நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-1)
ஸ்ரீஜா வெங்கடேஷ்
ஞாயிற்றுக் கிழமை காலை அந்த வீடு கொஞ்சம் மெதுவாகக் கண் விழித்தது.
சற்று லேட்டாகவே கண் விழித்த கல்யாணி, நிதானமாகவே காலைக் கடன்களை முடித்துக் குளித்து சமையலறையில் புகுந்தாள். எப்பவுமே ஞாயிறு என்றால் அவர்கள் வீட்டில் கண்டிப்பாக அசைவம் உண்டு. அன்றுதான் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்த முடியும் என்பதால் சில ஐட்டங்கள் அதிகப் படியாகவே இருக்கும். மதியச் சமையல் பிரமாதமாக இருக்கும் என்பதால் காலையில் ஓட்ஸ் கஞ்சிதான்.
திங்கள் முதல் சனி வரை ஒரே ஓட்டம்தான். நிகிலுக்குக் காலேஜ் பஸ் எட்டு மணிக்கு வந்து விடும். அதனால் அவனுக்கு அதிகாலையிலேயே எழுந்து டிஃபன், சாப்பாடு இரண்டும் தயார் செய்து விடுவாள் கல்யாணி. நிகிலுக்கு எட்டு மணிக்குப் போக வேண்டும் என்றால் சுந்தரத்துக்கு எட்டரைக்குப் போக வேண்டும். இருவருக்கும் டிஃபன் கொடுத்து, சாப்பாடு கட்டிக் கொடுத்து அனுப்புவதற்குள் பெண்டு கழன்று விடும் கல்யாணிக்கு. நிகில், கல்யாணி சுந்தரம் தம்பதிகளின் ஒரே மகன். இஞ்சினியரிங் இறுதியாண்டு படிக்கிறான். சுந்தரம் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் நல்ல பொறுப்பான பதவியில் இருக்கிறான்.
தந்தையும், மகனும் வெளியேறி விட்டால் அப்புறம் நாள் முழுவதும் ஓய்வு தான் அவளுக்கு. பதினோரு மணி வாக்கில் வேலைக்காரி காசியம்மா வருவாள், அவளே மிஷினில் துணி துவைத்து உலர்த்தி, பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி விட்டு ஒரு மணி நேரத்தில் கிளம்பி விட்டாளானால் நாள் முழுவதும் தனிமைதான். அந்தத் தனிமைக்கு மருந்து டிவி தான். தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் ஒன்று விடாமல் பார்ப்பாள். அதுவும் போரடித்த சமயங்களில் அக்கம்பக்கத்தவரோடு அரட்டை. இது தான் கல்யாணியுடைய அட்டவணை. ஞாயிறன்று மட்டும் இது மாறும் .
மளமளவென்று மூவருக்கும் டீ போட்டு ஃபிளாஸ்கில் ஊற்றி வைத்து விட்டுக் கஞ்சி போட்டாள். கஞ்சி வெகு நேரம் பசி தாங்காது என்பதால் சீக்கிரமே சமைத்து விடுவாள். ஃப்ரிட்ஜில் இருந்து சிக்கனை எடுத்துச் சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொண்டாள். அதற்குள் மற்றவர்கள் எழுந்து வர அவர்களுக்கு டீயோ கஞ்சியோ கொடுத்து விட்டு வேலையில் மூழ்கினாள். நிகில் அருகில் வந்து
“அம்மா! சிக்கன்ல என்ன செய்யப் போறே?”
“எப்பவும் போல கிரேவி தான் ஏன் கேக்கறே?”
“இன்னிக்கு பட்டர் சிக்கன் செய்யேம்மா! ரொம்ப நாளாச்சு சாப்பிட்டு” என்றவனைப் பார்த்து சரி என்பதன் அடையாளமாகத் தலையசைத்தவள். “அப்டீன்னா! நான் சொல்ற லிஸ்ட்படி சாமான் வாங்கிட்டு வா” என்றாள். முனகிக் கொண்டே செல்பவனைப் பார்த்து முறுவலித்து விட்டு பிரியாணி அரிசியைக் களைந்தாள்.
