகம் பார்த்த விளைவு – யார் பலசாலி என்று போட்டி போட்டுச் சண்டை போட்டனவாம். இது அந்த ஊரை ஒற்றிய மிகப்பழமையான குறி (prophecy) இந்தச் சண்டையை பற்றிக் கூறுவதால் பலரும் இதனை நம்புகிறார்கள் – நகர நுழைவாயில் ஒன்றில் இந்தச் சிற்பம் உள்ளது. அதே போல இந்த நகரத்தின் சின்னமாகவும் இது உள்ளது.

இதே போல இன்னும் ஒரு பிரபலமான குறி ஒன்று உள்ளது. பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ஆண்ட ராஜ ஜயபய என்பவர் சொல்லி வைத்து விட்ட குறி அது. ஜாவா அரசர்களில் மிகவும் புகழ் பெற்று நல்லாட்சி செய்து அரசர் இவர். இவரது பூர்வீகம் பற்றிக் கேட்டால் இன்னும் சுவாரசியம் – பாண்டவர்கள் – அர்ஜுனன் மைந்தன் அபிமன்யுவின் மைந்தன் பரிக்ஷித்ராஜாவின் வம்சாவளி என்று வழக்கில் உள்ளது.

இந்தோனேசியா பல காலம் டச் காலனி ஆட்சியில் வாடியது. அப்போது பிரபலமான இந்தக் குறி முன்னூறு ஆண்டுகள் வெள்ளையரின் ஆட்சியில் ஜாவா இருக்கும் என்றும், பின்னர் மஞ்சள் நிறக் குட்டை மனிதர்கள் ஒரு சோளம் பயிர் அறுவடை காலம் இருந்த பின்னர் ஆட்சி ஜாவாவினருக்கே திரும்பும் என்றும் அந்தக் குறி சொல்லியது. அதே போல 1942 ஆம் ஆண்டு ஜப்பானியப் படைகள் டச்சுப் படைகளை வென்று வந்தவுடன் இந்தக் குறி மிகப் பிரபலம் ஆனது. ஒரு சோளம் பயிர்க்காலம் அல்ல, மூன்று பயிர்க் காலத்தில் 1945 ஆம் ஆண்டு ஜப்பான் இந்தோனேசியாவுக்கு சுதந்திரம் தந்தது!!

நம் நாட்டில் பழைய கட்டடங்களில் ஆங்கிலேயச் சாயல் இருப்பது போல சுரபயாவில் இன்றும் டச்சுக் கட்டடக்கலை வாசம் வீசுகிறது. கூடவே கிராம்பு சிகரட் வாசமும், காபி வாசமும் வீசும்!

காபி என்றவுடனே நினைவுக்கு வருவது இந்தோனேசியர்கள் மிகவும் பெருமிதம் கொள்ளும் உலகத்திலேயே மிகவும் விலைமதிப்பு மிக்க கண்நோசியர் பலரும் புகழும் கோபி லுவாக் தான். அது என்ன அப்படி ஒரு ஒஸ்தி இந்தக் காப்பிக்கு. நம்ம ஊரு கும்பகோணம் டிகிரிக் காபிக்கு ஈடு எதுவுமே கிடையாது என்று வரிந்து கட்டிச் சண்டை போட்ட பிறகு நண்பர் ஒரு சிறு விஷமப் புன்னகையுடன் ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலுக்கு அந்த உலகப் புகழ் காப்பியைப் பருக அழைத்துச் சென்றார்.

காபி லுவாக் என்றதும் ஒரே தட புடல் – பள்ளியில் விட்டு ஓடிய வேதியல் படங்களை நினைவு படுத்தும் விதம் பெரிய பெரிய கண்ணாடிக் கோப்பைகள் கொண்டு அடுக்கினாள் ஒரு சீமாட்டி. அடியில் நெருப்பு ஏற்றி மேலே இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை அடுக்கி அரைஸ்பூன் காப்பிப் பொடியை மேலே போட்டாள். நீர் கொதிக்கும் நேரம், அந்தக் காப்பி டப்பாவைக் காட்டுங்கள் என்று வாங்கிப் பார்த்தேன்.

