உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-5)

 ராமஸ்வாமி ஸம்பத்

மாலடியான் என்கிற முல்லைத்தேவன் சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவன். உழவுத்தொழிலில் சிறந்து விளங்கியதோடு, சிலம்பம் மற்றும் மல்யுத்தம், கத்திவீச்சு, வில் வித்தை, புரவியேற்றம் முதலிய போர்க்கலைகளிலும் நன்கு தேர்ச்சி பெற்றவன் அவன்.

திருமுல்லைவாயில் இளைஞர்களுக்கு அவன் ஒரு நாயகனாகத் திகழ்ந்தான். இதற்கும் மேல் பக்கத்து ஊரான திருவெண்காட்டுக்கு தினம் சென்று அங்கு வசித்து வந்த அந்தண வித்தகர் ஒருவரிடம் தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள நீதி நூல்களையும் மற்றும் அரசியல் நிர்வாகத் தத்துவங்களையும் பயின்று வந்தான்.

இப்படி இளம் பருவத்திலேயே ஒரு சகலகலா வல்லவன் என்று பெயர் பெற்றிருந்த முல்லைத்தேவன் ஒரு நாள் நடுநாட்டில் நடந்த மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போது அப்பகுதியைச் சேர்ந்த சிற்றரசன் ஒருவன் மிக்க மகிழ்ச்சியுடன் முல்லைத்தேவனைத் தன் மெய்க்காப்பாளனாக அமர்த்திக் கொண்டான். அவன் முகப் பொலிவினையும், வாட்டசாட்டமான கட்டமைப்பையும், புஜபல பராக்ரமத்தினையும், அறிவுக் கூர்மையையும் கண்டு மகிழ்ந்து அவனைத் தன் நம்பிக்கைக்குரிய அந்தரங்க ஒற்றனாகப் பதவி உயர்வு கொடுத்தான்.

குலோத்துங்கன் ஆட்சி இறுதிக் கட்டத்தில் இருந்த தருணம் அது. தள்ளாத வயதினையடைந்த குலோத்துங்கன் தனக்குப் பின் யார் ராஜகேசரியாகப் போகிறான் என்பதனை இன்னும் முடிவு செய்யவில்லை. அத்தருணத்தில் சோழர்களின் நெடுநாட் பகைவனான மேலை (கல்யாணி) சாளுக்கிய மன்னனான ஆறாம் விக்கிரமாதித்தன் சோழ நாட்டின் மீது போர் தொடுக்க இது ஏற்ற சமயமென நிர்ணயித்துத் தன் சிற்றரசனான ஹொய்சள நாட்டு விஷ்ணுவர்த்தனனை முடுக்கி வைத்திருந்தான். சோழநாட்டுக் குறுநிலக் கிழார்களும் ஒரு கட்டு மீறிச் சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவன்தான் முல்லைத்தேவனின் யஜமானன். அவன் ஒரு வைணவ வெறுப்பாளன். அவன்தான் தில்லை நடராஜர் ஆலயத்தை விரிவாக்கும் நோக்கத்தோடு திருச்சித்திரக்கூடத்து கோவிந்தராஜரின் சிலையைக் கடலில் எறியத் திட்டமிட்டவன். இது விஷயமாக மக்கள் கருத்தினை அறிந்து வருமாறு முல்லைத்தேவனைப் பணித்தான்.

இவ்வலுவல் நிமித்தம் சீர்காழிக்கு சென்றிருந்த போது அங்குள்ள தாடாளன் சன்னிதியில் நடைபெற்ற திருவோணத் திருவிழாவில் கலந்து கொண்ட முல்லைத்தேவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்வு நேர்ந்தது. அங்கிருந்த பக்தர் குழாத்திடையே, நீலவானத்தை நீங்கி நிலத்தில் நிலை கொண்டு விட்ட நிலவோ என்று வியக்கும் வண்ணம் திகழ்ந்த ஒரு இளம் நங்கையைக் கண்டான். அவளது வசீகரமான வதனம், வில்லினை ஒத்த புருவத்தின் கீழ் சதா வட்டமிட்ட வண்ணம் இருக்கும் கருவிழிகள், செதுக்கி வைத்த சிலையினது போன்ற கூர்மையான நாசி, பவளவாய், சிறு மருங்குல், இளமஞ்சள் பட்டு மேனி, வாளிப்பான உடல்வாகு அவனை எங்கேயோ அழைத்துச் சென்று விட்டன. அப்படி மெய்மறந்த நிலையில் இருந்த அவனை,

ஓரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி
உலகு அனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும்
தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த
தாடாளன் தாள் அணைவீர்! தக்க கீர்த்தி
அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்
அங்கங்கள் அவை ஆறும் இசைகள் ஏழும்
தெருவில் மலி விழாவளமும் சிறக்கும் காழிச்
சீராமவிண்ணகரே சேர்மின் நீரே’

என்று அவள் தன் தேனினும் இனிய குரலில் திருமங்கை ஆழ்வாரின் பாசுரத்தைப் பண்ணிசைத்துப் பாடியது மீண்டும் சுயநினைவினுக்குக் கொண்டு வந்தது.