சுந்தரம் எழுந்து வந்து “என்ன சமையல்?” என்று விசாரித்து விட்டுக் கஞ்சியை வாங்கிக் கொண்டு ஹாலுக்குப் போய் விட்டான். இப்போது டிவியை ஆன் செய்தானானால் மதிய உணவு வரை டிவியே தான் பார்ப்பான். மற்ற நாட்களில் டிவி அதிகம் பார்ப்பதில்லை என்பதால் கல்யாணியும் ஒன்றும் சொல்ல மாட்டாள். மதிய உணவுக்கு மேல் சிறு தூக்கம். தூங்கி எழுந்து மறுபடி டீ, சாயங்காலம் வாக்கிங், இரவு சப்பாத்தியும் தாலும் சாப்பிட்டு விட்டு மீண்டும் தூக்கம். இது தான் சுந்தரத்துடைய ஞாயிறு அட்டவணை.
நிகில் போய்த் தேவையானவற்றை வாங்கி வந்து விட்டான். மணக்க மணக்கப் பிரியாணியும், பட்டர் சிக்கனும் ரெடி. போதாதற்கு உருளை மசாலா வேறு. வயிறு நிறையச் சாப்பிட்டார்கள். படுக்கப் போகுமுன் ஓய்வாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
“ஏம்மா? நீ முந்தா நேத்து குடுத்தியே பால் கஞ்சி! அதை இன்னிக்குச் செஞ்சிருக்கலாமில்லே?”
“பால் கஞ்சியா? அது பால் பாயாசம்டா! வெள்ளிக் கிழமையாச்சேன்னு பால் பாயாசம் செஞ்சா பால் கஞ்சியா உனக்கு?”
“அடடே! கல்யாணி அது பால் பாயாசமா? எனக்குத் தெரியவே தெரியாதே? இனிமே நீ சாப்பிடக் குடுத்தாலும் இன்னதுன்னு சொல்லிட்டுக் குடும்மா. பாரு நானும் பால் கஞ்சின்னு மடக்கு மடக்குன்னு குடிச்சேன். பால் பாயாசம்னு தெரிஞ்சிருந்தா மெதுவ்வ்வா ருசிச்சுக் குடிச்சிருப்பேன் இல்லே?”
கல்யாணிக்குத் தெரியும் தன்னைக் கலாய்க்கிறார்கள் என்று. அதனால் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. “ஆமாமா! ரெண்டு டம்ளர், மூணு டம்ளர் வாங்கிக் குடிச்சதுல ஒண்ணும் குறைச்சல் இல்லே. இப்போ அது பால் கஞ்சியா உங்களுக்கு?” என்றாள் பொய்க் கோபத்தோடு.
இது கல்யாணி வீட்டில் வழக்கம்தான். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மனம் நோகாமல் கேலி பேசிச் சிரிப்பார்கள். அதிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தந்தையும், மகனும் சேர்ந்து கல்யாணியின் சமையலைக் கிண்டல் செய்து அவளை வெறுப்பேற்றுவார்கள். கல்யாணியும் விட மாட்டாள். பதிலுக்குப் பதில் ஏதாவது சொல்லித் தானும் கிண்டல் செய்வாள். நிகில் சில சமயம் அம்மா பக்கம் பேசுவான், சில சமயம் அப்பா பக்கம். கல்யாணியும், சுந்தரமும் சேர்ந்து நிகிலைக் கிண்டல் செய்த நிகழ்ச்சிகளும் உண்டு.
நிகில் விடுவதாக இல்லை. “டிஃபன்னா நம்ம வீட்டுல இட்லி, அல்லது தோசை. அம்மாவுக்கு இது ரெண்டும் பிடிக்கும்னு வேற எதையும் நம்ம கண்ல காட்ட மாட்டாங்க.”
“அது மட்டுமா? இட்லி தோசைக்குத் தொட்டுக்க பொடி தான் நம்ம வீட்டுல. சட்னி, சாம்பார் இதெல்லாம் உண்டுன்னு உனக்குத் தெரியுமா கல்யாணி?”