மேஜையில் இருப்பது போலவே கண்ணாடிக்குவளை ஒரு பக்கமும் ஒரு புனுகுப் பூனை ( civet cat) மற்றொரு புறமும் அட்டைப்படத்தில் இருந்தன. அடடே, நமது மான் மார்க் சீயக்காய் தூள் போல இது புனுகு பிராண்ட் காபி போல என்று எண்ணிக்கொண்டேன். பிறகு பின்புறம் திரும்பிப் படித்தால் “hygienically prepared” என்று இருந்தது. இது என்னடா – காப்பிக் கொட்டை வறுத்து அரைப்பதில் என்ன ‘unhygenic’ இருக்க முடியும் என்ற சந்தேகம் நல்ல வேளையாக எழுந்தது. சுடச் சுட காபி பில்ட்டர் ஆகி அடியில் உள்ள சின்னக் கண்ணாடிக் குவளையில் சொட்டியது.

சர்க்கரை, பால் எதுவுமே இல்லாமல்தான் இதைப் பருகிச் சுவைக்க வேண்டும் என்று நண்பர் மீண்டும் அதே விஷமச் சிரிப்புடன் கூற சந்தேகம் வலுத்தது. அப்படி என்ன இந்தக் காப்பி ஸ்பெஷல் – எதற்கு இவ்வளவு விலை – ஒரு சிறு குவளை சுமார் எட்டு அமெரிக்க டாலர்!! என்று கேட்டேன். முதலில் அருந்துங்கள், அப்போது தான் தெரியும் அருமை என்றார்.

வாசம் நன்றாக இருந்தாலும் எனக்கு அந்த வெறும் டிகாஷன் கொண்டு எதுவும் சொல்ல முடியவில்லை. சிறு வயதில் அப்பா காபிப்பொடி வாங்கி வரச் சொல்லும்போது – அங்கேயே நின்று அரைத்து வாங்கி வா, பிபரி கொட்டை சிக்கரி கலக்காமல் என்று சொன்னது மட்டும் தான் நினைவு. மற்றபடி எப்போதுமே காம்ப்ளான் பாய் தான். இவ்வளவு விலை கொடுத்து இந்த டிகாஷனைக் குடிக்க வேண்டி இருக்கிறதே என்று நினைக்கும்போது நண்பர், தலையில் பெரிய கல்லைப் போட்டார். காபி லுவாக் எப்படி உருவாகிறது என்ற கதை சொல்ல ஆரம்பித்தார்.

ஜாவா மலைகளில் உள்ள உயர் ரகக் காபித் தோட்டங்களில் ஒரு வகை புனுகுப் பூனைகள் வளர்க்கிறார்கள். அவை காபிச் செடியில் இருப்பதிலேயே மிகவும் நல்ல பழங்களைத் தேர்ந்தெடுத்து உண்ணுமாம். பிறகு அந்தப் பூனைகளின் வயிற்றில் காபிப் பழத்தின் மேலே உள்ள சதைப்பகுதி முழுவதும் டைஜெஸ்ட் ஆகி விடுமாம். வெறும் கொட்டைகளை மட்டும் அவை ம…..ம் கழித்து விடுமாம். பிறகு அவற்றைச் சேகரித்து நன்றாகச் சுத்தம் செய்து “hygenic!!’ வறுத்து அரைத்துச் செய்யும் காபி தான் கோபி லுவாக் என்றார்.

போதாக்குறைக்கு ஒரு பாக்கெட் வீட்டுக்கும் வாங்கிச் செல்லுங்கள் என்று கொடுத்தார்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “திரைகடலோடியும் அனுபவம் தேடு (பகுதி-10)

  1. விஜய்,
    ரொம்ப நன்றாகவும் , தகவல்கள் நிறைந்ததாகவும் ,  உங்கள் திரைகடல் ஓடியும் அனுபவம் தேடு .. கட்டுரை உள்ளது. தொடர்ந்து வாசிக்கிறேன். 

    ரொம்ப நன்றி .
    பத்மநாபபுரம் அரவிந்தன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.