விசாலம்

வாசல் கதவு  மணி அடிக்க  கதவைத் திறந்தேன். எனக்குத் தெரிந்த தோழியின் மகன்  என்னிடம் ஒரு அழைப்பு கடிதத்தைக் கொடுத்தான். அதில் மிகவும் புகழ் பெற்ற ஒரு சமூக சேவகருக்கு, ஒரு பாராட்டு நடத்தப்போவதாக எழுதப்பட்டிருந்தது.

இன்னும் கொஞ்சம் கவனமாக படித்தேன். பெரிய கொட்டை எழுத்தில் விழாவில் தலைமை வகிப்பவரின் பெயர் தங்க எழுத்தில் அச்சிடப்பட்டிருந்தது. தலைமை தாங்குபவர் ஒரு எம்.பி. அவர் சுகாதார மந்திரி என்ற ஞாபகம். இப்போதெல்லாம் பதவிகளில்  அடிக்கடி   மாற்றம் ஏற்பட்டுவிடுவதால்    பெயர்   மறந்து போய்விடுகிறது.

விழா பத்திரிக்கையை  மேலும் படித்தேன். அழைப்பு தடபுடலாகத்தான் இருந்தது. ஆனால்  சமூக சேவை செய்து வரும் திரு ராமமூர்த்தியின் பெயர்   சின்ன எழுத்தில் கடைசியில் இடம் பெற்றிருந்தது. அழைப்பிதழில்  மந்திரியின் புகைப்படம்  இருக்க, பாராட்டு பெறுபவரின் புகைப்படம்  இடம் பெறவில்லை. புகழில் அவருக்கு விருப்பமில்லை போலும் ! 

மாலை  5.00  மணி — மந்திரி வருகை

5.10 — பிரார்த்தனைப்பாடல்

5.15 — பல இயக்கங்கள் மாலையிட்டு வரவேற்பு .

5.30 — கவிதை  புகழாரம், கட்சித்தொண்டர்  முத்து

5.40 — திரு ராமமூர்த்தியை கௌரவித்தல்

5.45 — மந்திரியின் சொற்பொழிவு

5.55 — நன்றி கூறல்

6.00 — ஜனகனமன  …

நானும் இது போல் விழாக்களுக்கு போய் ரொம்ப நாள் ஆகிவிட்டது என்றதால் போக எண்ணினேன். சரியாக    4 -55 க்கு அங்கு போய்  அம்ர்ந்து விட்டேன்.    அந்தப் பெரிய ஹாலில்  ஐந்து பேர்கள் இருந்தனர். வாசலில்  இருவர் டீயை ருசித்தபடி புதிதாக வெளியான    சூர்யா படத்தை விமரிசித்துக்கொண்டு இருந்தனர்.  பின் அவர்களும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.

சரியாக    ஐந்து மணிக்கு திரு ராமமூர்த்தி  அவர்கள் வந்தார். வாயிலில்  அந்த நேரம் ஒருவரும் இல்லாததால்  தானாகவே  உள்ளே வந்து   ஒரு நாற்காலியில் அமர்ந்தார். அந்த இடத்தில் காற்று போதவில்லை. மேலே   சுழல்காற்றாடி இருக்கிறதா என்று பார்த்து   பின் அந்த இடத்தை விட்டு நகர்ந்து, நான் அமர்ந்த  இடத்தின் முன் வரிசையில்  வந்து அமர்ந்தார். அவரது எளிமை, முகத்தில் தேஜஸ் எல்லாம் என்னைக் கவர்ந்தன. அவருடன் பேச்சு கொடுத்தேன்.

“வணக்கம்   சார்..இன்று ..உங்கள் சேவைக்கு பாராட்டு என்று  கேட்கவே மிக்க சந்தோஷம்.”

“மிக்க நன்றி .. நான் என்ன பெரிதாய்  சாதித்துவிட்டேன்? தவிர சேவை என்பது புகழுக்காக செய்வதல்ல. அது அடிமனத்திலிருந்து   வரவேண்டும்.”

“உங்கள் தன்னடக்கம்,   நீங்கள் இப்படி பேசுகிறீர்கள். வெளியில் தெரியாதபடி பல  நல்ல காரியங்களைச் செய்து வருகிறீர்கள். எல்லாவற்றையும் விட அனாதையாக மரித்துப்போகும்  சவங்களையும் நீங்கள் தகுந்த மரியாதையுடன்  சடங்கு செய்து அந்திமக்கிரியை செய்து வருகிறீர்கள் என்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.”

