நடராஜன் கல்பட்டு

ஆரூ…….. கதெவெத் தட்டுறது ஆரூ….?” 

அப்பாத்தா…..” 

எலே சின்ராசூ……!  எப்பொடா வந்தெ நீ?  பத்து வருஷத்துக்கு அப்பாலெ இப்பொதான் நெனெப்பு வந்திச்சா இந்தெக் கெளவி பத்தி?” காரில் வந்திறங்கிய என்னைப் பார்த்து திறந்த வாய் மூடாமல் கேட்டாள் முனியாத்தா. 

அப்பாத்தா ஒன்னெ நான் மறக்கெலெ அப்பாத்தா.  பக்கத்து ஊருலெ பத்தாங்கிளாசு முடிச்சு அப்பா, அம்மா கூட பட்டணம் போனேனா?  அதுக்கப்புறம் காலேஜு, வெளி நாட்டுலெ மேல் படிப்பு. வேலென்னு பத்து வருசம் கிடு கிடுன்னு ஓடிடிச்சு.  வெளி நாட்டுலெ படிக்குறப்பொ லீவு வந்தா ஊரு சுத்திப் பாக்குறது இல்லாட்டி எதுனா கடெ, ஓட்டல்னு வேலெ செஞ்சு நாலு காசு சம்பாரிக்கிறதுன்னு போது போயிடிச்சு.  

அது சரிடா.  நான் ஒத்தி இங்கெ இருக்கேங்குறதே ஒன் நெனெப்புலெ இல்லியா?” 

அது எப்படி அப்பாத்தா இல்லாமெ போயிடும்?  பொறந்த மண்ணு வாசமும், வளத்தெ பாசமும் எப்பொனாலும் மறக்குமா? நீ பெசெஞ்ச சோத்தெ உண்டெ உண்டெயாக் என் கையிலெ உருட்டி வெச்சு, ஒன் வெரெலாலெ அதுலெ ஒரு குளி பண்ணி, வெத்தக் கொளம்பு ஊத்திக் குடுப்பையே. நெனெச்சா இப்பொவும் என் நாக்குலெ தண்ணி ஊறுது. மறுபடி அதெ அனுபவிக்கணும்னு தானெ அப்பாத்தா இங்கெ ஓடி வதுருக்கேன்?” 

பொய் சொல்லாதேடா.  ஓடி எங்கெடா வதுருக்கே?  ஓட்டிண்டு இல்லெ வந்துருக்கெ காரெ?”

ஹா… ஹா… ஹா.. நல்ல ஜோக்கடிக்கிறே அப்பாத்தா நீ. அப்பாத்தா…இந்த வருசந்தான் மொத மொத ஒரு மாசம் லீவு எடுத்துகிட்டு நேத்து பட்டணம் வந்தேன்.  வந்ததும் வாடெகெக்குக் காரெ எடுத்துகிட்டு நான் செய்யுற மொத வேலெ ஒன்னெயெப் பாக்க வந்ததுதான் அப்பாத்தா. 

அடிக்கு நூறு அப்பாத்தா என் வாயில்.  வளர்த்த பாசம் எங்கே போகும்? 

சரி மொதெல்லெ இந்தக் காப்பித் தண்ணியெக் குடி.  ஆமாம் கேக்க மறந்தூட்டேன்.  பல்லு வெளெக்கினையா? இல்லே பட்டண பளக்கமா? பல்லு வெளெக்காமெ தான் காபி குடிக்கிறயா?” 

பல்லு இன்னும் வெளெக்கலெ அப்பாத்தா.  தண்ணி குடு.  பல்லு வெளெக்கீட்டு காப்பி குடிக்கிறேன். 

மறந்து போச்சா?  தண்ணி இந்த ஊட்டுலெ எங்கெ வெச்சி இருக்கும்னு?”  முத்தத்துலெ அண்டாலெ இருக்குது பாரு தண்ணி.  பக்கத்துலேயே சொம்பும் இருக்கு. 

