நல்வாழ்த்து நான் சொல்லுவேன் (அத்தியாயம்-2)

0

ஸ்ரீஜா வெங்கடேஷ்

அன்று புதன்கிழமை. நிகிலின் நண்பர்கள் நால்வரும் வீட்டுக்கு வந்து விட்டனர். அனைவருமே பொறுப்புத் தெரிந்த பையன்கள். அந்த வயதிற்கே உண்டான சிறு குறும்புகளும் வரம்பு மீறல்களும் உண்டு என்றாலும் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்பவர்கள். இண்டர் நெட்டில் நிறைய இஞ்சினியரிங் சம்பந்தமான சைட்டுகளுக்குச் சென்று அங்கு கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு விடையளித்தும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி சமர்ப்பித்தும் வருபவர்கள். அனைவருக்குமே மேல் படிப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவு. அதை நனவாக்க கடுமையாக உழைத்தார்கள்.

அதற்காக அடிக்கடி இப்படி யார் வீட்டிலாவது கூடி, ஒருவருக்கொருவர் கேட்டுப் படித்துக் கொள்வார்கள். ஆனால் முக்கால்வாசி நிகிலின் வீடு தான் இவர்கள் கூடுமிடம். ஏனென்றால் கல்யாணி நல்ல டிஃபனாக செய்து போடுவது மட்டுமில்லாமல் மகனுடைய நண்பர்களுடன் நன்கு பேசிப் பழகுவாள். இடையிடையே குடிக்க ஏதாவது கொண்டு கொடுத்து நன்கு கவனித்துக் கொள்வாள், அதோடு அவர்கள் படிக்கும் போது டிவி போட்டுத் தொந்தரவு செய்யாமல் இருப்பாள் என்பதால் மற்ற நண்பர்கள் எல்லோரும் நிகிலின் வீட்டையே தேர்ந்தெடுத்தனர்.

அன்றும் மகனின் நண்பர்களின் வரவுக்காக கட்லட் தயாரித்துக் கொண்டிருந்தாள் கல்யாணி. நண்பர்களில் இருவர் சுத்த சைவம் என்பதால் சைவமாகவே செய்வாள் கல்யாணி. உருளைக்கிழங்குகளை நன்கு வேக வைத்து தோலுரித்து, உதிர்த்து அதில் சோள மாவும் சிறிது கடலை மாவும் சேர்த்துப் பிசைந்து அந்தக் கலவையில் நறுக்கிய வெங்காயம், பச்சைப் பட்டாணி, சோம்பு, கரம் மசாலா சேர்த்துப் பிசைந்து அழகாக அதை உருட்டி, உருட்டிய மாவை ரஸ்க் தூளில் தோய்த்துத் தோசைக்கல்லில் இரு பக்கமும் நன்கு நெய் படுமாறு போட்டுச் சுட்டு எடுத்துக் கொண்டிருந்தாள். தொட்டுக் கொள்ள சாஸ் இருக்கிறது.

கட்லெட் வாசனை சமையலறையைக் கடந்து நிகிலின் ரூமில் நுழைந்தது. நிகில் மெதுவாக வந்து “அம்மா! ரெடியாயிடுச்சாம்மா?” என்றான்.

“இதோ! ஆயாச்சு! இன்னும் நாலு சுட்டு நானே எடுத்துக்கிட்டு வரேன் நீ போடா கண்ணா!”

சொன்ன மாதிரியே நிறைய சுட்டு எடுத்துக் கொண்டு மணக்க மணக்க இஞ்சியும் ஏலக்காயும் போட்ட டீயும் போட்டு வைத்து விட்டு ஒரு டிரேயில் அழகாகக் கட்லெட்டுகளை அடுக்கி சாசையும் எடுத்துக் கொண்டு நிகிலின் அறைக்குள் நுழைந்தாள். “ஹோ” வென்ற கூச்சலுடன் வரவேற்றனர் அவர்கள்.

“டேய்! நிகில் கிச்சன்ல டீ போட்டு வெச்சுருக்கேன், போயி எடுத்துக்கிட்டு வா”

டீய்டன் வந்தான் நிகில். அவனுக்கு ஒரு “ஹோ” போட்டனர்.

கொஞ்ச நேரத்துக்கு கைகளும் வாய்களும் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தன. சுவைத்து உண்டு கொண்டிருந்தனர் அவர்கள். கல்யாணிக்கு மகிழ்ச்சி.

சற்று நேரத்துக்குப் பிறகு “ஆன்ட்டி நீங்க கட்லெட் ரொம்ப நல்லா செஞ்சுருக்கீங்க. வாசனை தூக்குது. எப்படிச் செஞ்சீங்க?” என்றான் நிகிலின் நண்பன் கண்ணன்.

“டேய்! எப்படி செஞ்சா உனக்கு என்னடா? சாப்பிட நல்லாயிருக்கா? அவ்ளதான் நமக்கு வேணும். நீ என்ன பொண்ணு மாதிரி எப்படிச் செஞ்சீங்கன்னு கேட்டுக்கிட்டு இருக்கே?”

“என்ன நீ இப்படிச் சொல்லிட்ட? இப்பல்லாம் பொண்ணுங்களை விட பசங்க தான் குக்கிங்ல இண்டிரெஸ்ட் காட்டறாங்க. அதான் அவன் கேட்டான் . இதுல என்ன தப்பு?”

“அவன் அதுக்காகக் கேக்கல ஆன்ட்டி! ஃபாரின் யூனிவர்சிட்டில எடம் கெடச்சு வெளிநாடு போயிட்டா நாமே தானே சமச்சுச் சாப்பிடணும்? அதுக்காக இப்பவே கேட்டு வெச்சுக்கறான் இல்லடா சுரேஷ்?”

“நீங்க எப்படி வேணா வெச்சுக்கோங்க!ஆன்ட்டி பண்ற கட்லெட் மாதிரி வராது.”

“டேய்! எதுக்குடா இப்டி ஐஸ் மழையாக் கொட்ற? எங்கம்மாவுக்கு ஜலதோஷம் பிடிச்சுக்கப் போவுது. “

அவர்கள் பேசிக்கொள்ளட்டும் என்று அவர்களைத் தனியாக விட்டு விட்டு வெளியில் வந்து கிழிந்த துணிகளைத் தைக்க உட்கார்ந்தாள் கல்யாணி. ஆனாலும் உள்ளே நடக்கும் பேச்சு அவளுக்குக் கேட்டுக் கொண்டு தான் இருந்தது.

“டேய் மச்சான்! நீ ரொம்பக் குடுத்து வெச்சவண்டா! உங்கம்மா ரொம்ப நல்லவங்கடா”

“எங்க வீட்டுல எங்கம்மா வேலைக்குப் போறதால நாம போய்ப் படிச்சாலும் இவ்ளோ விதவிதமாச் செஞ்சு தர அவங்க வீட்டுலயே இருக்க மாட்டாங்கடா. அதுவே எனக்குக் கடுப்பா இருக்கும்”

“ஆமாண்டா! அம்மா வேலைக்குப் போனா என்னவோ போலத்தான் இருக்கு மச்சி! நமக்கு மட்டும் லீவு விட்டிருக்கும் போது வீட்டுல யாருமே இல்லாம சோறு போடக்கூட ஆளில்லாம சூனியமா இருக்கும் பாரு! அது நரக வேதனைடா மச்சான்”

“டேய் என்னடா நீங்க இவ்ளோ ஃபீல் பண்றீங்க? உங்கம்மாவும் வேலைக்குப் போறதாலதான் நீங்கள்ளாம் வசதியா இருக்கீங்க அதை மறந்துடாதீங்க! உங்கிட்ட பல்சர் பைக் இருக்கு. சுரேஷ் அபாச்சி பைக் வெச்சுருக்கான். கண்ணன் கிட்டயும் சூப்பர் பைக் இருக்கு. ஆனா நான் ஸ்கூட்டி தானே வெச்சுருக்கேன். அதுவும் எனக்கும் எங்கம்மாவுக்கும் காமனா உள்ளது. எங்கம்மா வேலைக்குப் போயிருந்தா எனக்கும் பைக் கெடச்சிருக்கும். வெளி நாடு போறதுக்கு இன்னும் கம்மியா லோன் போட்டா போதும். அதையெல்லாம் நீங்க பாக்கணும் இல்ல?” என்றான் நிகில்.

கல்யாணிக்கு வருத்தமாக இருந்தது. M.Com படித்திருந்தும் தான் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டது தவறோ? நிகிலின் மனதில் இவ்வளவு ஏக்கங்களா? வெளியில் ஒன்றும் சொல்ல மாட்டேனென்கிறானே? அவ்வளவு பெரிய மனிதன் ஆகிவிட்டானா அவன்?. பைக் ஓட்ட வேண்டும் என்று அவனுக்கு இவ்வளவு ஆசையா? மனதுள் மகன் குறித்துப் பெருமையும் அவன் ஏக்கம் குறித்துக் கவலையும் தோன்றியது. ஒன்றும் பேசாமல் மேலும் கவனித்தாள்.