……………….

திடீரென்று  கொஞ்சம் சலசலப்பு  ஏற்பட  பேச்சை நிறுத்தி, வாசல் பக்கம் பார்த்தேன்.  பல ரசிகர்கள் புடை சூழ  ஆனந்த நடன புகழ்   ராம்பிரகாஷ் நடிகர் வந்தார். அவர் வர  கூட்டமும் கூட ஆரம்பித்தது. ஒருவரும் சமூக சேவகர்  திரு ராமமூர்த்தியிடம் வரவில்லை. என்னைப்போல் அவரும் அமர்ந்திருந்தார். ஒலி பெருக்கி சம்பந்தமில்லாமல்  ஒரு டப்பாங்குத்து பாடலை  அலற வைத்துக்கொண்டிருந்தது. மணி 6 ஆகியும் மந்திரி வரவில்லை. எதோ டிராபிக் ஜாமாம் …….

சமூக சேவகர்  தன் ஜோல்னா பையைத் திறந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து இரண்டு முழுங்கு முழுங்கினார். பின் என்னைப்பார்த்து “நல்ல சூடு  நாக்கு வரண்டுவிட்டது” என்றார்.

“உங்களை முதலாக யாராவது  வந்து  வரவேற்று  ஒரு ஆரஞ்சு,லிம்கா என்று ஏதேனும் கொடுத்திருக்கலாமே  என்று என் மனதில் தோன்றுகிறது. ஏன் எல்லோரும் சினிமா புகழை  இப்படிச் சுற்றுகின்றனர்? நடிகையின் சாப்பாடு,  நடிகையின் நாய், என்று பல பத்திரிக்கைகளில் வர, அதற்கு நல்ல வரவேற்பு இருக்கே  சார்.   இது போல் ஒரு எழுத்தாளருக்கோ, கவிஞருக்கோ கிடைப்பதில்லையே”

“இன்றைய நிலை இதுதான். என்னைப்போல ஒருவனுக்கு விழாவெல்லாம்  தேவையில்லை” என்றார் வருத்தத்துடன். சிறிது நேரம் சென்றது.

பின் மேடையில் ஒரு முக்கிய தொண்டர் ஏறினார்.

“ஹலோ ஹலோ  மைக் டெஸ்டிங்  மைக் டெஸ்டிங் “…..என்றபடி மைக்கைக் கையில் பிடித்துகொண்டார்.

“அன்பர்களே  வணக்கம்.  நமது மதிப்பிக்குரிய மந்திரி  அவர்கள் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். ஒரு அரைமணி நேரம் தான்  நம்முடன் இருப்பார். 7 மணிக்கு ஒரு பார்ட்டிக்கு அவர் போகவேண்டும். ஆகையால் நிகழ்ச்சிகளைக் குறுக்கி  விடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. மன்னிக்க வேண்டும்” என்றபடியே மேடையிலிருந்து இறங்கினார்.

இதற்கிடையில், எனக்குப்பின்னால் இருக்கும் இருக்கையில்,  மூன்று பேர்கள் செம ட்ரெஸ்ஸில் வந்து அமர்ந்தனர். பார்த்தால் ஊர்சுத்திகள் போல் இருந்தது.

“ஏண்டா மச்சி யார் இந்த ராமமூர்த்தி? என்ன சாதனை  பண்ணிருக்கு. தெரிமா   மச்சி?”

“யார் கண் டா ? நான் சினிமா நடிகரை ன்னா பாக்க வந்தேன். தவிர இரண்டு டான்ஸ் வேற இருக்காம். பம்பாய் செக்ஸி  புகழ் அஸ்விதா ஆடறாளாம். சமூக சேவை  விழாவை பாக்க வந்தேன்னு நினச்சியா? ஜோக்குதான்  ஹாஹாஹா”

திடுக்கிட்டு   நான் திரு ராமமூர்த்தியைப்பார்த்தேன்.  அவர் முகத்தில் ஈயாடவில்லை.  ஏதோ போல் அமர்ந்திருந்தார்.  உலகப்போக்கை நினைத்து வருந்தினாரோ என்னமோ !