“காலையில அவசரத்துக்கு இந்த ரெண்டு டிஃபனும் தான் கை கொடுக்கும். சட்னி, சாம்பார்னு வித விதமாச் செய்ய எனக்கு என்ன பத்துக் கையா இருக்கு? டேய் நிகில், நீ படிக்கிற பையன். உனக்கு ஏன் சாப்பாட்டுல இவ்ளோ இன்ட்ரெஸ்ட்? படிக்கற பசங்களுக்குப் புத்தி படிப்புல மட்டும் தான் இருக்கணும் தெரியுமா? இதுக்கு எங்கம்மா ஒரு கதை சொல்லுவாங்க”
“என்ன கதைம்மா? சொல்லுங்களேன். பாட்டி சொன்ன கதைன்னா நல்லாவே இருக்கும்”
“அதாவது அந்தக் காலத்துல குருகுலத்துல ஒருத்தன் படிச்சுக்கிட்டு இருந்தானாம். அப்பல்லாம் குருகுலம் தானே உண்டு. “
“தெரியும், மேலே சொல்லுங்க”
“ஒரு நாள் அவன் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது குரு மாதா வந்து சாதம் போட்டு நெய் ஊத்தியிருக்காங்க. சாப்பிட்ட அந்தப் பையன், “அம்மா! நீங்க இன்னிக்கு நெய்க்கு பதிலா வேப்பெண்ணையை ஊத்திட்டீங்களே” அப்டீன்னானாம். ஒடனே அந்த குரு “அப்பா! இனிமே படிப்பு உனக்கு ஏறாது. உனக்கு சாப்பாட்டு மேல பிரியம் வந்துட்டுது”ன்னு சொல்லி அவனை அனுப்பிட்டாராம். அப்புறம் தான் அந்தப் பையனுக்குத் தெரிஞ்சிதாம் தினமும் குரு மாதா வேப்பெண்ணெய் தான் ஊத்தியிருக்காங்கன்னு. படிப்புலயே புத்தி இருந்த நாள் வரைக்கும் அவனுக்கு அதோட வாடையும் தெரியல்லே, சுவையும் தெரியல்லே, சாப்பாட்டுல புத்தி போனவுடனே அவனுக்கு வாடையும், சுவையும் தெரிஞ்சிருக்கு. புத்தி படிப்புலர்ந்து வெலகிட்டதுங்கற காரணமாத்தான் குரு அந்தப் பையனை வெளியேத்திட்டார்” இப்போ புரியுதா?”
“அடேயப்பா! கதை நல்லாருக்கே! படிக்கற பசங்களுக்குச் சாப்பாட்டு மேல ஆசை வந்திரக் கூடாதேன்னுதான் எங்க கேண்டீன்ல ஊசிப்போன வடையும், கெட்டுப்போன பிரிஞ்சியும் குடுக்கறாங்க போலிருக்கு” என்றான் நிகில். அனைவரும் சிரித்தனர்.
“டேய் நிகில்! உங்க மாமா இந்த மாதிரி கதையெல்லாம் கேட்டு வளந்ததாலத்தான் அமெரிக்காவுல இருக்காரு. புரியுதா?”
“இதை நீங்க கிண்டலாச் சொல்றீங்களா? இல்லே நிஜமாச் சொல்றீங்களான்னு தெரியல்லே. எங்க வீட்டுக்காரங்களை இழுக்காமே உங்களுக்குத் தூக்கமே வராதே, ஆமாம் நான் அப்பவே கேக்கணும்னு நெனச்சேன், அன்னிக்கு உங்க தங்கச்சி வீட்டுக்குப் போனோமே, அப்ப சாதாரணமா ஒரு வெண் பொங்கல் செஞ்சிருந்தா, அதை அப்படியே வானளாவப் புகழ்ந்தீங்களே? அதையே நான் செஞ்சிருந்தா இவளுக்கு வேற ஒண்ணும் செய்யத் தெரியாதுன்னு கிண்டல் பண்ணுவீங்க”
“கரெக்டும்மா! நானும் நெனச்சேன். அத்தை வீட்டுல டிஃபன் சுமார்தான். அகிலேஷ் கூட சொன்னான். எங்கம்மா சுமாராதான் சமைப்பாங்க ஆனா அதையே உங்கப்பா இப்படி சாப்பிடுறாரே! அப்போ உங்க வீட்டுல இதை விட மோசமா இருக்குமா?ன்னு கேட்டான். எனக்குக் கேவலமா இருந்துச்சு தெரியுமா? ஏம்ப்பா அப்டி செஞ்சீங்க?”
“அட விடுடா! என் தங்கச்சியை யாருமே எங்கரேஜ் பண்ண மாட்டேங்கறீங்க? நானாவது பண்ண வேண்டாமா? அதான் அப்படிச் சொன்னேன். இப்ப என்ன அதனால?”
“அதனால் ஒண்ணுமில்லை! அம்மா இனிமே உங்களுக்கு எதுவும் விதம் விதமா செஞ்சு தர மாட்டேன்னு முடிவு பண்ணிட்டாங்க. இல்லேம்மா?” கல்யாணி தலையசைத்து ஆமென்றாள்.