மறக்கெலெ அப்பாத்தா.  அதெ ஒன் வாயாலெ கேக்க வாணாம்?” 

சரி போ. சட்டுன்னு பல்லெ வெளக்கீட்டு காபித் தண்ணியெக் குடி.  அது இப்பொவே ஆறிக் கெடக்கு.  சுட வெச்சுத் தரவா?” 

வாணாம் அப்பாத்தா 

பரபரவென்று பல் துலக்கிக் காப்பி குடித்துவிட்டு சமையல் கட்டுப் பக்கம் போகிறேன்.  அங்கு அப்பாத்தா படு பிஸி டப்பாக்களைத் திறந்து உளுத்தம் பருப்பு, எள்ளு, ஜீரகம், பெருங்காயம் என்று தேடி எடுப்பதில்.  பேராண்டிக்கு முறுக்கு செய்ய வேண்டுமே? 

அப்பாத்தா டப்பாவெக் கொடையறதெ உட்டூட்டு கூடத்துலெ வந்து ஒக்காரு.  ஒங்கிட்டெ நெறெயப் பேசணும்.  பத்து வருசக் கதெ இருக்கே?” 

ஓன் அப்பன், ஆத்தா எல்லாரும் எப்டிடா இருக்காங்க?” 

அவங்களுக்கு என்னா?  நல்லாத்தான் இருக்காங்க.  அப்பா ஆபீசு வேலெ ஆபீசு வேலென்னு ஊரு ஊரா அலெஞ்சுகிட்டு இருக்காரு.  அம்மா சாப்புட்டு சாப்புட்டு குண்ட்டாயிட்டு வராங்க. 

ஒடெம்பெ ஒளெச்சு நல்லா வேலெ செஞ்சாங்கன்னா ஒடம்பு குண்டாகாதுடா.  போன வாரம் இங்கெ இருக்குற ஆரம்ப சுகாதார நெலயத்துக்கு வந்த பெரிய டாக்டரு சொன்னாரு ஒடம்பு குண்டானா ஆறு அட்டேக்கு வந்துடும்னு. 

அப்பாத்தா அது ஆறு அட்டேக்குமில்லெ ஏளு அட்டேக்கு மில்லெ.  ஹார்ட் அட்டேக்.  அப்படின்னா நம்ம ஒடம்புக் குள்ளறெ இருக்குற ஹார்ட்டு, அதான் இருதயம், பட்டுனு தன் வேலெயெ நிறுத்திடுமாம்.  அப்பாலெ சங்குதான். 

அது என்னெ எளவு அட்டேக்கோ.  அவரு சொன்னாரு நல்லா ஒளெச்சு வேலெ செஞ்சு என்னெயெப் போலெ ஒடம்பெ ஒல்லியா வெச்சு கிட்டா ஒரு வியாதியும் கிட்டெ வராதூன்னு. 

எப்டி… எப்டி…?  ஒல்லியா? ஒன்னெயெ மாதிரி?  பலமா ஒரு காத்து அடிச்சா ஒன்னெயெ ஊரு கோடிலெ போய்த்தான் தேடணும்.  ஒல்லியா வெச்சுக்கணுமாமெ ஒன்னெயெ மாதிரி ஒடெம்பெ?”. 

போருண்டா கிண்டலு.  என்னவோ பத்து வருசக் கதெ பேசணுன்னியே?.  பேசு இப்பொ. 

அப்பாத்தா… அந்தக் கோடி ஊட்டுலெ குருசாமீன்னு இருந்தானே அவன் இருககானா?” 

குருசாமி இல்லெடா. குப்புசாமிடா.” 

ஏதோ ஒரு சாமி.  

அவங்க ஊடு, நெலெம், தோப்பு எல்லாத்தையும் வித்து போட்டுப் பட்டணம் போயிட்டாங்கப்பா.” 