“டேய் நிகில்! நீ நெனக்கறது தப்பு மச்சான். எங்கம்மா ஆரம்பத்துல இருந்தே வேலைக்குப் போறாங்க. ஸ்கூல் படிக்கும் போது ஸ்கூல் விட்டு வந்து நாமே ஆறிப் போன டிஃபனை எடுத்துச் சாப்பிடணும். எங்கியாவது அடிப்பட்டுதா? யார் கூடவாடவாவது சண்டை போட்டியா? டீச்சர் அடிச்சாங்களான்னு அன்பாக் கேக்கறதுக்குக் கூட ஆளிருக்காதுடா மச்சான். அம்மா எப்படா ஆபீஸ் விட்டு வருவாங்கன்னு தோணும். அப்டி வந்தாலும் சாப்டியா? டியூஷன் போனியா? ஹோம் ஒர்க் பண்ணியா?ன்னு மெக்கானிக்கலாக் கேட்டுட்டு அக்கடான்னு கொஞ்ச நேரம் படுத்துடுவாங்க. அப்ப அவங்களைப் போயி டிஸ்டர்ப் பண்ண மனசு வராதுடா மச்சான். இவ்வளவு ஏன்? நிகில் நீயும் உங்கம்மாவும் எவ்ளோ குளோசா இருக்கீங்க ஆனா நான் அப்டி இல்ல தெரியுமா? நான் எங்கம்மாவோட எல்லா விஷயத்தியயும் ஷேர் பண்ண மாட்டேன் “என்று நீண்ட பிரசங்கமே பண்ணி விட்டான் கண்ணன்.

அந்த உணர்ச்சிமயமான பேச்சினால் சற்று நேரம் மௌனம் நிலவியது அங்கு. கல்யாணி கண்களைத் துடைத்துக் கொண்டாள். அம்மாக்கள் வேலைக்குப் போவதால் குழந்தைகள் என்னென்ன இழக்கிறார்கள்? பாவமாக இருந்தது கல்யாணிக்கு. இதற்கு நிகில் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று அறிய ஆவலாக இருந்தது. காதைத் தீட்டிக் கொண்டாள்.

அந்த அறையின் மௌனத்தைக் கலைத்தான் பாலா.

“நீ சொல்றது கரெக்டுடா கண்ணா! ஆனா எங்கம்மா அவ்வளவாப் படிக்காததால என்னால பல விஷயங்களை அவங்க கூட ஷேர் பண்ண முடியல. ஃபார் எக்சாம்பில் அவங்களுக்குக் கம்பியூட்டர்னா என்னன்னே தெரியாது. அப்புறம் தானே இண்டர் நெட்டைப் பத்தி அவங்க புரிஞ்சிப்பாங்க? அம்மாக்கள் நல்லாப் படிச்சுருக்கணும்டா மச்சான்.”

“டேய் கண்ணா! பாலா சொல்றதைக் கேட்டீல்ல? உங்கம்மா வேலைக்குப் போறதால லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாமே தெரியும். அதை நீ பாராட்டணும் இல்ல? எங்கம்மா படிச்சவங்க தான். போஸ்ட் கிராஜுவேஷன் முடிச்சவங்க தான். ஆனா அவங்களுக்கு கம்ப்யூட்டர், இண்டர் நெட் எதுவுமே தெரியாது. கிச்சனே கதின்னு இருக்காங்க. அதுவும் தான் நல்லால்லே! “

கேட்டுக் கொண்டிருந்த கல்யாணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நிகில் இப்படி வேறு நினைத்துக் கொண்டிருக்கிறானா? நாமும் தான் ஒரேயடியாய் சமையலறையே கதியென்று இருந்து விட்டோமோ? கல்யாணிக்குள் சின்ன நெருடல்.

ரூமிற்குள் பேச்சு தொடர்ந்தது.

“ஆனா! ஆயிரம் சொன்னாலும் ஸ்கூல், காலேஜ் விட்டு வந்ததும் அம்மா வீட்டுல இருந்தா அந்தச் சந்தோஷமே தனி தாண்டா மச்சான். வித விதமா பைக் இல்லேன்னாலும், அம்மாவுக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி தெரியல்லன்னாலும் பரவாயில்ல மச்சான். ஆனா வீட்டுக்குள்ள நொழஞ்ச ஒடனே “என்னடா கண்ணா”ன்னு கேக்க அம்மா கண்டிப்பா வேணுண்டா. அந்தச் சந்தோஷத்துக்காக ஆயிரம் பைக்கை தியாகம் பண்ணலாம்டா சுரேஷ். அந்த விஷயத்துல நான் உண்மையிலேயே குடுத்து வெச்சவந்தான். நீங்கல்லாம் கேப்பீங்கல்ல நீ எப்படிடா அலட்டிக்காம இவ்ளோ மார்க் வாங்கறன்னு? அதுக்குக் காரணம் என் ஃபேமலி தாண்டா மச்சான். எங்கம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டையே வராது. அப்டியே வந்தாலும் எனக்குத் தெரியாமே மறைச்சு என் எதிர சாதாரணமா இருப்பாங்க. எனக்கு ஒடம்பு சரியில்லன்னா என் கூடவே உக்காந்து இருப்பாங்கடா! நல்ல சத்துள்ள சாப்பாடா செஞ்சு தருவாங்கடா! இதை விட நமக்கு என்ன வேணும் மச்சான். வீட்டுல அமைதியும் சந்தோஷமும் இருந்தா என்ன வேணா சாதிக்கலாம்டா மச்சான்” என்றான் நிகில்.