“இப்போ என்ன சொல்லிட்டேன், சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் கல்யாணி”
“சரி சரி! அந்தப் பேச்சை விடுங்க! நல்லவேளை எனக்கு இப்பத்தான் ஞாபகம் வந்தது. நான் மறந்தே போயிட்டேன். அடுத்த வாரம் ஞாயிற்றுக் கெழம, எங்க அக்கா வீட்டுக்குப் போயே ஆகணும் ஆமா! அவங்க ரொம்ப நாளாக் கூப்பிட்டுக்கிட்டு இருக்காங்க. வர ஞாத்திக் கெழம வரேன்னு நானும் சொல்லிட்டேன்” என்றாள் கல்யாணி.
“அக்காவா? உனக்கேது அக்கா? உனக்கு ஒரே ஒரு அண்ணன் தானே உண்டு? இப்ப அக்கா எங்கிருந்து மொளைச்சாங்க?” இது சுந்தரம்.
“எங்க மரகதம் பெரியம்மா பொண்ணுங்க. பேரு சுமதி. நான் கூடச் சொல்லியிருக்கேனே, ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில மேனஜரா இருக்காங்கன்னு. அவங்கதான் இத்தனை வருஷம் போபால்ல இருந்தாங்க, இப்போதான் சென்னைக்கு மாத்தலாகி வந்துருக்காங்க. இங்க அடையார்ல இருக்காங்க. இதோட உங்களுக்கு நான் எத்தனையோ தடவை சொல்லியாச்சு. ஏன்தான் இப்படி மறக்கறீங்களோ?” என்று அங்கலாய்த்தாள் கல்யாணி.
“ரெண்டு மாசத்துக்கு முந்தி ஒருத்தங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்களே அவங்கதானே?” என்றார் சுந்தரம் அடையாளம் காணும் நோக்கத்துடன்.
“சே! சுத்த உளறல். அப்போ வந்தது எங்க சங்கர சித்தப்பா பொண்ணு சுமதி. அது அப்பா வழி உறவு. இது அம்மா வழி உறவு.”
“அப்பா! நம்ம அம்மாவோட உறவுக்காரங்களைப் பட்டியல் போட்டா இந்தியாவுல பாதி ஜனத்தொகை அதுலயே வந்துரும். அடுத்த வாரம் நான் வரல்லே. எனக்கு ஜி.ஆர்.இ கிளாஸ் இருக்கு. நீங்களும் அம்மாவும் போயிட்டு வாங்க. நான் போறேன் எனக்குப் படிக்க வேண்டியது எக்கச்சக்கம் இருக்கு” என்று கூறி விட்டுப் புத்த்கத்தை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் புகுந்து கொண்டவன், வெளியில் தலை நீட்டி “ஆனாலும் அம்மா! அந்த வேப்பெண்ணெய் கதை ரொம்ப மோசம். என்னதான் படிப்புல மட்டும் புத்தி இருந்தாலும், நெய்க்கும், வேப்பெண்ணெய்க்குமா டிஃபரன்ஸ் தெரியாது? அ .. அ… இதெல்லாம் சும்மா டுபாக்கூர் தானே” என்றான்.
“போடா! போ! இதெல்லாம் அந்தக் காலத்துல புத்தி சிதறாமே படிப்புல மட்டும் இருக்கணும்கறதுக்காக சொல்லி வெச்சது. இந்தக் காலத்துல எல்லாமே தலை கீழ்”
“ஆமாம்மா! நாங்க சினிமாவும் பார்ப்போம், டிஸ்கொதேக்குப் போவோம், பீட்சா, பர்கர்ன்னு சாப்பிடுவோம் அதே சமயத்துல படிக்கவும் செய்வோம். நாங்கள்லாம் சகலகலா வல்லவர்கள்மா” என்று கூறி விட்டு அறைக்குள் போய்த் தாழிட்டுக் கொண்டவன் மீண்டும் திறந்து “அம்மா! வர புதன் கிழமை என் ஃப்ரெண்ட்ஸ் நாலு பேரு நம்ம வீட்டுக்குக் குரூப் ஸ்டடி பண்ண வரேன்னிருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது நல்ல டிஃபனா செஞ்சி குடுங்க என்ன சரியா?” என்று கேட்டு விட்டு இவள் பதிலுக்குக் கூடக் காத்திராமல் கதவைச் சாத்திக் கொண்டான்.
