கவிநயா

 

ஆடி வெள்ளியும் அதுவுமாக, ஆடிக்குரியவளை, நம்மை ஆட்டி வைக்கிறவளைப் பற்றிப் பேசுவதற்கு ஆசை வந்தது. 

லலிதா சஹஸ்ரநாமத்தில் முதலாவதாக வரும் நாமம்தான், “ஸ்ரீ மாதா”. பிறகுதான் “ஸ்ரீ மஹாரஜ்ஞீ”. அதாவது, முதலில் அம்மா. பிறகுதான் அவள் மஹாராணி! 

அம்மாவிடம் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். நம் இயல்பு மாறாமல், நாம் நாமாகவே இருக்க முடியுமென்றால், அது அன்னையிடம் மட்டும்தான். அவளிடம்தான் நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. 

ஆனால் மஹாராணி என்றால் அப்படியா? அவளைப் பார்க்க வேண்டுமென்றால் எத்தனை பேரிடம் அனுமதி பெற வேண்டும்? அவளிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டுமென்றால் எத்தனை தடைகளைக் கடக்க வேண்டும்? அப்படியே மஹாராணியைச் சென்று பார்த்து விட்டாலும், அவளிடம் எவ்வளவு பயம், மரியாதை, ஒரு விஷயத்தைச் சொல்லலாமா கூடாதா என்கிற தயக்கம், இப்படி எத்தனையோ உணர்வுகள் இருக்கும். 

அப்படியெல்லாம் அன்னை பராசக்தியிடம் தயங்கவோ பயப்படவோ தேவையில்லை. அவள் அண்டசராசரங்களை ஆளும் ராணியாக இருந்தாலும், தன் பிள்ளைகளுக்கு முதலில் அம்மா. அதனால் அவளை அன்னையாகவே, அன்னையிடம் உள்ள உரிமைகளுடனேயே, அன்னையிடம் காட்டும் அன்புடனேயே அணுகலாம். 

அதனால்தான் சகஸ்ரநாமத்தை எழுதிய வாக் தேவதைகள், “ஸ்ரீ மாதா” என்பதை முன்னால் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. 

‘டில்லிக்கு ராஜாவானாலும் பள்ளிக்குப் பிள்ளைதான்’ என்ற பழமொழி நினைவிருக்கிறதா? குழந்தைகளுக்கு தன் அம்மா மஹாராணியாக இருந்தாலும், வேலைக்காரியாக இருந்தாலும் என்ன வித்தியாசம் தெரியப் போகிறது? அவர்களுக்கு அவள் செல்லமான, அன்பைப் பொழிகின்ற அம்மா மட்டுமே. 

அம்மா என்றால் அன்பு. அன்பு என்றால் அம்மா. அம்மாவிற்கு நம் மீது எப்போதாவது கோபம் வந்தாலும், அது நம் நன்மைக்காகத்தான் இருக்கும். நாம் துயரப்பட்டு கண்ணீர் சிந்துவதைக் காண முடியாமல், அப்படி ஒரு நிலைமை வருவதைத் தடுக்கவே அவள் கோபம் கொள்ளுவாள். அதையும் மீறி நாம் தவறு செய்து விட்டாலும், நம் நிலையைக் கண்டு, நமக்கு முன்னே அவள்தான் கண்ணீர் விடுவாள். நம்மை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்த மனித உலகத்தைச் சேர்ந்த அன்னையருக்கே இத்தகைய உயர்ந்த குணம் இருக்கும் போது, உலகத்தையே ஆக்கிய, அண்ட சராசரத்துக்கெல்லாம் காரணியான அவளைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? 

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை எத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சென்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னம் எத்தனை எத்தனை சன்மமோ
என் செய்வேன் கச்சி ஏகம்பநாதனே. 

என்றார் பட்டினத்தார். எத்தனை எத்தனை ஜன்மங்களோ, அத்தனை அத்தனை அன்னையர் நமக்கு. ஆனால் இப்போதும் எப்போதும் எல்லோருக்கும் இருக்கிற ஒரே அன்னை அவள்தான். எத்தனையோ கோடானு கோடி பிள்ளைகள் இருந்தாலும், அவள் அன்பிற்குக் குறைவே இல்லை. 

அவள் அன்பை எப்படித் தெரிந்து கொள்வது? எப்படி அனுபவிப்பது? ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்கள் சொல்வதைப் பாருங்கள் -“There are only two ways to live your life. One is as though nothing is a miracle. The other is as though everything is a miracle.” 

இந்த உலகத்தின் ஒரு சிறு இலையின் அசைவிலும் அவள் இருக்கிறாள்; அவள் அருள் இருக்கிறது. அப்படி ஒவ்வொரு நிகழ்விலும் அவளைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு, அவள் அன்பில் நனைந்து திளைக்கின்ற பாக்கியம் கிடைக்கிறது.

மழை எல்லோருக்கும் தான் பெய்கிறது. மழை பெய்கிற சமயத்தில் அண்டாவைத் திறந்து வைத்தால்தான் அதில் நீர் நிரம்பும். அதை விட்டு விட்டு, அண்டாவை மூடி வைத்து விட்டு, பிறகு மழை விட்ட பிறகு, “எனக்கு மட்டும் தண்ணீரே கிடைக்கவில்லை” என்றால் யார் குற்றம் அது? 

அதே போல்தான், அவள் அருள் எங்கெங்கும் நிறைந்திருக்கிறது. மழையாவாது அவ்வப்போதுதான் பெய்கிறது, ஆனால் அவள் அருள் மழை விடாமல் பெய்து கொண்டேதான் இருக்கிறது. மனதைத் திறந்து வைத்தவர்களுக்கு, மனதைப் பாத்திரமாக்கியவர்களுக்கு, மனம் முழுக்க அவள் அன்பும் அருளும் நிச்சயம் நிறையும் என்பதில் சந்தேகமே இல்லை. 

அன்னையின் திருவடிகள் சரணம். 

அன்புடன்

கவிநயா

சித்திரத்துக்கு நன்றி:

http://lordeswaran.files.wordpress.com/2010/06/15.jpg

 

3 thoughts on “ஸ்ரீ மாதா

  1. அடடா, என்ன அழகு அவள்! அருமையான படத்துடன் கட்டுரையைப் பிரசுரித்த ஆசிரியருக்கு நன்றிகள் பல.

  2. மதுரையம்பதியை இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி 🙂 அம்பாள் ஸ்லோகங்களுக்கு authority நீங்கதான்! நான் ச்சும்மா ஏதோ ஆசைக்கு ஒண்ணே ஒண்ணு எழுதிப் பார்த்தேன்; அவ்வளவே. ஏன்னா எனக்கு அந்த வார்த்தைக்கு மட்டும்தான் பொருள் தெரியும் 🙂 தொடருவதெல்லாம் உங்க வேலை!

Leave a Reply

Your email address will not be published.