பெரிய மனுஷி
தமிழ்த்தேனீ
சாப்பாட்டு இடைவேளையின்போது,
டேய் காமேஷ், நேத்திக்கு என்னொட தெருவுலே ஒரு காட்சியைப் பாத்தேன், மனசு தாங்கலே. மீசைகூட முளைக்காத ஒரு பையன்டா, மிஞ்சிப் போனா எட்டாம் கிளாஸ்தான் படிப்பான்னு நெனைக்கறேன். அந்தப் பையன் ஒரு மோட்டார் பைக்கில உக்காந்துகிட்டு இருக்கான். வயசுக்கு வந்துதோ வரலியான்னு கூட்த் தெரியலே, அந்தச் சின்னப் பொண்ணும் ஏறக்குறைய அதே கிளாஸ்லேதான் படிக்கறாமாதிரி இருக்குது, ரெண்டு பேரும் பள்ளிக்கூட யூனிபார்ம் போட்டுகிட்டு தெருவுலே போற யாராவது பாத்தா என்ன ஆகும்னு கொஞ்சம் கூட பயமோ, வெக்கமோ இல்லாம தைரியமா பேசிகிட்டு இருக்காங்க. அந்தப் பையன் முழியே சரியில்லே. மறைவா நின்னு சின்னப் பொண்ணுகிட்டே திருதிருன்னு முழிச்சிண்டு பேசிட்டு இருக்கறதைப் பாத்துட்டு சந்தேகப்பட்டு, “நீங்க யாரு ஏன் இங்கே நிக்கறீங்க, பள்ளிக் கூடம் போகலையா”ன்னு கேட்டேன்.
“யோவ் உன் வேலையைப் பாத்துகிட்டு போவியா வந்துட்டாரு கேள்வி கேக்க போய்யா” அப்பிடீன்னு என்னை மெரட்றான் அந்தச் சின்னப் பையன். அந்தப் பொண்ணு மிரள மிரள முழிக்கிது, அப்பவே புரிஞ்சுபோச்சு இது ஏதோ சரியில்லைன்னு. இந்தக் குழந்தைங்க ஏன் இப்பிடிக் கெட்டுப் போவுது இந்தக் குழந்தைகளைப் பெத்தவங்களுக்கு இது தெரியுமான்னு மனது பதறிப் போச்சு.
“இன்னொரு முறை உங்களை எங்கேயாவது இப்பிடிப் பாத்தா உங்க பெத்தவங்களுக்கு நானே சொல்லிடுவேன், மரியாதையா பள்ளிக்கூடத்துக்கு போங்க”ன்னு தொரத்திட்டு வந்தேன் என்றான் முரளி.
ஏண்டா நம்ம நாடு இப்பிடிக் கெட்டுப் போச்சு, நாமளும் அழகா ஒரு பொண்ணு போனா பாத்தோம், ஆனா பயந்து பயந்து, தூரத்திலே இருந்து பாத்தோம். இப்போ எப்பிடி இவ்ளோ தைரியம் வருது இந்தக் காலத்து பசங்களுக்கு?
“எல்லா அம்மாக்கும் அப்பாக்கும் நம்ம குழந்தை தப்பு பண்ண மாட்டாங்கன்னு ஒரு தவறான நம்பிக்கைதானே இத்தனைக்கும் அடிப்படை? ஒரு தலைமுறையையே சரியான வளர்ப்பில்லாம நாமெல்லாரும் சேந்து கெடுத்துட்டமோ ன்னு தோணறது” என்றான்.
“கொஞ்சம்கூட வெக்கமே இல்லாம எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமா காமிச்சா ஏன் பசங்க கெட்டுப் போக மாட்டாங்க? இந்தக் குழந்தைங்க இந்த வயசிலேயே கெட்டுப் போறதுக்கு ஒரு சமூகப் பொறுப்பே இல்லாத நாம எல்லாம்தான் காரணம். இந்தக் காலத்திலே பசங்களை முறையா வளக்கறதைப் போல கஷ்டம் எதுவுமே இல்லே” என்றான் காமேஷ்.
“ஆமாம் காமேஷ் நீ சொல்றது உண்மைதான்”.
ப்ரபஞ்ச வளர்ச்சியே இல்லறத்தை அடிப்படையா வெச்சித்தான் அப்பிடீங்கறது எல்லாருக்கும் தெரியும். நம்ம முன்னோர்கள் யோசிக்காத விஷயமா? ஆனாலும் காமம் அப்பிடீங்கறதை மறை பொருளா வெச்ச முன்னோர்கள் முட்டாளா?
காமன் கையில் கரும்பு வில்லை வைத்துக்கொண்டு அம்பு விடறான் அப்பிடீம்பாங்க. வில்லு கரும்பா இருந்தாலும் அதிலேருந்து புறப்பட்டு வர அம்பு எவ்ளோ சேதம் விளைவிக்குதுன்னு யாருக்குத் தெரியும்?
அதிலே நல்ல தத்துவம் இருக்கு. கரும்பு முத்தினாத்தான் இனிப்பு கிடைக்கும், எதுவுமே பிஞ்சிலே பழுத்தா உபயோமில்லாததா ஆயிடும். அதுனாலேதான் காமத்தை மறைபொருளா வெச்சு சரியான பருவம் வந்ததுக்கப்புறம் முறையா அதை உபயோகிக்க நாசூக்கா தெரியப்படுத்தினாங்க பெரியவங்க.
“அது அதுக்குன்னு ஒரு பருவம் இருக்கு, அந்தந்தப் பருவத்திலே அது அதைச் செய்யணும். அது மாதிரி பக்குவம் வரவரைக்கும் நாமதான் பாதுகாப்பா இருந்து சொல்லிக் குடுத்து வளக்கணும் குழந்தைகளை. நம்ம எல்லாருக்குமே இப்போ குழந்தைகளைவிட தொலைக்காட்சி தொடர்தானே முக்கியமா இருக்கு” என்றான் முரளி.
“முரளீசார் உங்களுக்கு உங்க வீட்டிலேருந்து போன் வந்திருக்கு, உங்க வொய்ப் பேசறாங்க அங்கே மேனேஜர் ரூம்லே போயி பேசிட்டு வாங்க” என்றான் பியூன்.
துணுக்கென்றது மனது. எப்பவுமே இத்தனை வருஷத்திலே ஒரு முறைகூட அலுவலகத்துக்கு போன் செய்யவே மாட்டாளே காயத்ரி என்ன இது? மேனேஜர் அறையில் அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு ரிசிவரை எடுத்து “என்னம்மா என்ன ஆச்சு” என்றான் பதட்டமாக. “எனக்கு கையும் ஓடலை காலும் ஓடலை, நம்ம ரம்யாவோட ஸ்கூல்லேருந்து போன் பண்ணாங்க” என்றாள்.
“சரி என்ன விஷயம் அதைச் சொல்லு எனக்கே படபடன்னு வருது” என்றான் முரளி.
“நம்ம ரம்யா பெரிய மனுஷி ஆயிருக்கா. அவங்க ஸ்கூல்லேருந்து சொல்லிவிட்டாங்க நான் போயி ஆட்டோவிலே வீட்டுக்கு கூட்டியாந்திட்டேன், நீங்க அரை நாள் லீவு எடுத்துகிட்டு வாங்க. நிறைய வேலை இருக்கு” என்றாள். “ஒண்ணும் கவலைப்படாதே. நான் வரேன்” என்று கூறிவிட்டு, போனை வைத்துவிட்டு, “ரொம்ப நன்றி சார்” என்றான் மேனேஜரிடம்.
“அதெல்லாம் பரவால்லே, சரி என்ன விஷயம்” என்றார்.
“சார் ஒரு அவசரம் நான் போயிட்டு வந்து உங்களுக்கு விவரம் சொல்றேன்” என்றான்.
“சரி சரி நீங்க லீவு லெட்டர் எழுதிக் குடுத்துட்டு போங்க” என்றார் மேனேஜர். “நன்றி சார்” என்று கை கூப்பிவிட்டு வெளியே வந்தவன் மனதில் சொல்ல முடியாத உணர்ச்சி!
காலம் காலமா நடந்துட்டு வர ஒரு நிகழ்ச்சிதானே, இதுக்கு ஏன் நம்ம மனசு இவ்ளோ நெகிழறது, ஒரு வேளை இந்தக் குழந்தை என்னோட பொண்ணு அப்பிடீங்கறதுனாலயா. முரளிக்கு ரம்யா பொறந்தப்போ கூட அவனுக்கு அப்பா ஆயிட்டோம்ங்கிறது பெரிசா உரைக்கல. ஆனா இப்போதான் மனசுக்குள்ளே அவன் அப்பா ஆனாற் போன்று ஒரு உணர்வும் பொறுப்பும், பயமும் தோன்றின.
அவனையறியாமல் அவன் மனது விம்மி கண்ணில் நீர் வந்தது. “என்ன முரளி ஏன் அழறே என்ன ஆச்சு” என்று பதறினான் காமேஷ் . “ஒண்ணும் இல்லே காமேஷ் எல்லாம் நல்ல செய்திதான்”. மெல்லிய குரலில் விஷயத்தை சொன்னான்.
“அவ்ளோதானே சென்டிமென்டல் இடியட்டா இருக்காதே. வீட்டுக்கு போ உன் வொய்புக்கு ஏதாவது உதவி செய்யி கிளம்பு” என்றான்.
வீட்டுக்குள்ள நுழைஞ்சதுமே அக்கா எதிர்ப்பட்டாள், “என்னடா பெரிய மனுஷா தாத்தா ஆயிட்டியா” என்றாள் புன்சிரிப்புடன் . இப்போதான் நான் அப்பா ஆனதையே உணர்றேன், அக்கா என்னடான்னா நான் தாத்தா ஆயிட்டேன்னு சொல்றாங்களே என்று குழப்பம் ஒரு புறம் இருந்தாலும், புன் சிரிப்புடன் “ஆமா அக்கா” என்றேன்.
அம்மா என்னை அருகில் அழைத்து ஆதரவாக தலையை வருடிகொடுத்துவிட்டு “மூத்த பொண்ணு பெரியமனுஷியா ஆனா அப்பிடித்தான் தாத்தா ஆயிட்டியா” ன்னு கேப்பாங்க என்றாள் என் குழப்பத்தை புரிந்துகொண்டு.
“சரி நான் ஒரு பட்டியல் போட்டு வெச்சிருக்கேன் நீ போயி சீக்கிரமா அதெல்லாம் வாங்கிட்டு வா. இப்போ நம்ம உறவுக்காரங்க எல்லாம் வந்திருவாங்க ” என்றாள் அம்மா.
சரிம்மா என்ற என் கண்கள் என் பொண்ணு ரம்யாவைத் தேடின.
“அதோ அந்த ரூம்லே இருக்கா ரம்யா போயி பாரு” என்றாள்.
உள்ளே நுழைந்தேன். என் குழந்தை என்னைப் பார்த்ததும் அப்பா என்று ஆச்சரியமாக என்னைப் பார்த்துவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள். அருகில் சென்று அவளை அப்படியே தோளில் சாய்த்துக்கொண்டேன்.
நான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரதுக்கு ராத்திரி ரெண்டு மணி ஆனாலும் அது வரைக்கும் தூங்குவாளோ இல்லையோ, நான் வந்து படுத்தவுடன் இருட்டிலேயே தவழ்ந்து வந்து என்மேலே படுத்துகிட்டு அதுக்கப்புறம்தான் நிம்மதியா தூங்கும். இது இப்போ பெரிய மனுஷியா? சிரிப்பா வந்தாலும் எனக்கும் என் குழந்தை ரம்யாவுக்கும் ஒரு நெகிழ்ச்சி.
“ஏய் குட்டிப் பொண்ணு உனக்கு நான் இருக்கேன் ஒண்ணும் கவலைப்படாதே , இந்த நிகழ்ச்சி எல்லா பொண்ணுக்கும் ஏற்படற நிகழ்ச்சிதான், பயப்படாதே” என்றெல்லாம் சொல்லணும்னு நினைச்சாலும் ஒன்னும் சொல்லாம அப்பிடியே இருந்தேன். நான் சொல்ல நினைச்சதெல்லாம் புரிஞ்சா மாதிரி ஒரு தெளிவு வந்துது ரம்யாவுக்கு. மறுபடியும் ஒரு வெட்கப் புன்னகை அவள் முகத்தில்.
“சரிடா இப்பிடியே அப்பாவும் பொண்ணும் கொஞ்சிகிட்டு இருந்தா எப்பிடி? போயி நான் சொன்னதெல்லாம் வாங்கிட்டு வா” ன்னு துரத்தினாங்க அம்மா,
“சரிம்மா” என்று கிளம்பினேன்.
“இவனே குழந்தை இவனுக்கு ஒரு குழந்தை” என்று அம்மா காயத்ரியிடம் சொல்வது லேசாகக் கேட்டது. என் குழந்தை பெரிய மனுஷி ஆயிட்டா. இனிமே ஜாக்கிரதையா இருக்கணும், இன்னும் பாதுகாப்பா பாத்துக்கணும். நாளுக்கு நாள் பொறுப்பு கூடுது என்கிற பயம் வந்தது மனதுக்குள்.
ரம்யாவை அடுத்தவருஷம் காலேஜ்லே சேக்கணும் அதுக்கு இப்பவே பணம் சேக்கணும். இந்தக் காமேஷ் யாரோ ஒரு ப்ரொபசரைத் தெரியும்ன்னு சொல்வானே அவன்கிட்ட சொல்லி வைக்கணும் என்று நினைத்துக் கொண்டான்.
ஒரு நாள் வீட்டுக்குள்ள நுழையும்போது ஏதோ வாக்குவாதம் காயத்ரிக்கும் ரம்யாவுக்கும் .
“நாங்க பொறந்து வாழ்ந்து எங்களுக்கு பொறந்தவதான் நீ, பெரியவங்க சொன்னா அதிலே விஷயம் இருக்கும். நீ ஏதோ எங்களை விட பெரியவளாயிட்டா மாதிரி பேசறே, கொஞ்சம் அடங்கித்தான் இரு” என்று ஆவேசமாய்க் கத்திக் கொண்டிருந்தாள் காயத்ரி.
முரளி உள்ளே வந்ததைப் பார்த்தவுடன் ஓடி வந்து “அப்பா எப்போ பாத்தாலும் என்னை திட்டிகிட்டே இருக்காங்க அம்மா” என்றாள் ரம்யா.
“ஏம்மா இப்பிடி செய்யறே! குழந்தையை ஏன் திட்டிகிட்டே இருக்கே” என்று காயத்ரியைக் கடிந்து கொள்வது போல் சொல்லிவிட்டு ரம்யாவை அணைத்துக் கொண்டு காயத்ரியிடம் சைகையால் சும்மா இரு என்று உணர்த்திவிட்டு
“சரி வாடா நாம உக்காந்து பேசலாம்” என்று ரம்யாவை அறைக்கு அழைத்துக் கொண்டு போய் உட்காரவைத்து எதிரே வந்து உட்கார்ந்தான் முரளி.
“என்ன ஆச்சு” என்றான். உடனே அழத் தொடங்கினாள் ரம்யா. “இதோ பாரு அழுதா எனக்குப் பிடிக்காது, அதுவும் குறிப்பா பெண்கள் அழுதாவே எனக்குப் பிடிக்காது. அழற பொம்பளை ஒண்ணு தைரியம் இல்லாதவளா இருப்பா, இல்லேன்னா சாகசம் பண்ற பொம்பளையா இருப்பா, ரெண்டுமே தப்பு”.
“தைரியமா தெளிவா தீர்க்கமா யோசிக்கணும் என் பொண்ணு. நீ எப்பவுமே அப்பா பொண்ணுதானே, அப்பிடி யோசிச்சா அழுகையே வராது புரியறதா” என்றான் .
“போப்பா நீ எப்போ பாத்தாலும் திட்டிகிட்டே இருக்காங்க, அதுகூடப் பரவாயில்ல. என்னை சந்தேகப் படறாங்கப்பா அம்மா. அதான் எனக்கு பிடிக்கலை, அழுகை அழுகையா வரது. நான் பள்ளிக்கூடம் போயிட்டு வரேன் தெருவிலே எல்லாரும் உன்னைப் பாக்கறாங்க, இன்னும் அடக்கமா ட்ரஸ் பண்ணு, அடக்கமா இருன்னு ஏதோ சொல்லிக்கிட்டே இருக்காங்க.