கதவை மீண்டும் திறந்து “அம்மா! பிளீஸ் இன்னோரு ஹெல்ப்! என் ரூமைக் கொஞ்சம் கிளீன் பண்ணி வெச்சுர்றீங்களா? நாங்க எல்லாரும் உக்காந்து படிக்கக் கூட அங்க எடமே இல்ல”
“அது இப்பத்தான் தோணுச்சா ஒனக்கு? சரி! சரி! அம்மா செஞ்சு வெப்பா நீ போய்ப் படிக்கற வழியப் பாரு”
அவன் போனவுடன் சுந்தரத்தைப் பிடித்துக் கொண்டாள் கல்யாணி.
“பாத்தீங்களா? உங்க பையன் என்ன சொல்றான்னு?”
“கொஞ்சம் கிளீன்தான் பண்ணிக்குடேன் கல்யாணி! சின்னப் பையன்தானே?”
“அது சரிங்க, டிஃபன் வேற செஞ்சு குடுன்னு ஆர்டர் போட்டுட்டுப் போறான்?”
“நீ வித விதமா செய்வேன்னுதான் அப்படிச் சொல்லிட்டுப் போறான். அவன் ஃப்ரெண்ட்ஸும் நம்ம பசங்க மாதிரிதானே. ஏதாவது நல்லதா செஞ்சு குடு பாவம். படிக்கிற பசங்க. நிகிலும் சந்தோஷப் படுவான்.”
“அதுக்கென்னங்க செஞ்சாப் போச்சு. அத விடுங்க நீங்க நாம பேசிக்கிட்டிருந்த விஷயத்துக்கு வாங்க.”
“என்ன பேசிக்கிட்டிருந்தோம்?”
“அதாங்க எங்க அக்கா வீட்டுக்குப் போறதப் பத்தி!”
“சரி சரி”
“என்னங்க இவ்ளோ ஈசியாச் சொல்றீங்க?”
“வேற எப்டிச் சொல்லணும்?
“சந்தோஷமாத்தான் சொல்லுங்களேன். இதப் பாருங்க எங்க அக்கா வீட்டுல உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சுருக்காங்க. இந்த மாதிரி தத்துப் பித்துன்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க. எங்க ஒறவுகாரங்க வீட்டுக்குப் போட்டுட்டுப் போறதுக்குன்னே வெச்சுருப்பீங்களே, அழுக்குக் கலர்ல சட்டையும் பேண்டும்! அதைப் போட வேண்டாம். நல்ல பளிச்சுனு டிரெஸ் பண்ணிக்கோங்க என்ன புரிஞ்சிதா? ஏன்னா சுமதியக்கா வீட்டுக்காரர், ஒரு பெரிய கம்பெனியில லீகல் அட்வைசரா இருந்து ரிசைன் பண்ணிட்டு இப்போ வக்கீலா பிராக்டீஸ் பண்ணிக்கிட்டு இருக்காரு. என் மானம் போகாமே காப்பாத்துங்க. சரியா?”
“அதுக்கென்ன கல்யாணி? ஒரு புதுச் சட்டையே வாங்கிப் போட்டுகிட்டு நிக்கறேன் போதுமா? வேணும்னா டை, ஷூ இதெல்லாம் போட்டுக்கட்டுமா?”
“போதுமே! உங்க கிண்டல்? நீங்க சாதாரணமா இருங்க அதுவே போதும், அங்க வந்து உங்க கிண்டல் பேச்சையெல்லாம் கொஞ்சம் மூட்டை கட்டி வெச்சிட்டு அத்தானோட கொஞ்சம் சீரியசாப் பேசுங்க. அவங்கள்லாம் ரொம்ப ரிசர்வ்ட் டைப்” என்றாள். சுந்தரமும் மிகையாகக் கை கட்டி வாய் பொத்தி “உத்தரவு மஹாராணி! அடுத்த ஞாயிறு இந்த அடிமை தங்களுடன் வருகிறேன், கேட்டால் மட்டும் பதில் சொல்கிறேன், நல்ல உடை அணிந்து வருகிறேன் போதுமா?” என்றான்.
சுமதி அக்கா வீட்டிற்குச் சென்று வந்த பிறகு தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெருத்த மாற்றம் ஏற்படப் போவதை அறியாமல் கல்யாணி சந்தோஷமாகச் சிரித்தாள்.
(தொடரும்)