முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை
மரத்தடி ஒன்றில் கிடந்தார் பிள்ளையார்
கோயில் இல்லை, கூரையும் இல்லை
கும்பிடப் பெரிதாய்க் கூட்டமும் இல்லை
பணமிகப் படைத்ததோர் பக்தன் வந்தான்
எந்தன் செல்வம் என்றும் காப்பீர்
நாளும் உனக்கு நாலணா தருவேன்
நன்றியோடிருப்பேன் நாயகா என்றான்.
திருடன் ஒருவனும் அவ்விடம் வந்தான்
இந்தச் செல்வனின் சொத்தைத் திருடுவேன்
சிறையுள் புகாமல் நீ எனைக் காத்தால்
கிடைப்பதில் பாதி உனக்கே என்றான்.
ஏழைப் பிள்ளையார் ஏழைக்குதவினார்
உண்டியல் நிரம்ப நோட்டுக் கத்தை
அறங் காவலர்கள் அப்பாவி மக்கள்
அத்தனை பணத்தையும் அவர்க்கே ஆக்கினர்
நிலங்கள் வாங்கினர் கோயிலைக் கட்டினர்
நகைகள் செய்தனர் கவசம் பூட்டினர்
பக்தர் கூட்டமோ பல பல ஆயிரம்
உள்ளே நுழையவே ஒரு நூறு கட்டணம்
அரசியல் வாதியின் கைகள் அரித்தன
வட்டம் பிடித்துமா வட்டம் வளைத்து
கோட்டையை நெருக்கினான். கோவிலில் இவனை
அறங்காவலனாய் அமைச்சர் அமைத்தார்.
கணக்கில் மறைத்துக் கரவுகள் செய்து
நிலங்கள் வளைத்து நகைகள் பதுக்கி
உண்டியல் திருடியும் நிறைவடையாமல்
சாமிக்கடியில் ரத்தினம் உளதென
பாறையால் ஒரு நாள் பெயர்த்துப் போட்டான்
மீண்டும் பிள்ளையார் மரத்தடி வந்தார்
முப்பது வருஷம் வாழ்ந்தவரில்லை
மூத்த கணபதியும் விதிவிலக்கில்லை.
படத்துக்கு நன்றி
http://www.canstockphoto.com/time-circle-0672282.html
அய்யகோ…கலி காலத்தில் கடவுளின் நிலையே கவலைக்கிடமாய் இருக்கையில்…சாமான்ய மனிதன் எங்கே போவான்?…என்ன செய்வான்?…