சக்தி சக்திதாசன்
 
 
அன்பானவர்களே 

வருண பகவானின் அதீத அருளுக்காட்பட்ட இங்கிலாந்தின் ஈரமான கோடைக்காலத்தின் மத்தியிலிருந்து மடலொன்று வரைகின்றேன். 

உலகெங்கும் அவசரமான ஒரு வாழ்க்கையின் பிடிக்குள் அகப்பட்டு சுழன்றோடிக் கொண்டிருக்கும் மக்களிடையே புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மிகவும் மருவி வருகிறது. 

இத்தகைய ஒரு சூழலில் தான் அருமை நண்பர் ரவி தமிழ்வாணன் அவர்கள், மணிமேகலைப் பிரசுரத்தினால் வெளியிடப்படும் தமிழ்ப் புத்தகங்களை, புலம் பெயர்ந்து பரந்து வாழும் தமிழர்களிடையே எடுத்துச் சென்று, புத்தகங்களின் வலிமையை நிலை நிறுத்தி வருகிறார். 

அமெரிக்காவின் “வட அமெரிக்க வாழ் தமிழர்களின் ஒருங்கிணைப்பு” (FETNA) எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்று திரும்பும் வழியில் நண்பர் ரவி தமிழ்வாணன் மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக விற்பனைக் கண்காட்சியை லண்டனில் நடத்தத் திட்டமிட்டிருந்தார். அதன் பிரகாரம் நண்பர் 11ம் திகதி லண்டன் வந்து என்னுடன் சில நாட்கள் தங்கியிருந்தார். 

இந்திய எழுத்தாளர்கள் மட்டுமில்லாது ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களினால் படைக்கப்பட்ட சுமார்  450 தலைப்புகளில் புத்தகங்களை இவரது பிரசுரம் இதுவரை வெளியிட்டுள்ளது. 

லண்டனிலுள்ள பல ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புக்களை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டுள்ளது. ஈழத்து எழுத்தாளர்களின் இலக்கியக் கனவுகளை நனவுகளாக்குவதில் நண்பர்கள் ரவி தமிழ்வாணனும், லேனா தமிழ்வாணனும் முன்னணியில் இருக்கிறார்கள். 

புத்தகக் கண்காட்சி ஜீலை 13ம் திகதி வெம்பிளியில் ஒரு இல்லத்தில் நடைபெற்றது. காலமகள் தமது வனப்புகளில் ஒன்றான மழையை அடிக்கடி கொட்டிக் கொண்டிருப்பினும் பல தமிழ் வாசகர்கள் தேடி வந்து கண்காட்சியில் நூல்களைத் தேடி வாங்கிப் போனது மனதுக்கு மிகவும் தெம்பளிக்கும் நிகழ்வாயிருந்தது. 

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வயதான வாசகர் மறைந்த அமரர் தமிழ்வாணன் அவர்களின் வாசகன் தான் என அறிமுகப்படுத்திக் கொண்டதோடு தமிழ்வாணன் அவர்களின் படைப்புக்களையும்,லேனா அவர்களின் படைப்புக்களையும் தேடி வாங்கிச் சென்றது நல்ல படைப்புக்களை தமிழ் மக்கள் இன்னமும் மறந்து போய்விடவில்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டியது. 

மற்றுமோர் தம்பி தான் வன்னியைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதோடு திரு.லேனா தமிழ்வாணன் அவர்களின் “நேரம் நல்ல நேரம்” என்னும் நேரத்தின் மதிப்பை உணர்த்தும் தன்னார்வக் கட்டுரை நூலைத் தேடிப் பெற்றுச் சென்றார். 

காலை சுமார் 10 மணிக்கு ஆரம்பித்த இக்கண்காட்சி, இரவு 8 மணிவரை தொடர்ந்தது. கண்காட்சி நடத்த அனுமதியளித்த அந்த இல்லத்தைச் சேர்ந்த தம்பதியரின் இலக்கிய ஆர்வம் அக்கண்காட்சிக்கு வந்தவர்களுக்கும், அதை நடத்தியவர்களுக்கும் அவர்கள் கொடுத்த வரவேற்பிலும், உபசாரத்திலும் உறைந்து கிடந்தது. 

அதைத் தொடர்ந்து சனிக்கிழமை மாலை 4 மணிக்கு இல்போர்டு(ILFORD) பகுதியில் அமைந்திருக்கும் செல்வ விநாயகர் ஆலய மண்டபத்தில் கண்காட்சி ஆரம்பமாகியது. இவ்வாலயத்தின் நிர்வாக இயக்குனர் அண்ணன் திரு.செல்வராசா அவர்கள் இக்கண்காட்சிக்கு அனுசரணையளித்து தனது இலக்கிய ஆர்வத்தைத் தத்ரூபமாக எடுத்துக் காட்டினார். 

