சக்தி சக்திதாசன்


இவ்வுலகம் ஆண்டவனால் படைக்கப்பட்டது என்றால் அவன் படைக்கும் போது வர்க்க பேதத்தைத் திணித்துப் படைத்திருக்க மாட்டான்.  வல்லவன் எடுத்துக் கொண்டான், வலிமையற்றவன் ஒதுங்கிக் கொண்டான். எடுத்தவன் தன் தேவைக்குப் போக மீதியைக் கொடுக்க முன் வந்திருந்தால் உலகத்தின் சமநிலை சரித்திரப் பிரசித்தி பெற்றிருந்திருக்கும். ஆனால் அவன் அதைச் செய்யவில்லை கிடைத்ததைச் சேர்த்தான். தனக்கு மட்டுமல்ல தன் தலைமுறை கையசைக்காமல் சகல வசதிகளுடனும் வாழ வேண்டும் என இன்னும் இன்னும் சேர்த்தான்.

தன் உழைப்பில் மட்டும் சேர்க்கவில்லை. ஊரார் உழைப்பையும் உறிஞ்சத் தொடங்கினான். உறிஞ்சல்களுக்கு நாகரீகப் பெயரூட்டினான். காலம் போகப் போக இதுதான் வாழ்க்கை முறை எனும் நியதியையும் நிர்ணயித்து விட்டான்.

என் மனதில் விஞ்சி நிற்கும் கவியரசர் கண்ணதாசன் இத்தகைய மனநிலையை, உலகின் சமநிலையை தெட்டத் தெளிவாக உணர்த்தும் வகையிலெளிமையான பாடல்களாக அள்ளி அள்ளித் தந்தார்.

இங்கே நான் உங்களுடன் சேர்ந்து ரசிக்க விழைவது “ஆனந்தி” எனும் படத்திற்காக அவர் இயற்றிய பாடலின் வரிகளே.

சொர்க்கத்திலிருந்து நரகம்வரை – நான்
நான் சொல்லாமல் புரியும் வாழ்க்கை முறை – இந்த‌
வர்க்கத்திலிரண்டு வாழும்வரை -இந்த‌
மண்ணில் ஏது நல்ல நீதிமுறை
வானைத் தழுவும் மாளிகையில் – உங்கள்
வாழ்வும் வளமும் விளையாட‌
பாலும் பழமும் உணவாக – உங்கள்
பார்வை ஒன்றும் பணமாக                                          

(சொர்க்கத்தில்)

பசித்திருக்கும் விழிகளோடு, உழைத்துத் தோய்ந்த கரங்கள் துவண்டிருக்க உள்ளம் முழுவதும் வறுமை எனும் இருள் சூழ்ந்திருக்க தனது வாழ்க்கை எனும் வண்டியைப் பூட்டி இழுக்கும் எருது போல, அன்றாடும் தள்ளாடும் ஒரு தோழனின் கேள்வியை, எத்துணை எளிதாக எமது இதயங்களுக்குள் எய்திருக்கிறார் என் இதயம் நிறைந்த கவியரசர்.

பூனை உறங்கும் அடுப்பினிலே – எங்கள்
பூவையர் கண்ணீர் வழிந்தோட‌
ஆசையும் உள்ளாட ஆவியும் தள்ளாட‌
ஆடுகின்றோம் வெறும் சிலையாக‌
வாடுகின்றோம் உங்கள் விலையாக‌

எத்தனையெத்தனை அர்த்தங்களை, அத்தனை அற்புதமாய் தன் சொற்புதர்களுக்குள் மறைத்து விளையாடுகின்றார் கவியரசர். பூப்போன்ற மனதையுடைய ஏழை மாதர், இல்லாத காரணத்தினால் அடுப்புப் பற்ற வைக்க முடியாமல் கண்ணீர் சிந்தும் நிலையில் கலங்கி நிற்பதை அனவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் சொற்சுவை கூட்டி தந்திருக்கிறார்.

அடுத்து என்ன கூறுகின்றார் பாருங்கள். செல்வம் இல்லாத காரணத்தினால் வனிதையைரின் உள்ளங்களில் ஆசை கூடவா அற்றுப் போய்விடும்? ஆனால் அந்த ஆசைகளை நினைவாக்கிக் கொள்ள தள்ளாடும் அவர்களது ஆவியைத் தவிர வேறேது அவர்களிடமுண்டு?