அப்பாத்தா… இங்கெ பக்கத்து ஊட்டுலெ பங்கஜம்னு ஒரு பொண்ணு இருந்தீச்செ அவ?” 

என்னடா? பங்கஜம் மேலெ அவ்வளோ கரிசனம்?  இங்கெ இருந்தப்போ நாள் முச்சூடும் அவளெ வம்புக்கு இளுத்து அள உட்டூட்டு இருந்தெ.  இப்பொ என்னா திடீர்னு பங்கஜம் மேலெ அக்கெறெ?” 

சும்மாத்தான் கேட்டேன் ஆத்தா. 

பங்கஜம் கல்யாணம் கட்டிகிட்டுப் பட்டணம் போயிட்டா.  அவுளுக்கு இப்பொ ரெண்டு புள்ளெங்க இருக்குதான். 

அது சரி… பளனீ பளனீன்னு ஒரு பையன்இருந்தானே.  நான் கூட அவன் பின்னாடியே சுத்திகிட்டு இருப்பேனே?  அவன் எங்கெ இருக்குறான் ஆத்தா?” 

ஆமாம்.  ஆமாம். ரெண்டு பளனி.  நீ யாரெக் கேக்குறெ? பெரிய பண்ணெப் பளனியையா?  பட்டம் பளனியையா.? 

பட்டம் பளனியக் கேக்குறேன் அப்பாத்தா. 

பட்டம் பளனி இங்கெ தான் இருக்குறான்.  எங்கெ போவான் அவன்?  அஞ்சு கிளாசுக்கு மேலெ படிக்கலெ.  நாள் பூரா எங்கெனாச்சியும் சுத்திகிட்டு இருப்பான்.  சில சமயம் தெருவுலெ.  சில சமயம் வயக்காடு ஆத்தங் கரென்னு.  அவன் அய்யாவும், ஆத்தாளும் செத்துப் போயிட்டாங்க அஞ்சு வருசம் முன்னெ கால்ராவுலெ.  யாருனா சோறு குடுததாத் திம்பான்.  இல்லாட்டி எதுனா மரத்தடிலெ சுருண்டு படுப்பான். 

பேச்சை மேலே தொடருவதில் என் ஆர்வம் முற்றிலுமாக அழிந்தது.  மனதில் பழய நினைவுகள் வந்தன. 

பழனியும் பட்டமும் இரண்டறக் கலந்த வார்த்தைகள்.  கடையில் வாங்கும் பட்டம் அவனுக்குப் பிடிக்காத ஒன்று.  கடைப் பட்டத்திற்கும் அவன் பட்டத்திற்கும் சண்டை என்று வந்தால் வெல்வது பழனியின் பட்டம்தான்.  மற்றது அறுந்து மானமிழந்து எங்கோ வெகு தூரம் சென்று விடும் தன் தோல்வியை மறக்க /  மறைத்துக் கொள்ள. 

ஒரு சமயம் எனக்கு ஒரு பெரிய வெள்ளைக் காகிதம் கிடைத்தது. முட்டை போட்டுத் தயார் செய்யப் பட்டது என்று சொல்வார்களே அந்த மாதிரிக் காகிதம்.  மழ மழ வென்றிருக்கும்.  சற்றே தடிமனாகவும் இருக்கும்.  அதை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு ஒடினேன்.  அவனிடம் கொடுத்து, பழனி எனக்கு இதுலெ ஒரு பட்டம் பண்ணிக் குடேன் என்று சொன்னேன். 

காகிதத்தைக் கையில் எடுத்ததும் கசக்கி தூர எறிந்து விட்டு, இது பட்டம் பண்ண லாயக்குப் படாது.  இதுலெ பண்ணா பட்டம் மேல ஏறாது. அதனோட வெயிட்டுலெ தரையிலேயே தொப்புன்னு உளும்.  அப்படியே நல்ல காத்து அடிச்சு மேலெ ஏத்தினாலும் நூலெப் புடிச்சு இளுத்து மேலெ தூக்கப் பாத்தா அது சர்ர்ர்ர்…..ருன்னு சத்தம் போட்டுகிட்டு மேலெ ஏறாது.  தலெ குப்புற தரேலெ வந்து குத்தும்.  போயி கடெலேந்து கலர் கலரா இருக்குற ட்ரேசிங்க் பேபரெ வாங்கீட்டு வா என்று என்னை விரட்டி அனுப்பினான்.  நானும் ஓடினேன் அவன் கேட்டதை வாங்கி வர. 