செல்வ வியாகர் ஆலயத்தின் உற்சவ ஆரம்பம் 13ம் திகதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 14ம் திகதி உற்சவத்தின் 2 வது நாளாக இருந்தது. ஆரம்பத்தில் இக்கண்காட்சிக்கு வருகை தந்தவர்கள் சொற்ப அளவில் இருந்தாலும் திருவிழா முடிவுற்றதும் அதிக அளவிலான மக்கள் இக்கண்காட்சியைக் காண்பதற்காக திரண்டு வந்தார்கள். 

இக்கண்காட்சியின் சிறப்பம்சமாக லண்டன் அக்கினி கூத்தன் கலை மன்றத்தின் நாடகம் ஒன்று கலைஞர் திரு கீர்த்திசிங்கத்தின் நெறியாள்கையில் மேடையேறியது. 

இன்றைய ஈழத்தின் சூழலை மையமாகக் கொண்டு நகைச்சுவை ததும்ப இந்நாடகத்தை திரு.கீர்த்திசிங்கம் அவர்கள் படைத்திருந்தார். 

இந்நாடகத்தில் பங்கேற்று நடித்த கலைஞர்கள் அனைவரும் தமது பாத்திரங்களை கனகச்சிதமாகக் கையாண்டிருந்தார்கள். 

இக்கண்காட்சியுடன் கூடிய கலை நிகழ்விற்கு, வாழ்த்துரையை இலண்டன் குடிவரவு சட்டத்தரணியும், எழுத்தாளருமான திரு வ.மா.குலேந்திரனும், ஆலய நிர்வாகப் பொறுப்பாளர் அண்ணன் திரு.செல்வராசா அவர்களும் வழங்க, நன்றியுரையைக் கலைஞர் தம்பி கீர்த்திசிங்கம் அவர்கள் வழங்கினார். 

இவ்விழாவை மிகவும் நல்ல முறையில் திரு ரவி தமிழ்வாணன் அவர்கள் தனக்கேயுரிய பாணியில் ஒருங்கமைத்திருந்தார். இரவு சுமார் 10 மணியளவில் இவ்விழா நிறைவுபெற்றது. 

மொழி நாடு, மதம் எனும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அன்னைத்தமிழின் மடியில் அனைத்து நாட்டு மக்களும் சகோதரர்களே. நிகழ்காலப் பதிவுகள் அவசியமானவை. ஒரே உலகில், ஒரே வாழ்வை பலகோணங்களூடாக பார்க்கும் படைப்பாளிகள் தமது பார்வைக்கோணத்தில் படைப்பதால், எதிர்காலச் சந்ததியினர் கடந்தகால வாழ்க்கையை உணர்வு பூர்வமாக அறிய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. 

பெயர் பெற்ற பிரபலமான எழுத்தாளர்களே நூல்களைப் படைக்க முடியும் எனும் காலத்திலிருந்து, எழுதும் வல்லமை படைத்தவர்கள் அனைவரும் எழுதலாம் எனும் சமதளத்தை அமைத்துக் கொடுத்ததில் இணையம் முன்னிலைப்படுகிறது. 

அத்தோடு நண்பர்கள் ரவி, லேனா தமிழ்வாணன் போன்றவர்கள் எழுத்தாளர்களுக்கு தமது படைப்புக்களுக்கு நூல் வண்ணம் கொடுப்பதைச் சுலபமாக்கியுள்ளார்கள். ஈழத்தின் போர்க்காலச் சூழலின் மத்தியில் இலக்கியக் கனவுகளை நினைவுகளாக்க முடியாமல் தவித்திருந்த பல ஈழத்தமிழ் எழுத்தாளர்களுக்கு முகவரி கொடுத்ததில் மணிமேகலைப் பிரசுரமும் , தமிழ்வாணன் சகோதரர்களும் மிகவும் குறிப்பிடத் தக்கவர்கள். 

இவர்களைப் போன்றவர்களுக்கு ஆதரவளித்து உற்சாகம் கொடுப்பது தமிழாராய்ப் பிறந்து இலக்கிய ஆர்வத்தில் தழைக்கும் அனைவரது கடமையாகும். 

நல்லதோர் இலக்கிய நிகழ்வை பார்த்து ரசித்த மகிழ்வடைந்தேன். 

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

லண்டன் 


பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.