இலக்கியம்தொடர்கதை

தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-1)

முகில் தினகரன்

நாமக்கல் மாவட்டம்.

நெசவுத் தொழிலை நிமிர வைத்துத் தன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்ட தேவனாங்குறிச்சி.

ஒரு காலத்தில் விசைத் தறிகளுக்கு விதானமாகவும், கைத்தறிகளுக்குக் களஞ்சியமாகவும் இருந்து விட்டு, இன்று வறுமைக்கு வாழ்க்கைப்பட்டு வதைபட்டுக் கொண்டிருக்கும் சிற்றூர்.

மூன்றாம் தெருவிலிருந்த அந்த ஓட்டு வீடு மதியத்திலிருந்தே படு சுறுசுறுப்பாய் இருந்தது. சமையலறையிலிருந்து வந்த வாசம் உள்ளே ஏதோ பலகாரம் தயாராகிக் கொண்டிருப்பதாய் தகவல் அறிவித்துக் கொண்டிருந்தது.

நிகழவிருக்கும் பெண் பார்க்கும் படலத்திற்காக சுந்தர் படாத பாடுபட்டு முன் அறையை ஓரளவிற்கு ஒழுங்கு படுத்தி வைத்திருந்தான். சில இடங்களில் வீடு சரியில்லை! என்கிற காரணத்திற்காய்ச் சில பெண்கள் தள்ளுபடி ஆகிப் போன விஷயம் அவனை லேசாய்ப் பயமுறுத்தியிருந்தது. எங்கே அந்தத் தள்ளுபடிப் பெண்கள் பட்டியலில் தன் தங்கையின் பெயரும் இடம் பெற்று விடுமோ? என்கிற பதைபதைப்பு அவனுக்குள் இருந்து கொண்டேயிருந்தது.

எதிர் வீட்டிலிருந்து இரவல் வாங்கி வந்திருந்த பிளாஸ்டிக் சேர்களை வரிசைப் படுத்தி வைத்து, பக்கத்துத் தெரு கம்பவுண்டர் வீட்டிலிருந்து ஓசி வாங்கி வந்திருந்த டீப்பாயை மத்தியில் வைத்தான்.

சற்றுத் தள்ளி நின்று அந்த அமைப்பை நோட்டம் விட்டவன், ‘ஓ.கே!” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு, சமையலறைக்குள் புகுந்தான்.

‘என்னம்மா…மணி நாலே கால் ஆச்சு…அஞ்சரைக்கெல்லாம் அவங்க வந்துடுவாங்க!…நீ இன்னும் சமையல் வேலையை முடிக்காம இழுத்துக்கிட்டே இருக்கே!” தாயைக் கேட்டான்.

‘அது செரி…நாங்க என்ன இங்க கோலாட்டம் ஆடிட்டிருக்கோமா?…இல்ல குச்சுப்புடி ஆடிட்டிருக்கோமா? சமையல்தானே பண்ணிட்டிருக்கோம்!…நம்ம அவசரத்துக்கு எல்லாம் ஆகுமா?….வேகும் போதுதானே வேகும்?” அம்மாவிற்கு உதவுவதற்காக வந்திருந்த மைதிலி சுந்தரை வம்புக்கு இழுத்தாள்.

ஒரு வகையில் அவள் அவனுக்கு முறைப்பெண்தான். அவர்களுக்குள் இருக்கும் சத்தமில்லாத காதல் ஓரளவுக்கு எல்லோருக்கும் தெரியும்தான். ஆனால் யாருமே தெரிந்ததாய்க் காட்டிக் கொள்வதேயில்லை.

‘எப்படியாவது இந்தத் தேவிக்கு சீக்கிரமே ஒரு கல்யாணமாகிப் போயிட்டான்னா…அடுத்த முகூர்த்தத்திலேயே இவன் கையால ஒரு தாலி வாங்கிட்டு வந்து இந்த வீட்ல ‘அக்கடா‘ன்னு உட்கார்ந்துக்கலாம்ன்னு பார்த்தா அதென்னமோ தெரியலை இவளுக்கு வர்ற வரனெல்லாம் ஏதோவொரு காரணத்துல கை நழுவிப் போய்க்கிட்டேயிருக்கு!….ஆண்டவா…இந்த எடமாவது அமையற மாதிரி அருள் செய்யுப்பா!” கைகள் சில்வர் ப்ளேட்டுக்களை துடைத்து அடுக்கிக் கொண்டிருக்க, மைதிலியின் மனசு தேவிக்காக வேண்டிக் கொள்வது போல் தனக்காக வேண்டிக் கொண்டது.

‘அம்மா…உனக்கு உதவி செய்யறதுக்கு வேற ஆளே கெடைக்கலியா?…இந்த வாயாடிதான் கெடைச்சாளா?….இவளைக் கூட வெச்சுக்கிட்டேன்னா…நடக்கற வேலை கூட நடக்காது!…வாய் மட்டும்தான் காது வரைக்கும் நீளும்!’ பதிலுக்கு சுந்தரும் அவளை வாரினான்.