சின்ராசூ….. காகிதம் வாங்கச்சே ஒரு கரண்டி மைதா மாவும், ரெண்டு கல்லு மயில் துத்தமும் வாங்கீட்டு வா. 

பழனிக்குப் பசை கூடத் தானே செய்தால் தான் திருப்தி.  ரெண்டு கல்லு மயில் துத்தம் அதில் போடுவது பசைக்குப் பச்சைக் கலர் குடுக்கத்தான் என்று சமீப காலம் வரை நினைத்திருந்தேன்.  போன மாதம் தான் படித்தேன் மயில் துத்தம் காய்ச்சிய பசையை காளான் பிடிக்காமல் காப்பத்துகிறது என்று. 

வாங்கி வந்த காகிதத்தைத் தரையில் விரித்து வைத்து, தேவையான அளவுக்குப் பென்சிலால் குறி செய்து  பின் கத்தரிப்பான்.  நான்கு ஓரங்களையும் ஒரு நூலை உள்ளே வைத்துப் பசை தடவி ஒட்டுவான்.  பறக்கும் பட்டம் கிழியக் கூடாது.  சர்ர்ர்ர்ர்…ரென சத்தமும் வர வேண்டுமே. 

பட்டத்துக்கு முதுகெலும்பு வில்லும் அம்பும் போல வைத்து ஒட்டப் படும் மெல்லிய மூங்கில் குச்சிகள்.  இந்தக் குச்சிகளைத் தயார் செய்வதும் பழனியே.  வீட்டின் பின் புறம் சென்று மாட்டுக் கொட்டகையின் கூரை மாத்துவதற்காக வாங்கி வைத்திருக்கும் மூங்கில் பிளாச்சு ஒன்றை எடுத்து வந்து, அறுவாள் கத்தியால் பிளந்துப் பின் பேனாக் கத்தியால் சீவி தேவையான அளவுக்குத் தயார் செய்வான். 

இவை எல்லா வற்றுக்கும் மேலான ஒன்று பட்டத்துக்குச் சூத்திரம் போடுவது.  சூத்திரம் சரியில்லை என்றால் பட்டம் பறக்காது.  உட்கார்ந்து விடும்.  உயரத்தில் நின்று கொண்டு தூக்கி விட்டாலும் அது செங்குத்தாக தரையில் வந்து குத்தும்.  அது என்ன கம்ப சூத்திரம் னு கேக்குறீங்களா? 

பட்டத்துலெ வில்லும் அம்பும் சேருற இடத்துலே இருந்து ஒரு நூல் அம்போடெ அடி முனைலே இருந்து ஒரு குறிப்பிட்ட தூரத்துலெ கட்டி இருக்கும்.  அந்த எடம் எது,  இந்த நூலோட நம்ம கையிலெ இருக்குற கண்டுலே இருக்குற நூலோட முனை எங்கெ கட்டணும்கெறத எல்லாம் நிச்சயம் பண்ணறதுதான் பட்டத்துக்கு சூத்திரம் போடறதுங்கறது.  சிலர் கடேலெ இருந்து பட்டம் வாங்கிக் கொண்டு வந்தால் கூட பழனியிடம் தான் வருவார்கள் அதற்கு சூத்திரம் போட.  அப்படி ஒரு பட்ட அறிவு பழனிக்கு. 

