இலக்கியம்கவிதைகள்

மூட நம்பிக்கைகள்!

முகில் தினகரன்
மூதாதையர் எமக்களித்த
மூன்று தலைமுறை
முள்ளாடைகள்!…எங்கள்
முதுகெலும்பை
முழுக் கோணலாக்கும்
முடக்குவாத நோய்கள்!

நாங்கள்
கணிப்பொறிகளைக் கையாளவும்
கால நேரம் கணிப்பவர்கள்!
கனவுகளுக்குப் பலனெழுதி
காலத்தைத் தின்பவர்கள்!

நாங்கள்
பிறப்பிற்கும் நேரம் பார்த்து
பிணக்குகளைப் பிதற்றுபவர்கள்!
இறப்பிற்கும் நேரம் பார்த்து
இல்லாத சடங்குகளை திணிப்பவர்கள்!

நாங்கள்
சகுனம் பார்ப்பதில்
சாதனை படைத்தவர்கள்!
சாதனை படைத்திடும்
சலனமே இல்லாதவர்கள்!

நாங்கள்
குறுக்கே வரும் பூனைக்காய்
பாதையையே துறப்பவர்கள்!
கிழக்குச் சூரியனையும்
சாத்திரத்தில் புதைக்கும் சகுனிகள்!

மூட நம்பிக்கைகள்!
மூதாதையர் எமக்களித்த
மூன்று தலைமுறை
முள்ளாடைகள்!…எங்கள்
முதுகெலும்பை
முழுக் கோணலாக்கும்
முடக்குவாத நோய்கள்!

படத்துக்கு நன்றி

http://earny123.hubpages.com/hub/Psychology-of-superstition

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க