அடுத்து வரும் வரிதான் அர்த்தம் இரண்டை அள்ளி வீசுகிறது. உழைக்கும் உழைப்பைச் சுரண்டும் அவர்களுக்கு விலையாவது ஒருவகை, அடுத்து வறுமையைப் போக்கிக் கொள்ள செல்வந்தர்களின் விளையாட்டுப் பொருட்களாக மாதர்கள் விலையாகிப் போவது மறுவகை. எத்தனை அழகாக வறுமைக் கோட்டின் கீழ் அல்லாடும் மானிடர்களின் ஏழ்மையை எடுத்துக் கூறுகிறார்.

கோடிக் கோடி ஆடைகளில் உங்கள்
கொஞ்சும் இளமை மெருகேறும்
ஆடிப்பாடி வாழ்வதிலே உங்கள்
ஆசையின் வேகம் சுவையாகும்

ஆமாம் கோடிக் கணக்கில் கோடி(புதிய) ஆடைகளை வாங்கி தமது கோலத்தின் எழிலை விதம் விதமாக கூட்டுகிறார்கள், இல்லாதோர் சிரமம் அறியாத இருப்போர் என்கிறார் கவியரசர்.  தமது வயிற்றுப் பசியைப் போக்குவதற்கு வாழ்கையுடன் நடத்தும் போராட்டமே இவர்களுக்கு மூலாதாரம். ஆனால் பணத்தின் மீது சறுக்கி விளையாடுபவர்களோ, தமது ஆசையின் வேகத்தை அளவு கணக்கின்றி சுவைத்திடுகிறார்கள் என்பது கவியரசரின் அனுபவ வாதம்.

மாற்றி உடுத்தும் ஆடையில்லாமல்
ஏழைகள் மேனி வெளியாகும்
காவலும் இல்லாமல் காலமும் வெல்லாமல்
கேள்வியிலே எங்கள் உயிராடும்
கேள்விகள் எங்கே பதிலாகும் ?

அடித்து விட்டார் பாருங்கள் ஒரு அடி, அற்புதமான அடி. ஆணவத்தின் செருக்கிலே ஆலவட்டம் கொண்டு அர்த்த ராத்திரியில் ஆனந்தக் கூத்தாடும் செல்வக் கூத்தர்களுக்கு கொடுத்த ஒரு கூரான கொள்கை அடி. ஆமாம் அவர்கள் கோடிக் கணக்கில் கோடி ஆடைகளை உடுத்தி விளையாடும் வேளையில் பாவம் ஏழைகள் ஒரே மண்ணில், ஒரே இனத்தில் உதித்தவர்கள் மேனியை மறைக்க மாற்று ஆடையில்லாமல் வெளியான மேனி கொண்டு நாணி நிற்கிறார்கள்.

உரிமை கோரும் அரசாங்கங்கள் உறவு கொண்டாடுகின்றனவா இந்த வறிய மாந்தரிடம்? யார் கொடுப்பார் காவல் இவர்களுக்கு? காவல் இல்லாமல், வயிற்றை நிறைக்காமல், பாடசாலை படியேறும் வசதியில்லாமல் வாடும் இந்த ஆண்டவனின் குழந்தைகளுக்கு எப்படி நம்பிக்கை வரும் தம் காலமும் வென்றிடும் என்று ? 

இத்தனை கேள்விக்குறிகள் நிறைந்ததல்லவோ இவர்களின் வாழ்க்கை? அப்படியானால் உயிரின் சதிராட்டமும், தினம் எழுந்திடும் கேள்விக்கணைகளுடன், தானே வறுமையின் இருளில், இல்லாமை எனும் மெளத்தில் எழும் சத்தமில்லா வினாக்களுக்கு விடை எங்கிருந்து கிடைக்கும்? திக்குத் தெரியாத காட்டில் நாளைகளின் வரவறியா இந்த உழைத்து ஓடாகிப் போனவர்களின் வாழ்வைப் பற்றி உண்மையாகச் சிந்திப்போர் எத்தனை பேர்?

கவியரசர் ஒரு கற்பனைச் சிற்பி. ஆனால் அவர் வடிக்கும் பாடல்கள் எனும் ஓவியம் சிறக்கக் காரணம் அதில் உண்மை எனும் சாந்தைக் கரைத்துப் பூசுவதினாலேயே. அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான ஆனால் சுவையான தமிழை எடுத்து அழகாய் எமது சிந்தைக்கு விருந்தாக்கியிருக்கும் கவியரசர் என் மானசீகக்குருவாக இருப்பதில் என் இதயம் கொண்ட மகிழ்ச்சி கரையில்லா புதுப்புனல் போல பெரும் பிரவாகத்துடன் பாய்கிறது.

இன்னும் வருவேன்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *