இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம்: (2) தையல்காரக்குருவி

நடராஜன் கல்பட்டு

மாந்தர்களில் மட்டும் தானா தையல்காரர்கள்? பறவைகளில் இல்லையா? ஏன் இல்லை. ஜனவரி பிப்ரவரி மாதங்களில் உங்கள் தோட்டத்தில் “கிவீ…கிவீ…” என்று கணீரென ஒரு குருவியின் குரல் கேட்கிறதா? சற்றுக் கூர்ந்து கவனியுங்கள். பறவைத் தையல்காரரை உங்களால் பார்க்க முடியும். அதுதான் ‘Tailor bird’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தையல்காரக் குருவி.

தையல்காரக் குருவி ஆண் பறவை
http://en.wikipedia.org/wiki/File:Orthotomus_sutorius.jpg

குடும்பம் பெருக்கும் காலத்தில் ஆண் தையல்காரக் குருவியின் வால் இறகுகளில் நடு இரண்டு இறகுகள் நீண்டு வளரும், கிட்டத்தட்ட இரு மடங்காக. (வண்ணப் படத்தில் உள்ள ஆண் குருவியின் வால் இறகுகளைப் பாருங்கள்)

இந்தக் குருவி தன் கூட்டினை எப்படி அமைக்கும் தெரியுமா?

சற்றே அகலமான இலையினைத் தேர்ந்தெடுத்து அதனைப் பறந்து கொண்டிருக்கும் போதே வளைத்துப் பிடித்துக் கொண்டு சிலந்தி வலையினைக் கொண்டு சுற்றி ஒட்டும். பின் அவ்வாறு தயார் செய்த ஃபனல் போன்ற குழாய் உள்ளே பஞ்சினைக் கொண்டு வந்து வைக்கும். தனது கூரிய அலகினைக் கொண்டு இலையின் விளிம்பில் சிறு துவாரங்கள் செய்து அத்துவாரங்களின் வழியே பஞ்சினை வெளியே இழுத்து அதைப் பின் தட்டையாக்கும். இவ்வாறு செய்வதால் ‘ரிவெட்’ அடித்தாற் போல கூடு தயார் ஆகிவிடும். ஃபனலின் அடிப் பாகத்தில் பஞ்சினாலும், காய்ந்த மெல்லிய வேர்கள் நுனிப்புல் இவற்றாலும் குழிவாக மெத்தை தயார் செய்யும். (குருவிக்குப் பஞ்சு எங்கிருந்து கிடைக்கும் என்று யோசிக்கிறீர்களா? குப்பை மேட்டிலிருந்துதான்)

இவ்வாறு தயார் செய்த மெத்தையில் 2 முதல் 6 வரை வெளிர் நீலக்கலரிலான முட்டைகளை இடும். தாய் தந்தை இரண்டுமே மாறி மாறி அடை காப்பதிலும் பின்னர் குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றுக்கு உணவு அளிப்பதிலும் ஈடுபடும்.

(குஞ்சுகளுக்குக்கு ஆகாரம் இதோ அலகின் நுனியில்)

தையல்காரக் குருவிகள் பறக்கும் போது வலுவு அற்றவை ஆகக் காணப்படும். ஆனால் குரல் எழுப்பும்போதோ வலுவு எங்கிருந்து வருமோ, அதனைப் படைத்த ஆண்டவனுக்குத்தான் தெரியும் அந்த ரகசியம்.

தையல்காரக் குருவிகள் தூங்கும் போது பார்ப்பதற்கு வெகு அழகாக இருக்கும். இரு பறவைகளும் அருகருகே ஒரு கிளையில் உட்கார்ந்து கொண்டு உடலில் உள்ள அத்தனை இறகுகளையும் வெளித் தள்ளிக் கொண்டு (puffing up the feathers) ஒரு பூப்பந்துபோலச் செய்து கொண்டு தூங்கும். இது எதற்காக என்று தெரியுமா? குளிரின் தாக்கத்திலிருந்து தப்பிக்கத்தான்.

(எங்களுக்குத் தூக்கமா வருது)

நாம் தூங்க ஆரம்பிக்கும்போது நம் கைகளிலே ஏதாவது ஒரு பொருளை வைத்துக் கொண்டு இருந்தால் சற்று நேரத்திற்கெல்லாம் நமது கை தானாக விரிந்து கொண்டு கையில் உள்ள பொருள் கீழே விழுந்து விடும். சிறு குழந்தைகள் தூங்கச் செல்லும்போது மிகவும் பிடித்த பொருளைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும். ஆனால் தூக்கம் வந்த சற்று நேரத்திற்கெல்லாம் அப்பொருள் கையிலிருந்து விடுபட்டுப் படுக்கையில் விழுந்து விடும். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் பறவைகள் தூங்கும் போதோ அவற்றின் விரல்கள் இறுகிக் கொண்டே போகும். அதனால் அவை ஒரு போதும் கீழே விழாது.

இயற்கையில் இறைவன் காட்டும் விந்தைகள் தான் எத்தனை!

(கருப்பு வெள்ளைப் படங்கள் எடுத்தது நடராஜன் கல்பட்டு)

Leave a Reply

Your email address will not be published.