நாட்டு நடப்பு (5)
வையவன்
நிஜமும் நிழலும்!
அம்மா தலையைப் பின்னிக்கொண்டே இருக்கிறாள். பெண் குழந்தை கையில் தட்டிலே போட்ட இட்டிலியை விண்டு கொண்டே இருக்கிறது. சாப்பிட விடாமல் கார்ட்டூன் கவர்ச்சி ஈர்க்கிறது. தெரு முனையில் ஸ்கூல் ஆட்டோ சப்தம் கேட்கிறது. “ஆட்டோ வந்துட்டுதுடீ சனியனே! இன்னும் என்ன டிவி வேடிக்கை?” என்று அம்மா முதுகில் தட்டுகிறாள்.
குழந்தை தட்டில் இருந்த இட்டிலியை சாப்பிடாமல் விட்டு விட்டுக் கை கழுவ ஓடுகிறது. வயிறு நிறையவில்லை. மனசோ இன்னும் டிவியில் பார்த்த காமிக் நினைவிலேயே நிற்கிறது. குழந்தை பள்ளிக்குப் போனது. ஒரு வழியாக வீட்டு வேலை முடிந்த பின் அம்மா குளித்து முடித்துக் கையில் டிபன் தட்டோடு டிவி எதிரில் உட்கார்கிறாள். அவள் விரும்பும் சீரியல் ஆரம்பமாகிறது நேரம் போனதே தெரியவில்லை. அலுவலகத்தில் அப்பா லேப்டாப் திறக்கிறார். பார்த்துக்கொண்டே இருக்கிறார். நேரம் போவதே தெரியவில்லை.
இது ஒரு நாள் இரு நாள் அல்ல. வாரம் முழுவதும். விடுமுறை விட்டால் குழந்தை டிவி எதிரில் சற்றே வயது அதிகரித்தால் கம்ப்யூட்டர் எதிரில்.
கடந்த ஐந்து வருஷத்தில் சின்னத்திரை கம்ப்யூட்டர் திரை லேப்டாப் திரை, இப்படித் திரைகள் உலக மக்களில் பெரும்பாலோரின் நேரத்தை, கவனத்தைக் கரையான் அரிப்பது போல, ரத்தக் காட்டேரி ரத்தம் குடிப்பது போலக் கவர்ந்து கொண்டு இருக்கின்றன; நேரத்தை இழப்பது தெரியாமல் நாற்காலியில் அமர்ந்தோ, நின்று கொண்டோ, சிறியது, நடுத்தரம், பெரியது என்று சைஸ் மாற்றி சைஸில் இரவும் பகலும் திரைகளை முறைத்துக் கொண்டு உலகம் நிழல்களில் தங்கள் வாழ்க்கையின் அருமையான காலத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது
சுற்றியுள்ள நிஜத்தை விட நிழலின் கவர்ச்சி அதிகமாயிருப்பதால் மனித வாழ்வு நேரம் பார்த்தல் என்ற ஒரு புலன் செயல்பாட்டுக்கே அதிகம் செலவழிக்கிறது.
உடலில் கண்கள் மட்டும் இல்லை. கை இருக்கிறது. கால் இருக்கிறது. செவி இருக்கிறது. வாய் இருக்கிறது. இந்த எல்லாப் புலன்களையும் ஸ்தம்பிக்கச் செய்து விட்டுத் திரைகள் வாழ்க்கையை ஆக்கிரமித்து வருகின்றன. எங்கும் அதற்கே முதலிடம்.
வாழ்க்கை எல்லாப் புலன்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் போதுதான் உண்மை மகிழ்ச்சி ஏற்படும். இல்லாவிட்டால் விரக்தி, சோர்வு, சோம்பல், அலட்சியம் இப்படி எதிர்விளைவுகள் தானே ஏற்படும். சமத்துவ உலகம் வேண்டுவோர் தம் உடல் உறுப்புகளுக்குச் சமத்துவ இயக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையேல்?
இந்தக் கேள்விக்குறியைக் கற்பனையால் நிரப்பிக் கொள்ளுங்கள்.அடுத்து வருவார் டாக்டர்!