Featuredஇலக்கியம்கட்டுரைகள்

சிவாஜி எனும் மூன்றெழுத்து

 

திவாகர்

சிவாஜி எனும் மூன்றெழுத்துத் தமிழ்க் கலைஞன். இந்தக் கலைஞனைப் பற்றி எப்படி எழுதினால் அவனுக்குப் பெருமை சேர்க்கும் என்பதாக எத்தனையோ எழுத்தாளர்களால் போற்றிகள் பாடப்பட்டவன். இப்படிப்பட்ட கலைஞன் ஒருவன் ஒருவேளை மேற்கத்தியப் படங்கள் மூலம் வெளிப்ப்ட்டிருந்தால் ஆஸ்கார் விருதுகள் பயனற்றவையாக தென்பட்டிருக்கும். அந்நியர் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு மீண்டு கொண்டிருந்த இந்தியாவின் தென் எல்லையில் இந்த நட்சத்திரம் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது நாம் செய்த அதிர்ஷ்டம்.

தமிழ் எனும் மூன்றெழுத்து இந்தக் கலைஞனை வெளியே விடாமல் பாசம், நேசம், கருணை, அன்பு, பக்தி, பெருமை எனும் மூன்றெழுத்துகள் வலையில் கட்டிப்போட்டு தன்னுடனேயே வைத்துக்கொண்டு விட்டது.

அவர் இறுதிக்காலக் கட்டங்களில் அவரைச் சந்திக்கும் ஒரு அருமையான வாய்ப்பு, பூக்கள் எல்லாம் தானாகவே முன்வந்து தேனைச் சொரிந்ததோடு அதை வாயிலும் ஊட்டக் கிட்டிய சந்தர்ப்பம் ஒன்று, அடியேனுக்கு வாய்த்தது. ஆமாம். சிவாஜி ஒரு நிகழ்ச்சிக்காக விசாகப்பட்டினம் வந்தார். அடுத்தநாள் காலை நானும் திரு சம்பத் அவர்களும் பத்து நிமிட அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்கப்பெற்று அவரைச் சந்திக்க சென்றது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்பது என்னவோ வாஸ்தவம்தான்.

பத்து நிமிஷம் என்பது ஒரு மணி நேரத்துக்கும் மேலாகச் சென்றதும் அவரோடு பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதும் நாங்கள் மறக்க முடியாதவைதான். காமராஜர் அரசியலிலிருந்து மேயராக இருந்த ஸ்டாலின் சென்னை ஆட்சி வரை (அவர் இல்லத்து காஃபி பலரால் புகழப்படுகின்றது என்பது உட்பட) அலசினார். எனக்கு மிகவும் பிடித்த அவர் படம் புதிய பறவை என்றேன். அவரும் அதையே தனக்கு மிகவும் பிடித்த அவரது படங்களில் ஒன்றாகச் சொன்னார். சென்னை வந்தால் அவர் இல்லத்துக்கு அழைத்தார் (ஒப்புக்காகவோ நிஜமாகவோ, ஆனால் அவர் அழைப்பு எங்களுக்கு மிகப்பெரிய கௌரவமாகத்தான் அந்த வேளையில் பட்டது).

புதிய பறவை, அவர் படங்களில் மிக வித்தியாஸமான படம். இருபத்தோராம் நூற்றாண்டு தமிழ்ப்படத்தை இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே எடுத்துவிட்டார்கள். ஒவ்வொரு கட்டத்தையும், கோணத்தையும் யோசித்து மிகவும் கஷ்டப்பட்டு எடுத்திருக்கிறார்கள் என்பதை அந்தப் படத்தை மிக உன்னிப்பாகப் பார்த்தவர்கள் சொல்வார்கள். மனைவியைக் கொன்றுவிட்டு ஊரை விட்டு ஓடிவந்தவன் பாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருப்பார். ஒரு கட்டத்தில் நிம்மதியிழந்த மனநிலையில் அந்த மனிதன் உறங்கவேண்டும். அப்படி உறக்கம் தரும், மன நிம்மதியைக் கொடுப்பவள் ஆறுதலாக அருகே வந்து பாடத் தொடங்குகிறாள்., அந்தப் பாடலில் ஒரு சிலவரிகளைக் கேட்டுக்கொண்டே எப்படி உறங்குவது என்பதை அந்த சில தருணங்களில் சிவாஜி தன் முகபாவனையில் காண்பித்திருப்பார். நாற்காலியில் அப்படியே அமர்ந்து கண்கள் மெல்ல மெல்ல செருக தலை சற்றே பின்னே சாயச் சாய அவர் தூங்குவதாக நடிக்கும் காட்சி அதி அற்புதமானதாகப்பட்டது எனக்கு. தூங்க முடியும், தூங்குவது போல நடிக்கவும் முடியும், ஆனால் தூக்கம் எனும் உணர்வு உண்மையாகவே எப்படி நம்மைத் தழுவுகிறது என்பதை வெறும் முகபாவத்தால் தத்ரூபமாகக் காண்பிக்க முடியுமா.. முடியும் என்று நிரூபித்தவன் அந்தக் கலைஞன். அதே போல அந்தப் படத்தில் வரும் எங்கே நிம்மதி பாடலில் கூட ‘எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது, எனது கைகள் தழுவும்போது மலரும் சுடுகின்றது’ என்பதற்கான கட்டத்தில் வித விதமான உணர்ச்சிகளை முகபாவங்களாகக் காட்டும் (அதுவும் ஒரே ஃபிரேமில்) சிவாஜியைப் பார்க்கலாம். அதி அற்புதக் கலைஞன் என்பதில் மிகையே இல்லை.

ஜூலை 21 ஆம் நாள், சிவாஜியின் நினைவுநாளன்று வல்லமை குழுவில் ஒரு கவிதை பார்த்தேன். சட்டென மனதைத் தைத்தது. ’போதும் எழுந்து வா’ என்ற கவிதை, கவிஞர் ருத்ரா 2001 ஆம் ஆண்டு எழுதியதை மறுபதிப்பாக வெளியிட்டார். நான் மேலே சொன்ன புதிய பறவை கருத்தோடு அப்படியே ஒத்துப் போகிறது பாருங்கள். இந்தக் கலைஞன் நிஜமாகவே இறந்துவிட்டானா.. அல்லது இறந்தது போல நடித்துக் காட்டுகிறானா.. இயற்கை இவனை இறக்க வைக்கமுடியுமா.. காலம் இந்தக் கலைஞனைக் காலனிடம் ஒப்படைத்து கடமையைச் செய்து விட்டதாக மார் தட்டிக் கொள்ளமுடியுமா.. தமிழன்னை தன் தலைமகனை தமிழகத்தில் இருந்தது போதும், தன்னுள்ளே அடங்கிவிடு என்று அடக்கிவிட முடியுமா, இந்த அருமையான கலைஞனைக் கொடுத்த கடவுள் இவன் இங்கே இருந்தது போதும், இனி தனக்கு மட்டுமே தன் கலையைக் காண்பிக்கட்டும் என சட்டென மறைத்துவிட முடியுமா..

ஒருவேளை புதிய பறவை படத்தில் அந்த உறக்கக் காட்சி படம் பிடித்தவுடன், ’ஷாட் ஓகே சார்.. பிரமாதமான நடிப்பு, உறங்கியது போல நடித்தது போதும், எழுந்து வாருங்கள்’ என்று சொல்வது போல, இந்தக் கலைஞனை இந்த மீளா உறக்கத்திலிருந்து எழுப்ப முடியுமா….

“மரணத்தை
இது வரை நான் காட்டியது
வெறும் அபிநயம் தான்.
இதோ
உயிர்த்துடிப்பான
ஒரு மரணத்தைப்பார்”..என
அந்த மரண தேவனுக்கு
நடித்துக்காட்ட..உன்
துடிப்பை நிறுத்தினாயா ?

இப்போதும்
அவன் ஏமாந்துதான் போனான்.
இப்போது
நீ நடித்துக்காட்டியது
ஒரு மரணத்தின்
மரணத்தை.
உனக்கு மரணம் இல்லை.
நிஜம் எது ? நிழல் எது ?
“போதும்.எழுந்து வா.”

நடித்தது போதும், இயற்கையாக நடித்திருக்கிறாய், வா, இன்னொரு படத்துக்கு நம் கடமையைச் செய்யப்போகலாம் என்று கூப்பிடத் தோன்றுகிறதே.. என்ன மாயம் செய்தால் இவன் திரும்ப வருவான்.. என்ன மந்திரம் போட்டால் மறுபடியும் இந்த மண்ணுக்கு வந்து இப்படி காலத்தையும் வென்ற படைப்புகளை அள்ளித் தருவான்..

தெரியவில்லைதான். ஆனாலும் சிவாஜி எனும் அந்த மூன்றெழுத்து கலைஞனிடம் ருத்ரா எனும் மூன்றெழுத்துக் கவிஞர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லவாவது ஒருமுறை சிவாஜி எழுந்து வரலாம் என்றுதான் தோன்றுகிறது.

அதே சமயத்தில் காலத்தால் மாற்றவே முடியாத இன்னொரு அதிசயம் இந்தக் கலைஞன் என்றும் சொல்லத் தோன்றுகிறது.

 படத்திற்கு நன்றி:

http://en.wikipedia.org/wiki/Sivaji_Ganesan

Print Friendly, PDF & Email
Share

Comments (4)

 1. Avatar

  நோ கமென்ட்ஸ்! :)))))))

 2. Avatar

  Very nice.
  We will miss him, no matter how many years go by.

 3. Avatar

  அருமையான இந்தக் கட்டுரைக்கு இந்த சிவாஜி ரசிகனின் மனமார்ந்த நன்றி வணக்கங்கள்! இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து கொள்கிறேன்!

  அமெரிக்காவில் சிவாஜியின் கர்ணன் படம் வருகிற 27ம்தேதி ரீலிஸ் ஆகிறது. சிவாஜியின் கர்ணன் படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. 48 வருடத்துக்கு முன்பு வந்த இப்படத்துக்கு இப்போதும் வரவேற்பு இருந்தது. தியேட்டர்களில் பல வாரங்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நிரம்பின. சென்னையில் 125 நாட்களை தாண்டி ஓடியது. ரூ.5 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.

  இதனால் இப்படத்தை அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யவுள்ளனர். வருகிற 27ம்தேதி அங்கு வெளியாகிறது. தமிழிலில் மட்டுமின்றி ஆங்கில சப்டைட்டிலுடனும் வெளியிடுகிறார்கள். சிவாஜியின் வீர பாண்டிய கட்டபொம்மன் படமும் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகிறது. ஒரிரு மாதங்களில் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

 4. Avatar

  I like both MGR and Shivaji. I felt extreme sad when they left us. I wa-ould like to know your opinion on MGR too. – Dhevan

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க