முகில் தினகரன்

நாட்டு நடப்பை
நயமோடுரைத்து
நடுநிலைமையே
நங்கூரமென்றாக்கி
சமூக சதுக்கத்தில்
சத்துக் கூட்ட வேண்டிய
பத்திரிக்கைகள்….இன்று
செத்த எலி நாற்றமாய்!
செக்ஸ் கல்விக் கூடமாய்!
வக்கிர உணர்விற்கு
வளைகாப்பு நடத்தும்
விரச தேவனின்
வாரிசுகளாய்!
காகித வடிவ
கஜுராஹோக்களாய்!

காய்ந்து கிடக்கும்
காவிரிப் படுகைகள்
பற்றிக் கவலையில்லை!
கவர்ச்சி நடிகையின்
காதல் படுக்கையைச்
சுற்றியே கவனம்!

மப்பில் உளரும்
மாண்புமிகுக்களின்
தப்பான அறிக்கையைத்
தப்பாமல் தாங்கிவரும்
இற்றுப் போன துப்பாக்கிகள்!

பீரங்கியைக் காட்டிலும்
வீரியமான ஆயுதம்
எழுதுகோலென்பர்!
கோட்டையையே
புரட்டிப் போடும்
கோடாரிக்காம்பு
பத்திரிக்கையென்பர்!
அய்யகோ!
பிரம்மாஸ்திரம்
விளக்குமாறாகிப் போனதே!
நாகாஸ்திரம்
நாக்கு வழிப்பான் ஆனதே!

பொய்யையும் புரட்டையும்
மையாய் ஊற்றி
காமத்தையும் கவர்ச்சியையும்
காகிதத்தில் ஏற்றி
ஆதாய நோக்கில்
ஆலகாலம் கடையும்
அழுக்குமன ஆசிரியர்களே!
இனியாகிலும்
எழுதுகோலை நெம்புகோலாக்கும்
தாய்ப்பாலை அருந்துங்கள்!

நிஜ பலத்தை
நெஞ்சில் நிறுத்தி
புஜ பலத்தில்
புரவியோட்டுங்கள்!

பச்சைப் பல்லக்கில்
பவனி ஏறி
கொச்சைத் தமிழில்
கொஞ்சல் நடத்தி
கச்சை அவிழ்க்கும்
கற்பனை இறைத்து
நச்சுக் கிருமியாய்
நகர்வலம் வாராதீர்!
அச்சுக் கிருமிகளே
அழிந்து போவீர்!

http://users.telenet.be/emanuel.vandorpe/artmedal/effort.htm

1 thought on “அச்சுக் கிருமிகள்

 1. அச்சுக்கிருமிகளின் ஆக்கிரமிப்பில்,
  கவிஞரின்
  ஆத்திரம் ஞாயமானதுதான்..
  பிரம்மாஸ்திரம் விளக்குமாறானது
  நல்ல சொல்லாட்சி…!
         -செண்பக ஜெகதீசன்…

Leave a Reply

Your email address will not be published.