“மந்திரி வந்துட்டாரு   வந்துட்டாரு”  என்று ஒருவர் குரல் கொடுக்க திரும்பவும் பரபரப்பு. வீடியோகாரர் ஓடி வந்தார். பலகோணங்களில் அவரை போட்டோ பிடித்தார்.மந்திரியும் தன் வெற்றிலைப்பாக்கு வாயைக்காட்டியபடி சிரித்து போஸ் கொடுத்தார். பின்  அவரைச்சுற்றி பலர் சூழ நடுவில் சிம்மாசனம் போல் இருந்த  ஒரு இருக்கையில்  வந்தமர்ந்தார்.

பிரார்த்தனை கீதம்   பாடி முடிக்கப்பட்டது. பின்  தலைமை வகிக்கும்  மந்திரியின் புகழாரம் தொடங்கியது. சுமார் பத்து நிமிடங்கள் ஓடிய பின் விழாவை நடத்தும் முனுசாமி அவர்கள் மேடை மேல் ஏறி மைக்கைப் பிடித்தார்.

“அன்பர்களே,  சகோதர சகோதரிகளே,  அருமைத் தாய்மார்களே,  இன்று தமிழ் வளர்ச்சியைப்பற்றி  நம் தலைவர் வேலாயுதம் அவர்கள் பேசிய பின்  சினிமா புகழ் திரு ராமபிரகாஷ்  அவர்கள், சமூக சேவை செய்து வரும் திரு ராமமூர்த்திக்கு பொன்னாடை போற்றி பாராட்டுப் பத்திரமும் கொடுப்பார். எல்லோரும் இருந்து சிறப்பாக விழாவை    நடத்திக்கொடுக்க வேண்டும்”

ஒருவர் திரு வேலாயுதம் அருகில் சென்று ஏதோ பேச,   அவரும்  தன் இருக்கையை விட்டு எழுந்து மைக்கைப் பிடித்தார்.

“டியர்  சிஸ்டர்ஸ்  அனட் பிரதர்ஸ், தமிழ் வளர்ச்சியைப்பற்றி பேச வேண்டும் என என்னைக் கேட்டுக் கொண்டார்கள். எல்லா ஸ்கூலிலும்  தமிழ் கம்பல்சரி பாடமாக   அமைந்திருக்க வேண்டும். காலேஜிலும் தமிழ் சப்ஜக்ட் எடுப்பவர்களுக்கு ஸ்பெஷல் கன்செஷன்  கொடுக்க வேண்டும். எக்ஸேமில்  முதல் மார்க் எடுப்பவருக்கு பிரைஸும் கொடுத்து என்கரேஜ்  செய்யவேண்டும். இன்று  கல்வியை முதியோர்களுக்கும், ஜெயில் கைதிகளுக்கும் கற்றுக்கொடுத்து சோசியல் சர்விஸ் செய்தவருக்கு (பின்னால் இருப்பவரிடம் அவர் பெயரைக்கேட்கிறார்)    அதான்  திரு ராமமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துகள். இன்னும் நிறைய பேச ஆசைதான் என்றாலும்  7 மணிக்கு வேறு அப்பாய்ன்மென்ட் இருப்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். வணக்கம்.”

அவர் தன் இருக்கையில் அமர்ந்தவுடன்   ஒரு தொண்டர் மேடையில் ஏறி மந்திரியைப் பற்றி ஒரு கவிதை பாடினார். பின் விழா காரியதரிசி   திரு ராமமூர்த்தி அவர்களை  மேடையில் வந்து அமரும்படி கேட்டுக் கொண்டார்.

சமூக சேவகர்  கண்களை மூடியபடி அம்ர்ந்திருந்தார். மைக்கில்  இரண்டு முறை  கூப்பிட்டும் வரவில்லை. எல்லோருடைய கவனமும் அப்போதுதான் சமூக சேவகர் மீது விழுந்தது. “திரு ராமமூர்த்தி ஐயா  தயவு செய்து,  மேடைக்கு வந்து அமருங்கள்” என்று மைக்கில்  ஒரு அழைப்பு திரும்பவும் வந்தது.

“காது செவிடோ என்னமோ” என்று ஒருவர் முணுமுணுத்தார். ஒரு அன்பர் அவரிடம் போய்  அவர் தோளில் கையை வைத்து “வாங்கோ சார்”  என்றார். அதைக்கேட்க அவர் அங்கு இல்லை. அவர் உடல் அங்கேயே கீழே சாய்ந்தது.

அவர் ஜோல்னா பை அவர் மடியிலிருந்து கீழே விழுந்தது. பரிசு பாராட்டு ஒன்றும் தேவையில்லை   என்று சொல்லாமல் சொல்லிபோய்ச்சேர்ந்து  விட்டாரோ என்னமோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.