பழனி பட்டம் விடுவதைப் பார்க்கவே அழகாக இருக்கும்.  ஆகாயத்தில் பறக்கும் பட்டங்களிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பட்டம் அவனுடையதாகத் தான் இருக்கும். 

பழனி நூலுக்கு மாஞ்சா போடுவது ஒரு தனிக் கலை.  ஒரு மரத்தில் இருந்து தூரத்தில் உள்ள இன்னொரு மரத்துக்கு நூலைக் கட்டி, பசையோடு நன்றாகப் பொடி செய்த கண்ணாடித் துகள்களையும், முட்டை வெள்ளைக் கருவையும் கலந்து ஒரு மசாலா தயாரித்து, தன் விரல்களில் சில சமயம் கண்ணடி துகள்கள் குத்தி ரத்தம் கூட வந்து விடுமே என்று சிறிதும் கவலைப் படாமல் கண்ணாடித் தூள் மசாலாவை ஒரு சின்ன துண்டுத் துணியில் எடுத்துக் கொண்டு, நூலை உருவிக் கொண்டே ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு நடந்து செல்வான். 

இப்படிப் பட்ட பழனி இன்று…… நினைத்துக் கூடப் பார்க்க முடிய வில்லை என்னால்! அப்பாத்தா ஆசையாய் அளித்தாள் மதிய உணவு.  ஆவல் துளியும் இன்றி தின்று தீர்த்தேன் அதை நான். 

அப்பாத்தா நான் கொஞ்சம் வெளிலெ போய் சுத்தீட்டு வறேன் என்றபடி வீட்டில் இருந்து வெளியே நடந்தேன் கால் போன திசையில். 

ஊருக்கு வெளியே ஆற்றங்கரை அருகில் ஒரு ஆல மரம்.  ஆல மரத்தடியில் ஒரு மேடை.  அதுதான் பஞ்சாயத்து மேடை.  மேடையில் ஒரு ஆள் கிழிந்த வேட்டியும் அழுக்கு சட்டையுமாக.   

பழனியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும் அது?  அவனுக்குத் தெரியாமல் அவன் பின் புறமாக நடக்கிறேன்.  பின் சிறிது தூரத்தில் இருந்து கண்களை மறைக்கும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பழனியைப் பார்த்தபடி நிற்கிறேன். 

பழனி கைகள் இரண்டையும் முன் புறம் நீட்டிப் பிடிக்கிறான்.  ஆள் காட்டி விரல்கள் இரண்டையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கிறான்.  பின் கைகளை அகட்டிய படியே கொஞ்ச தூரம் கீழே கொண்டு வந்து பின் இடை வெளியைக் குறைத்துக் கொண்டே  கீழே கொண்டு வந்து விரல்களை மீண்டும் சேர்க்கிறான்.  அங்கு இல்லாத காகிததில் அளவு குறிக்கிறானோ?

பின் காகிதத்தை கையில் இல்லாத கத்திரியால் வெட்டுகிறான்.  பின் வெட்டிய காகிதத்தை மேடையில் ஒரு பக்கமாக வைத்து விட்டு இல்லாத மூங்கில் குச்சியை இடது கையில் பிடித்துக் கொண்டு வலது கையில் இல்லாத கத்தியால் வெட்டிப் பிளந்து ஈர்க்கு தயார் செய்கிறான்.  ஒரு குச்சியை அம்பாக வெட்டிய காகிதத்தின் மீது வைத்து ஒட்டிப் பின் மற்றொரு குச்சியை வில்லாக வளைத்து அதன் மேல் வைத்து பசை தடவிய துண்டுக் காகிதங்களால் ஒட்டுகிறான்.  பின் இல்லாத நூலால் சூத்திரம் போடுகிறான்.  எல்லாமே சைகளில் தான்.  எதிலுமே அதீதப் பற்றுதல் வைத்தால் ஏற்படும் விளைவு இதுதானோ?  

இதற்கு மேல் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடிய வில்லை.  ஓடிச் சென்று, பழனீ என்று கத்தியபடி கட்டித் தழுவுகிறேன்.  அவன் என் முகத்தைப் பார்க்கிறான்.  அவன் கண்களில் ஒரு வெற்றுப் பார்வை.  அவனுக்கு இந்த உலகம் தெரிந்தால் அல்லவா என்னைத் தெரியப் போகிறது? 

பழனியைக் கட்டித் தழுவிய படியே வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வந்தேன்.  அவனை சிரமப் பட்டுக் குளிக்க வைத்து எனது உடைகளில் ஒரு பேண்டையும் சட்டையையும் போடச் சொன்னேன். 

அப்பாத்தா சுடச் சுடக் கொண்டு வந்த உப்புமாவை அவனுக்கு மெதுவாக ஊட்டினேன்.  அவனை ஒரு கயிற்றுக் கட்டிலில் தூங்கச் செய்து விட்டு அப்பாத்தாவிடம் போனேன். 

அப்பாத்தா… நாம நாளெக்கே பட்டணம் போறோம். 

என்னடா திடீர்னு?  கோமதி என்னா ஆறது?  துள்ளி வெளெயாடுற அவொ கொளெந்த என்னா ஆவுறது?  அதுகளெ யாரு பாத்துப் பாங்க?  அது நம்ம வீட்டு லச்சுமிடா  தோட்டம் தொறவெல்லாம் என்னா ஆவுறதாம்?” 

அப்பாத்தா நீ இங்கெ தனியா இருந்து கஷ்டப் படுறது.  நாங்க எல்லாம் சொகமா பட்டணத்துலெயும் அமெரிக்காவுலெயும் இருக்குறதா?  கோமதியெயும் அவ புள்ளெயெயும் ஒரு லாரி வெச்சு பட்டணத்துலெ கொண்டாந்து உடச் சொல்லிப் பணம் கொடுத்துருக்கேன் கோனார் கிட்டெ.  தோட்டம் தொறவெ அடுத்த வாரம் நானும் அப்பாவுமா வந்து வித்தூடப் போறோம். 

மறு நாள் காரில் பின் சீட்டுகளில் அப்பாத்தாவும், பழனியும். 

ஏண்டா சின்ராசூ… பழனியெப் பட்டணத்துக்குக் கூட்டீட்டுப் போயி என்னடா பண்ணப் போறே?” 

அப்பாத்தா… இங்கெ வரத்துக்கு முன்னாலெ பட்டணத்துலெ மன நோயாளிங்க. உடல் ஊனமுத்தவங்க இவங்களுக்கான பள்ளிக்கூட வாத்தியார் ஒருத்தரெப் பாத்தேன்.  அவரு கிட்டெ பேசினதுலெ மன நோயாளிங்களெக் கட்டுப் படுத்தாமெ அவங்களுக்குப் புடிச்ச காரியெத்தெ செய்ய வெச்சு அன்போட பளகினா அவங்களோட பாதி நோயி தீந்தூடும்னு எனக்குத் தோணுது.  பட்டணம் போனதும் மொத வேலையா பளனியெ அவரு கிட்டெ அளெச்சுக் கிட்டு போயி அவரு பள்ளிக் கூடத்துலெ சேக்கணும்னு நெனெச்சுகிட்டு இருக்கேன்.  நீ என்ன நெனெக்கிறெ அப்பாத்தா?” 

நான் என்னடா சொல்லப் போறேன்?  நீ எது செஞ்சாலும் சரியாத்தான் செய்வெ. 

கார் பறக்கிறது சர்ர்ர்….ரென்று பழனியின் பட்டம் போலப் பட்டணத்தை நோக்கி.

 

சித்திரங்களுக்கு நன்றி:

http://www.my-best-kite.com/images/paper-kites-1.jpg

http://www.4to40.com/coloring_book/trace.asp?p=Kite_Flying&c=Festivals&sc= Independence_Day

 

                                   

 

— 
நடராஜன் கல்பட்டு

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *