தீக்கொழுந்தில் பனித்துளி (அத்தியாயம்-3)

முகில் தினகரன்

முந்தைய பகுதியை வாசிக்க

தறிகளை விற்பதென முடிவு செய்து விட்டபடியால் அவற்றின் கண்டிஷனை அறியும் பொருட்டு நீண்ட நாட்களுக்குப் பிறகு, தறிக் கூடத்தின் கதவுகளைத் திறந்தான் சுந்தர்.

திறந்தவுடன் ‘குப்‘பென்று முகத்திலடித்த ஒட்டடைகளைக் கையால் விலக்கிக் கொண்டு உள்ளே நடந்தான்.

ஒரு காலத்தில் இருபத்தி நான்கு மணி நேரமும் ஓடிக் கொண்டு, உற்சாகமாய் இருந்த தறிகள், சோகமாய் அவனைப் பார்த்து, ‘எப்ப முதலாளி எங்களை மறுபடியும் ஓட்டப் போறே?” என்று கேட்பது போலிருந்தது அவனுக்கு.

முதலாவதாய் இருந்த தறியின் மேல் பகுதியை விரலால் தேய்த்துப் பார்த்தான். மண்டிக் கிடந்த தூசி அவன் விரலில் ஒட்டிக் கொண்டது. அவன் மனதில் வேதனை ஒட்டிக் கொண்டது. அங்கிருந்த நான்கு தறிகளில் அவனுக்கு மிகவும் பிடித்தது அந்தத் தறிதான். ஆதனால்தான் அதை முதலாவதாக வைத்திருந்தான். இருப்பதிலேயே அதுதான் ரொம்பப் பழசும் கூட.

புதினைந்து பதினாறு வருடங்களுக்கு முன்பு அவன் எட்டாவது பெயிலாகி வாழ்க்கையே முடிந்து விட்டதைப் போல் அழுது கொண்டிருந்த போது,

‘அட ராசா… ஏண்டா இப்படிக் குடியே முழுகிப் போன மாதிரி அழுவறே?… படிப்பில்லாட்டா என்னடா?… இருக்கவே இருக்கு தறி!. நாளையிலிருந்து என் கூட தறிக் கூடத்திற்கு வந்துடு!. நான் வேலை கத்துத் தர்றேன்!” என்று ஆறுதலாய்ப் பேசிய அப்பா, அவனுக்கு அந்தத் தறியில்தான் வேலை கத்துக் கொடுத்தார்.

அப்பா இறந்த போது, கிட்டத்தட்ட ஏழெட்டுத் தறிகள் ஓடிக் கொண்டிருந்தன. தொடர்ந்து தறிக் கூடம் மொத்தமும் இவன் பொறுப்பிற்கு வந்த போது அங்கிருந்த பழைய தறிகளை மாற்றினான். ஆனாலும் அந்த ஒரு தறியை மட்டும் விற்க அவனுக்கு மனசு வரவில்லை. அதை மட்டும் வைத்துக் கொண்டான். நாளை அந்தத் தறியும் போகப் போகின்றது.

அந்தப் பிரிவு அவனைச் சோகப்படுத்தியபோது அதனால் விளையப் போகும் நன்மை அவனை ஆறுதல் படுத்தியது.

மரப் பெட்டியில் குவிந்து கிடந்த ‘நாடா‘க்களில் ஒன்றைக் கையிலெடுத்து திருப்பித் திருப்பிப் பார்த்தான். எலிக் குஞ்சொன்று உள்ளிருந்து எம்பிக் குதித்தோடியது.

விரக்தியாய்ச் சிரித்தான்.

மெல்ல நடந்து அங்கிருந்த மர பெஞ்சில் சோர்வாய் அமர்ந்த போது, ‘என்னய்யா… இங்க வந்து உட்கார்ந்திட்டிருக்கே?”

குரல் கேட்டுத் திரும்பினான்.

மைதிலி.

‘ஒண்ணுமில்லை மைதிலி… நாளைக்குத் தறிகளைப் பார்க்க பார்ட்டி வர்றாங்க. அதான் கொஞ்சம் சுத்தம் பண்ணி வைக்கலாம்னு வந்தேன்!”

‘நீ ஒருத்தனேவா சுத்தம் பண்ணப் போறே?… என்னையும் கூப்பிட்டிருக்க வேண்டியதுதானே?”

‘இல்லை மைதிலி… நேத்திக்கே சமையலறைல அம்மா உன்னைய டிரில் வாங்கிட்டாங்க… அதான் வேண்டாம்னு…”

‘ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்றவள் அவன் முகம் வாடியிருப்பதைப் பார்த்து, ‘இங்க…பாருய்யா..நீ எதை நெனச்சுக் கவலைப் பட்டுட்டிருக்கேன்னு எனக்குத் தெரியும்…‘என்னடா இருக்கற தறியை வித்துட்டா…நாளைக்கு நமக்குன்னு ஒரு தொழில் இல்லாமப் போய்டுமே…அப்புறம் நாம எப்படிக் கல்யாணம் காட்சின்னு பண்ணி…குழந்தை குட்டிகளைப் பெக்கறது…வளர்க்கறது?‘‘ன்னு கவலைப் படறே?…அதானே?”

அவன், ‘ஆமாம்!” என்று தலையாட்ட,

‘யோவ்!…உனக்கும் தொழில் தெரியும்…எனக்கும் தொழில் தெரியும்…திருச்செங்கோட்டுல எக்கச்சக்கமா தறிக் கூடங்க இருக்கு!…அப்புறமென்னய்யா கவலை?…மொதல்ல தங்கச்சிய அனுப்புற வழியப் பார்க்கலாம்…அப்புறம் நம்ம வாழ்க்கையைப் பத்தி யோசிக்கலாம்!”

வாயாடியான அவள் வியாக்கியானமாய்ப் பேச, நெகிழ்ந்து போனான் சுந்தர்.

அவள் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘மைதிலி…வசதியான புருஷன் கெடைக்கணும்!…வசதியான வாழ்க்கை அமையணும்!…ன்னு நெனைக்கற பொண்ணுக வாழ்ற இந்தக் காலத்துல ஒண்ணுமில்லாத இந்த ஓட்டாண்டிக்காக நீ காத்திருக்கறதைப் பார்க்கும் போது…எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை!” என்றான் தழுதழுத்த குரலில்.

‘நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்…மொதல்ல எந்திரிச்சு வா… மள..மள‘ன்னு தறிகளைச் சுத்தம் பண்ணுவோம்!”

கவலைகளினால் ஏற்பட்ட தளர்வால் சோம்பிக் கிடந்தவன், அவளது ஊக்கமூட்டும் பேச்சால் உற்சாகம் வரப்பெற்றுச் சுறுசுறுப்பாய் வேலையில் ஈடுபட்டான். ஆனாலும் அடிமனதில் அந்தக் கேள்வி ஒலித்துக் கொண்டேயிருந்தது.

‘மீதிப் பணத்துக்கு என்ன பண்ணப் போறே?”

(தொடரும்)

 

படத்திற்கு நன்றி: http://www.ksvsjbp.com/history%20eng.htm

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *