சத்தியம்..சகோதரத்துவம்..சமாதானம்…
சமுதாயப்போரில் சண்டையிட
காந்திஜி கண்டுபிடித்த
கைவாள்கள் இவை..
இவற்றால்தான்
கத்தியின்றி ரத்தமின்றிக்
கண்டோம் நாம்
சுதந்திரத்தை…!
சத்தியம்-
இந்திரனும் அடையமுடியா
சந்திரமதியின் கழுத்தணியை
அரிச்சந்திரன் மட்டும் கண்டிட
அன்று அவன்
அரங்கேற்றிய வாழ்வு நாடகம்..
நாடகத்தில் அதைப்பார்த்து
நடைமுறையில் கொண்டதால்,
நமக்குக் கிடைத்தது
ஒரு
தேசபிதா..
நல்ல வேதமாய்ச்
சத்திய சோதனை..
ஜேம்ஸ் ஆலன்
செதுக்கிய சிற்பம்..
செய்வது கடினம் எனினும்
சேவிக்கத்தக்க உயர்வு பெறுவார்
செயல்படுத்தினால் சத்தியத்தை…!
சகோதரத்துவம்-
தசரத ராமனின்
தம்பியர்தொகை அதிகமாகியபோது
தரணிக்குக் கிடைத்தது இது..
அப்பன் சொத்துக்கு
அண்ணன் தம்பிகள்
அடித்துக்கொள்ளாமலிருக்க
ஆற்றில் குகனுக்கு
அண்ணனாகி
அன்று ராமன் காட்டிய
அரிய செய்தி..
ஏற்றுக்கொண்டால்
எல்லாம் நன்றே…!
சமாதானம்-
புறாவின் வடிவில்
நம்
புலனுக்குத் தெரிவது..
மாநில அரங்கில்
நேரு நமக்குக் காட்டிய
நேர் வழி..
இதோ ஒரு
குறுக்கு வழி-
முதலில் சொன்ன
சத்தியமும்
சகோதரத்துவமும்
சேர்ந்து நிறைவேறினால்,
தானே வந்திடும்
சமாதானம்…!
படத்திற்கு நன்றி
http://www.mutanteggplant.com/agog/2007/07/23/indian-tragedy/