‘ஆஹா! என்ன அழகு! எப்பேற்பட்ட மயக்கும் குரல்வளம்!’ என்று சிந்தனை செய்த முல்லைத்தேவன் ஒரு முடிவுக்கு வந்தான். இது வரை திருமணத்தைப் பற்றி யோசனை செய்யாதிருந்த அவன், ‘இவளையே வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்ள வேண்டும்’ என்ற நிலைக்கு வந்துவிட்டான். அதற்கான முயற்சியில் எவ்வாறு ஈடுபடுவது என்று அவன் எண்ணுங்கால் திடீரென்று அவளைக் காணவில்லை. எங்கு மாயமாய் மறைந்திருப்பாள் என்று பலவாறு தேடியும் அவள் அகப்படவில்லை. மறுநாள் தன் தொழில் திறனைப் பயன்படுத்தி அந்நங்கையின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து, அவ்வில்லத்தின் முன் நின்றான்.

அப்போதே தன் அனுஷ்டானங்களை முடித்து விட்டு மதிய உணவு புசித்து விட்டு, கையில் விசிறியுடன் திண்ணையில் இளைப்பாறிக் கொண்டிருந்த மணிவண்ண நம்பி வாயிலில் குதிரை மேலிருந்து இறங்கிய முல்லைத்தேவனைக் கண்டு இவ்வாலிபன் யாராக இருக்கும் என யோசித்தார். அவர் ஏதும் கேட்கும் முன், அவன் அவர் பாதங்களை வணங்கி, “வைணவ குலஸ்ரேஷ்டரே! இச்சிறுவனின் தண்டன்களை ஏற்றுக்கொள்க,” எனக்கூறினான்.

“உன்னைப் பார்த்தால் ஒரு பெரிய ராஜசேவகனாக தெரிகிறாய். நீ யாரப்பா? என்னிடம் உனக்கு என்ன பணி?” என்று வினவினார்.

முல்லைத்தேவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தான் வந்த காரியத்தை மெள்ள விவரித்தான். “ஐயா, தங்கள் திருமகளைத் தாடாளன் கோவிலில் கண்டது முதல் என் மனதினை அவளிடம் பறி கொடுத்து விட்டேன். அவள் கைத்தலம் பற்றுவதற்கு உங்களிடம் சரண் புகுகிறேன்,” என்றான்.

”நீயோ சைவ குலத்தைச் சேர்ந்தவன். நாங்களோ வைணவர்கள். நமக்குள் எவ்வாறு கொள்வினை கொடுப்பினை சாத்தியமாகும்?”

”ஐயா, சைவனாக இருந்தாலும் ’சமயமனைத்தும் சமமே’ என்ற உயர்ந்த கொள்கையை உடையவன் நான். தங்கள் திருமகளின் சமயக் கோட்பாட்டினை மதிப்பேன் என்று அறுதியிட்டுக் கூறுகிறேன்.”

முல்லைத்தேவனின் பணிவும் அணுகுமுறையும் மணிவண்ண நம்பியை வெகுவாகக் கவர்ந்தன.

”அது சரி. என் மகள் தனக்கு வரப்போகும் மணாளன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற கனவுகளையும் கருத்துக்களையும் உடையவள். அவள் சம்மதத்தினைக் கேட்க வேண்டாமா?”

“ஐயா, தாங்கள் அனுமதித்தால் நாங்கள் தங்கள் முன்னிலையிலேயே பேசுவோம். இறைவன் அருளால் எங்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட்டால், நல்லதே நடக்கும்.”

“என் முன்னிலையில் வேண்டாம். அருகே உள்ள தோட்டத்தில் தனித்தே உரையாடி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால் உன் அதிகார பலத்தினால் அவளைக் கட்டாயப் படுத்தக் கூடாது.”

நம்பியின் பெருந்தன்மை அவனை வியப்புறச் செய்தது. ”ஐயா, மிக்க நன்றி. இரு உள்ளங்களின் உடன்பாடே திருமணத்துக்கு நல்லது என்பது தங்களுக்குத் தெரியாததல்ல. என் வரைக்கும் எவ்வித கட்டாயமும் இருக்காது”

 

படத்திற்கு நன்றி: http://templenet.com/Tamilnadu/s088.html

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உறவேல் ஒழிக்க ஒழியாது (பகுதி-5)

 1. விறுவிறுப்பாகச் செல்கிறது.  தில்லை கோவிந்தராஜரைக்கடலில் வீசிய செய்தி குறித்த சரித்திரத் தகவல்கள் மேலும் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கிறேன்.  நன்றி. 

 2. “என் முன்னிலையில் வேண்டாம். அருகே உள்ள தோட்டத்தில் தனித்தே உரையாடி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஆனால் உன் அதிகார பலத்தினால் அவளைக் கட்டாயப் படுத்தக் கூடாது.”
  – இது கதையே என்றாலும் கற்பனையே என்றாலும் எனக்கு இதில் உடன்பாடு இல்லை.

  எந்தவொரு தந்தையும் எந்தக்காலத்திலும் தனது மகளை அன்னியன் ஒருவனுடன் பேசி முடிவெடுக்க அனுமதிப்பதே இல்லை.

  மேலும், பருவத்திற்கு வந்த பெண் எந்த ஒருஆடவனுடன் தனித்து நின்று பேசுவதில்லை.  அதிலும் அன்னிய ஆடவரோடு பேசுவதில்லை.  

  அன்பன்
  கி.காளைராசன்

Leave a Reply

Your email address will not be published.