செரியாத கல்வியின் சுமை-24
அவ்வை மகள்
ஆலயம் தழுவுதல் சாலவும் நன்றுபாரம்பரிய அரிசி-சார் – பிரதான உணவு வகைகளே மிகச் சிறந்தவை என்பதை உணர்ந்து செயல்படும் ஜப்பானியப் பாங்கைப் பார்த்தோம்.
தமிழகத்தில் நம் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உணவு அரிசி-சார் உணவு என்பதும் பரிந்துரைக்கப் பட்ட ஊட்டச்சத்து அளவீடுகள் அதில் உள்ளன என்பதும், மதிய உணவானது, புதிதாகத் தயாரிக்கப்பட்டு, குழந்தைகளுக்குச் சூடாக வழங்கப்படுகின்றது என்பதும் சிறப்பான அம்சங்கள் என்பதை நாம் மீண்டும் பாராட்டும் கடமை கொண்டுள்ளோம்.
இத்தருணத்தில், நம்முன் நாம் நிறுத்திக்கொண்ட இரு இலக்குகளை மீண்டும் நினைவு கூர்வோம்:
(I) பள்ளி மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் கர்நாடகா மற்று குஜராத் மாநிலங்களை விஞ்சும் அளவுக்குத் தமிழகத்தில் நம் பள்ளி மதிய உணவுத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
(II) ஏகப்பட்ட எண்ணிக்கையில் விரிந்து பரவியிருக்கிற தனியார்ப் பள்ளிகளும் தேசிய உணவுத்திட்டத்தில் பங்கேற்று தம் பள்ளிகளில் பயில வரும் மாணாக்கர்களுக்கு உணவு வழங்கும் தார்மீகக் கடமையைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.
இந்த இலக்குகளை அடைய வேண்டுமெனில், சில நியதிகளும் எதிர்பார்ப்புகளும் உண்டு. அவையாவன:
(1) எந்தச் சூழ் நிலையிலும் பள்ளி உணவு – ஊட்டச்சத்தில் உயர் தரமானதாக இருக்க வேண்டும் –
(2) போதுமான அளவில் குழந்தைகளுக்குத் தரப்படுவதாக உணவு இருக்க வேண்டும்.
(3) எளிதில் தயாரிக்கப் படக்கூடியதாக உணவு இருக்க வேண்டும்.
(4) புதிதாய்த் தயாரித்து வழங்கப் படக் கூடியதாக உணவு இருக்க வேண்டும்.
(5) ஒரு வேளை விநியோகிக்க சிறிது தாமதமானாலும் சூடு காக்கக் கூடியதாகவும் குழந்தைகள் வெறுக்காமல் சாப்பிடக் கூடியதாகவும் கெட்டுப்போகாததாகவும் உணவு இருக்க வேண்டும்.
(6) வட்டார மையம் ஒன்றில் தயாரிக்கப்பட்டு, குறுகிய தூர இடைவெளியில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இலகுவாக எடுத்துச் சென்று பல துணை மையங்களில் விநியோகிப்படக் கூடியதாக உணவு இருக்க வேண்டும்.
(7) உணவு உண்ணக் குழந்தைகள் பயன்படுத்தும் தட்டுகள், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில், சுற்றுச் சூழலை மாசு படுத்தாத பசுமைப் பொருட்களாக – தாவரசார் பொருட்களாக மட்டுமே இருக்க வேண்டும்.
(8) மூலப் பொருள் கொள்முதல், மூலப் பொருள் தருவிப்பு, தர நிர்ணயம், சமையற் கூட நிர்மாணம் மற்றும் வடிவமைப்பு, உணவு தயாரிப்புப் பாத்திரங்கள் மற்றும் உணவு பரிமாறும் பாத்திரங்களின் தரம் உறுதி, உழைப்புத் திறன், பாதுகாப்பு, கையாளும் வசதி, சுத்திகரிப்பு நிர்வாகம் ஆகியவை எளிமையானதாகவும் பொருளாதாரச் சிக்கனம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
(9) உணவுத் தயாரிப்பு முறைகளில் சுத்தம், மேற்பார்வை, எளிமை, பாதுகாப்பு உத்திரவாதம், அன்றாடம் விநியோகிக்கும் முன் தர நிர்ணயம் சுகாதார நிர்ணயம் ஆகியன உறுதி செய்யப்படும் வசதி ஆகியன நிரம்பியதான ஒரு ஒருங்கிணைந்த ஏற்பாட்டை நாம் செய்யக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
(10) பல்வேறு உணவு தயாரிப்புப் பழக்க வழக்கங்கள் உள்ள வீடுகளிலிருந்து குழந்தைகள் வந்தாலும், அவர்கள் அனைவரும் பள்ளியில் வழங்கும் உணவை ஒதுக்காமல் உண்டு பயனடையுமாறு ஏற்புடைய ஒரு பொது உணவு வழங்கப் படவேண்டும்.
இந்தப் பத்துக் கட்டளைகளின் – பாதையில் நம் சிந்தனையைச் செலவிட்டோமென்றால், பள்ளி உணவுப் பணி என்பது கடப்பாட்டோடு மேற்கொள்ள வேண்டிய பணி என்பது தெளிவாகிறது.
மனித உயிரிகள் உண்ணக் கூடிய உணவைத் தயாரித்து வழங்குவதிலே நியமங்கள் பல தேவை என்பதையும் நாம் மீண்டும் மனதில் பதித்துக் கொள்கிறோம்.
மூலப் பொருட்களில் கலப்படம், சமைக்கும் பாத்திரங்களில் துலக்கா அழுக்கு, உபயோகிக்கும் நீரில் தொற்றுக் கிருமிகள், காய்கறிகளில் தரக் குறைவு அல்லது மாறாட்டம் அல்லது அழுகல், பரிமாறும் கோப்பைகள் மற்றும் கரண்டிகளில் சுகாதாரமின்மை, சமைத்தும், சமைக்காமலும் உணவு களவு போதல், ஆகிய பல பிரச்சனைகள் எழும் களம்தான் இந்த பொத்தம் பொதுச் சமையல் பணி.
இவற்றையெல்லாம் கவனத்துடன் களைந்து, தரமான, சுவையான உணவைத் தயாரித்து, குழந்தைகள் மண நிறைவோடு – மன நிறைவோடு – சுவை மகிழ்ந்து உண்ணுமாறு செய்ய வேண்டுமென்றால், இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு:
(1)நல்ல தர்ம சிந்தனை வேண்டும்,
(2)நிறைய பேருக்கு உணவு தயாரித்து வழங்கும் தொடர் அனுபவம் அவர்களுக்கு இருக்க வேண்டும்.
(3)அவர்கள் சமைத்து வழங்கும் உணவு வகைகள், மக்களுக்கு இணக்கமானதும், ஏற்புடையதும், நிலைத்த வரவேற்பைத் தொன்று தொட்டு நிலை நாட்டி இருப்பதுமான வரலாறும் இருக்க வேண்டும்.
இவ்வகையில் தொடர்ந்து நம் சிந்தனையைச் செலுத்துவோம்:
குஜராத் – கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் பள்ளி உணவு திட்டத்தை மிகவும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றன என்பதை ஏற்கனவே நாமறிந்து கொண்டோம். இஸ்கான் அமைப்பு கர்நாடகத்தில் பள்ளி உணவில் பங்கேற்பதையும் குஜராத்தில் அறப் பணிக் குழுக்களின் பொறுப்பு கொண்டுள்ளன எனவும் நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். இவ்வகையில், இவர்களின் செயலாக்கத்தை நாம் முதலில் கவனிப்பது நல்லது.
குஜராத் – கர்நாடகா ஆகிய இரு எடுத்துக்காட்டுக்களை நாம் இங்கு ஒப்பு நோக்குவது இவை பள்ளி மதிய உணவு திட்டத்தில், தமிழகத்தை விட மிகச் சிறப்பாக இயங்குவதின் காரண காரியங்களை அறிந்து கொள்ள மட்டுமே தவிர – எவ்வகையிலும் இந்த மாநிலங்களில் அரசியல் – ஊழல் – மனிதப் பிரச்சனைகள் – வழக்குகள் – புகார்கள் எதுவும் இல்லை என்று கட்டுரைத்துப் போக அல்ல. கல்விக் கூடங்களில் – மதிய உணவுத் திட்டத்தைச் செம்மைப் படுத்துவது பற்றி மட்டுமே நம் கருத்தைச் செலவிடுவோம். இருள் விலக வேண்டுமென்றால் – ஒளியைப் பாய்ச்சுவது மட்டுமன்றோ பலனளிக்கும்!!
பள்ளி மதிய உணவு என்பது இன்றியமையாத மனித சேவை – சமுதாயப் பணி என்கிற வகையில், இப்பணியில் நம்மைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படும் பிறரின் செம்மார்ந்த நடைமுறைகளை (Best Practices) நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பது அவர்களது நடைமுறைகளை நாம் நமக்கேற்றார்போல் தகவமைத்துக் கொள்ளத்தான்.