என்னைப் பாக்கறவங்களை பாக்காதீங்கன்னு சொல்லவா முடியும்? என் கிளாஸ்லே எல்லாரும் எப்பிடி ட்ரஸ் பண்றாங்க தெரியுமா? நான் அடக்கமாத்தான் ட்ரஸ் பண்றேன். யாரோ செய்யற தப்புக்கெல்லாம் நான் என்ன செய்ய முடியும். சொல்லுங்கப்பா அம்மாகிட்ட” என்றாள் ரம்யா.
“இதோ பாரு உன் ப்ரச்சனை என்னான்னு எனக்குப் புரிஞ்சிடுச்சி, அப்பா உனக்கு நல்லதைத்தானே சொல்லுவேன், என்னை நம்புறியா? அப்போ நான் இப்போ சொல்றதைக் கவனமா கேளு. இப்போ நான் சொல்ற ஒவ்வொரு வார்த்தையும் ஆழமான வார்த்தை நல்லாப் புரிஞ்சிக்கோ.
நாம் எப்பவுமே யார் நமக்கு நல்லது சொல்றாங்க, யாரு நம்மை புகழறாமாதிரி பேசிட்டு பின்னாலே நமக்கு கெட்டதை செய்யறாங்கன்னு புரிஞ்சிக்கறதே இல்லே, இதான் எல்லாப் ப்ரச்சனைக்கும் காரணம்.
அம்மாவை நீ தப்பா புரிஞ்சிட்டு இருக்கே. அம்மாவோட சந்தேகமே வேற. அது நியாயமானதும் கூட. அது இப்போ உனக்குப் புரியாது. அம்மா உன்னை சந்தேகப் படல!
உன் அழகை நெனைச்சு பெருமையா இருந்தாலும் பயப்படறாங்க. அம்மா உன் வளர்த்தியைப் பார்த்து பயப்படறாங்க. உன் மனசிலே தெளிவா இருக்கணுமேன்னு பயப்படறாங்க. இந்த அழகு, இந்த வளர்த்தி, இந்த நல்ல மனசு, எல்லாமே ஒரு நல்ல இடத்திலே போயி சேரணுமே அப்போதானே உன் வாழ்க்கை நல்லா இருக்கும், அதுக்கு முன்னாலே வேற யாராவது வந்து உன் மனசைக் கலைச்சு உன்னோட வாழ்க்கையை கெடுத்துடுவாங்களோன்னு சந்தேகப் படறாங்க.
இதெல்லாம் உனக்கு இப்போ புரியாதும்மா, என் ரம்யாக்குட்டிக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு குட்டி பொறந்ததுக்கு அப்புறம்தான் புரியும். நீ ஒரு அம்மாவா யோசிச்சாதான் புரியும், அதுனாலே இனிமே அம்மாகிட்டே சண்டை போடாம இருப்பியா. அம்மா உனக்கு நல்லதைத்தான் சொல்வாங்க. இதோ பாரு உனக்கு என்ன சந்தேகம் வந்தாலும் தெளிவா யோசனை சொல்றதுக்கு என்னையும் அம்மாவையும் விட உனக்கு நல்லது செய்யத் தகுதியானவங்க யாரும் கிடையாது, ஆமா நாங்க உன்னோட நலம் விரும்பிகள் புரியறதா” என்றான் முரளி.
என்ன நினைத்தாளோ “சரிப்பா இனிமே நல்லவிதமா நடந்துக்கறேன்” என்றாள் ரம்யா.
இப்பிடியெல்லாம் சொல்லிக் குடுத்து வளர்த்த பொண்ணா இப்போ இப்பிடிப் பேசுது, அப்பிடிப் பாத்துப் பாத்து நான் வளத்த என் பொண்ணு ரம்யாவா இவ? நானும் காயத்ரியும் காட்டின பாசம், நேசம்,அன்பு எல்லாமே வீணாப் போச்சா? அதெப்பிடி நாக்கையே சாட்டையாக்கி இப்பிடி பளீர் பளீர்னு சுழற்றி எங்களைக் கதற அடிக்கறா இந்தக் குழந்தை.
அதுவும் ஏதோ கொஞ்ச காலத்துக்கு முன்னால் பாத்து பழகின யாரோ ஒருத்தனுக்காக? காதல்னா என்னான்னே சரியாப் புரிஞ்சிக்காம மௌடீகமா, இவன் நம்மை கடைசீ வரைக்கும் வெச்சி சரியாக் காப்பாத்துவானான்னு கூட யோசிக்காம, ஏதோ ஒரு மயக்கத்திலே இந்த யாரோ ஒருத்தனை நம்பி தன்னோட வாழ்க்கையை ஒப்படைக்கணும்னு துடிக்கறாளே. எனக்கு அரசல் புரசலாக் கூட காதிலே விழலையே, இந்த விஷயம்.
யந்திர கதியிலே உழைச்சிட்டே இருந்திட்டேனே. முன்னாலே தெரிஞ்சிருந்தாலாவது எச்சரிச்சிருக்கலாமே, இந்தக் குழந்தைக்கு புரியறா மாதிரி சொல்லிக் குடுத்திருக்கலாமே, மனம் பதறிற்று.
“ஒரு பொண்ணைப் பெத்தா போறாது . கவனிச்சு வளக்கணும்” ன்னு அம்மா சொன்னது அசரீரியா காதிலே விழறது.
எல்லாம் சரி பள்ளிக் கூடத்துக்கு, கல்லூரிக்கு, வேலைக்கு அனுப்பும் போதெல்லாம் இருக்கற எல்லாக் கடமையையும் விட்டுட்டு பெத்தவங்களாலே இந்தப் குழந்தைங்க கூடவே அலைய முடியுமா . சந்தேகப் பட்டு வேவு பாக்க முடியுமா? இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராதே.
“ஒரு பொண்ணு மனக் கட்டுப் பாட்டோட அவளைத் தானேதான் காப்பாத்திக்கணும், வேற யாரும் காப்பாத்த முடியாது” ன்னு அம்மா அடிக்கடி சொல்வாங்களே. இப்பிடியெல்லாம் சொல்லிக் குடுத்து, சொல்லிக் குடுத்துதானே வளத்தோம், அத்தனையும் மறந்துட்டு இது மாதிரி செஞ்சிட்டாளே இந்தப் பொண்ணு.
சரி! அவ வாழ்க்கை இது என்னதான் நாம பெத்திருந்தாலும் அவங்களுக்குன்னு ஒரு தனி உரிமை. அதையும் தவிர காதலிக்கறவங்க எல்லாருமே கெட்டவங்கன்னு முடிவு செய்ய முடியாது.
ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சிண்டு காதலிச்சு கல்யாணம் செஞ்சிகிட்டுகூட நல்லா வாழறவங்களும் இருக்காங்களே, அதுனாலே அவ ஆசைப்படறவனுக்கே கல்யாணம் செஞ்சு வெச்சிடலாம்ன்னுதான் யோசிச்சு அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சேன். அந்தப் பையனைப் பத்தி கேள்விப்பட்ட எந்த செய்தியும் சரியா இல்லையே, அதை தெரிஞ்சிகிட்டுதானே அந்தப் பையனை நான் வேண்டாங்கறேன். அது ஏன் இவளுக்கு புரிய மாட்டேங்கறது.
கல்யாணம்கிறது ஏதோ ஆசைக்கு நகை, புடவை , செருப்பு மாதிரியா? வேண்டாம்னா தூக்கிப் போடறதுக்கு. ஏன் இந்தப் பொண்ணுக்கு எப்பிடி புரிய வைக்கிறது என்று தெரியாமல் தடுமாறினான் முரளி.
நாட்டிலே விவாகரத்து அதிகம்னு புள்ளிவிவரம் சொல்லுது, முன்னெப்போதும் விட இளம் பெண்கள் கொடுமைப்படுத்தப் படறது அதிகமாயிடிச்சுன்னு சொல்றாங்க. என்ன செய்யறது?
உடம்பிலே பெரிய மனுஷியா ஆயிட்டா போறாது, மனசிலே பெரிய மனுஷியா எப்போ இந்தக் காலத்து பிள்ளங்க ஆவாங்க, அப்பிடீங்கற ஏக்கம் அவனை செயலிழக்க வைத்தது
இந்த முள்ளிலேருந்து எப்பிடி இந்த சேலையை கிழியாம எடுக்கறது? ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தான் முரளி.