தமிழ்த்தேனீ
ஆண்டாளா  பிறந்தாள்
அல்ல அல்ல உதித்தாள்!
திருவாடிப்பூரத்தில் உதித்தாள்
சூரிய சந்திரர் போலுதித்தாள்

வில்லிபுத்தூர் நந்தவனத்
துளசிமாடம் தனிலே
பெரியாழ்வார் பெண்ணாய் உதித்தாள்
சிறியாழ்வார் ஆண்டாளாய் உதித்தாள்

 மாடத்திலுதித்து கூடத்தில் வளர்ந்தாள்
அரங்கனுடன் கூடத்தான் மலர்ந்தாள்
சுழலுகின்ற செஞ்சுடராய்
உதித்தாள் உதித்தாள் உதித்தாள்!

கோ புரத்துக் கண்ணனுடன்
கோதையவள் கலந்தாள்
உதிப்பதுவும் மறைவதுவும்
ஒரு சுழற்சி என்றால்

அச்சுழலில் அரங்கனுக்கே
அச்சாணியாய் இருந்தாள்
அச்சுதன் கண்ணனவன்
அரங்கன் மன்னனவன்

அச்சுவையை அறிந்திடவே
அகமகிழ்ந்தே கலந்தாள்
பிடித்தவனை ஆண்டாள்
அனுதினமும் படித்தாள்

தேன் வடியும் மலர்களையே
ஊண் உருக்கி தொடுத்தாள்
பா வடித்துப் பிடித்தாள்
கோபாலனையே பிடித்தாள்

அவளுதித்து வளர்ந்து
அலங்கரித்து நிமிர்ந்தாள்
அரங்கனவன் களிகொண்டான்
அவன்தோளில்  கிளியானாள்

பிடித்துவிட்ட அரங்கனையே
மீண்டுமவள் பிடித்திடவே-
தன் தாள் பதித்தாள்
ஆழ்வாரைப் பிடித்தாள் ,

ஆழ்வாரே  அறியாமல்
அரங்கனைப் பிடித்தாள்
மாலை பிடித்தாள்,
திரு மாலை பிடித்தாள்

திருமாலைப் பிடித்தாள்.
திருவரங்கன் தாள் பிடித்தாள்
அரங்கனே அறியாமல்
அரங்கனையே பிடித்தாள்

உள்ளிருந்தே அவள்
உலகையே பிடித்தாள்
கள்ளிருக்கும் மலர்ச்சோலை
பெரியாழ்வார் நந்தவனம்

உள்ளிருக்கும் துளசி மாலை
பெரியாழ்வார் தோளினிலே
பெண்மானாய் வளர்ந்தாள்
உரியவனாய் வந்தரங்கன்

அந்தரங்கம்  புகுந்தாள்
மாலையென்ன காலையென்ன
முழுவதுமாய்ப் பிடித்தாள்
காலையிலும் மாலையிலும்

கணப் பொழுதும் நீங்காத
கள்ளியவள் ஆண்டாள்
கண்சிமிட்ட நேரமில்லை
கண் கொள்ளா காட்சிதனை

கண்டுவிட்ட ஒரு கணத்தில்
ஆண்டவனைப் பிடித்தாள்
இமைப்பொழுதும் நீங்காத
இணையுடனே  சேர்ந்தாள்

அரங்கனையே துதித்தாள்
அவளெங்கே பிறந்தாள்? உதித்தாள்.

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “” திருவாடிப்பூர நாயகி”

  1. ”…ஆழ்வாரே அறியாமல்
    அரங்கனைப் பிடித்தாள்
    மாலைப் பிடித்தாள்
    திரு மாலைப் பிடித்தாள்
    திருமாலைப் பிடித்தாள்.
    திருவரங்கன் தாள் பிடித்தாள்
    அரங்கனே அறியாமல்
    அரங்கனையே பிடித்தாள்…”
    இத்தகைய தேனினும் இனிய வரிகளை நமக்கெல்லாம் அளித்த தமிழ்தேனி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
    ஸம்பத்

  2. அருமையான கவிதை.
    ஆனாலும் ஆண்டாள் சொல்லுக்கு நிகராகாது.

    அன்பன்
    கி.காளைராசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.