சொல்லப் போனால் கர்நாடகம் மற்றும் குஜராத் ஆகிய இந்த இரு மாநிலங்களும் நம் தமிழகத்துக்கு, வெகு காலத்துக்குப் பின்னர் மட்டுமே (2002-ல் கர்நாடகமும், 1984-ல் குஜராத்தும்), பள்ளி மதிய உணவுத் திட்டத்தைத் தழுவின. எனவே இம்மாநிலங்கள் மீது தேவையில்லாமல் புகழாரம் சூட்டும் எண்ணம் எனக்கு இல்லை. நாம் ஏற்கனவே பள்ளி உணவுத் திட்டத்தில் உலக அளவில் முத்திரை பதித்தாகி விட்டது. புத்தொளி பெற்று, நமது செயல்முறைகளைச் சீர் படுத்தி மெருகேற்றிக் கொள்ளுவது மட்டுமே நமது இன்றைய தேவை.
பார்க்கப் போனால் – நாம் இப்போது குஜராத்தின் வெற்றியை அளவீடு செய்கிறோம். ஆனால், அவர்களோ, நமது வெற்றியைக் கண்டு நம்மைப் பார்த்துத் தம்மை மாடல் செய்து கொண்டவர்களே! குஜராத் மாநிலம் கட்டம் கட்டமாகத் தொடர்ந்து நம்மை உற்றுக் கவனித்துத் தம் வழிமுறைகளில் தொடர்ந்து மாறுதல் செய்து வந்தது எனலாம். தமிழகத்தின் பாரம்பரிய இட்டிலி சாம்பாரின் ஊட்டச்சத்து மகிமையை உணர்ந்தவர்களாக, 2006-லிருந்து பள்ளி உணவில் இட்டிலி சாம்பார் சேர்த்த முதல் மாநிலம் குஜராத் என்றால் இந்தப் பெருமை நம்மை அல்லவா சாரும்!
குஜராத் மாநிலம் பன்னெடுங்காலமாக அறக்கட்டளைகளுக்குப் பேர் போனது என்றால். காந்தி அடிகள் வலுப்படுத்திய சேவை மனோபாவம் அங்கு அறத் தொண்டை மேலும் வலுப்படுத்தியது, அது மட்டுமல்ல சம்பாதிக்கும் பணத்தில், ஒரு பகுதியை அறக்கட்டளைகளுக்கு வழங்கும் உளப்பாங்கு கொண்ட மனிதர்கள் இங்கு அதிகம்.
கர்நாடகா மாநிலத்தில் அட்சய பாத்திர திட்டமும் இஸ்கான் ஆன்மீக அமைப்பும் அறப் பணிக்குப் பேர் போனவை. குஜராத் பெரியவர்கள் பல பேர் இஸ்கான் அமைப்பில் மிகப் பரவலான அறப்பணிகள் செய்கின்றனர். குஜராத் நில நடுக்கம் ஏற்படுத்திய கொடூரம் அறப் பணிகளின் தேவையை மேலும் வலியுறுத்தி உறுதிப் படுத்தியது என்று சொல்லலாம்.
இவர்கள் செய்யும் பல அறப் பணிகளுக்குள் ஒரு பணியைக் குறிப்பிட்டாக வேண்டும்:
நாள் முழுவதும் உணவு வழங்கும் மகத்தான பணியை குஜராத் அறக்கட்டளைகள் மற்றும் இஸ்கான் மன்றங்கள் ஆலயங்களில் தப்பாமல் செய்யும் காட்சியை உலகெங்கிலும் நாம் காண முடிகிறது.
(மேலும் பசுக்களைக் காக்கும் கோசாலாக்களை அமைத்துப் பசு நலனையும், பால் வளத்தையும் காக்க இவர்கள் சிறப்பான பணி ஆற்றுகின்றனர். பசுப் பணி – பசிப் பிணியை நீக்கும் – அன்னதானப் பணிக்கு ஒரு முக்கிய துணை எனபதைச் சொல்லவும் வேண்டுமோ? பாலும் மோரும் தயிரும், நெய்யும் மாடுகளின் பிரசாதங்கள் அல்லவா?)
தான் வறுமையுற்று வாடிய காலங்களில், இஸ்கான் கிருஷ்ணன் கோயில் சென்று அங்கு வழங்கப்பட்ட உயர்தர சாப்பாட்டைச் சாப்பிட்டு தம் உயிரையும் உடல் நலனையும் காப்பாற்றிக் கொண்டதாக ஸ்டீவ் ஜாப்ஸ் தம் சரிதையில் பதிவு செய்து விட்டுப் போயிருக்கிறார்.
இஸ்கான் கோயில்கள் போன்று அமெரிக்காவில் உள்ள குஜராத்-சார் கோயில்களில் தப்பாமல் நாள் முழுவதும் உணவு கிடைக்கும். உணவு என்றால் முழுச் சாப்பாடு. அந்த மெனுவைப் பார்க்க வேண்டுமே! அத்தனை நிறைவு! உணவை வேண்டும் அளவுக்குச் சாப்பிடலாம்! எந்தக் கட்டுப்பாடும் இல்லை – அனைத்தும் முற்றிலும் இலவசம்!!
பொருளாதார வீழ்ச்சியினாலும், இன்ன பிற காரணங்களினாலும் வேலை பறி போகிற காலத்தில், கோயில் பிரசாதங்களை மட்டுமே உண்டு ஜீவித்து வாழ்ந்திருக்கிற பல தனி நபர் கதைகள் அமெரிக்க வாழ் இந்தியர் வாழ்வில் இருப்பதை அறிகிறோம். ஸ்டீவ்ஸ் ஜாப் போலவே, பல பிற அமெரிக்க வாழ் அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்கர் அல்லாதார் வாழ்விலும் நம் ஆலய உணவுகள் ஜீவிதம் தந்து வாழ்வைப் பிடி நழுவி விடாமல் காப்பாற்றி இருக்கின்றன என்பதையும் நாம் அறிகிறோம்.
“தேசம் கலாசாரம், சமயம், குலம், முதலிய எந்தவித வேறுபாடும் பாராமல், விசாரியாமல் அனைவருக்கும் துன்பம் உறும்போது பசி தீர்க்க வேண்டும்” என்று சத்திய தர்ம சாலை ஏற்படுத்தி அணையா நெருப்புடன் அடுப்புகள் வளர்த்து அனைவருக்கும் அன்னம் வழங்கச் செய்தாரே வள்ளலார் அந்த “அறக்” கட்டளையின் சத்தியமான கடைப்பிடிப்பை ஆலயங்களில் நிறைவேறும் அறக் கட்டளைகளை உலகோர் பாராட்டும்படியாக நம்மவர் நிலை நிறுத்தியிருக்கிற பாங்கை எவ்வாறு வருணிப்பது!
ஜப்பானும் இவ்வாறானதே-
ஜப்பானின் பள்ளி உணவு வெற்றி பற்றிச் சென்ற இதழில் பார்த்தோம் அல்லவா? ஜப்பானியக் கலாச்சாரம் பண்டைய இந்தியக் கலாச்சாரத்தை ஒத்திருப்பதையும் நாமறிவோம். இவற்றில் பசுவதைத் தடையும், ஆலயங்களில் உணவு வழங்கலும் முக்கியமானவை என்பதைக் குறிப்பிட்டாகவேண்டும்.
ஆக-
தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் பார்க்கிற போது, தர்ம சிந்தனை உள்ள, விஸ்தாரணமாக (large scale) உணவு தயாரித்து வழங்குவதில் தொன்று தொட்ட பாண்டித்யம் உள்ள அமைப்புகள், தாம் மேற்கொள்ளும் பள்ளி உணவு திட்டத்தில் மிகுந்த வெற்றி கண்டு வருகின்றன என்பதை நாமறிந்து கொள்ளுகிறோம்.
எனவே நம் பள்ளி உணவு திட்டத்தில் விஸ்தீரணமும், விரிந்து பரந்த வெற்றியும் கிடைக்க வேண்டுமென்றால் ஆலயம் தழுவுதல் சாலவும் நன்று என்பது தெரிகிறது.
அது மட்டுமல்ல, இவ்வாறான உணவு வழங்கல் பணிகளில் உலகெங்கிலும் பெண்கள் மிக அதிக அளவில் பங்கேற்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது.
மதமாச்சரிய உணர்வுகள் தாண்டி, நம் சமுதாயத்திற்காக, நம் பள்ளிக் குழந்தைகளின் நலம் நிறைந்த வாழ்வுக்காக – அவர்கள் அனைவரின் கல்வி வெற்றிக்காக – எவ்வாறு ஆலயங்கள் ஆற்றும் அறப் பணிகளை நமதாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் பேசுவோம்.
படங்களுக்கு நன்றி:http://mch.aarogya.com/government-initiatives/mid-day-meal-programme-scheme.html
http://www.iskcontirupati.net/main/middaymeals.htm
http://www.be-pure.info/Vegetarianismsub/Books-and-recipes.html