‘ஆஹா….அறிவுரை சொல்ல வந்துட்டாரய்யா எட்டுப்பட்டீ நாட்டாமை!” மைதிலி அபிநயத்தோடு சொல்ல,

‘டேய்..டேய்..ஏண்டா அவளை வம்பிழுக்கறே?..” சுந்தாpன் தாய் லட்சுமி சிரித்தபடி கேட்க,

‘அப்படிக் கேளுங்க அத்தை!”

‘யாரு…யாரு?…நானா வம்பிழுக்கறேன்?…என்னம்மா நீயும் இந்த வாயாடிக்கு வக்காலத்து வாங்கறே?…அது செரி ரெண்டு பேரும் பொம்பளைங்க ஆச்சே…விட்டுக் குடுப்பீங்களா?”

‘என்னண்ணே…இங்க சத்தம்?” கேட்டவாறே சமையலறைப் பக்கம் வந்த தங்கை தேவியைப் பார்த்து அசந்து போனான் சுந்தா;.

தேவியை ஒரு பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், அழகி என்று சொல்லலாம். சாதாரண நாட்களிலேயே களையாக இருக்கும் அவள் முகம் அலங்காரம் பண்ணியதில் பௌர்ணமி நிலவாய்ப் பிரகாசித்தது. ‘ஹூம்…இந்தக் கிராம தேவதையைக் கட்டிக் கொள்ள எந்த ராஜகுமாரனுக்கு கொடுப்பினையோ?’ என்று நினைத்துக் கொண்ட சுந்தர்,

‘தேவி!…நீ ஏம்மா இங்கெல்லாம் வர்றே?…இந்தப் புகையும்…உஷ்ணமும் உன்னோட அழகைக் கெடுத்திரும்மா….போம்மா…போய் உன் ரூம்லியே உட்கார்ந்துக்கம்மா!” தங்கையைத் துரத்தினான்.

‘அடேங்கப்பா…அவனவன் தங்கச்சின்னா எத்தனை அக்கறை பாரு!…நாங்கெல்லாம் இந்தப் புகைலதானே இருக்கோம்…எங்க அழகு மட்டும் கெட்டுப் போகாதாக்கும்?” மைதிலி மீண்டும் ஆரம்பிக்க,

‘அழகா?…அதுக்கும் உனக்கும் என்னடிம்மா சம்மந்தம்?” கேட்டு விட்டுச் சிரித்தான் சுந்தர்.

‘என்ன சொன்னே?…என்ன சொன்னே?” கத்தியபடியே அவள் வேகமாய் எழுந்து வர,

‘அண்ணா…இதுக்கு மேலேயும் நீ இங்க இருந்தின்னா…மைதிலி உன்னைய அந்தக் கரண்டியாலேயே ரெண்டு போட்டாலும் போட்டுடுவா!…வா…ஓடிடலாம்!” தேவி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க,

‘செஞ்சாலும் செஞ்சிடுவா!’ என்றபடியே அவளுடன் நடந்து அவளது அறைக்குள் புகுந்து கொண்டான் சுந்தர்.

அறைக்குள் சென்றதும்,

‘அண்ணா!” தழுதழுத்த குரலில் தேவி அழைக்க,

‘என்னம்மா?”

‘அண்ணா…சீக்கிரமே எனக்கொரு கல்யாணம் ஆகணும்னு நான் தெனமும் கடவுள்கிட்ட வேண்டிக்கறேனே…அது எதுக்குத் தெரியுமா?” கேட்டு விட்டு நிறுத்தினாள்.

அவன் புரியாதவனாய் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு அவளைக் கூர்ந்து நோக்கினான்.

‘எனக்குக் கல்யாணம் ஆன பிறகுதான் நீ மைதிலி கழுத்துல தாலி கட்டுவேன்னு பிடிவாதமா இருக்கே பாரு அதுக்காகத்தான்!… உங்க ரெண்டு பேரையும் சீக்கிரத்துல மணக் கோலத்துல பார்க்கணும் என்பதற்காகத்தான் என்னோட மணக் கோலத்தையே நான் எதிர்பார்க்கறேன்!”

‘தேவி!” அவள் கைகளைப் பற்றியவன் கண்களில் ஈரம். ‘என் கல்யாணத்தை விடும்மா… இப்ப அதுவா முக்கியம்?”

‘இல்லேண்ணா… ஏதோ இனம் புரியாத ஒரு குற்ற உணர்வு எனக்குள்ளே இருந்திட்டே இருக்குண்ணா!”

‘சீச்சி… அப்படியெல்லாம் நினைக்காதே!.. மைதிலி எங்க போயிடப் போறா?…அவ எத்தனை வருஷமானாலும் எனக்காகக் காத்திட்டிருப்பா!”

தேவியின் கண்களிலும் நீர் பனிக்க, ‘ஏய்..ஏய்…அழுதிடாதே!…அப்புறம் மேக்கப்பெல்லாம் கலைஞ்சிடும்!” பதறினான் சுந்தர்.

‘டேய்..சுந்தர்… வாசல்ல டாக்ஸி சத்தம் கேட்குது… போய்ப் பாருடா” அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து கேட்க,

வாசலுக்கு ஓடினான்.

டாக்ஸியிலிருந்து அவர்கள் இறங்கிக் கொண்டிருந்தனர்.

 

படத்திற்கு நன்றி:http://southindianweddings.blogspot.in/2010_10_01_archive.html

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க