கல்யாணிக்குப் பெருமையில் முகம் பூரித்தது.

அப்புறம் பேச்சு எங்கெங்கோ திரும்பி மீண்டும் படிப்பில் நிலைத்தது.

கர்வத்திலும், பெருமையிலும் கண் நிறைந்து நெஞ்சு விம்மியது. பெற்றோரை எவ்வளவு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறான் நிகில்? அவனுக்கு எந்தக் குறையும் வரக்கூடாது. எத்தனை விஷயங்களைக் கவனித்திருக்கிறான்? மனது தழதழத்தது. இந்தக் காலத்து இளைஞர்கள் எத்தனை தெளிவாக இருக்கிறாகள்? தன் தேவை என்ன என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இதெல்லாம் கம்ப்யூட்டர் இண்டர் நெட்டில் போய்த்தான் தெரிந்து கொள்கிறார்களோ? அதனால் தான் தனக்கு கம்ப்யூட்டர் தெரியாததை இவ்வளவு பெரிய குறையாக நினைக்கிறானா? நிகில்? என்று நினைத்துக் கொண்டாள் கல்யாணி.

“இந்தக் காலத்துக் குழந்தைகள் பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே கம்ப்யூட்டர் இண்டர் நெட் என்று கற்றுக் கொண்டு கலக்குகிறார்கள். ஆனால் நான் நிறையப் படித்தும் நடுவில் வேலைக்குப் போகாததால் இவற்றையெல்லாம் கற்றுக் கொள்ளாமல் விட்டு விட்டேன். அன்று நிகிலுடன் இருந்து அவனை வளர்க்க வேண்டும் என்று தான் பார்த்துக் கொண்டிருந்த தனியார் கம்பெனி வேலையை விட்டேன். ஒரு வேளை அது தவறோ? “

“நானும் விடாமல் வேலைக்குச் சென்றிருந்தால் லேட்டஸ்ட் தொழில் நுட்பங்களைக் கற்பதுடன் நிகிலுக்கு அவன் ஆசைப்பட்டபடி பைக் வாங்கிக் கொடுக்க முடிந்திருக்குமே? ஆனால் ஏன் நிகிலின் அப்பா இது குறித்து எந்த முயற்சியும் எடுக்கவில்லை? உன்னை நீ அப்டேட் பண்ணிக்கொள் என்று ஏன் சொல்லவில்லை? அவ்வளவு ஏன்? வீட்டில் கம்ப்யூட்டர் வாங்கிப் போட்டு இத்தனை நாள் ஆகிறதே “நீ கற்றுக் கொள்ளேன் என்று என்னிடம் கூறியதில்லையே?ஏன் காரணம் என்னவாக இருக்கும்?”

“ஒரு வேளை நான் சம்பாதிப்பது அவருக்குப் பிடிக்காதோ?” என்று கன்னாபின்னாவென்று எண்ணங்கள் அலை மோதின. தன்னைத்தானே கடிந்து கொண்டாள். “சீ! நீ ஒரு பைத்தியம். நிகில் சொன்னதைப் பூராக் கேட்டீல்ல? அவன் என்ன சொன்னான்? காலேஜ் விட்டு வரும்போது அம்மா இருக்கறது எவ்ளோ நல்லாயிருக்குன்னு சொன்னானே? அதுக்காகவே எத்தனை வேலையை வேணா தியாகம் பண்ணலாம்.” என்று என்ணிக் கொண்டாள்.

ஆனால் இவள் தான் சம்பாதிப்பது குறித்தும், லேட்டஸ்ட் தொழில் நுட்பங்கள் கற்றுக் கொள்வது குறித்தும் அவள் கொண்டிருந்த எண்ணங்கள், நினைப்புகள் வேர் விட்டு வளர்ந்து ஒரு மரமாகப் போகிறது என்பதோ, அதன் கனி விஷமாகி இந்தக் குடும்பத்தை ஆட்டுவிக்கப் போகிறது என்றோ நிகிலுக்கும் தெரியாது கல்யாணிக்கும் தெரியாது. அதனால் அவரவர் வேலையில் சந்தோஷமாக ஆழ்ந்திருந்தனர்.

 (தொடரும்)

படத்திற்கு நன்றி: http://www1.carleton.ca/sasc/learning-support-services/group-study-rooms/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *