சித்திரை சிங்கர்

சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத் திருமணத்தில் மூன்று நாட்கள் முழுமையாக இணைந்து செயல்படவேண்டியிருந்தது. பெண் வீட்டுத் திருமணம் என்பதால் கொஞ்சம் கவனமாகவே எங்கள் “டீம் வொர்க்” செயல்பட்டது.

என்னதான் மாப்பிளையின் அம்மா, அப்பா, அண்ணன் தங்கை மற்றும் மாப்பிள்ளையும் அமைதியாக இருந்தாலும், வந்திருந்த அவர்களின் உறவினர்களின் அலம்பல் கொஞ்சம் நஞ்சமில்லை. பெண் வீட்டார் ஓரளவுக்கு வசதியானவர்கள் என்றாலும், எந்தவிதமான குறையும் இல்லாமல் தங்களின் பெண் திருமணம் நடக்கவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பார்த்து பார்த்துதான் எல்லா செயல்களையும் செய்தார்கள்.  அப்படியும் அது இப்படி… இது இப்படி என்று குறை சொல்பவர்கள் பெரும்பாலும் திருமணத்துக்கு வந்த மற்ற வயதான உறவுகளே….!

மாப்பிள்ளையின் பெற்றோரோ “அவர்கள் அப்படிதான் அதை ஒன்றும் பெரிசு படுத்த வேண்டாம் விட்டு விடுங்கள் எங்களை பொருத்தவரையில் அனைத்தும் திருப்தியாகவே உள்ளது”, என்று கூறினாலும் பெண் வீட்டாரின் மனவருத்தத்தை தவிர்க்க முடியாது  என்பது மறுக்க முடியாத உண்மை.

நமது திருமண முறைகள் மாறாத வரையில் இது போன்ற குளறுபடிகளை கண்டிப்பாக தவிர்க்க முடியாது என்பதே எனது எண்ணம். இப்போது தங்கம் விற்கிற விலையில்…. மற்றைய விலைவாசிகள் இருக்கும் நிலையில் என்னதான் பொறுப்புடன் முடிந்தளவுக்கு  செலவு செய்து திருமணம் நடத்தும் பெண் வீட்டார்கள் மனம் கோணாமல் திருமணம் நடைபெற வேண்டுமானால், தேவையில்லாத சடங்குகள் சம்பிரதாயங்கள் அனைத்தையும் தவிர்ப்பதே நல்லது.

உறவினர்களின் ஆதரவுகள் அனுசரணைகள் கண்டிப்பாக தேவைதான். அதே அனுசரணைகள் நமது உறவினர்களின் மனதிலும் பதியும் வண்ணம் நமது செயல்பாடுகள் இருக்கவேண்டும். இல்லை என்றால் தேவையில்லாத பிரச்சனைகள் வருவதை தவிர்க்க முடியாது. இதே பிரச்சனைகள் சில நேரங்களில் “விஸ்வரூபம்” எடுக்கவும் செய்யும் பல நேரங்களில் “புஸ்” ன்னு போனாலும் ஆச்சர்யபடுவதற்கு  இல்லை.

நமது கல்யாண முறைக்கு வெளிநாடுகளில் நல்ல மரியாதையும் மதிப்பும்  இன்று வரை  இருக்கிறது என்பது மறுக்க மறைக்க முடியாத உண்மை. வருங்காலத்திலும் இந்த மதிப்பும் மரியாதையும் காப்பாற்றப்பட்ட வேண்டுமானால்….  திருமணத்துக்கு செல்லும் உறவினர்கள் குறிப்பாக வயதான அனுபவசாலிகள், ஒவ்வொரு திருமணத்துக்கு செல்லும் போதும் அந்த திருமணம் நமது பெண்ணின் திருமணம் என்ற எண்ணத்தில் வைத்து திருமணத்துக்கு சென்று மனசார வாழ்த்திவிட்டு வரவேண்டும்.

ஒரு திருமணத்தை எடுத்து நடத்துவது என்பது இவ்வளவு சிரமம் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். சடங்கு சம்பிரதாயங்களில், முறைகளில்  குறை இருந்தால், குறிப்பிட்டு ஆலோசனைகள் சொல்லலாம். அதை விட்டுவிட்டு எனக்கு முதலில் அப்பளம் போடவில்லை, ஊறுகாய் வரவில்லை….  காபியில் சர்க்கரை கம்மியாக இருக்கு என்று சின்ன சின்ன குறைகளை  பெரிது படுத்தகூடாது.

பொதுவாக திருமண வீடுகளில் எதுவும் பெரும்பாலும் திட்டமிட்டபடி நடைபெறுவது கொஞ்சம் கஷ்டந்தான்.. அது போல வருகின்ற உறவினர்களின் எண்ணிக்கையும் முன்ன பின்னதான் இருக்கும். உதாரணத்துக்கு மதிய உணவுக்கு  முந்நூறு பேர் வரவேண்டிய இடத்தில, நானூற்று ஐம்பது பேர் வந்துவிட்டால்… முதல் பந்தியில் பறிமாறபட்ட உணவு வகைகளை கடைசி பந்திவரை பரிமாற முடியாது. வருகின்ற உறவினர்களில் சிலர் முதல் பந்தியிலும், சிலர் கடைசி பந்தியிலும் சாப்பிடுவார்கள். இந்த மாதிரி நேரங்களில்  எனக்கு அது வரலை இது வரலை  குறை பேசுவதை கண்டிப்பாக “பெரிசுகள்” தவிர்க்க வேண்டும்.  இல்லை என்றால் வருங்காலத்தில் நமது “திருமண சடங்குகள்  சம்பிரதாயங்கள்” கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவிடும் என்பதே உண்மை….! 

மொத்தத்தில் பெரியவர்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் அனைவருக்குமே நல்லது. என்ன நான் சொல்ல வர்றது புரியுதா….?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க